யாழ்ப்பாணத்தில் தனியார் பல்கலைக் கழகம் தேவையா இல்லையா என்ற debate தொடங்க முன்னமே அனைத்து அனுமதிகளும் வழங்கப்பட்டு அதற்கான இருக்கைகளின் விலையும் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது. இத்தனை துரித கதியில் இவை நடக்க வேண்டும் என்றால் இதன் பின்னர் நிச்சயமாக ஒரு agenda இருக்கும் என்பது மிக இலகுவாக ஊகிக்கக் கூடிய விடயமே.
ஆனால் கலா மாஸ்டர் ஈழத்தமிழரோடு நல்ல உறவைப் பேணும் ஒருவர் 2009 இல் கொத்துக் கொத்தாக எம் இனம் அழிக்கப்பட்ட போது கலைஞர் tv இல் மானாட மயிலாட நிகழ்ச்சியை கடும் விமரிசையாக நடத்திக் கொண்டிருந்தார். அது பிராந்திய தேவையாக அவர்களுக்கு இருந்தது. தொலைக்காட்சி சனல்களுக்கிடையேயான போட்டியைத் தான் கவனிக்க வேண்டியிருந்தது. அவர்கள் தங்கள் தேவையைத் தள்ளி ஈழத்தமிழர் நலன் பேண வேண்டிய தேவை அல்லது உணர்வு அவர்களுக்கு இருக்கவில்லை. அதே கலா மாஷ்டர் நடன ஷோவுக்கும் வேறு தேவைகளுக்கும் ஈழம் வந்தவுடன் அவருக்குப் பின்னால் கூட்டம் அலை மோதியதையும், வியாபார நோக்கம் கருதி அவர்களை வி ஐ பி ஆகத் தமது இடங்களுக்கு அழைத்து அவர்களுக்கு விருந்து வைத்தவர்கள் யாரென்று பார்த்தால் ஈழத்தமிழரின் தொண்டு நிறுவனங்களின் நிகழ்வுகளை மக்கள் ஊடகங்களுக்கு கொண்டு செல்வதற்கு ஆயிரக் கணக்கில் பணம் கேட்பவர்களாகத் தான் இருக்கின்றார்கள்.
லொஸ்லியா , தர்சன் , ஜனனி , கில்மிஷா , அசானி , கிரிஷ்ணிகா என வயது வேறுபாடின்று எங்கள் பிள்ளைகளை கனவுலக சினிமாவிற்குள் தள்ளி தென்னிந்தியாவில் கரையொதுங்க வைத்து விட்டு தென்னிந்தியாவிலிருந்து மைனா ,ஆல்யா , பாலா என்று எந்த சம்பந்தமுமே இல்லாத இந்தியக் கலைஞர்களை உள்ளூர் அழைத்து நாம் விருந்து வைக்கின்றோம். இங்கே SOAS university இல் தமிழிருக்கையை உருவாக்குவற்காக பல கலை நிகழ்ச்சிகள் செய்யப்படுகின்றன. பல இலங்கைத் தமிழர் அதில் உள்வாங்கப்பட்டிருக்கின்றார்கள். அங்கேயும் பல குழப்பங்களும் குழறுபடிகளும் நடந்தபடி தான் இருக்கின்றன. ஆனால் அதன் பின்னே தமிழ் இருக்கை லண்டனில் பல்கலைக்கழகத்தில் இருக்க வேண்டும் என்ற பெரிய நோக்கம் இருப்பதால் தான் இன்றுவரை அதற்காக உழைக்கின்றார்கள். அவர்கள் கலை நிகழ்ச்சிகள் ஒழுங்கு முறையோடு வடிவமைக்கப்படுகின்றன. நோக்கம் சார்ந்ததாக நிகழ்வுகளை ஒருங்கமைக்கின்றார்கள். வரப்போகும் ஷோபனா நடன நிகழ்சி கூட அதற்காக நிதி திரட்டும் நோக்கிலேயே செய்யப்பட இருக்கின்றது. அதில் நடனமாட பல இலங்கைத் தமிழ்ப் பிள்ளைகள் உள்வாங்கப்பட்டுள்ளார்கள். இலங்கைத் தமிழரின் வெளிநாட்டுப் பணம் மீதான பொருளாதாரச் சுரண்டல்கள் இங்கேயும் பல வழிகளில் அரங்கேற்றப்படுகின்றது. அண்மையில் இரண்டு தென்னிந்திய நிகழ்ச்சிகளில் எங்கள் இரண்டாம் தலைமுறைக் கலைஞர்கள் ஏமாற்றப்பட்டதும் புறந்தள்ளப்பட்டதும் மிக வெளிச்சமாகப் பல ஊடகங்களில் எழுதப்பட்டது.
