ஊடறு வெளியீடாக வெளிவந்துள்ள மலையக பெண் படைப்பாளிகளின் சிறுகதை தொகுப்பு நூலான “மலையகா ” கிடைக்கப்பெற்றேன். தோழர் ரஞ்சனி தபாலில் அனுப்பி வைத்திருத்தார். மலையகம் – 200 குறித்த அவதானிப்பில் இத் தொகுப்பு முக்கியம் பெறுகிறது.இவ் அமைப்பினால் ஏலவே வெளியிடப்பட்ட “இசை பிழியப்பட்ட வீனை ” கவிஞர் வே. தினகரனின் உதவியோடு ஊடறுவினால் தொகுக்கப்பட்ட மலையக பெண் கவிஞர்களின் கவிதை தொகுப்பு நூலாக வெளிவந்தது. கட்டபுலா தமிழ் வித்தியாலயத்தில் இடம்பெற்ற வெளியீட்டு நிகழ்வில் இந் நூல் குறித்து கருந்துரை வழங்கினேன். அந் நிகழ்வின் தூண்டுதல் மலையக பெண் கவிஞர்கள் பற்றியதும் அவர்களால் படைக்கப்பட்ட கவிதைகள் பற்றியதுமான தேடலுக்கு என்னில் வழிவகுத்தது. அதன் தொடர்ச்சி நிலையில் கண்டித் தமிழ்ச் சங்கம் நடத்திய ஆய்வரங்கில் பேராசிரியர் துரை மனோகரன் தலைமையிலான அமர்வில் ஆய்வுரை நிகழ்த்தினேன். தொடர்ந்து கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் “இலக்கிய களம் ” நிகழ்வில் சிறப்புரை ஆற்றினேன். கவிஞர் சடா கோபன் நிகழ்வுக்கு தலைமை தாங்கினார்.
எனது உரை பற்றி பங்கேற்றவர்கள் சிலாகித்து கருத்துக்களை முன் வைத்தார்கள். “ஞானம்” ஞானசேகரன், லெனின் மதிவாணம், பதுளை சேனாதிராஜா, குறிஞ்சி நாடன், தெளிவத்தை ஜோசப் ஆகியோரின் கருத்துக்கள் முக்கியதத்துவம் வாய்ந்ததாகும். இந் நிகழ்வின் புகைப்படங்களை எடுத்து லெனின் மதிவானம் அவர்களின் முகநூலில் பதிவிட்டிருந்தார். எனக்கு முகநூலோ, (ஸ்மாட் ) கையடக்க தொலைப்பேசியோ பரீட்சையமில்லாத காலம். “உங்கள் தேடல் ஆழமானதாகவும் ஆய்வு காத்திரமாகவும் உள்ளது ஐயா” என்ற லெனின் மதிவானம் அவர்களின் கூற்று எனக்கு திருப்தியைத் தந்தது.
அதன் தொடர்ச்சி நிலையில் நண்பர் எஸ். தவச்செல்வனின் ஏற்பாட்டில் மஸ்க்கெலியா சென் ஜோசப் கல்லூரியில் இடம்பெற்ற ஆய்வரங்கில் “கவிதை இலக்கியத்தில் மலையக பெண் கவிஞர்களின் பங்களிப்பும் வெளிப்படுத்துகையும்.” எனும் தலைப்பில் ஆய்வுரை நிகழ்த்தினேன். அவ் அரங்கில் வெளியிடப்பட்ட “செவ்வொளி” தொகுப்பு நூலிலும் இடம்பெற்றுள்ளது.இந் நகர்வுகளுக்கு “இசைப் பிழியப்பட்ட வீனை” என்னில் முக்கியத்துவம் பெறுகிறது. அவ்வாறே “மலையகா” பற்றிய அவதானமும் தொடர்கிறது. இத் தொகுப்பில் பல கதைகளை ஏலவே சுவைத்துள்ள நிலையில் விரைவில் முழுமையான பார்வையில் பதிவை முழுமைப்படுத்துவேன்.இப் பணியில் உழைத்த அத்தனை பெரும் உள்ளங்களுக்கும் மலையக சமூகம் சார்பில் நன்றியைத் தெரிவிக்கின்றேன்.