இக்பால்இன்றைய சூழலில் இன அடையாளம் பற்றி பேசுதல் மிக முக்கியமானதாக மாறியுள்ளது. அதற்கான வெவ்வேறு வரையறைகள் இருந்தாலும் குறிப்பிட்ட மக்களின் வாழ்வியல் விடயங்களே அம் மக்களின் அடையாளங்களாகும்.சமூகத்தில் வாழ்கின்ற மக்களின் வாழ்வியல் பற்றிய எண்ணப்பாடுகளை வெளிப்படுத்தும் கலை இலக்கியம் மொழி பழக்கவழக்கங்கள் போன்ற பண்பாட்டுக் கூறுகளிலிலிருந்து வெளிப்படும் கருத்துக்கள் வேறுபடும் தன்மையும் கொண்டவை. அதன் வழியே மலையகம் அல்லது மலையகத் தமிழர் என்ற அடையாளம்; தனித்துவமானது. மலையக மக்களின் மீதான ஒடுக்குமுறைகளும் அடிப்படை பிரச்சினைகளையும் சமூக ,அரசியல், மற்றும் இலக்கிய எழுத்துக்களும் மலையக படைப்பாளர்கள் வெளிக்கொண்டு வந்துள்ளனர். அந்த வகையில் குறிப்பாக மலையகப் பெண்கள் சார்ந்த சிந்தனைகளை பேசுதல் அல்லது அவர்களது படைப்புகளை முதன்மைப்படுத்தல் முக்கியம் பெறுகின்றது. பெண்களின் ஆவணங்கள் எழுத்துக்களை ஆவணப்படுத்தல் அல்லது அவர்களினுடைய படைப்பாற்றல் திறன்களை வெளிக்கொண்டு வருதல் என்பதில் பல அமைப்புகள் செயற்பட்டு வருகின்றன. அதில் ஊடறுவின் முயற்சிகளும் 2002 இலிருந்தே ஆரம்பமாகின.
பெண்கள் சார்ந்த விடயங்களை முதன்மைப்படுத்தி அவற்றை ஆவணப்படுத்தி அதற்கான ஒரு வாய்ப்பை அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட ஊடறுவின் செயற்பாட்டில் மலையகப் பெண்களின் படைப்புகள் சார்ந்து இசைபிழியப்பட்டவீணை கவிதைத்தொகுதி 2007 இல் ஊடறுவினால் தொகுத்து வெளியிடப்பட்டது. தற்போது மலையகம் 200 வருடங்களை கடந்துள்ள நிலையில் மலையகா என்னும் மலையக பெண்களின் சிறுகதைத் தொகுப்பினுடைய முயற்சி மிக முக்கியமானது. இத் தொகுப்பு மலையகப் பெண்களின் ஒரு அடையாளமாக காணப்படுகின்றது. இந்த நூலில் இருபத்து மூன்று பெண்படைப்பாளிகளின் நாற்பத்து இரண்டு பச்சை தேயிலை இலைகளின் நினைவுகள் தொகுக்கப்பட்டுள்ளன. பரவிக் கிடக்கும் சுவடுகளை ஒன்றிணைத்தல் என்பது மிகக் கடினம். அது ஒரு காலகட்டத்தின் நினைவுகளாக அல்லது அந்தச் சமூக கட்டமைப்பு எவ்வாறு இருந்தது என்பதை வெளிக்கொணர் வதற்கான ஒரு முயற்சி எனவும் கூறலாம். அந்த முயற்சியை சாத்தியப்படுத்திய ஊடறு றஞ்சி மாவுக்கு நன்றிகளும் வாழ்த்துகளும்.