‘’ பெண்களை ஏன் தேர்ந்தெடுத்துக் கோவிலில் பொட்டுக்கட்ட அனுப்பினார்கள்?’’ 78 வயதுக் கலைஞரான அன்று எழுப்பப்பட்ட கேள்வி.?
தேவதாசி மரபைச் சேர்ந்த இறுதித்தலைமுறை சார்ந்தவரான திருவாரூர் திலகம் என்கிற 78 வயதான மூதாட்டியைச் சந்தித்து பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட பேட்டியின் சில பகுதிகள் இங்கே
குமுதம் தீராநதி இதழில் வெளிவந்து, என்னுடைய ‘’ கனவின் பாதை’’ தொகுப்பிலும் இடம் பெற்றிருக்கிற பேட்டி இது “ஜோதியைக் கையில் ஏந்தியபடி அதைக் காற்றின் அலைக்கழிப்பிற்கிடையில் சிக்கவிடாமல் கவனமாகப் பார்த்துக் கொண்டு தொடர் ஓட்டமாய் வரும் ஓட்டக்காரனைப் போலத் தான் இவர்களும். அபூர்வமான கலையை ஏந்தியிருந்தாலும் சுற்றிலும் சமூக மதிப்பில்லை. உரிய அங்கீகாரமும் இல்லை. இருந்தாலும் அதையும் மீறிப் பல தலைமுறைகளைக் கடந்து பரதத்தைத் தங்கள் நாளங்களில் சுமந்து வந்திருப்பவர்கள் தேவதாசிகள்.
பரதத்தை நளினத்துடன் காப்பாற்றிக் காலத்தின் இன்னொரு கரையில் ஏற்றியவர்கள்.கோவில்களில் இவர்களது கலை வெளிச்சம் பெற்றாலும், இவர்கள் மீது அந்த வெளிச்சம் விழவில்லை.இன்று தமிழ்க்கலாச்சாரத்தின் ஓர் அடையாளமாக மாறித் தகுதியைப் பெற்றிருக்கிற பரதம் இவர்களுடைய கைக்குழந்தை.தங்களுடைய குழந்தை கை மாறிய ஏக்கம் தெரிகிறது இவர்களுடைய பேச்சில்.அபூர்வமாகிக் கொண்டுவரும் அந்த மரபின் தொடர்ச்சியாக எஞ்சிய கலைஞர்களில் ஒருவர் திருவாரூர் திலகம். பலமான பரதப் பின்னணி உள்ள குடும்பத்திலிருந்து வந்தவர். ஒடிசலான உடம்புடன் வயதான நிலையிலும் அபிநயம் பிடிக்கிறார். அலுப்பில்லாமல் பேசுகிறார்.
தன்னுடைய சமூகத்தைப் பின்னோக்கிப் பார்த்துப் பேசுவதில் இவருக்குத் தயக்கங்கள் இல்லை. முதுமை ஏற்படுத்தியிருக்கிற கனிவு பேச்சின் ஊடே விரவியிருக்க மூன்று மணி நேரத்திற்கு மேல் நம்மிடம் பேசினார் திலகம்.‘’ சங்கீத நாச்சியாரின் வாரிசான மாணிக்க நாச்சியாரின் வழி வந்தவர் நாங்கள். திருவாரூர் வடக்குவீதியில் எங்களுடைய வீட்டிற்கு மூன்று வீடுகள் தள்ளி மாணிக்க நாச்சியாரின் கோவில் இன்றும் இருக்கிறது.சிவதீட்சை பெற்று திருவாரூர் தியாக ராஜப் பெருமாளுக்குத் தொண்டு செய்து வாழ்ந்தவர் அவர். பாடுவார். ஆடுவார். திருமணம் பண்ணிக்கொள்ளாமலே ஆண்டாள் மாதிரி இருந்த அவரைச் சந்திக்க தியாகராஜரே வந்ததாக ஒரு கதை. ஒரு நாள் அவருடன் வாழ்ந்துவிட்டு உயிரைவிட்டதால் தியாகராஜர் கோவிலை ஒட்டி அவருக்கென ஒரு கோவிலும் இருக்கிறது.
அதற்குப் பிறகு எங்கள் தலைமுறைக்கு முன்பு இருந்தவர் கொண்டி அம்மாள். அவர்களுடைய ஒரிஜினல் பெயர் குட்டியம்மாள். தேவாரம் பாடி குறவஞ்சியை நாட்டியமாகப் பண்ணிக்கொண்டிருந்தார்கள்.ஒரு நாள். திருவாரூர்த் தேர் பவனி வரும்போது எங்கள் வீட்டு வாசலுக்கு வந்து நின்றுவிட்டது. என்னென்னவோ செய்கிறார்கள், தேர் நகரவில்லை. அதற்குள் தியாகராஜர் ஒரு குழந்தையின் கனவில் வந்து ‘ இங்கே கொண்டி என்பவள் இருக்கிறாள். அவள் வந்து தொட்டால் தான் தேர் நகரும்.’’என்று சொல்லிவிட்டார். மன்னனுக்குத் தகவல் போகிறது. மன்னனே நேரடியாக கொண்டி அம்மாள் வீட்டிற்கு சாரட் வண்டியில் வந்து தேரை இழுக்க அழைக்கிறார்.கொஞ்ச நேரம் தியானம் பண்ணிவிட்டு வந்த கொண்டி அம்மாள் மன்னனிடம் ‘’ எனக்கு நேரம் வந்துவிட்டது. இறைவன் கூப்பிடுகிறார். நான் தொட்டதும் தேர் நகர்ந்துவிடும். அங்கேயே நான் இறந்து போய் விடுவேன்.
என்னைக் காசிக்குக் கொண்டு போய்ச் செய்ய வேண்டிய சடங்குகளை எல்லாம் மயிலாடுதுறைக்குக் கொண்டுபோய்ச் செய்துவிடுங்கள்’’ – என்று சொல்லிவிட்டுப் போய்த் தேரைத் தொட்டார். தேர் நகர்ந்தது. கொண்டி அம்மாளின் உயிர் பிரிந்துவிட்டது.அவர் சொன்னபடியே தகனம் பண்ணினார்கள். அவருக்காக ஒரு கோவில் கட்டப்பட்டது.அதன் ஞாபகமாக இன்றும் தேரில் சுவாமி கிளம்புவதற்கு முன்பு எங்களுடைய குடும்பத்திற்கு முதல் மரியாதை செய்கிறார்கள். பரிவட்டம் கட்டுகிறார்கள். கோவிலிலிருந்து மேளதாளத்துடன் நைவேத்தியத்தை எடுத்துக் கொண்டு வருவார்கள். எங்களுக்குக் கொண்டிப் பரம்பரை என்று அடைமொழி கொடுத்திருக்கிறார்கள். ‘’ கண்டு கண்டு காதலித்துக் கொண்டி ஆயினள்’’ என்று அப்பரின் தேவாரத்திலேயே இருக்கிறது.
கொண்டி என்பதற்கு இடைவிடாத பிடிப்புக் கொண்டவள் என்று அர்த்தம்!அடுத்து எங்கள் தலைமுறையில் பிரபலமானவர் திருவாரூர் கமலம் மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதரின் மனைவி. அதற்கடுத்து எங்கள் பாட்டி கமலாம்பாள். என்னுடைய நேர்தாய் வழிப்பாட்டி. பரதத்தில் பிரபலமானவர்.அப்போது சதிர்க்கச்சேரி என்று தான் அதற்குப் பெயர். தேர் உலா வரும் போதெல்லாம் முன்னாடி நாங்கள் ஆடிக்கொண்டு போக வேண்டும். கோவில்களிலும் ஆடுவார்கள்.‘பொட்டுக்கட்டுவது’ என்கிற வழக்கம் அப்போதிருந்தது. ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்துத் தெய்வத்தின் குழந்தையாக விட்டுவிடுவார்கள். ‘’அழகான பெண்ணை ஏன் தேர்ந்தெடுத்துக் கோவிலில் பொட்டுக்கட்ட அனுப்பினார்கள்?’’ என்று ஒரு பல்கலைக்கழகத்தில் என்னிடம் கேட்டார்கள்.அழகான பெண்களை கோவிலுக்கு விடுவது தான் அப்போது வழக்கமாக இருந்தது. அந்தப் பெண் இஷ்டப்பட்டால் திருமணம் பண்ணிக் கொள்ளலாம்.
