வலி
பிரியா விடை
“பிரியா விடை
இது ஒரு வெற்றுப் பேச்சு
உறவுகள் வருதலும் போதலும்
இயற்கையின் நியதி
இறப்பு வரை இது
தொடர் கதையே…
இதற்கிடையில்
மனித மனங்களுக்கிடையில்
பல போராட்டங்கள்
உணவை உண்ணக்கூட
நேரமில்லாமல்
எவனை உண்ணலாம் என்ற எண்ணம்
உறங்குவதை மறந்து விட்டு
யாரை நிரந்தரமாக உறங்க வைக்கலாம்
என்ற தீவிர சிந்தை.
தான் சாதிப்பதை விட்டு விட்டு
யார் அவர்? என்ன சாதி – எனக்
கேட்டறிவதில் ஆர்வம்
உன்னிடம் உள்ளதை வைத்து
திருப்தி அடைவதை விட்டு விட்டு
அவனிடம் இருப்பதைப்
பறிப்பதில் தான் எவ்வளவு ஆனந்தம்?
இத்தனைக்கும் மத்தியில்
“பிரியாவிடை”
விடைகாண முடியாத
நபர்களுக்காய்…
உறவுகள் எம்முன்னே
கண்ணீர்ச் சிதறல்களுடன்
அன்பை வெளிக்காட்டும் முகமாக
இப்படித்தான் வெளிக்காட்ட
வேண்டுமா? எனச் சில உறவுகள்
கண்களுக்குள்ளேயே நீரை அடக்கம்
செய்து கொண்டு
வைராக்கியமாய்…
“பிரியாவிடை”
இது ஒரு வெற்றுப் பேச்சு
****
பிறருக்காய்
தாயின் அன்பில் பிடிவாதம்
தந்தையின் அரவணைப்பில் ஆர்ப்பாட்டம்
சகோதர்களின் பாசத்தில் கோபம்
இவையனத்தையும் என் குடும்பத்தில்
இருக்கும்போது நான் செய்தேன்
ஆனால் இப்போது ?
வீதியிலே போகிறவனுக்காய்
அன்பு
முகம் தெரியாத மூன்றாம் நபருக்காய்
பொறுமை
உறவுகளின் வீடுகளில்
அடக்கம்
அடுத்தவரின் வார்த்தைகளால்
சகிப்பு
இவற்றை எல்லாம்
சுருக்கமாகக் கூறினால்
இன்று நான்
“ முழுமையாக எனக்காய்
வாழ்வதில்லை ”
( யாழினி யோகேஸ்வரன் கிழக்கு பல்கலைக்கழகம் வந்தாறுமுலை மட்டக்களப்பு)
உன்னிடம் உள்ளதை வைத்து திருப்திஅடை என்பது முதலாளித்துவ சிந்தனை,இருப்பினும்…நன்று.