இலங்கை மலையக வாழ்விற்கு இருநூறு வயது. இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்ட தாயகம் திரும்பிய மக்களும் ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்துவிட்டனர். தேயிலைத்தோட்ட வாழ்வில் மலைகளில் தலைகளில் கொழுந்துகூடைகளை சுமப்பது மட்டுமல்ல, வீட்டின் சுமைகளையும் பெண்தான் பெரும்பாலும் சுமக்கிறாள். பெரும்பாலும் ஆண்களுக்கு மலைகளோடு வேலை முடிந்துவிடுகிறது. பெண்களுக்கு அப்படி இல்லை. உறங்கும் நேரம் தவிர ஏதோ ஒரு வடிவில் வேலை இருந்துகொண்டேயிருக்கும். அதிலிருந்து மீண்டு வேறுவேலைகளுக்கு செல்பவர்கள் மிக குறைவு. சமீப காலமாக ஆசிரிய பெருமக்களை சொல்லலாம்.
தோட்டத்தில் கொழுந்துக்கூடைகளோடு இழைந்தபோதும் , நகரங்களில் அரசு அலுவலகங்களில் வேலை செய்தபோதும், தங்கள் வலிகளை சொல்ல ஏற்ற வடிவம் சிறுகதையே. வரலாறுதோறும் கூர்ந்து அவதானித்தால் ஒவ்வொரு தோட்டப் பகுதியிலும் ஒரு சிறுகதை ஆசிரியரை காணமுடியும். நூற்றுகணக்கான மீனாட்சியம்மாக்களும் கோகிலம் சுப்பையாக்களையும் காணமுடியும். இது மலையகத்தின் சிறப்பு. இலங்கையையும் இந்தியாவையும் ஒப்பீடு செய்தால், தமிழகத்தில் படைபிலக்கியதுறையில் குறிப்பாக பெண்களின் பங்களிப்பு இல்லை என்றே சொல்லலாம். இந்த ஐம்பதுவருட வாழ்வின் ஓட்டத்தில் தங்களை நிலைநிறுத்திக்கொள்வதுவும், தோட்டம்கடந்து மற்ற வேலைகளுக்கு செல்லவழியின்றி இருப்பதுவும் ஒரு காரணமாக கொள்ளலாம்.
இலங்கையில் தோட்டத்து வாழ்விலிருந்து ஆசிரியர் பணிக்கு சென்றாலும்கூட , இதர வேலைகளோடு ஒப்பீடு செய்தால் மிககுறைந்த ஊதியமும் வேலைப்பளுவும் உள்ளதுறை அதுவே. இருந்தபோதும் மலையக வாழ்வின் வலிகளையும் , எதிர்பார்ப்புகளையும் பெண்களே எழுத்தில் வடிப்பது காலத்தின் தேவையாக இருக்கிறது. ஏனெனில் , மலையகத்தின் வலியை உணரவும் உலகு அறியச்செய்யவும் பெண்களின் குரலை முதன்மைபடுத்தவேண்டும். ‘மலையகா’ என்கிற இந்த சிறுகதைதொகுப்பு அதற்கு வலுசேர்க்கும். பிற்போக்குத் தனங்களுக்கு எதிரானகோபம், உறவுகளின் அலைக்கழிப்பு , தோட்டத்து ஏழ்மைவாழ்வை அகற்ற போராடும் மனங்கள் , வறுமை , குடியினால் சீரழியும் குடும்பம் , இப்படி பலவிடயங்களை இதில் உள்ள கதைகள் பேசுகிறது.
மலையக எழுத்துகளுக்கே உரிய எந்தவிதமான புனைவுகளும் அலங்காரங்களும் இன்றி , வாழ்வை அப்படியே எடுத்து வைக்கிறது. என்னைக் கேட்டால் ‘மலையகம் இருநூறு’ நிகழ்வுகளை முற்றிலும் பெண்களே பங்குகொள்ளச் செய்யும் நிகழ்வுகள் எவ்வளவு முடியுமோ அதை ஏற்பாடு செய்யவேண்டும். தேயிலைத்தோட்ட தொழிலாளிகளின் உரிமையை வென்றெடுக்கவும் அவர்களின் குரலை இந்த உலகம் கவனிக்கவும் காலத்தின் கட்டாயமாக நம்முன்னுள்ள கடமையாக இருக்கிறது. மலையகப் பெண்களின் எழுத்துக்களை தொடர்ந்து வெளியிடுகிற ஊடறு வெளியீடு நிறுவனத்திற்கும் , இந்த நூலை என்னிடம் சேர்த்த சகோதரர் பேராதனை தமிழ்த்துறை விரிவுரையாளர் எம் .எம் ஜெயசீலன் அவர்களுக்கும் பேரன்பும் வாழ்த்துக்களும்!!#மலையகா