தென்னிந்திய சினிமாவின் குறி எங்கள் கடின உழைப்பால் உருவாக்கப்படுள்ள பணத்தின் மீது தான் உள்ளது. எங்களை ஓர் ஊறுகாய் போல் பயன்படுத்தத் தான் பலர் முனைகின்றார்கள். அதற்கு ஈழத்தமிழ் பண முதலைகள் சிலர் துணைபோவதோடு சில ஊடகங்களும் அறம் பிழைத்து குற்றம் புரியத் துணை போகின்றன. வெளுநாடுகளிலிருந்து ஈழம் மற்றும் மலையக அபிவிருத்திக்குச் செல்லும் உதவித்தொகையை வெறும் பணவரவாகப் பார்த்தலும் , தொண்டு நிறுவனங்கள் அறம் தவறி profitable operations ஆக மாறியிருப்பதும், voluntary service என்ற பதமே பாவனையிலிருந்து அழிந்து போய்விடும் என்ற அச்சமே எங்கும் பரவிக்கிடக்கின்றது. அது தவிர புலி எதிர்ப்புக் கும்பல் இனவாதத்தையும் , பிரதேச வாதத்தையும் காவிக்கொண்டு வருவதும், புலி ஆதரவுக் கும்பல் நினைவு தினத்தையும், போராளிகளையும் , மாவீரரையும் ஏலம் போடுவதையும், எந்த ஒரு நிகழ்வு நடந்தாலும் உடனே அதற்கு மாற்று நிகழ்வு நடத்துவதும், எது நடந்தாலும் கண்ணில விளக்கெண்ணெய் விட்டு பிழை பிடிப்பதும், party politics, organisational politics என எல்லா இடங்களிலும் குழப்பம் விளைவித்தலும், தேசியவாதிகளாகக் காட்டிக் கொண்டு சந்தர்ப்ப வாதிகளாக நடைமுறையில் தர்மத்தை மனச்சாட்சியை வித்து தன் தலையிலேயே கிரீடம் சூடிக் கொள்ள முனைபவர்களும், வீட்டுக்கு வீடு தலைவரின் பாதுகாப்புப் படையில் இறுதி வரை இருந்தவர்களின் பட்டியல் நீள்வதும், மர்ம துவாரகா இந்தியாவிலுருந்து வந்து கடிதம் வாசிப்பதும், பாரளுமன்றத்தில் இரண்டு தரப்பு , மாவீரர் தினத்தில் பல தரப்பு , முள்ளிவாய்க்காலில் எத்தனையோ தரப்பு , இலங்கை எண்டு எழுதினால் குற்றம் ஆனால் இலங்கைக்கு விசா எடுத்து விடுமுறை போகலாம், ஈழம் எண்டு எழுதினாக் குற்றம் ஆனா ஈழத்தமிழன் எண்டு சொல்லி அசைலம் கேக்கலாம் எனத் தமிழ்ச் சமூகம் புரையோடிய புண்களோடும் நாற்றத்தோடும் வாழத் தயாராகின் புண்ணை நோக்கி அதன் வாடையை நோக்கி பக்டீரியாக்களும் ஈக்களும் வரத்தான் செய்யும்.
