1935.சுமார் 90 ஆண்டுகளுக்கு முன் புதுமைப்பித்தன் ஒரு தொடர்கதை எழுதினார். அது மணிக்கொடியின் மூன்று இதழ்களில் தொடர்ந்து வெளிவந்தது. அது என் பெற்றோரே பிறக்காத காலம்.அந்தக் கதை வெளிவந்து ஐம்பது ஆண்டுகள் கழித்து நான் அதைப் படித்தேன். என் நெஞ்சத்தை நீண்டகாலம் புழுங்க வைத்த அதன் பெயர் ‘துன்பக்கேணி’.என் இளமைப் பருவத்தில் எட்டிப்பார்த்த, துன்பம் தளும்பிய அந்தக் கேணியின் அடியாழ இருட்டு, இன்றும் என் நினைவை விட்டு நீங்காமலே இருக்கிறது.‘துன்பக்கேணி’ க்குள் விழுந்து மேலேற முடியாமலே வாழ்நாளெல்லாம் உழன்றவள் ‘மருதி’. அவளது மகளான ‘வெள்ளைச்சி’ யின் பேத்திகள் இருபத்து மூன்று பேர் சேர்ந்து, நாற்பத்தி இரண்டு கதைகள் எனும் துன்பக்கடலில் என்னைத் தூக்கிப் போட்டு விட்டார்கள்.இந்த இருபத்து மூன்று பேரும் வெள்ளைச்சியின் பேத்திகளா, புதுமைப்பித்தனின் பேத்திகளா என்ற சந்தேகத்தோடு, அந்தப் பெரும் துன்பக்கடலில் இருந்து கதைகளெனும் அலைகளால் கரைசேர்க்கப்பட்ட நான், தலைகுனிந்து கடற்கரை மணலில் அமர்ந்திருந்த போது, என் உதடுகளில் தட்டுப்பட்ட உப்பின் சுவை கடல்நீரினாலா? கண்ணீரினாலா? என்று குழம்பிப் போனேன்.
இலங்கையின் ஊர்ப் பெயர்களை எனக்கு நெருக்கமாக முதலில் அறிவித்தது ‘இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ் சேவைகள்’தான். நான் இந்தியாவில் வாழ்ந்தாலும், என் மனங்கவர்ந்த நிகழ்ச்சிகளை அவர்களே வழங்கினார்கள். பிள்ளைப் பிராயப் பொழுதுகள் மகிழ்ச்சியாய் கழிந்தது இலங்கை வானொலியால் தான்.இலங்கையைப் பற்றி நான் முதலில் படித்தது ஒரு பயணப் புத்தகத்தில். அது கும்பகோணத்தைச் சேர்ந்த பிரபல வியாபாரி P. ஷண்முகம் அவர்களால் எழுதப் பட்டது. 1970களில் ‘P.S.ஸ்பெஷல் புளி’ என்று, பிளாஸ்டிக் பேப்பரில் சிறு செங்கல் போன்ற அமைப்பில், கும்பகோணம், தஞ்சை, திருச்சி பகுதிகளில் பிரபலமாக விற்பனையான, ஐரோப்பிய நாடுகளுக்கு புளியை ஏற்றுமதி செய்து கொண்டிருந்த நிறுவனத் தலைவர் அவர். அந்தப் புத்தகம் இலங்கையின் கொள்ளையழகை என் இதயத்தில் ஏற்றி வைத்தது.
கண்டியும், நுவரேலியாவும், மலைகளும், அருவிகளும் மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் பசுமை வெளிகளும் என் கண் முன் காட்சியளிக்கச் செய்த புத்தகம் அது.இலங்கை இன அழிப்பின் தொடக்க காலத்தில் (1981) எங்களது கல்லூரிப் புறக்கணிப்பே எனக்கு இலங்கைப் பிரச்சினையை முதலில் அறிமுகப் படுத்தியது.அதற்கு ஓரிரு வருடங்கள் கழித்து, அருளரின் ‘லங்கா ராணி’ எனும் நாவல், எனக்கு இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளை கொஞ்சம் விளக்கியது.சோ மற்றும் ஜெயகாந்தன் ஆளுகைக்கு நான் உட்பட்டிருந்த அந்தக் காலத்தில், இலங்கைப் பிரச்சினையை அணுகுவதில் இரக்கமின்றியே இருந்தேன்.வேதாரண்யத்தைச் சேர்ந்த என் கல்லூரித் தோழர்கள் மூலமாக இபிஆர்எல்எஃப் மற்றும் டெலோ இயக்கங்களைச் சேர்ந்த சில நண்பர்கள் அறிமுகமானார்கள்.சிறீ சபாரத்தினம், பத்மநாபா மற்றும் ராஜீவ் காந்தி படுகொலைகள், விடுதலைப் புலிகள் மீதான வெறுப்பை எனக்குள் வளர்த்தன.ஆனாலும் இலங்கைத் தமிழர்களின் இன்னல்கள் குறித்த மனவேதனைகள் தொடர்ந்தன.
