மாதவிடாய் – ஒரு மனித உரிமை சார்ந்த விடயமாகும் – ஷகீதா பாலச்சந்திரன்

உலக மக்கள்தொகையில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர்களுக்கு அவர்களின் வாழ்நாளின் பெரும்பகுதியில் மாதவிடாய் ஏற்படுகிறது. இலங்கையில் 4.2 மில்லியன் கணக்கானோர் மாதவிடாயை அனுபவிக்கின்றனர். மாதவிடாய் என்பது ஒரு தேர்வு அல்ல, இது மனித பெண் உடலில் இயற்கையாக இடம்பெறும்  ஒரு இயல்பான உயிரியல் உண்மை ஆகும். இருப்பினும் மாதவிடாய் என்பது பல சமூகங்களால் சமூக சமய கலாச்சார காரணங்களால் வெளிப்படையாக பேசமுடியாத விடயமாக காணப்படுகிறது. இதனால், மாதவிடாயை அனுபவிப்பவர்கள் உடலியல், உளவியல், சுகாதாரம், போதுமான வாழ்க்கைத் தரம், கல்வி, வேலை, பாலின அடையாளம் மற்றும் உணர்வு ரீதியான பல்வேறு வன்முறைகளுக்கு ஆளாகின்றனர்.

சமகால இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் பின்விளைவுகள், இவ் வன்முறைகளை பெருமளவு மோசமாக்குகிறது. உதாரணமாக மாதவிடாய்  வறுமையானது, குறிப்பாக மாணவிகளுக்கு  மாதவிடாயின் போது ஏற்படும் உடல் மற்றும் மனநலப் பிரச்சினைகளால் பாடசாலைக்கு சமூகமளிக்காமை, பாலின அடிப்படையிலான வன்முறை மற்றும் சமூகத் தனிமைப்படுத்தல் வரை பல்வேறு சவால்களுக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளது.  அத்தோடு மாதவிடாய் சுகாதார அணையாடை தயாரிப்புகளின் தேவைகளையும்  உருவாக்குகிறது.

ஏன் மாதவிடாய் சம்பந்தமான அறிவு மற்றும் விழிப்புணர்வு அவசியம் ? காலம் காலமாக மாதவிடாய் சம்பந்தமாக அடுத்த தலைமுறையினருக்கு புகுத்தப்படும் உடல் உள சமூக உணர்வு மற்றும் கலாச்சார ரீதியில் தீங்கு விளைவிக்க கூடிய விடயங்கள் மற்றும் செயற்பாடுகளுக்கு சவால் விடுத்து முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.  இவை பெண்களை பதிக்குள்ளாக்குவதுடன் பெண்களின் உரிமைகளையும் மீறுகிறது மாதவிடாயை எதிர்கொள்ள இருக்கும் சிறுமிகளுக்கு மாதவிடாய் சம்பந்தமான அறிவு உள்ளதா? மாதவிடாயை முதன்முறையாக எதிர்கொள்ளும் சிறுமிகளுக்கு அதை சரியான முறையில் எதிர்கொள்ள தெரிந்திருக்கிறதா? மாதவிடாயை எதிர்கொள்ளும் போது அதை அவமானகரமானதாகவோ வெட்கத்துக்குரிய விடயமாகவோ கருதாமல் மாண்புடனும் கௌரவத்துடனும் அணுக தெரிந்திருக்கிறதா ?
 

மாதவிடாய் வரி, மாதவிடாய் வறுமை மற்றும் அதன் விளைவுகள்

மாதவிடாய் வறுமை என்பது நாட்டின் மக்கள்தொகையில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்களை பாதிக்கின்ற  ஒரு பாரிய பிரச்சினை ஆகும். இருப்பினும் பெரும்பாலான தருணங்களில் கவனிக்கப்படாமல் போகின்ற விடயமாகவே இருக்கின்றது. இலங்கையின் மாதவிடாய் வறுமை விகிதம் 50% ஆகும். அதாவது மாதவிடாய் வயதுடைய பெண்களைக் கொண்ட 50% குடும்பங்களில் எந்தவிதமான மாதவிடாய் சுகாதார அணையாடைகளுக்கு செலவிடுவதில்லை என்பதாகும்.

2021 ஆம் ஆண்டில், 10 துண்டுகள் கொண்ட மாதவிடாய் சுகாதார அணையாடைகளின் ஒரு பாக்கெட் விலை ரூ 140.6 தற்சமயம், அதே தயாரிப்பு விலை ரூ 270 ஆகும், இது 92% அதிகரிப்பைக் குறிக்கிறது. 2023 இன் பிற்பகுதியில் புதிய VAT திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், முன்னர் விலக்கு அளிக்கப்பட்ட மாதவிடாய் சுகாதார அணையாடைகளுக்கு விலக்கு அளிக்கப்படவில்லை அத்தோடு தற்போது வரி விகிதம் 51.07% ஆக உள்ளது. இந்த கணிசமான விலை உயர்வு, மாதவிடாய் வறுமையால் ஏற்படும் தீவிர பிரச்சனைகளை கீழே விளக்குகிறது.