இன்று வடக்குக் கிழக்கின் இளம் தலைமுறை குறிவைக்கப்பட்டு போதை , விபச்சாரம் , வாள் வெட்டு என்பதை சகஜநிலையாகப் பார்க்க வைத்ததன் பின்னே இருக்கும் அஜன்டா புரியவில்லை என்றால் இந்தத் தனியார் பல்கலையும் அதனோடு வரும் entertainment உம் புரியப் போவதில்லை. முப்படையோடு இருந்த விடுதலைப் போராட்டத்தை முடக்கத் தெரிந்த அரசாங்கத்துக்கு வாள் வெட்டையும் போதைப் பொருளையும் முடக்க முடியாதா? சின்னப்பிள்ளைகளைத் தமன்னாவைக் காட்டி கூட்டிவந்து சரியான பாதுகாப்புப் பலமின்றி இந்த நிகழ்வை நடத்த அனுமதி பெற்று இன்று யாழ்ப்பாணத்தானைக் காட்டான் என்று காட்ட முற்படும் இந்த நிலைக்குப் பின்னே நிச்சயம் ஒன்றும் இல்லையா? அதில் தடுப்பை உடைத்து ஓடி வந்து கமரா மேல் ஏறி இருந்தவர்கள் தான் நாளைய தேசத்தின் தலைவர்கள் என்றால் அந்தத் தேசத்தின் நிலை எப்பிடியிருக்கும்? இதனையும் அரசியலாக்கி ஒன்றும் இல்லாமல் ஆக்கி டயஸ்போராவின் பண பலத்தில் அடுத்த எலக்சன்ல நிக்கலாம். எரியிற வீட்டில புடுங்கினது லாபம் தானே. வடக்கு கிழக்கு மாகாண அமைச்சின் பங்கு என்ன? வடக்குக் கிழக்கில் இந்திரன் மலையகத்தில் ஜீவன் தொண்டமான் இந்திய நட்சத்திரங்களை வைத்து இலங்கையில் என்ன செய்ய நினைக்கின்றார்கள் ?
டிடி , பிரியங்கா இருவருமே ஈழத்தமிழரை ஓரங்கட்டும் விதமாக பல நிகழ்வுகளில் நடந்திருந்தார்கள். பிரியங்கா லொஸ்லியாவிடம் பிக்பொஸ் கொண்டாட்டத்தில் நடந்து கொண்ட முறை விமர்சிக்கப்பட்து. டிடி எல்லோரையும் புழுகித்தான் நிகழ்ச்சி நடத்துவார். ஆனால் ஒரு நிகழ்ச்சியில் ஜனனியிடமும் ஒரு நிகழ்ச்சியில் லொஸ்லியாவிடமும் எந்த முகமனுமே இல்லாமல் கேள்வி கேட்ட விதம் உண்மையிலேயே அவர்கள் ஈழத்தமிழர் மீது அன்பு வைத்திருக்கின்றார்களா இல்லையா என்பதைத் தான் காட்டியிருந்தது. அது பலராலும் விமர்சிக்கப்பட்டிருந்தது. சேரன் தர்சன் லொஸ்லியா மீது காட்டிய வன்மம் பட்டவர்த்தனமாகப் பேசப்பட்டது. சமுத்திரக்கனி விசால் ஈழத்தமிழர் தான் கள்ள சீடி அடித்து படங்களை வெளிவிடுகின்றார்கள் என உரத்துச் சொன்னார்கள். அவர்கள் யாருமே காணாமல் போனோர் தொடர்பாக நடந்த போராட்டங்களை ஓர் செய்தியாகக் கூட போடாதவர்கள். எல்லா தென்னிந்தியக் கலைஞர்களுமே யூரியூப் வைத்திருக்கின்றார்கள். அது அவர்களுக்கு வருமானமும் தருகின்றது. ஒருவரேனும் யுத்தத்தின் வாழ்வியில் பற்றி பேசியிருக்கின்றார்களா இல்லை பெண்கள் போராளிகளின் அவலநிலை பற்றியேனும் பேசுகின்றார்களா ? ஆனால் ஈழத்தமிழரின் யூரியூப் சனல்கள் பெரும்பான்மையாக தென்னிந்தியாவையே சுற்றி வருகின்றன. மொழியிலிருந்து பேச்சு வழக்கு வரை இந்திய வாடை எங்கும் எல்லாவற்றிலும்.
கில்மிசாவின் மாமனை வைத்துக் காசாக்கியதும் அவர்கள் தான் கில்மிசாவைத் தேரில் உலா வரச் செய்ததும் அவர்கள் தான். அசானியின் சமூகத்தின் அவல நிலைக்குக் காரணமும் இந்தியா தான். அகதிகளாய் கைதிகளாய் முகாம்களில் தவிக்கும் தமிழரை நிர்க்கதியாய் வைத்திருப்பதும் அங்கே தான். ஆக எங்கள் தேசத்தின் மீதான ஆதிக்கத்தை நாம் இன்னொருவரின் கைகளில் கொடுத்துவிட்டு எங்கள் புண்களை நாங்களே சொறிந்து கொண்டிருப்போம். ரம்பாவின் கணவர் ஈழத்தமிழராக இருந்த போதிலும் பல காலமாக தன்னை வெளிப்படுத்துக் கொள்ளாமல் இருந்தவர். அவர் திடீரென கல்வித் தந்தையாக உருவெடுக்க என்ன காரணம்? உண்மையிலேயே அது தமிழ் மக்கள் நலன் சார்ந்திருப்பின் இந்த நிகழ்வை இந்தியாவில் பல பெரிய கலைஞர்களுடன் நடத்தி நிதி திரட்டி இந்த பல்கலைக்கழகத்தைக் கட்டியிருக்கலாமே? அல்லது கோடியிலே கொட்டிக் கொடுக்கும் டயஸ்போராவில் நடத்தியிருக்கலாமே?
யாழ்ப்பாணத்தில் தனியார் பல்கலைக்கழகம் உண்மையிலேயே நல்லதாகக் கூட இருக்கலாம். ஆனால் அதனைச் செய்வதற்கு 30 வருடங்களுக்கு மேலாக யுத்தத்தின் வடுக்களைச் சுமந்த தேசத்தில் , மனவழுத்தம் கூடக் குறையாமல் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளின் மனக்குமுறல்களை புறம் தள்ளி, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினரின் கண்ணீரைக் காசாக்கி, ஆண் துணையை இழந்து ஒரு வேளைச் சோற்றுக்காய் பாலியல் சுரண்டல்களுக்கு உள்ளாகியிருக்கும் பெண் சமூகத்தின் பாவத்தின் மீது சவாரி செய்யும் செய்ய நினைக்கும் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் உண்மையிலேயே தேவையா?
சினிமா என்னும் கனவுலகை நோக்கிப் பயணப்பட விளையும் இளம் சமுதாயத்தின் மாற்றத்தை எதன் மூலம் உருவாக்கப் போகின்றோம்.இப்படியான விடயங்களை எதிர்வரும் காலங்களில் நடைபெறாமல் தடுக்க வடக்குக் கிழக்கு மலையக அமைச்சர்கள் மாகாண ஆளுனர்கள் என்ன செய்யப்போகின்றார்கள்? “Transforming tears into triumph, forging a resilient nation beyond the echoes of war heroes – united, empowered, and bound by a shared vision for a brighter tomorrow.”“கண்ணீரை வரலாறாய் மாற்றி, மாவீரரின் ஆகுதிகளின் மேல் ஒரு தாங்குதிறனுடனான தேசத்தை உருவாக்குதல் – ஒன்றுபட்ட, மேம்பாடடைந்த சமுகமாக பார்வைக் கோணங்களைப் பரிமாறி வலுவான நாளைய தேசத்தை உருவாக்க“ – நாம் என்ன செய்யப்போகின்றோம்!!!
Roshini Rameash – https://www.facebook.com/nirroshanyr/posts/10233496934468326?ref=embed_post