மலையகா, என்ற தொகுப்பு இலங்கை மலையகம் சார்ந்த இருபத்து மூன்றுபெண் எழுத்தாளர்களின் சிறுகதைகளை தொகுத்து வெளியிட்டுள்ள ஊடறு தேர்வு செய்திருக்கும் இவ் சிறுகதைகள் தனித்துவமுடைய மலையக பெண் எழுத்தாளர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது தான் பெரும் கவனிப்புக்குள்ளாகிற விடயம். மேலும் வலியில் கிடந்து உழல்பவர்களுக்கே அதன் தாக்கத்தின் தீவிரத்தை கதையாக, கவிதையாக, நாவலாக வெளிப்படுத்த முடியும். தொகுப்பிலே இடம்பெற்றிருக்கும் 99 வீதமான படைப்புக்கள் தம் இயலாமைகளை உணர்வு பூர்வமாக முன்வைத்திருக்கின்றனர்
இக்கதைகள் உரக்கபேசுகின்றன. இரக்கத்தை இரந்து அவர்கள் நிற்கவில்லை. தமது தொழிலாளர் உரிமைகளுக்காக வாதாடுகின்றனர் இவைகள்தான் மலையகாவில் ஊன்றப்பட்டிருக்கும் விதை. தொகுப்பில் அடங்கியிருக்கும் 42 கதைகளில் ஒரு சிலவற்றைத் தவிர மற்ற அனைத்துமே மலையக பெண்களால் அவர்களின் குடும்பத்துக்காக தம்மையே ஒறுத்து வாழும்-வாழ்ந்த வாழ்வை அவர்களாலேயே எழுதப்பட்டிருப்பதே அதன் உண்மையை எடுத்து சொல்கிறது. ஏறக்குறைய 300 பக்கங்களை கொண்டிருக்கிற இவ்வெளியீட்டிற்கு எம்.எம்.ஜெயசீலன் (தமிழ்த்துறை, பேராதனை பல்கலைக்கழகம்) அவர்களின் முகவுரை இலங்கை மலையக படைப்புக்களை -வெளியீடுகளின் ஒரு வரலாற்றை பேசுகிறது, அவருடைய வரிகள் இத்தொகுப்பு மலையகப்பெண் சிறுகதைகளையும் அவற்றில் விரியும் வாழ்வையும் பரவலான உரையாடலுக்கு உட்படுத்தும் வாய்ப்பைத் திறந்துள்ளது.
பெண் எழுத்துக்களை ஆவணப்படுத்துவதிலும்,பெண்விடுதலைச் செயற்பாடுகளை முன்னெடுப்பதிலும் வீச்சுடன் இயங்கிவரும் ஊடறு மலையகப் பெண்படைப்புக்களை ஆவணப்படுத்துவதிலும், மலையகத்தில் பெண்விடுதலை விழிப்பை ஏற்படுத்துவதிலும் அக்கறையுடன் ஈடுபட்டுவருவதை அவதானிக்க முடிகிறது.
இலங்கையின் ஏற்றுமதி பொருளாதாரத்தின் கணிசமான பகுதி தேயிலை. ஆனால் அவ்வுற்பத்திக்கு மூலகாரணமான பெண்ணுடல் தேயிலைத் தோட்டங்களில் பிழிந்தெடுக்கப்படுகிறது. பிள்ளைகளின் கல்வி வாய்ப்பை இயலுமானளவு தோற்கடிக்கச் செய்து அவர்களை எதிர்கால தோட்ட தொழிலாளர்களாக மாற்றியமைக்கும் பணியில் முதலாளித்துவம் தொடர்ந்தும் தொடர்ந்தும் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் மனநிலையோடு ஒத்தூதி வருகிறது. முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க போராட்டங்கள் நீர்த்துப்போகின்றன. பெண் கல்வியில் முன்வைக்கப்படும் தடைக்கற்கள் நம் விதி என்ற மூடநம்பிக்கைக்குள் மூழ்கவைக்கிறது. இத்தொகுப்பிலுள்ள பெரும்பாலான கதையாடல்கள் இப்படி பல கேள்விகளை உரக்க பேசுகின்றன.
உலகம் பூராவும் இலங்கை எங்கிருக்கிறது? என இலங்கை பற்றி தெரிந்திராதவர்களுக்கும், (Ceylon Tea ) சைலோன் டீ,, அறியவைத்திருக்கிறது!!! ஆனால் குளிரில் குளித்து பசியில் உழன்று அன்றாட வாழ்வோடு போராடி தேயிலை, உற்பத்திக்கு பெரும் பங்களிக்கும் மலையக மக்களை தோட்டக்காட்டான் என்ற வசைச் சொல்லை இழிவாக பயன்படுத்துவதே வழமையாக போய்விட்டது.
பெருமையாக (Ceylon Tea ) சைலோன் டீயை உலகசந்தையில் முன்வைக்கும் இலங்கை அரசோ- தோட்ட நிர்வாகமோ தேயிலைக்காக உழைக்கும் மக்களை உதாசீனப்படுத்துகின்றன என்பதை ஊடறு தொகுப்பிலே எழுதப்பட்டிருக்கும் சிறுகதைகள் உரத்து குரல் எழுப்பியுள்ளன.
1972,1975,1987,1994 ஆகிய காலப்பகுதிகளில் எழுதப்பட்டிருக்கும் சிறுகதைகளில் வாழும் துயர்,வறுமை, கல்வி மறுப்பு, மதுவுக்கு அடிமை, சிறுபிள்ளைகளையும் வீட்டு வேலைகளுக்காக அனுப்ப வேண்டிய கட்டாயம்,வேலைக்கேற்ற ஊதியமின்மை,வாழவே தகுதியற்ற லயங்களில் வாழவேண்டிய நிர்ப்பந்தம் போன்ற இன்னும் பல துயரங்களும் உண்மையோடு புனைவுகளின்றி வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
அதே சமயம் 2000,2001 2015 களில் எழுதப்பட்டிருக்கும் எழுத்துக்களிலும் இன்னுமே மலையகத்தின் முன்னேற்றம் ஒரு சிறிய வெளிச்சத்தை மட்டுமே காட்டி நின்ற இடத்திலே நிற்கிறது என்பதை தொகுப்பின் வாசிப்பிலிருந்து புரிந்துவிடுகிறது. பலவருடங்களுக்கு முன்னரும் மீனாட்சி அம்மாள், மற்றும் ஆளுமைகளும் இலங்கை மலையகத்தின் துயர் வாழ்வை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். இன்றைய காலகட்டத்திலும் மலையகத்தின் வாழ்வு பற்றிய நிலைமைகளை பெண் எழுத்துக்கள் வழியாக,,மலையகா, விவாதிக்கப்படவேண்டிய-செயல்பட வேண்டிய தேவையை இத்தொகுப்பு மூலம் முன்மொழிந்திருக்கிறது.