நன்றி: கவிதா , வெற்றிமணி (பங்குனி 2024)
சென்ற ஆண்டு நான் நடைப்பயணம் சென்றிருந்தேன். நடைப்பயணம் பற்றி எழுத ஏராளமானவை உண்டு என்றாலும் என்னை மனதளவிற் பாதித்த, என்னைச் சற்றே அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு விடயத்தைப் பற்றிப் பேசத் தோன்றுகிறது.
போர்த்துக்கல்லில் இருந்து ஸ்பெயின் நாட்டில் போய் முடிவடைந்த நடைப்பயணம். அது சண்டியாகோ டி கொம்பஸ்டெல்லா என்ற பழைமையான சிறப்புமிக்க ஒரு தேவாலயத்திற் சென்று நிறைவடைந்தது. தேவாலயக் கதைகள், வரலாறு என்பவை ஒருபக்கம் இருக்கட்டும். தேவாலயத்தினைச் சுற்றிப் போடப்பட்டிருக்கும் கடைத்தெருக்களைப் பார்க்கும் ஆவல் வயதுவந்த பின்னரும் விட்டுவைப்பதில்லை. இக்கடைத் தெருக்களில் விசேடமாக விற்பனைக்கு வைக்கப்பட்ட பொருட்களில் ஒன்று ‘சூனியக்காரி’களின் உருவங்கள். அவை சிலைகளாக, பதக்கங்களாக, சாவிக்கொழுவிகளாகப் பல வடிவங்களில் விற்கப்படுகின்றன.
தேவாலயங்களுக்கும் சூனியக்காரிகளுக்கும் ஆவதில்லையே என்ற யோசனையோடு அவை பற்றிய விபரங்களை நடந்தபடியே தேடத்தொடங்கினேன். சூனியக்காரிகள் நமக்குச் சிறுவயதில் குட்டிக் கதைகளிலேயே அறிமுகமாகிவிடுகிறார்கள். ஒரு சூனியக்காரி என்றால் யார்? அவள் எப்படி இருப்பாள்? அவளுடைய நடவடிக்கைகள் என்ன? என்பது பற்றி எல்லாம் எமக்கு ஒரு பிம்பம் சித்திரக்கதைகள் மூலம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஏதுமற்ற வெறுமையான ஒரு விடயத்தையே சூனியம் என்பர். அறிவற்றவள் என்ற பொருளைக் கொண்டுள்ளவாறு சூனியக்காரி என்ற பெயர் வைத்து அழைத்தனர்.
சூனியக்காரிகள் கொல்லப்பட்ட வரலாறு…
ஐரோப்பிய நாடுகளில் சூனியக்காரிகள் என்று அழைக்கப்பட்டவர்கள் ஒரு காலத்தில் இலட்சக்கணக்காகக் கொன்று குவிக்கப்பட்டு, அழிக்கப்பட்டிருக்கிறார்கள். உண்மையில் யார்தான் இந்தச் சூனியக்காரிகள் என்று அறியும் ஆவல் என்னைத் தொற்றிக்கொண்டது.
சூனியக்காரிகள் என்று அழைக்கப்பட்டவர்கள் ஊருக்கு வெளியே இருந்த அன்றைய மருத்துவர்கள். இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத காலத்தில் இயற்கை மூலிகைகளைப் பற்றிய அறிவுடையவர்களாக அப்பெண்கள் இருந்திருக்கிறார்கள்.
இறப்பின் தறுவாயில் இருப்பவர்களைக் காப்பாற்ற முடிந்தவர்களாகவும், இரத்தத்தைக் கண்டு அஞ்சாதவர்களாகவும், மகப்பேறு பார்ப்பதில் தேர்ச்சி பெற்றவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். ஆண் மருத்துவர்களால் குணப்படுத்தமுடியாத வியாதிகளைப் பல சமயங்களில் அப்பெண்கள் குணப்படுத்தியிருக்கின்றார்கள்.
