பார்வதி

thumbnail.3 (2007 ஜூன் 28,  குமாரி கமகே இன் ”குறுங்கதையாக்கப்பட்ட பெருங்கதை” என்ற புத்தகத்திலிருந்து)

தமிழில் :- ஃபஹீமாஜஹான்-

“அவர்களின் ஆண்மையின் பலத்துக்கு எதிரில் தனது பெண்மையின் சக்தியை ஒன்றிணைத்து பார்வதி வாழ்வுப்போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்கிறாள், அழுகிறாள் , சிரிக்கிறாள், எங்களுக்கு கச கசா  வித்துக்களைப் போட்டு சர்பத் செய்து தந்தாள். மிகவும் அழகான பெண்ணுடல் ஒன்று ஆணின் நடையில் செல்வதை நான் பார்த்திருந்தேன்.”

பார்வதிக்கு 36 வயதுதான் ஆகிறது. EPRLF இலிருந்து விலகிய ஒருவரைத் திருமணம் செய்திருந்தாள். அந்தக் காலத்தில் அவள் கோராவலியில் வாழ்ந்தாள். குடும்பி மலையடிவாரத்தில் காணப்படும் ஒரு ஊர் இதுவாகும்.

1990 ஆண்டுக் கலவரத்தின் போது வீடுவாசலைக் கைவிட்டுவிட்டு வரும்போது மூத்த மகன் தனது இரண்டாவது வயதில் காலடி வைத்திருந்தான். அணிந்திருந்த ஆடைகளைத் தவிர மாற்றுடைகள் ஏதும் இருக்கவில்லை. அப்படி வந்த காலத்தில் கிரான் ஒரு ஊராக இல்லாமல் காடாகவே இருந்தது. ஓரளவுக்குச் சுற்றுப்புறத்தைச் சுத்திகரித்து, சிறு குடிசையொன்றை அமைத்து அங்கேயே வாழத் தொடங்கினர்.

93ம் ஆண்டில் இனந்தெரியாத எவரோ அவளது கணவன் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். அப்போது பார்வதிக்கு இரண்டு மகன்மார் இருந்தனர்.  கணவனைக் கொலை செய்தது யார் என்பதைப் பற்றி இதுவரையும் பார்வதி அறிய மாட்டாள். ஏன் கொலை செய்தனர் என்பதை அவள் அறிந்து கொள்வதாலும் பயனேதுமில்லை.

95ம் ஆண்டு பார்வதி வீட்டுப் பணிப்பெண்ணாக ஜோர்தான் சென்றாள். பின்னர் பல தடவைகள் வீட்டுக்கு வந்து மீண்டும் சென்றாள். உழைத்த பணத்தைக் கொண்டு சிறிய அறைகள் இரண்டைக் கொண்ட வீடொன்றினைக் கட்டினாள். பார்வதியின் தந்தையுடன் வாழ்ந்த அவளது பிள்ளைகள் இருவரையும் உணவு உடை கொடுத்து எப்படியேனும் பள்ளிக் கூடத்திற்கு அனுப்பும்படி செய்தாள்.

பதினொரு வருடங்கள் ஜோர்தானில் பணிப்பெண்ணாக வேலை செய்த பார்வதி அதனை முடித்துக் கொண்டு 2006ம் ஆண்டு ஒக்டோபரில் நாடு திரும்பினாள். அப்படித் திரும்பியது பணமுழைத்தது போதுமாதென்றோ அவள் செய்யும் பணி வேண்டாம் என்றோ அல்ல. அப்போது தச்சு தொழில் புரிந்து கொண்டிருந்த 17 வயதே நிரம்பிய அவளது மூத்த மகனை செப்டெம்பர் மாதத்தில் கருணா குழுவினர் வலுக்கட்டாயமாக் கொண்டு சென்றதால் அவள் நாடு திரும்பியிருந்தாள். அப்போது பெரிய மகன் அவனுழைத்த பணத்திலிருந்து தொலைக்காட்சிப் பெட்டி, டெக்,வானொலி போன்றவற்றை வீட்டில் வாங்கி வைத்திருந்தான். பெரியவன் அவற்றை மிகவும் விரும்பினான். தானுழைத்த பணத்திலிருந்து அவற்றை வாங்கிவைத்துக் கொண்டு அம்மா வரும் போது அப்பொருட்களைப் பெருமையுடன் காட்டுவதற்காகக் காத்திருந்தான்.

வீட்டுக்கு வந்த நேரத்திலிருந்து மூத்தவனைத் தேடி பார்வதி எல்லா இடங்களிலும் அலைந்தாள். இறுதியில் அவள் தன் பையனைச சந்தித்தாள்,எனினும் அவனால் நடக்க முடியாமல் இருந்தான். வாகரைச் சமரில் துப்பாக்கிக் காயத்திற்கு உள்ளாகியதால் ஒரு கால் பாரதூரமாகப் பாதிக்கப் பட்டிருந்தது. பார்வதி பையனை வீட்டுக்கு அழைத்துச் செல்ல அனுமதி கோரினாள். பிள்ளை எங்களிடம் இருப்பதே நல்லது, நாங்கள் நல்லபடியாகப்பார்த்துக் கொள்கிறோம்,மருத்துவம் செய்கிறோம், இங்கு பாதுகாப்பும் உள்ளது என்று கூறி அவர்கள் அதனை மறுத்தனர்.