மாதவிடாய் பொருட்களுக்கான வரிகளின் மூலம் பெறப்படும் வரி வருமானம் 0.0002% மட்டுமே !!

 மாதவிடாய் சுகாதார அணையாடை போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு வரி விதிப்பதால், குறிப்பாக குறைந்த வருமானம் உள்ள பல குடும்பங்களுக்கு அவை கட்டுப்படியாகாது. இருப்பினும் மாதவிடாய் சுகாதார தயாரிப்புகளுக்கான அணுகல் மனிதனின் இன்றியமையாத தேவையாகும். இந்த விலை உயர்வுகள் மற்றும் அவை ஏற்படுத்தும் கட்டுப்படியாகாத தன்மை, மாதவிடாய்ப் பொருட்களை வாங்க இயலாமை என பல விளைவுகள் மாதவிடாய் வறுமையில் உள்ளடங்குகிறது. இந்த ஒட்டுமொத்த வரியானது நாட்டின் மாதவிடாய் வறுமையின் விகிதத்தில் ஏற்படுத்தும் தாக்கம், குறைந்த வருமானம் கொண்ட பெண்களின் வாழ்வியலில் மாதவிடாய் மற்றும் அதன் தாக்கத்தை புரிந்துகொள்வதில் கவனம் செலுத்த வேண்டிய தேவை உள்ளது. 

மாதவிடாய் சம்பந்தமான வன்முறைகள் ஒழிய,

  • மாதவிடாய் ஏற்பட அண்மித்த வயதை ஒட்டிய சிறுமிகள், பெண்கள் அவர்களுக்கான மாதவிடாய் பற்றிய முன்கூட்டிய அறிவு, மாதவிடாயின் போது ஏற்படும் உடலியல் உளவியல் மாற்றங்கள் , மாதவிடாய் முகாமைத்துவம் மற்றும் சுகாதாரம்,  மாதவிடாய் சம்பந்தமான பிரச்சனைகள் மற்றும் அணுக வேண்டிய சேவைகள்
  • தங்களுடைய மாதவிடாய் அணையாடை பொருட்களை தெரிவு செய்ய அவற்றை அணுகுவதற்கான சுதந்திரம்
  • மாதவிடாயின் போது பாதுகாப்பான கௌரவமான சுகாதாரமான முகாமைத்துவம்
  • பங்குபெறுவதில் உள்ள உரிமை
  • சமமற்ற ஒதுக்கப்பட்ட முறைமை
  • பயன்படுத்தப்பட்ட அணையாடைகளை கழிவகற்றல்
  • மாதவிடாயின் போது ஏற்படும் அசௌகரியங்களை தீர்க்க ஓய்வு

மேலே குறிப்பிட்ட விடயங்கள் உட்பட மாதவிடாய் வரிகளை முழுமையாக நீக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதுடன் பாடசாலை மாணவிகளுக்கு இலவச மாதவிடாய் அணையாடைகளை நிலைபேறான தன்மையுடன் வழங்க ஆழ்ந்து ஆராய வேண்டும். மாதவிடாய் வரிகளை முற்றாக நீக்குவதற்கு அழுத்தம் கொடுப்பதற்கு மாதவிடாய் வறுமையின் தாக்கத்தை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

மாதவிடாய் ஒரு பேசாப் பொருள்  மாதவிடாயை அனுபவிப்பவர்கள் (பெண்கள் மற்றும் திருநம்பிகள் ) சமகாலத்தில் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன  ? மாதவிடாய் சம்பந்தமான கொள்கைகள் மாற்றத்திற்கு எமது பரிந்துரைகள் என்ன? தற்கால பொருளாதார நெருக்கடியில் மக்கள் மாதவிடாய் அணையாடை பொருட்களை கொள்வனவு செய்ய மற்றும் அணுகுவதற்கான சுதந்திரமான தெரிவை மேற்கொள்ள உள்ள தடங்கல்கள் என்ன? மாதவிடாய் சம்பந்தமான அறிவு மற்றும் முகாமைத்துவம் பற்றிய அறிவுறுத்தல்கள் மற்றும் திறந்த கலந்துரையாடல்கள் இடம்பெறவேண்டிய அவசியம் ஏன்?  

 அரசாங்கத்தின் சமகால முன்னெடுப்புக்கள

பாடசாலை மாணவிகளுக்கு மாதவிடாய்  அணையாடைகள் கொள்வனவு செய்வதற்கான இலவச வவுச்சர்களை வழங்கும் புதிய முயற்சியை கல்வி அமைச்சு ஆரம்பித்துள்ளதோடு  ஆறு மாதங்களுக்கு ஒவ்வொரு மாணவிக்கும் ரூ. 1,200 மதிப்புள்ள வவுச்சர் வழங்கப்படும். இந்த திட்டத்திற்காக ஒரு பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டது. தடையில்லா கல்வியை உறுதி செய்யும் நோக்கத்தில், நல்ல வளமான மாணவர்களை உருவாக்கும் நோக்கத்துடன் அமைச்சகம் இவ் மாணவர் நலத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த வவுச்சர்களை வழங்குவதன் மூலம், பெண் மாணவர்களிடையே பள்ளி வருகையை மேம்படுத்துவது மற்றும் பொருளாதார நெருக்கடிகளின் போது ஏற்படும் கல்வி புறக்கணிப்பு மற்றும் சுகாதார பிரச்சினைகள் தொடர்பான பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதையும் அமைச்சகம் நோக்கமாகக் கொண்டுள்ளது. ஜூலை 10ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த பள்ளி மாணவிகளுக்கான சுகாதாரப் பொருட்களை மீட்பதற்கான கால அவகாசத்தை ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை கல்வி அமைச்சகம் நீட்டித்துள்ளது.

பெண்களின் நல்வாழ்வுக்கு பங்களிக்கும் முக்கியமான கொள்கைகளில் புதிய சட்டங்களை  உருவாக்குவதற்கு பொறுப்பானவர்களிடையே ஒருங்கிணைப்பு மற்றும் புரிந்துணர்வை மேம்படுத்த…

  1. மாதவிடாய் சுகாதார அணையாடைகள் மீதான அனைத்து வரிகளையும் நீக்குவதற்கு கொள்கை சீர்திருத்தங்களுக்கு அழுத்தம் கொடுத்து மாதவிடாய் உள்ளவர்களுக்கு அவற்றை அணுகக்கூடியதாகவும் மலிவு விலையிலும் மாற்றல்
  • மாதவிடாய் மற்றும் மாதவிடாய் வறுமை தொடர்பான கலந்துரையாடல்களில் ஈடுபடுவதற்கு சுகாதார அமைச்சு மற்றும் கல்வி அமைச்சு ஆகியவற்றோடு ஏனைய அமைச்சுக்களின் அவசியத்தை வலியுறுத்தல்
  • மாதவிடாய் வறுமை பற்றிய விழிப்புணர்வைத் தொடர்ந்து வழங்குவதற்கும், ஒவ்வொருவருக்கும் அவர்களுக்குத் தேவையான மாதவிடாய் சுகாதாரப் பொருட்கள் மற்றும் கல்விக்கான அணுகலை உறுதி செய்வதற்கும் உறுதியளித்தல்.
  • மாதவிடாய் நாட்களில் தேயிலை தோட்டங்களில் பணிபுரிகின்ற மலையக பெண்கள் மற்றும் நலிவுற்ற சமூகங்களை சேர்ந்த மக்கள் வலுவூட்டப்பட்ட பொதுசேவைகளுடன்  இணைந்து நிர்வகிக்கப்படும் சமூகம் சார்ந்த சேவைகள் ஆகியவற்றுக்கு அணுகும் திறனை அதிகரிப்பதன் மூலம் மேம்படுத்தப்பட்ட தனிப்பட்ட சுகாதாரம் மற்றும் நீர் வசதிகளை நடைமுறைப்படுத்தல்
  • முறையான சுகாதார அறிவு மற்றும் நடைமுறைகளை அணுகுவதன் மூலம் சமூகங்களின் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துதல்
  • மாதவிடாய் வறுமையை குறைக்க சமூகமட்ட ரீதியில் பல்வேறு செயற்பாடுகளை மேற்கொள்ளல் உதாரணமாக பயன்படுத்திய மாதவிடாய் அணையாடைகளை கழிவகற்ற பாதுகாப்பான இடங்களை நிர்மாணித்தல், தேயிலைத் தோட்டங்களில் வேலைத் தள ஓய்வு அறைகள் கட்டுதல், பள்ளி மாணவர்கள், சமூகம், அரசு மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களிடையே மாதவிடாய் சுகாதாரம் மற்றும் தகவல்களை உருவாக்குதல்

மாதவிடாய் சம்பந்தமாக பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை முறியடிக்க அனைவரும் முன்வரவேண்டும். இது பெண்கள் மற்றும் மாதவிடாயை அனுபவிக்கும் அனைவரும் கௌரவத்துடனும் மாண்புடனும் வாழ வழிவகுக்கும்

Resources referred: Humanitarian Advisory Group, 2023; Daily Mirror 2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *