உமாசக்தி
இத்திரைப்படத்தில் சொல்லப்படாத சில விஷயங்களையும் நம்மால் உணர முடிகிறது. எக்காரணம் கொண்டும் தன் அடிப்படை குணத்தை மாற்றிக் கொள்ளாமல் சூழ்நிலை தனக்கு எதிரான போதும் விடா முயற்சியுடன் தன்குடும்பத்திற்காக போராடுகிறான் கரீம். மனித நேயமும், இயற்கையின் மீது தீராத நம்பிக்கையும், போராட்ட குணமும் கொண்ட கதை நாயகன் நேர்மை, நியாயம் போன்ற விஷயங்கள் இன்னும் சில மனித்ர்களிடம் மிச்சம் இருக்கிறது என்பதற்கு உதாரணமாய் இருக்கிறான். |
அழகியலுடன் கூடிய ஒரு கவித்துவமான சிறுகதையை வாசித்தது போன்ற உணர்வை தருகிறது இரானிய இயக்குனரான மஜித் மஜீதியின் ’தி சாங் ஆஃப் ஸ்பாரோஸ்’ திரைப்படத்தைப் பார்க்கையில். புறநகரில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வரும் கரீமிற்கு நெருப்புக் கோழி பண்ணையில் செய்யும் வேலைதான் வாழ்வாதாராம். நெடிது வளர்ந்திருக்கும் அக்கோழிகளை பராமரிப்பதும், அதன் முட்டைகளை வேனில் ஏற்றி சந்தைக்கு அனுப்புவதும்தான் அவன் அன்றாட வேலை. காது கேளாத மூத்த மகள், மிகவும் சூட்டிகையான மகன் மற்றும் இளைய மகளையும் கரீம் பண்ணையில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில்தான் போஷித்து வருகிறான். வேலை முடிந்து தன் ஓட்டை பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்த கரீம் வீட்டின் அருகில் மகன் தன் வயதை ஒத்த சிறுவர்களுடன் பாழடைந்து குப்பையும் சாக்கடையும் நிறைந்திருக்கும் தண்ணீர் தொட்டியில் ஏதோ செய்து கொண்டிருப்பதைப் பார்த்துக் கோபப்படுகிறான்.
மகளின் ஹியரிங் எய்ட் அங்கு தொலைந்திருப்பதை அறிந்து அவர்களுடன் சேர்ந்து தேடவே கடைசியில் அது கிடைக்கிறது. குழந்தைகள் தேவையில்லாமல் அந்தச் சாக்கடைப் பக்கம் போகக் கூடாது என்று திட்டி வீட்டுக்கு அழைத்துச் செல்கிறான். மகளின் காதில் இயரிங் எய்டை அணிவித்து அவளிடம் பேசுகிறான். எதுவும் கேட்கவில்லையென்றாலும் அப்பா வருத்தப்படுவாறே என நினைத்து நல்லா கேட்குதுப்பா என்கிறார். சந்தேகத்துடன் மீண்டும் அவளிடம் பேசி அவளுக்குக் கேட்கவில்லை என்று அறிந்து துயரடைகிறான். பரீட்சை நாள் வேறு நெருங்கவே, சீக்கிரம் அதை சரி செய்து தருகிறேன் எனச் சொல்லிவிட்டு அவளைப் படிக்கச் சொல்கிறான். இந்நிலையில் அடுத்த நாள் பண்ணையிலிருந்து நெருப்புக் கோழி ஒன்று தப்பிச் சென்றுவிடுகிறது. கரீமின் கவனக் குறைவினால்தான் இது நிகழ்ந்தது எனச் சொல்லி அவனை வேலையை விட்டு நீக்கிவிடுகிறார்கள். இனி வருமானத்திற்கு என்ன செய்யப் போகிறோம் என்ற கவலையில் அவன் தொலைந்த நெருப்புக் கோழியைத் தேடி காடு மலையென அலைகிறான். அது அவன் கண்ணில் தட்டுப்படவே இல்லை.
மகளின் இயரிங் எய்டை நகரத்தில் இருக்கும் கடைக்குச் சென்று சரி செய்து தரும்படி சொல்கிறான். அவர்கள் இது இனி வேலை செய்யாது, புதிதாய்தான் வாங்க வேண்டும், இபோது ஆர்டர் குடுத்தால் தான் ஒரு வாரத்தில் செய்து தர முடியும் எனச் சொல்கிறான். அவ்வளவு பணம் தன்னிடம் இல்லையென்று வருந்திய கரீம் மறுநாள் வருவதாகச் சொல்லி எப்படியாவது அதை சரி செய்ய முடியுமா எனப் பார்க்கச் சொல்கிறான். நகரின் நெரிசலில் மனம் நொறுங்கி அலைந்து திரிகையில் அறிமுகமற்ற நபர் ஒருவர் அவன் பைக்கில் ஏறிக் கொண்டு ஓரிடத்தில் விடுமாறு சொல்கிறான். இறங்கியதும் அதற்கான கட்டணத்தைத் தந்து விட்டுச் செல்கிறான். நகரில் இதே போன்று பல பைக்குகள் வாடகைக்குப் போய்க்கொண்டிருப்பதைப் பார்த்த கரீம் அன்றே அந்தத் தொழிலில் இறங்குகிறான்.
கடின உழைப்பிற்கு அஞ்சாத அவன் ஒரே நாளில் நிறைய பணம் சம்பாதிக்கிறான். கட்டிட இன்ஜினியர் ஒருவரின் கார் நடு ரோட்டில் நின்றுவிடவே அவர் கரீமின் பைக்கில் ஏறி தன் கட்டிடத்திற்குச் செல்கிறார். எவ்வளவு பணம் என்று எண்ணாமலேயே அவர் அவன் கையில் திணித்த நோட்டு அவன் கனவுகளை விரியச் செய்கிறது. திருப்பிக் கொடுத்துவிடலாம் என த்ரும்பிப் பார்தால் அவர் கட்டிடத்துள் மறைந்து விடுகிறார். அந்தக் கட்டிடத்தில் தேவையற்ற பொருட்களை எடுத்துச் செல்ல கொத்தனாரிடம் அனுமதி பெற்று எடுத்துச் செல்கிறான். ஒரு நாள் கதவு, மற்றொரு நாள் இரும்புக் கம்பிகள் என வேலை முடித்து திரும்புகையில் குருவியைப் போல ஒவ்வொரு பொருளாக தன் வீட்டிற்கு எடுத்துச் செல்கிறான். மீண்டும் தன் மகன் பக்கத்து வீட்டுச் சிறுவர்களுடன் சேர்ந்து கிணற்றை சுத்தப்படுத்தி மீன் விடப் போவதாக சொல்லியதும் ஆத்திரப்பட்டு சிறுவர்களைத் துரத்துகிறான்.
ஒரு பக்கம் புதுத்தொழில் சூடுபிடிக்க, வீட்டில் இருப்பவர்களுக்கு பிடித்தமான உணவுப் பொருட்களை வாங்கி வருகிறான். ஒரு நாள் சிறுவனும் அவன் தோழர்களும் சேர்ந்து புனரமைத்த கிணற்றைப் பார்க்கிறான் கரீம். சாக்கடை கழிவுகள் எல்லாம் மலைபோல ஒரு புறம் குவிந்துகிடக்க, சுத்தமான தண்ணீர் அந்த நீர்த்தேக்கத்தில் வெயில் பட்டு ஜொலித்தது. அவன் கண்கள் ஆச்சரியத்தில் நிறைகிறது. மகனை நினைத்துப் பெருமைப் படக்கூட முடியாத ஓட்டம் அவனுக்கு. ஓரளவு குடும்பம் நிம்மதியான கதியில் போய்க்கொண்டிருக்க, இடி போல அந்தச் சம்பவம் நிகழ்கிறது. கரீம் கட்டிட இடத்திலிருந்து கொண்டு வந்திருந்த பொருட்களை சீரமைத்துக் கொண்டிருக்கையில், ஏணியிலிருந்து தவறி விழ அவன் மீது இரும்புப் பொருட்கள் விழுந்து எழு முடியாமல் பெரும் காயமடைகிறான். வேலைக்குச் செல்ல முடியாமல் காலில் அடிபட்டு படுத்த படுக்கையாகிவிட்ட அவனுக்கு மனைவியும் பிள்ளைகளும் பணிவிடை செய்கிறார்கள். அவன் குணமாக சில நாட்கள் ஆகும் எனத் தெரிந்து மகன் வேலைக்குச் செல்கிறான்.
