நன்றி படைப்பு ஆசிரியர் :ராஜம் கிருஷ்ணன்கிண்டில் பதிப்பு:ரூ49.00பக்கங்கள்:380
‘நில உடமை’ என்ற நில ஆதிக்கமே ஆதி மனிதர்களிடையே உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற வேற்றுமையைத் தோற்றுவித்திருக்கிறது; இதுவே பெண்ணடிமைக்கும் வழி வகுத்திருக்கிறது. இந்த அடிப்படையிலேயே இந்நாள் மனித சமுதாயத்தைக் கூறுபோடும் எல்லாப் பிளவுகளுமே வலுப்பெற்று வந்திருக்கின்றன . நமது அனைத்துச் சீர்திருத்தங்களும், முற்போக்குச் சட்டங்களும், இந்த அடித்தள உண்மையைத் தீண்டியிராததால், மேற்போக்காகவே பயனற்றுப் போயிருக்கின்றனஎன்று கவலையுறுகிறார். வெறும் அரசியல் விடுதலை, ஆழ்ந்த குறிக்கோள்களைக் கொண்டு இருக்கவில்லை ,அதனால் இம்மக்களின் உண்மையான முன்னேற்றம் மலர்ந்து விடவில்லை. உயிர் வாழ இன்றியமையாததான நீருக்கும் உணவுக்குமே தட்டுப்பாடாகவும் போராட்டமாகவும் பிரச்னைகளாகவும் தொடர்ந்து, குடியரசு உரிமையில் எழுச்சிகளுக்கான வாய்ப்புக்களைக் காட்டிலும் ஆதிக்கங்களுக்கான உரிமைகளும் வாய்ப்புக்களுமே வலிமை பெற்று வந்திருக்கின்றன.என பட்டவர்த்தனமாக கூறுகிறார்.
தம்மினத்தவரையே மனிதர் அற்பங்களாக்கத் தலைப்படும் போது பிரச்னைகள் ஒவ்வொரு நாளும் அமைதி குலைக்கின்றன. சேற்றிலும் வரப்பிலும், விரிந்த நீர்க்கரைகளிலும் வானுலகைச் சிருஷ்டிக்கும் மனிதர்கள்,இன்னமும் துயரங்களில் அழுந்திக் கொண்டிருக்கின்றனர் என துன்பப்படுகிறார். விவசாயி சம்முகத்திற்கு,மனைவியும் வெட்டியாகச் சுற்றித் திரியும் ஒரு மகனும்,பிறவியிலேயே மனக் கோளாறுள்ள ஒரு மகனும் ஆக..பொறுப்புகள் அத்தனையும் சுமக்கும் சுமைதாங்கி!இரண்டு மகள்களும் உள்ளனர். தாழ்த்தப்பட்ட குலம் என்பதை அவர் தலைமுறையில் எழுச்சியுள்ளதாக்க முனைந்தார்கள். இப்போது அவர் மகள் காந்தி தொழிற்கல்வி பயிலப் போகிறாள். சேற்றில் உழன்று நாற்று நடும் பின்புலத்தில் தாமரையாக மலரப் போகிறாள் என பெருமைப்படுகிறார். அம்சு மூத்த மகள் காந்தியை விட குட்டை. ஆறாவதுக்கு மேல் படிப்பு ஏறவில்லை . அம்மாவிற்குத் துணையாகவும் ,வரப்பு வேலைக்கும் செல்பவள். நில உடமையாளர்களின் அடக்கு முறையை..விவசாயிகளின் உழைப்பை உறிஞ்சி வாழ்வதை நினைத்து ,இயலாமையால் மனம் புழுங்குகிறார். நன்குப் படித்து காந்தி தங்கள் இனத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வாள் என தன் நம்பிக்கை அனைத்தையும் அவள் மேல் வைக்கிறார் .
காந்தியோ,ஒருவனைக் காதலித்து,ஏமாந்து மீண்டும் வீடு தேடி வருகிறாள். சம்முகம் மனமொடிந்த நிலையில்,அவளை ஏற்கவும் முடியாமல்..தள்ளி வைக்கவும் முடியாமல் தத்தளிக்கிறார்! சிறுசிறு தவறுகளுக்கும்,முதலாளிகள் பெண்கள் உட்பட, அனைவருக்கும் பெருந்தண்டனை அளிப்பதை எதிர்த்து, காந்தி அவ்வூர் பெண்களை எல்லாம் திரட்டி நில உடமையாளர்களை எதிர்க்கிறாள். அந்த விடியலும் வந்ததே என சம்முகமும் தம்மின சிலருடன் சேர்ந்துகொண்டு அவளுக்குத் தோள் கொடுக்கிறார். ஒவ்வொரு படைப்பிற்கும் அருகிலிருந்துப் பார்த்து,கேட்டு,உணர்ந்ததாலோ என்னவோ ,ஆசிரியரின் கிராமிய மொழி கதையோடு ஒன்றச் செய்கிறது..மனம் துன்பத்தால் வெதும்புகிறது. “பெரி.. நாஜுக்கு. தூக்குப் பாத்திரத்தில போட்டு வயர் பையில வச்சிட்டுப் போனா என்னவாம்? கிளப்பிலே போனா காசுதா செலவழியும் வீணா.” “அதா, குப்பன் சாம்பாரு சம்பந்தி, நேத்துக் காலமே போயிட்டாராம். சங்கத் தலவரப் பாக்கணும்னு நேத்து மத்தியானமே வந்திருந்தாவ..” “மனதில் இருப்பதை ஆழமாக வெளியிடத் தெரியாததால் கொட்டும் குழம்பைப் போல் குரல் ஒலி சிந்தி ஓடும் நாராசம்.” உழவர்களை,உழவைக் குறித்து கதை சென்றாலும்..உழவுத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் பெண்களின் துயரத்தை பட்டியல் போட்டுக் காட்டாமல்..போறபோக்கில் கூறும் விதம் so touching! பயிர்த்தொழில் செய்யும் மக்களைப் பற்றியும், அவர்கள் உதிரம் தேய்த்து உழைப்பைக் கொடுக்கும் களங்களையும், அவர்களையும் ஒருங்கே உடமையாக்கிக் கொண்ட மேற்குலத்தாரான ஆண்டைகள் குறித்தும் எந்தக் காம்ப்ரமைசும் செய்து கொள்ளாமல் ராஜம் கிருஷ்ணன் அவர்கள் எழுதியுள்ள விதம்.