இதனால், நோய்வாய்ப்பட்டவரைக் குணப்படுத்துதலும், உயிர்த்தெழ வைப்பதும் கடவுளர் செயலாகச் சொல்லப்பட்ட கதைகள் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டன. மருத்துவிச்சிகளின் போக்கு கடவுளர்க்கு எதிரான போக்காகப் பார்க்கப்படத் தொடங்கியது. சமூகத்திற் பெண்கள் நலிந்த நிலையில் இருந்த காலத்தில், துணிச்சல் மிக்கவர்களாகவும், அறிவு பொருந்தியவர்களாகவும் இப்பெண்கள் இருந்தமை ஆண் மேலாதிக்கச் சமூகத்திற்கு அச்சுறுத்தலாக இருந்திருக்கிறது. அதனாலே பல ஐரோப்பிய நாடுகளில் பல லட்சம் சூனியக்காரிகள் மக்கள் முன்பாக நிறுத்தப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
அரசு | மதம் | ஆண் …
1486இல் கிருஸ்தவ மதக் குருக்களால் இலத்தின் மொழியில் எழுதப்பட்ட மல்லீயஸ் மாலெபிகாரம் என்ற நூல் ஜேர்மனியில் வெளியிடப்பட்டது. அது சூனியக்காரிகள் பற்றிய குறிப்புகளையும், அவர்களை அழிப்பதற்கான காரணங்களையும் முன்வைக்கிறது. 1400 – 1800 வரை சூனியக்காரிகளின் வேட்டை நடந்தேறியுள்ளது. ஆரம்பத்தில் ஆண் மேலாதிக்கச் சமூகத்தினராலும், பின்னர் அரசின் சட்ட நடவடிக்கையோடும் அவர்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். அன்றைய காலத்தில் மிஷனரிகள் சூனியக்காரிகளின் அழிப்பில் பெரும் பங்காற்றியிருக்கிறது. அன்றிலிருந்து இன்றுவரை, அரசுகளில் மதத்தின் ஆதிக்கம் என்பது முக்கிய பங்குவகிக்கிறது.
ஆணுக்குக் கீழ்ப்படிந்த மனைவியாக இருப்பதே மரியாதைக்குரியது. அந்த நிலையை சூனியக்காரிகள் சீர்குலைக்கிறார்கள் என்ற வகையில் நல்ல பெண்கள், சூனியக்காரிகள் என்ற இருநிலைப் பார்வையை சமூகம் வலியுறுத்தத் தொடங்கியது.
பெண்களின் உடலில் எற்படும் தழும்புகள், கீறல்கள் கூட சாத்தானுடன் உடலுறவு கொண்டதினால் ஏற்பட்டவை என்ற பரப்புரைகள் நடாத்தப்பட்டன. சமூகத்தில் அறிவார்ந்து செயற்படத் தொடங்கிய பெண்களை ஆபாசமாகச் சித்தரிக்கத் தொடங்கினர். ஆணுறுப்பின் மேல் அமர்ந்து பறக்கும் பெண் என்ற கருத்துப்படவே துடைப்பக்கட்டையின் மேல் தொடைகள் தெரியப் பறப்பதாகச் சித்தரிக்கப்பட்டது. மறுமலர்ச்சிக் காலத்து ஓவியக்கலை, சூனியக்காரிகளை ஆபாசமாகவும், கொடுரமாகவும் காட்டத்தொடங்கின.
சாத்தான் இப்பெண்களின் உடலில் ஊடுருவிக் கொண்டிருக்கிறான், அதனாற் சாத்தானை ஒழிக்க இப்பெண்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்ற கருத்தும், இப்பெண்களை அழிக்க அனைத்து ஆண்களும் ஒன்று சேரவேண்டும் என்றும், அன்றைய போப்பாண்டவரால் (15ஆம் நூற்றாண்டு) கோரப்பட்டது.
கிருஸ்தவ அரசும், மதமும் ஒருசேர மேற்கொண்ட பரப்புரைகளையும், சட்டத்தையும் தமக்குச் சாதகமாகப் பல ஆண்கள் பயன்படுத்தத் தொடங்கினர். கருத்துமுரண்பட்ட மனைவியை, எதிர்த்துநின்ற பெண்களை, ஆணுக்குக் கீழ்படியாத பெண்களை, தனிப்பட்ட முரண்பாடுகளில் சிக்கிக்கொண்ட பெண்களை சூனியக்காரி என்ற பெயரிற் கொல்லத்தொடங்கினார் இத்தகைய கொலைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுச் சகஜமாகின.
