இத்திரைப்படத்தில் காட்டியிருப்பது போல பெண்கள் அம்மாதிரியான குடும்பங்கள் இப்போதும் இந்தியாவில் இருக்கின்றன. அந்த வாழ்க்கை சூழலில் இருந்து கணவனோடு மும்பை வந்து குடியேறும் பெண்கள் மீண்டும் அந்தக் கிராமத்திற்கு செல்ல விரும்புவதில்லை. அவர்கள் மும்பைக்கு குடியேறும்போது அவர்களுடைய தோற்றம், புன்னகைக்க கூட தயக்கம், குனிந்த தலை நிமிராமல் கண்ணோடு கண் பார்க்காமல் பேசும் அவர்கள் முகம்…இதெல்லாம் அவர்கள் மும்பைக்கு புதியவர்கள் என்பதைக் காட்டிவிடும்.ஆனால் வந்து சில மாதங்களுக்குள் அவர்கள் காட்டுகின்ற மாற்றம் குறிப்பாக அவர்களுடைய தோற்றத்தில்..! நமக்குச் சிரிப்பு வரும். அதே நேரம் பாவம் அப்பெண்கள், இப்போதுதான் ஒரு திறந்தவெளியை அவர்கள் வாழ்க்கையில் அவர்கள் உணர்கிறார்கள். ஒரு பெண் தனியாக ஷாப்பிங் போகலாம், ஒரு பெண் துப்பட்டா போடாமல் ரோட்டில் நடக்கலாம்,
ஒரு பெண் பகல் நேரத்தில் எல்லோரும் முன்னிலையிலும் கணவனின் கைபிடித்து சங்கோஜமின்றி நடக்கலாம், டீ சர்ட் போடலாம்.. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இதெல்லாம் என்ன பெரிய விடுதலையா என்று கேட்டால் இதில் எதையுமே விரும்பினாலும் செய்ய முடியாத இறுக்கமான குடும்ப சூழலில் வாழ்பவர்களுக்கு மட்டும் தான் இந்தச் சின்ன சின்ன விஷயங்களில் பெண்கள் கண்டடையும். மகிழ்ச்சியும் அவர்களின் உலகமும் புரியும். இதில் இன்னும் சில புத்திசாலி பெண்கள் தங்கள் குடும்பத்தில் இருந்து தங்கள் சகோதரிகளை மட்டுமல்ல தங்கள் கணவனின் சகோதரிகள் தங்கள் குடும்பத்தில் தன் கணவனோடு பிறந்த சகோதரனின் மனைவி ஆகியோரையும் மும்பை அழைத்து வந்த இப்படி ஒரு உலகம் இருக்கிறது பாருங்கள் என்று காட்டி..
அவர்கள் அந்த மாலை நேரத்தில் அவ்வளவு மகிழ்ச்சியுடன் எங்கள் சின்ன நடைபாதையில் நடந்து செல்வதைப் பார்ப்பது நமக்கு இன்னும் தெரியாத ஒரு பெண் உலகத்தைக் காட்டும்! தனக்குப் பிடித்தமான நிறம் தனக்குப் பிடித்தமான உணவு தனக்குப் பிடித்தமான பூ…தனக்குப் பிடித்தமான எல்லாவற்றையும் மறந்து போன வாழ்க்கையில் இருந்து அவர்கள் புதிதாக வாழ வரும் போது அந்த வாழ்க்கை.. எவ்வளவு இனிது. வாழ்தல் இனிது. சின்னச் சின்ன சந்தோஷங்களின் இனிமையுடன் வாழ்தல் இனிது. அப்பெண்களைப் பார்த்த போது தான்…எளிதாக என் வசமாகி இருக்கும்.. எல்லாமும். எவ்வளவு மகத்துவமானது. எவ்வளவு முக்கியமானது. இதோ.. இத்தருணம் உட்பட.