தன்னால் இயன்ற எல்லா நேரரங்களிலும் பார்வதி தன் மகனைப் பார்ப்பதற்காகச் செல்வாள். அம்மா அவனிடம் போய் அங்கிருந்து வரும் வரைக்கும் அவன் கண்களில் கண்ணீர் தேங்கியிருக்கும். ஆனாலும் பார்வதி அந்தக் கண்ணீரை எதிர்கொள்ளாமல் தவிர்க்கவே முயற்சிப்பாள்.

தனியே நடமாடக் கூட முடியாத நிலையில் தப்பித்து ஓடிவருவதெப்படி? மேலும் அந்த முகாம் இராணுவ முகாமொன்றினால் சூழப்பட்டிருந்தது.மறு புறத்தில் கடல்,இன்னொரு பக்கத்தில் ஆறு. எப்படியாவது தப்பித்துவந்தான் என்று வைத்துக் கொண்டாலும் என்ன நடக்கப் போகிறது? மறுபடியும் தூக்கிக் கொண்டு போய் தப்பித்துச் சென்றதற்காகத் தண்டனை கொடுப்பார்கள்.அல்லது யாரேணும் வெடிவைத்துக் கொல்லக் கூடும்.அதுவுமியில்லையென்றால் அவனுக்குப் பதிலாக வீட்டில் வேறுயாரையாவது கொண்டு போவார்கள்.தொல்லைகளே எஞ்சப்போகின்றன. அப்படி நடக்கமாட்டாதென்று யார் உறுதியளிப்பார்? கடைசியில் காத்திருப்தைத் தவிர வேறு வழியில்லை என்று பார்வதி தீர்மானித்தாள்.என்றாவது ஒருநாள் யாராவதொருவர் மகனை வீட்டில் கொண்டுவந்துவிடுவார்கள் என்று நம்பினாள்.

பார்வதிக்குத் தன்போக்கில் இருந்துவிட முடியாது. மற்ற மகனை வளர்த்தெடுக்கவேண்டும். கல்வி கற்பிக்க வேண்டும். தொழிலொன்றைச் செய்யுமளவுக்கு அவனிடம் அறிவும் திறமையும் இல்லை, தூர இடங்களுக்குச் செல்லவும் முடியாது. பிள்ளைகளைப் பார்த்துக் கொண்டிருந்த அப்பாவும்  நோய்வாய்ப்பட்டார்.அவர் வீட்டிலேயே பியர் விற்பனை செய்வதற்குத் தொடங்கினார்.மதுபானச் சாலையிலிருந்து திருட்டுவழியினால் வீட்டுக்குக் கொண்டுவரும் பியரை இருபது ரூபா இலாபம் வைத்து விற்பார். பொலிஸாரிடமோஇ இராணுவத்திடமோ அல்லது இயக்கமொன்றிடமோ மாட்டிக் கொண்டால் பெரிய பிரச்சினை ஏற்படலாம்.பரவாயில்லை அது வரும் போது அதற்கு முகம் கொடுக்கலாம்.


“-சிவனின் சக்தி- அவள், பார்வதி கட்டியிருந்தது கருணாவை, மகன் பிரபா…நான் கூறுவேன் பார்வதி துர்க்கை என்று.பலம்வாய்ந்த தெய்வங்களால் வெல்ல முடியாமற்போன எமனைத் தோற்கடித்த…தெய்வங்களின் எல்லா ஆற்றலையும் ஒன்றிணைத்துப் போராடிய….துர்க்கை.”

“அவர்களின் ஆண்மையின் பலத்துக்கு எதிரில் தனது பெண்மையின் சக்தியை ஒன்றிணைத்து பார்வதி வாழ்வுப்போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்கிறாள், அழுகிறாள் , சிரிக்கிறாள், எங்களுக்கு கச கசா  வித்துக்களைப் போட்டு சர்பத் செய்து தந்தாள். மிகவும் அழகான பெண்ணுடல் ஒன்று ஆணின் நடையில் செல்வதை நான் பார்த்திருந்தேன்.”

” ஏன் பார்வதி மறுபடியும் கல்யாணம் கட்டல்ல?” நான் கேட்டேன். அவள் சிரித்தாள்.

இரவு 7மணிகடந்த பின்னர் அக்கம் பக்கத்திலுள்ள யாரும் வீட்டுக்கு வெளியே வரமாட்டார்கள். பார்வதியும் மகனும் இரவு ஏழு மணியானதும் கதவைத் தாழ்ப்பாள் இட்டுக் கொண்டு வீட்டினுள் புகுந்து கொள்வார்கள்.
” ஏனென்றால் பல்வேறு விதமான துப்பாக்கிதாரிகளின் சுவர்க்க பூமி இது” பார்வதி கூறினாள்.

“அவசரமாக சிறுநீர் கழிக்கத் தேவை ஏற்பட்டால்?” நான் கேட்டேன். அவள் மீண்டும் சிரித்தாள்.

(2007 ஜூன் 28  குமாரி கமகே இன் ”குறுங்கதையாக்கப்பட்ட பெருங்கதை” என்ற புத்தகத்திலிருந்து)

1 Comment on “பார்வதி”

  1. அருமையான கதை சிங்கள எழுத்தாளர்கள் இப்படி எழுதுவதை கருணாவினாலோ அல்லது மற்றைய இயக்கங்களினாலோ மறுக்கவும் முடியாது மறைக்கவும் முடியாது. this is a fact

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *