சமூக வேலைத் திட்டம் என்பது மனநிறைவான ஒன்றுதான்.
30.06.2024 அன்று “மலையகா” நூல் அறிமுகம் சுவிஸ் சூரிச் இல் நடைபெற்றது. அந் நிகழ்வில், யாழ் பல்கலைக் கழகத்தில் பயிலும் மலையக மாணவி தர்ஷினி அவர்களால் உருவாக்கப்பட்ட “கசிவு” என்ற 8 நிமிட ஆவணப் படமும் திரையிடப்பட்டது. தேயிலைக் கொழுந்து பறிக்கும் பெண் தொழிலாளர்கள் மாதவிடாய்க் காலத்தில் படும் அவஸ்தை குறித்தான இவ் ஆவணப்படம் அவர்களின் உடற் சோர்வு அதனுடனான வேலை நிர்ப்பந்தம் என்பன குறித்தான விடயத்தை காட்சிப்படுத்தியதோடு, இப்போதும் நப்கினுக்குப் பதிலாக பழைய துணிகளையே பலர் பாவிக்கும் நிலையையும், அதனால் அவர்கள் படும் அவஸ்தையை முக்கிய கருவாகவும் கொண்டிருந்தது. மாதவிடாய்க் காலத்திலும் இப் பழைய துணியை அபாவிப்பதால் கால்களுக்கு இடையில் ஏற்படுகிற உரசல் காயங்களும் அதன் வேதனைகளும் ஒருபுறம் இருக்க, அவர்கள் எழு அல்லது எட்டுமணி நேரம் இப்படியே வேலைசெய்வதால் இரத்தம் கால்வழியே வழிந்து பாதத்தை அடைவதால் அட்டைக்கடி இன்னும் அதிகமாக இருக்கிறது. இது பலரையும் பாதித்த ஓர் விடயமாக உரையாடலின் போது வெளிப்பட்டிருந்தது.
பழைய துணியை பாவிக்கும் தொழிலாளர்களுக்கு நப்கின் ( (sanitary pads) பாவிப்பை அறிமுகப்படுத்துவது அல்லது ஊக்கப்படுத்துவது என்ற விடயத்தை ஓரளவாவது சாத்தியப்படுத்த முடியும் என்ற உந்துதல் எல்லோரிடமும் ஏற்பட்டது. ஆனால் இத் தேவையை பெருமளவிலோ தொடர்ச்சியாகவோ எம்மால் பூர்த்திசெய்ய முடியாது என்பதும் இதன் சாத்தியப்பாட்டை பரீட்சார்த்துப் பார்ப்பதற்கும் கருத்து உடன்பாடு ஏற்பட்டிருந்தது.
அதற்கமைய மலையகத்தைச் சேர்ந்த சில பல்கலைக்கழக மாணவர்களோடு இணைந்து ஊடறு முயற்சிகளை மேற்கொள்ளத் தொடங்கியது.
பண உதவியைப் பொறுத்து முதற்கட்டமாக ஒரு தோட்டத்தில் உள்ள -பழைய துணிகளைப் பாவிக்கும் பெண்களை அடிப்படையாகக் கொண்டு, இதன் பாவனையை அறிமுகமாக்கி ஊக்குவிப்பதென முடிவாகியது. ஏற்கனவே பாவிப்பவர்களை பிரித்தறிவதிலுள்ள நடைமுறைச் சிக்கலால் எல்லாப் பெண்களுக்கும் வழங்குதென முடிவாகியது. இது ஒரு பரீட்சார்த்த முயற்சியே என்றாலும் அதன் பெறுபேறையும், பண ரீதியிலான சாத்தியப்பாட்டையும் பார்த்து இவ் வேலைமுறையை தொடரலாம் அல்லது கைவிடலாம் என கருத்துக்கள் பகிரப்பட்டன. அதன்படி குறுகிய காலத்தில் இவ் வேலைத்திட்டத்தை சாத்தியபடுத்த சுவிஸ், ஜேர்மன், இலண்டன் நண்பர்கள் கூட்டாக பண உதவி செய்தார்கள்.
கிடைத்த பணஉதவி எதிர்பார்த்ததை விட அதிகமாக இருந்தது. முதலில் ஒரு தோட்டத்தைச் சேர்ந்த 96 பேருக்கு நப்கினை வழங்குவது என தெரிவுசெய்திருந்தபோதும், இவ் வேலைத் திட்டம் 800 பெண்களுக்கு வழங்கப் போதுமானதாக பணம் கிடைத்தததின் காரணமாக விரிவுபெற்றது. வேலைகள் துரிதமாக ஆரம்பிக்கப்பட்டன. வேலைமுறையை ஆரம்பிக்க குழு அமைக்கப்பட்டது.
நாங்களும் இலங்கைக்குப் போக இருந்ததால், இத் தோட்டப் பெண்களுக்கு நேரில் நின்று வழங்குவது பற்றி பேசப்பட்டது. அதன் அடிப்படையில் 18.8.24 வழங்கலாம் என முடிவெடுத்து தலைவாக்கலையிலும் நானுஓயாவின் மேற்பிரிவு மற்றும் கீழ்ப்பிரிவு என வேலைகள் நடைபெற்றன. எல்லாம் சிறப்பாக நடந்து முடிந்தன. இத் தோட்டங்களுக்கான போக்குவரத்து பாதையின் மோசமான நிலைமைகளினூடு எல்லோரும் மகிழ்ச்சியாக இணைந்து செயற்பட்டது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. 800 பேர்களுக்கும் 3 மாதத்துக்கு போதுமான (3 பக்கற்றுகள்) 😉 pads யும், panties இனையும் சேர்த்து வழங்கினோம்.
18.08.2024 அன்று,
• 11:00 தொடக்கம் 13:00 மணிவரை தலவாக்கல தோட்ட அன்ரூ பாடசாலையிலும் ( (Andrews School) )
• 15:00 தொடக்கம் 19:00 மணிவரை நுவரெலியா பிரதேசத்துக்கு உட்பட்ட நானுஓயா கிளாஸ்சோ தோட்டம் மேற்பிரிவு மற்றும் கீழ்ப் பிரிவு என இரு இடங்களிலும்;
நிகழ்வுகள் நடைபெற்றன.
மூன்று இடங்களிலும் வரவேற்புரை, கசிவு ஆவணப்படம் திரையிடல், இத் திட்டம் தொடர்பான தெளிவுப்படுத்தல்கள்;;, நிதிப் பங்களிப்பாளர்களின் பெயர் விபரங்கள் என்பன பற்றிய கருத்துரைப்புகள் நடந்தன. பின், தலவாக்கல இல், சுகாதார அலுவலர் மொரிஸ் நேசகுமார், தோட்ட வைத்தியர் விஸ்வநாதன் ஆகியோர் சுகாதாரம் மற்றும் நப்கின் பாவிப்பு, அதன் நன்மை என்பன பற்றி விளக்கமாக பேசினர். நானு ஓயா இரு பிரிவுகளிலும் சுகாதார அலுவலர் உதயா நப்கின் பாவிப்பும் சுகாதாரமும் பற்றிய விளக்கங்களை கொடுத்ததோடு, pயன இனை எவ்வாறு -இரவிலும் பகலிலும்- பாவிப்பது என்பது பற்றியும் விளக்கினார். இறுதியில் தோட்டத் தொழிலாளர்களின் கருத்துக்களுடன் நிகழ்வு நிறைவடைந்தது அவர்கள் தங்கள் அனுபவங்களையும் முன்முயற்சிக்கான பாராட்டுகளையும் பகிர்ந்து கொண்டனர்.
தலவாக்கலையில் தனேசாவும் மற்றும் ரினோஷ் உம் அவரது நண்பர்களும் சிறப்பாக் நடத்தினர். நானுஓயாவில் தர்ஷியும், சுஜனும் நண்பர்களும் நிகழ்வை சிறப்பாக செய்துமுடித்தனர். நாங்களும் அந் நிகழ்வுகளில் கலந்து கொண்டோம். இந் நிகழ்வுகளில் கலந்து கொண்ட கிங்ஸிலி கோமஸ் அவர்கள் தோட்டத் தொழிலாளர்கள் குளவிக் கொட்டிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள பாவிக்கக்கூடியதான உடுப்புகளை இயன்றவரை சிலருக்கு அன்பளிப்பாக வழங்கினார். இந்த உடுப்புகள் அவரால் விசேடமாக வடிவமைக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
மிக அர்ப்பணிப்போடும் முயற்சியோடும் இப் பணிகள் செய்யப்பட்டன. நல்ல ஒரு அனுபவமாகவும் உற்சாகமாகவும் இருந்தது. இதை சாத்தியப்படுத்த முன்வந்து நிதியுதவி அளித்த எல்லோருக்கும் நன்றி.