அந்தக் குடும்பமே கீரை விற்று அவனுக்கு உணவும் மருந்துக்களும் வாங்கி அக்கறையுடன் அவன் மனம் நோகாதவாறு நடந்து கொள்கிறார்கள். கையில் போட்டிருக்கும் மாவுக் கட்டில் பிள்ளைகள் ஏதேதோ வரைகிறார்கள். வீட்டின் பொறுப்புகளை தோள் குடுக்கும் சின்னஞ்சிறிய மகன் தன் தாயிடம் தன் கிணற்றுத் தொட்டிக்கு மீன்கள் வேண்டும் என்கிறான். மறுக்க மனம் இல்லாத அந்தத் தாய் நிச்சயம் தருவதாகச் சொல்கிறாள். கடினமான வேலை செய்து காய்த்துக் கிடந்த அந்தப் பிஞ்சின் விரல்களைப் பார்த்து மனம் நொந்த தனக்கு எப்போது விடிவு காலம் வருமோ என வருந்துகிறான்.
கரீமின் உறவினன் அவனை அழைத்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு செல்கிறான். உடன் மகனும் மற்ற சிறுவர்களும் உதவிக்கு வருகிறார்கள். பெரிய பணக்கார வீடுகளில் தொட்டியில் எடுத்துச் சென்ற செடிகளை அடுக்கி வைத்து அந்தப் பணத்தில் மீன்கள் வாங்கி இருந்தனர். அதை கிணற்றில் விடலாம் என்பது அவர்களின் திட்டம். கட்டை பிடித்துக் கொண்டு கரீம் தட்டுத் தடுமாறி ஆஸ்பத்திரி போய் எக்ஸ்ரே எடுத்துக் கொண்டு வர, சிறுவர்கள் தொட்டியை வேனிலிருந்து இறக்கிக் கொண்டிருந்தார்கள். திடீரென்று மீன் தொட்டியில் ஓட்டை இருப்பதை அறிந்து பரபரப்படைகிறார்கள். எல்லாத் தொட்டிகளையும் அவசர அவசரமாக கீழே எடுத்துப் போட்டு அவை உடைந்து போவதைப் பற்றி கவனிக்காமல் மீன்களை எப்படியாவது காப்பாற்ற வேண்டுமே எனப் பதட்டப்படுகிறார்கள். ஒருவழியாய் மீன் தொட்டியை வேனிலிருந்து கீழே இறக்குகையில் அதிலிருந்து தண்ணீர் பாதிக்கு மேல் கொட்டிப் போயிருந்தது. பக்கெட்டைப் பிடித்த படி ஓடி வருகையில் அது பாரம் தாங்காமல் உடைந்து சிதறுகிறது. மழைத் தூறிக்கொண்டிருந்த அந்த கறுப்புத் தார்ச்சாலையில் தங்க மீன்கள் தரையில் கொட்டித் துடிக்க ஆரம்பித்தன. பக்கத்திலேயே சிறிய நீர்ப்பாதை இருப்பதைப் பார்க்கிறார்கள். மீன்களை மற்றுமொரு தொட்டிக்கு மாற்றுவதற்குள் அவை மூச்சுத் திணறி இறந்துவிடும், நீர்த்தேக்கத்தில் தள்ளி அவற்றைப் பிழைக்க வைத்துவிட்டால் தங்களின் கிணற்று அவை இருக்காது. அவை உயிர் பிழைத்தால் போதுமென்று அவற்றை வாரி நீர்த்தேக்கத்தில் போடுகிறார்கள். மீன்கள் நீந்திச் செல்கின்றன. இதையெல்லாம் பார்த்த கரீம் இவர்களின் செயல்களை புரிந்து கொண்ட மனநிலையில் முதலில் திட்டினாலும் பின்னர் அமைதியாகிவிடுகிறார்.
திரும்பும் வழியில் ஒற்றை மீனை மட்டும் ப்ளாஸ்டி பையில் வைத்திருந்து கண்ணீர் மல்க அமர்ந்திருக்கும் அச்சிறுவர்களுக்காக பாட்டுப் பாடுகிறான். ஒருவழியாய் வீடு வந்து சேருகிறார்கள். மகன் கிணற்றில் அந்த சிறிய மீனை விடுகிறான். நாள்கள் எவ்வித மாற்றமும் இன்றி நகர்கிறது. உடல் நிலை தேறி வரும் கரீமின் கால்கள் மட்டும் இன்னும் சரியாக்வில்லை. வீட்டினர் அனைவரும் வேலைக்குச் சென்றிருந்த நாளொன்றில் ஆழ்ந்த உறக்கத்தின் பின் விழித்த கரீமின் கண்களுக்கு ஒரு குருவி தட்டுப்பட்டது. தெரியாமல் தன் வீட்டினுள் வந்துவிட்ட அந்த குருவி வழி தெரியாமல் சுவற்றில் முட்டி மோதுவதைப் பார்த்து இரக்கப்பட்ட கரீம் எப்படியோ தட்டுத் தடுமாறி ஜன்னலைத் திறந்து அது வெளியே பறந்து போக உதவுகிறான். வாசலில் ஏதோ அரவம் கேட்க யார் என வீட்டிலிருந்தே கேட்கிறான். வந்திருந்த நண்பன் கொண்டு வந்த நற்செய்தி கரீமிற்கு பெரும் நிம்மதியைத் தருகின்றது. தொலைந்து போயிருந்த நெருப்புக் கோழி கிடைத்துவிட்டதாம். அடுத்த சில தினங்களில் இன்னும் கட்டுப்பிரிக்காத காலுடன் தன் பைக்கில் பண்ணைக்கு போகிறான் கரீம். வெகு நாட்கள் பிரிந்திருந்த அந்த நெருப்புக் கோழிகளை வாஞ்சையுடன் பார்க்கிறான். வாழ்க்கை மீண்டும் பறவையின் சிறகாய் அவன் முன் விரிந்திருந்தது. அத்தருணத்தில் கழுத்தை அசைத்து அசைத்து ஓடோட்டி வந்த நெருப்புக் கோழியொன்று நடனமாடுவதைப் போல காட்சி கவிதையாய் நிறைவடைகிறது.
த்திரைப்படத்தில் சொல்லப்படாத சில விஷயங்களையும் நம்மால் உணர முடிகிறது. எக்காரணம் கொண்டும் தன் அடிப்படை குணத்தை மாற்றிக் கொள்ளாமல் சூழ்நிலை தனக்கு எதிரான போதும் விடா முயற்சியுடன் தன்குடும்பத்திற்காக போராடுகிறான் கரீம். மனித நேயமும், இயற்கையின் மீது தீராத நம்பிக்கையும், போராட்ட குணமும் கொண்ட கதை நாயகன் நேர்மை, நியாயம் போன்ற விஷயங்கள் இன்னும் சில மனித்ர்களிடம் மிச்சம் இருக்கிறது என்பதற்கு உதாரணமாய் இருக்கிறான். சலனங்கள் ஏற்பட்டாலும் அதையும் மீறிய நல்லுணர்வுகள் அவனை தவறுகள் செய்வதிலிருந்து தடுக்கிறது. தன்னைப் போல பிறரை எண்ணும் அவன் வாழ்க்கை இறுதியில் துயர்களைக் கடந்து தன்னிலைக்கு வருகிறது. எத்தகைய சிக்கல் வந்தாலும் இஸ்லாத்தை விடாமல் கடைபிடித்து எங்கிருந்தாலும் தனியிடம் தேடிச் சென்று தொழுகை செய்த அவனை இறைவன் கைவிடவில்லை. வாழ்க்கையின் மீது நம்பிக்கை ஏற்படுத்தும் திரைப்படமிது.
90 நிமிடங்களே ஓடக்கூடிய இந்த ஈரானிய திரைப்படத்தை இயக்கியிருப்பவர் மஜித் மஜீதி. எளிய மனிதர்கள், அவர்களின் வாழ்வியல் போராட்டங்கள், அழகியலுடனான காட்சியமைப்புகள், உறுத்தாத மென் இசை என மஜித்தின் திரைப்படங்கள் உணர்ச்சித் சித்திரங்களாய் காண்பவர்கள் மனதில் பதிகிறது.
நன்றி உமா சக்தி தடாகம் சஞ்சிகைக்காக எழுதியது
நன்றாகஇருந்தது சிறந்தபதிவு.