அவர்கள் நிர்வாணமாக்கப்பட்டனர், கழுத்து நெரிக்கப்பட்டனர், தொங்கவிடப்பட்டனர், தீயில் எரியூட்டப்பட்டனர், சமுத்திரத்தில் எறியப்பட்டனர். பெண்களின் உடலில் தழும்புகள் மச்சங்கள் இருக்கின்றனவா என்று ஊர் முன்னிலையில் நிர்வாணமாக்கி பகிரங்கமாகச் சோதிக்கப்பட்டனர். இதன் காரணமாகப் பலர் தம்மைத்தாமே மாய்த்துக்கொள்ளத் தலைப்பட்டனர். நான் வசிக்கும் நோர்வேயில் இருந்து, ஜேர்மனி, ஸ்கொட்லான்ட், சுவிஸ் என்று நடைப்பயணம் முடிவுற்ற ஸ்பெயின் நாடுவரை கொல்லப்பட்ட சூனியக்காரிகளின் எண்ணிக்கை மட்டும் இலட்சத்தைத் தாண்டியிருப்பதாகத் தரவுகளிலிருந்து அறியமுடிகின்றது.
அன்றைய சூனியக்காரிகளும் இன்றைய பெண்ணியவாதிகளும்……………………….அரசும் மதமும் இதற்கு பின் நின்றாலும், இதனை மதச் சார்பான செயலாக மட்டுமே பார்க்க முடியாது. ஆண் உயர்ந்தவன் பெண் கீழ்ப்படிந்தவள் என்று ஏற்படுத்தப்பட்ட சமூக உளவியல் அன்றும், இன்றும் பெரும் பங்கு வகிக்கிறது. குடும்ப நிறுவனத்தைத் தாண்டி பெண்கள் வெளிவருவதைத் தடுப்பது இதன் அடிப்படையாகும்.
பொதுவெளியில் இயங்கிவரும் பெண்களை ஆபாசமாகச் சித்தரிப்;பதும் பரப்புரை செய்வதும் அன்றுபோல் இன்றும் பரவலாக நிகழ்வதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். பெண்களை பொதுவெளிக்கு வரவிடாமல், குடும்ப நிறுவனத்திற்கு ஒப்புக்கொடுக்கச் செய்வதன் ஒரு செயற்திட்டமாகவே சூனியக்காரி வேட்டையானது வரலாற்றில் இடம்பெற்றிருக்கிறது. பொதுவாக வீடுதாண்டிச் சமூகத்திற்காகவும் தனக்காகவும் செயற்படும் பெண்களை இன்றைய சமூகம் கையாளும் முறையை சூனியக்காரி வேட்டையின் ஒரு தொடர்ச்சியாகவே பாரக்க முடிகிறது. இதன் பொதுக்கூறுகளும் நோக்கமும் வேறு வேறானவை அல்ல.
தொழில் சார்ந்து பெண்கள் இன்று வளர்ந்திருப்பதை ஏற்றுக்கொண்டிருக்கும் சமூகம், பொதுவெளியிற் காத்திரமாகச் செயற்படும் பெண்களை ஒரு விதத்தில் சூனியக்காரிகள் போலவே நடாத்துகிறது. அன்றை சூனியக்காரிகள், இன்றைய பெண்ணியவாதிகள் என்று சொன்னால் மிகையாகாது.
இவைகளை எல்லாம் நடைப்பயணத்திற் தேடித் தெரிந்துகொண்ட பின் சூனியக்காரிகளின் மேல் எனக்குப் பெருமதிப்பு எழுந்தது. கண்கள் ஈரமாவதையும் தவிர்க்க முடியவில்லை. ஸ்பெயினில் நான் கடந்து வந்த பாதையில் சூனியக்காரிகள் எரியூட்டப்பட்ட நினைவிடம் ஒன்று இருந்திருக்கிறது. துரதிஸ்டவசமாக நினைவிடத்தைக் கடந்து வந்துவிட்டமை மிகக் கவலையளித்தது.
சூனியக்காரிப் பதக்கம் ஒன்றை வாங்கிக் கழுத்திற் கறுப்புக் கயிற்றில் அணிந்துகொண்டேன். எந்தத் தங்க வைர நகைகளும் தராத அழகினை அந்தப் பதக்கம் எனக்கு தருவதாகத் தோன்றுகிறது. ஆனாலும் என்னைத் தெரிந்தவர்கள் எல்லாம் ஏன் சூனியக்காரியைக் கழுத்தில் அணிந்திருக்கிறாய் என்று கேட்ட வண்ணமே இருந்தனர்.
தேவதைகள் என்றும் துர்தேவதைகள் என்றும் பகுப்பாய்வு நடாத்தும் இச்சமூகத்தின் முகத்தினை நிமிர்ந்து நோக்கும் திடமுடனும் மிடுக்குடனும் தொடர்ந்து நடையிடுவோம். பயணங்கள் நமக்குப் பற்பல அநுபூதிகளைத் தருகிறது. எப்போதும் பயணங்கள் இனியன!
நன்றி: வெற்றிமணி (பங்குனி 2024)