விடுதலைப் புலிகள் குறித்து நிதானமாக யோசிக்கவே எனக்கு இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் ஆனது.ஈழம் குறித்த என் மறுபரிசீலனைக்கு முக்கிய காரணம் மிகவும் காலதாமதமாக கா.அய்யநாதன் அவர்களால் எழுதப்பட்டு, 2015 ல் வெளிவந்த ‘ஈழம் அமையும்’ என்ற புத்தகமேயாகும்.கோவை குடியேறிய பிறகு2019 ல் எழுவர் விடுதலை வேண்டி ஒருங்கிணைக்கப்பட்ட மனிதச் சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டது மட்டுமே நான் இலங்கை சம்பந்தமாக கலந்துகொண்ட ஒரேயொரு செயல்பாடு.அதன்பிறகு இலக்கிய வடிவில் என்னை நெருங்கியது, உண்மைகளைப் புனையாமல் உள்ளபடியே எழுதுபவரான சஞ்சயன் செல்வமாணிக்கம் அவர்களின் எழுத்துகள்.அதைத் தொடர்ந்து என் கைக்கு வந்ததே ‘மலையகா’.‘மலையகா’, இருபத்து மூன்று இலங்கை மலையகப் பெண் படைப்பாளிகள் எழுதிய நாற்பத்தி இரண்டு கதைகளின் தொகுப்பு ஆகும்.இந்தக் கதைகளின் களம், வெள்ளைச்சி விளையாடித் திரிந்த, தேயிலைக் கொழுந்துக் கூடைகளோடு தங்கள் வாழ்க்கையைப் பிணைத்துக் கொண்ட, தமிழர்கள் உழைத்து உருவாக்கிய இலங்கை மலையகப் பகுதிகள்தான்.நான் ஒரு விமர்சகன் இல்லையாதலால், இந்தக் கதைகளைப் பற்றி வாசகனாகவே என் உணர்வுகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
மலையகா உழைப்பவர்களின் உதிரம் உட்கார்ந்து பிழைப்பவர்களால் உறிஞ்சப்படுவதே நியதி. அதில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் நிலை மலைத் தொடர்களுக்கே உரிய தொல்லைகளும் இணைந்தது.தமிழ்நாட்டு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் நிலையொன்றும் உன்னதமாக இல்லைதான். ஆனால், இலங்கையின் மலையகத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் நிலையை ஒப்பிட்டால் ‘கொஞ்சூண்டு தேவலாம்’ என்றுகூட சொல்லி விடலாம். அதற்குப் பல அரசியல் காரணங்களும் உள்ளன.இந்திய மேற்குத் தொடர்ச்சி மலைகளில் தேயிலை பறித்து வாழ்ந்து வருபவர்களில் பெரும்பாலோர், சில தலைமுறைகளுக்கு முன்பே சமவெளிகளில் இருந்து மலையேறிய, துயருற்ற விவசாயிகளே. எந்த மலைத்தொடர் ஆயினும், அவற்றைத் தேயிலைத் தோட்டமாக மாற்றவும், அதைப் பராமரிக்கவும் கடுமையாக உழைத்தவர்கள், உழைத்துக் கொண்டு இருப்பவர்கள் பெரும்பாலும் புலம் பெயர்ந்தவர்களே.இலங்கை மலையகப் பெண் படைப்பாளிகளின் படைப்புகளுக்குள் நுழைவதற்கு முன், தமிழ்நாட்டு மலையகப் பெண் படைப்பாளியான கவிஞர் தேன்மொழி தாஸ் Thenmozhi Das அவர்களின் தேயிலைப் பிரதேச துயர் தரும் கவிதை ஒன்றை சமர்ப்பிக்க விரும்புகிறேன்.(நான் கவிதை வாசிக்கும் அளவுக்கு தேர்ந்த வாசகனல்ல. ஆரம்பநிலை மாணவன் தான். ஆயினும் இந்தக் கவிதை ‘மலையகா’ வுக்கு முன்னோட்டமாகவே எனக்குத் தோன்றியது.)
ஒளியறியா காட்டுக்குள் என் மலை வாசஸ்தலம் எனக்குள் கண்ணீர்த் துளிகளாய் இருக்கிறதுநீர்த்தேக்கத்தின் மேல் மிதக்கும் தேயிலைத் தொழிற்சாலைபுகைவாசமிழந்த கப்பலாய் நிற்கிறதுதேயிலைத் தொழிலாளர்களின் உரிமைப் போராட்ட வரிகளைஆண்டாண்டு காலமாய் பெய்த மழை அழிக்காத போதும்அவர்களின் உணர்வுகள் ஒளியறியாக் காட்டுக்குள் பாதை தேடித் திரிகின்றனஅநேகமாய் ரத்தச் சிவப்பில் பூக்கும் பூக்களெல்லாம்அட்டைகள் குடித்தபின் வழிந்தஇரத்தம் ஈர்த்த வேர்களின் கிளைகளிலிருந்துதான் பூத்திருக்கக் கூடும்ரட்சகியின் பாடல் காற்றாய் அலைவதும் அவ்வழியில்தான்தேவாலயத்தைச் சுற்றிலும் புதர்களும்பீடங்களில் அடைக்கலான் குருவிகளும் வாழ்க்கையில் மதில்களில் பதுங்கியிருக்கும் இசை விரும்பும் காதுகள்மீன்களின் செதில்கள்போல் மடல்களை அசைக்கின்றன முள்முடி தேடி லீலிப்பூ செண்டு தேடி அலைந்த இடங்களில் புதுநன்மை பெற்றுக்கொண்ட வெள்ளை தினத்தின் மகிழ்வுகள் பூமரங்களாகி நிற்கின்றன.
மெழுகுத்திரி வெளிச்சத்தில் நட்சத்திரங்கள் எண்ணியபடி நடந்த பாஸ்கா பண்டிகை அக்குளிர் காலத்தோடு உறைந்து போயிருக்கக்கூடும்ரெபேக்கா அத்தையின் கனிந்த உடல் உலவிய மலைப் பாதைஉடைந்த கிடார் கம்பியாய் கிடக்கிறது. மலைப் பாதையே !எஸ்மியின் நினைவுகளை மறக்காமல் வைத்திருக்கிற கல்லறையே !வழிநெடுக மண்ணிலிருந்து உடைந்து வெளிப்படும் கடந்த காலச் சத்தங்களேதேயிலை விதைகளின் கண்களே !!என் மலை வாசஸ்தலம் எனக்குள் கண்ணீர் துளிகளாய் இருக்கிறது- தேன்மொழி தாஸ் (கவிதை பிறந்த நாள், 2.9.2004)மலையகா!மனிதனுக்கு ஏன் கதைகள் தேவைப்படுகிறது?
மனிதனின் கல்வி குழந்தைப்பருவம் முதல் கதைகளில் தான் தொடங்குகிறது. வளர்ந்த பின்னும் கதை படிக்கக் காரணம் கல்விதான். வகுப்புகள் தான் மாறிக் கொண்டே இருக்கும். கல்வி மட்டும் வாழ்வின் இறுதிவரை நம்மைத் தொடர்ந்து வரும். கல்விக்கூடங்கள் கூட கொடுக்க முடியாத கல்வியை கதைகள்தான் கொடுக்கின்றன.கதைகள் என்றால் என்ன?அடுத்தவரின் வாழ்க்கை அனுபவங்கள், தீராத பிரச்சினைகள், தீர்வுகளை நோக்கிய சிந்தனைகள், அன்பு, தியாகம், இரக்கம், முயற்சி, தோல்வி, வெற்றி, எதிர்பார்ப்பு, ஏமாற்றம் போன்ற அனைத்தையும் நமக்குக் கடத்தும் புராதனக் கருவிதான் கதைகள்.பிரச்சினைகளே இல்லையென்றால் நாம் ஏன் கதை எழுதப் போகிறோம்.
பிரச்சினைகளையும், தீர்வுகளையும் நாடி ஓடும் மனித மனம் தான் இலக்கியம் படைக்கிறது. அதைப் படிப்பதற்கும் அதே காரணம்தான்.மலையகா சிறுகதைகளின் தொகுப்புதான். ஆனால் தொகுத்த விதம், எனக்கு ஒரே நாவலின் அத்தியாயங்கள் போலவே தோன்றியது.அதற்குக் காரணம் தேயிலைக் கொழுந்துக் கூடைகளும், அவற்றை தூக்கி வாழும் மனிதர்களும், அவர்கள் அடைந்து வாழும் ஆங்கிலேயர் கால லயக் காம்பராக்களும் (புறாக்கூடு போன்ற வீடுகளும்) தொடர்ந்து அனைத்து கதைகளிலும் ஒன்றே போல் காட்சியளிப்பது தான்.
கொழுந்துக் கூடை இல்லாத கதைகளே இதில் இல்லை என்று கூறி விடலாம். ஆனால் ஒவ்வொரு கதையும் வெவ்வேறு மனித உள்ளங்களையும், அவர்கள் படும் வாழ்க்கை அவலங்களையும் நம் முன் வைக்கிறது. கிட்டத்தட்ட மலையக மக்களின், அதாவது குழந்தைகள் முதல் முதியோர் வரை, அனைவரின் வாழ்வும் இந்த நாற்பத்தி இரண்டு கதைகளில் அடங்கி விடுவதாகவே தோன்றுகிறது. புதுமைப்பித்தன் வெள்ளைச்சியின் படிக்கும் ஆசையை, துன்பக்கேணி’ யில் எழுதியிருப்பார்.‘மலையகா’ வின் கதைகளிலும் பிள்ளைகளின் கல்வியே பெரிதும் பேசப் படுகிறது. அதுவே பெரும் போராட்டமாக சுமார் நூறு வருடங்களுக்குப் பிறகு, இன்றும் தொடர்கிறது.
தோட்ட முதலாளிகளுக்கும், தொழிலாளிகளுக்குமான மோதல்கள், இடையில் மாட்டித்தவிக்கும் கங்காணித் தலைவர்கள், பெற்றவர்களுக்கும், பிள்ளைகளுக்குமான வாழ்வியல் சிக்கல்கள், இளைஞர்களால் முகிழ்க்கும் காதல் வாழ்வும், ஏமாற்றங்களும், பள்ளிகளும், பிள்ளைகளும், இயற்கைப் பேரழிவுகள், அரசியல் தகிடுதத்தங்கள், குடிகெடுக்கும் போதைகள் இவையனைத்துக்கும் ஆணிவேராய் இருக்கும் வறுமையும், பேதைமையும், கல்வியற்ற அறியாமையும்…‘மலையகா’ கதைத் தொகுப்பில் மனித வாழ்வின் அனைத்து பக்கங்களும் அலசப் பட்டுள்ளது.
நான் தென்னிந்திய மலை வாழ்விடங்களுக்கு பலமுறை சுற்றுலா சென்றிருக்கிறேன். அடர்ந்த மழைக்காடுகளை மொட்டையடித்து, அந்த மொட்டை மலைகளில் டீச்செடி வளர்த்து, அதற்கும் கிராப்பு வெட்டிய அழகை அலுக்காமல் ரசித்து, ஆயிரக்கணக்கில் படம் எடுத்திருக்கிறேன். ஆனால் ஒரு முறை கூட தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வீடுகளுக்குச் சென்றதில்லை. இந்த ‘மலையகா’ கதைத் தொகுப்பு என்னை நான்கு நாட்களாக அந்த லயக் காம்பராக்களில் வாழும் பல்வேறு மனிதர்களோடு பயணிக்க வைத்து விட்டது.இனிமேல் நான் குன்னூருக்கோ, வால்பாறைக்கோ, முன்னாருக்கோ பயணம் செய்தால், அங்கு தேயிலைப் பறித்துக் கொண்டிருப்பவர்களை பார்க்கும் என் மனநிலையை ‘மலையகா’ மாற்றிவிட்டது.
மலையகாவின் கதைகளில் மறக்கமுடியாத பாத்திரங்களில் சிலவற்றை மட்டும் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.விரக்தியுற்ற மாணிக்கம்,நன்றி மறவாத பரசுராமன், இறந்த பின்னும் மகனுக்கு நெத்திக் காசு கொடுத்த அன்புத்தாய் ராசாத்தி,நிறைவேறா ஆசையோடு செத்துப்போன செவப்பி கிழவி, சின்ன ஆசைக்காக காலில் சூடு வாங்கிய அப்பாவி சிறுவன் சுப்பு, படித்து நன்றி மறந்து, பின் மனம் திருந்திய மாதவன்,குடிகார ராசப்பு என்கிற நெய்னா மம்மதுவும், அவனோடு மல்லுகட்டி காலம் தள்ளும் செலயம்மாவும்,ஊதாரிப் பிள்ளைகளை உதறிவிட்டு ஒதுங்கி வாழும் ராசம்மா,பந்தா காட்டி பழித்துப் பேசும் பணக்கார தங்கை ஸபீலாவை விட்டு விலகிப் போகும் ஏழை அண்ணன்,பிள்ளைகளின் வயிற்றுப் பசிக்கும், கணவனின் குடிக்கும் சம்பாதிக்க ஓடும் சிவம்மை, வேலை கிடைக்காமல் திரும்பும் வேதனை,‘வாசல் கூட்டி முனியாண்டி’ யின் வாயிலும் வயிற்றிலும் அடித்த வாழ்க்கை,இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே உறவறுந்து, மனம் நொந்து வாழ்ந்து மரணிக்கும் பொன்னம்மா,தன்னை நம்பிய தமிழ்க் குடும்பம் ஒன்றுக்காக தன் உயிரை கொடுத்த சிங்களப் பெண் நீத்தா,தோழி மாயாவை இழந்த பெற்றோர்க்கு, தன் பெற்றோரை இழந்த நந்தினி மகளான சோகம்,தம் மக்களின் உரிமைக்காகக் குரலெடுத்துப் போராடும் பாலசுந்தரம்,சாமியாடியை நம்பி மனைவி ராமாயியை பறிகொடுக்கும் பேதை மூக்கன்,குடித்து வந்து தினமும் அடித்தே தன் மருமகளைக் கொன்ற ஊதாரி மகனை, தர்ம தேவதை போல் பழிவாங்கிய பொன்னாத்தாக் கிழவி,இறப்பதற்கு ஒரு மாதம் முன்பு, மனச்சுமையோடு பென்ஷன் வாங்க வங்கிக்கு வரும் லோரன்ஸ்…இன்னும்… இன்னும்…இந்தக் கதைகள் அனைத்தையும் நான் உங்களுக்கு ஒரு வரியில் சொல்ல முடியவில்லை என்றாலும், இத்தொகுப்பில் இடம்பெற்ற எழுத்தாளர்கள் அனைவரையும் அறிமுகப்படுத்துவதை என் கடமையாக நினைக்கிறேன்.
• ரோஹிணி முத்தையா• அக்னஸ் சவரிமுத்து• பாலரஞ்சனி சர்மா• புசலாவை இஸ்மாலிஹா• ரூபராணி ஜோசப்• ஹட்டன் சாந்தா ராஜ்• அரபா மன்சூர்• செ. கோகிலவர்த்தினி• பிரமிளா பிரதீபன்• நயீமா சித்தீக்• நளாயினி சுப்பையா• பேபி இமானுவேல்• இரா. சர்மிளாதேவி• பூரணி• பவானி வேதாஸ்• சிவாஜினி சதாசிவம்• செல்வி சுந்தரி மலை சுவாமி• சுகந்தி வெள்ளையகவுண்டர்• தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா• மலைமதி சந்திரசேகரன்• லறீனா அப்துல் ஹக்• சாந்தி மோகன்• ஷர்புன்னிஷாமலையகத்தில் இவர்களை அடியொற்றி இன்னும் பல இளம் எழுத்தாளர்கள் வெளிப்படுவார்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.
மரணத்துக்காகக் காத்திருக்கும் கைதிக்கும், பழைய மகிழ்ச்சியான நினைவுகளால், முகத்தில் சிறு முறுவல் பூக்க வாய்ப்புண்டு என்பதைப் புரிந்து கொண்டால், மலையக மக்களுக்கும் மகிழ்ச்சி என்பது தெரிந்தே இருந்தது என்று புரிந்து கொள்ளலாம்.இந்தத் தொகுப்பில் மட்டுமே இடம்பெற்றிருக்கும் இலங்கை மலையகத்தின் பெண் இலக்கியவாதிகளின் எண்ணிக்கையைப் பார்க்கும் போது, இந்திய மலைப் பகுதிகள் இன்றும் இலக்கியத்தில் எவ்வளவு பின்தங்கியுள்ளன என்று புரிகிறது.என்னைக் கவர்ந்த இந்தக் கதைகளில் எடுத்துக்காட்டாக இரண்டு வரிகளை மட்டும் கோடிட்டுக் காட்டி என் பகிர்வை நிறைவு செய்கிறேன்.
“பசுமையும், பனியும் மலையகத்து மண்ணின் வித்து. வறுமையும், உழைப்பும் மலையக மனிதரின் சொத்து.”- பவானி வேதாஸ்“உழைத்த ஜனங்களின் ஒரு மாத ஊதியத்தைத் தரும் நாள். கருவாட்டு குழம்புடன் ஏப்பம்! பதினைந்தாம் திகதி கால் வயிறு சோற்றுடன் ஏக்கம்.”- சுந்தரி மலைசுவாமி
Thanks –
தோழர் கெளதமன் https://www.facebook.com/permalink.php?story_fbid=pfbid02eQAN8VvrkScJJhx9uUUCoZRgDN1KBLhQi6YxxQGxtrQmKfybherxwDCweRQ6Kv6xl&id=100071300678741