‘தேவருக்கு அடியார்’ என்று அப்போது பெயர் இருந்தது.ரம்பை, ஊர்வசி, மேனகை எல்லாம் தேவேந்திரனுக்கு அடிமையாக இருந்தவர்கள் தானே! கோவிலோடும், இறைவனோடும் அவர்கள் ஒன்றியிருந்தார்கள். நாளடைவில் கோவில்களில் ஆட முடியவில்லை. இவர்களும் ஒதுங்கிவிட்டார்கள்.கோவல் சார்ந்த கலையாக எவ்வளவோ வருஷங்களாக சிரத்தையாக நாட்டிய வடிவத்தை ஆராதித்தோம். இருந்தாலும் திட்டமிட்டு எங்களைப் பற்றிக் கெட்ட பெயரை உருவாக்கிவிட்டார்கள். அந்தப் பெயர் ஏற்படுத்திய பாதிப்பினால் தமிழகத்தின் பல பகுதிகளில் கோவில்களில் நாட்டியமாடி வந்த பல பெண்கள் அதோடு நாட்டியமாடுவதையே விட்டு ஒதுங்கிவிட்டார்கள்.எந்தக் கலைகளில் தப்பு இல்லை? தப்புப் பண்ணாத சமூகம் எது? இருந்தாலும் எங்களுக்கு மட்டும் ஏன் கெட்ட பெயர்? அபிமான மனைவிகளாக நாங்கள் இருந்தாலும், எந்தக் கௌரவத்தையும் குலைக்காமல் தான் எங்கள் வாழ்க்கையை நடத்தினோம்.
ஒன்றும் தெரியாமல் வீட்டுக்குள்ளேயே அடக்கி வைக்கப்பட்டிருந்த பெண்களைவிடச் சில மொழிகளைக் கற்று, சங்கீதம்,நாட்டியம் என்று தேர்ந்த வித்தையுடன் நாங்கள் இருந்தாலும், இந்தச் சமூகம் எங்களை ஏன் பின்னொதுக்கியது?வெளிநாட்டு மாணவிகள் பலருக்குப் பரதநாட்டியம் கற்றுக் கொடுத்திருக்கிறேன். அவர்களும் மரபைச் சிதைக்காமல் அதைக் கற்றுக் கொள்கிறார்கள்.‘’ தெய்வ நிலையை ஒரு குறத்தியாலும் அடைய முடியும். தெய்வதற்கு முன் சாதி கிடையாது’’ என்பது தான் குறவஞ்சி நாட்டியத்தில் சொல்லப்பட்ட விஷயம். பார்க்கிறவர்கள் சாதிபேதம் பார்த்தாலும், நாங்கள் ஆடிய கலை வடிவத்தில் எந்தச் சாதியின் அடையாளமும் இல்லை. அதில் இருந்தது சிரத்தையான ஈடுபாடும், பக்தியும் தான்’’பரதக்கலைக்கான தனி அடையாளமான அபிநயங்கள் முகத்திலும், கைகளிலும் இழைந்து வரப் பேசுகிறார் 78 வயதுக் கலைஞரான பி.ஆர்.திலகம்.
Thanks : மணா
https://www.facebook.com/100048886901751/posts/956722692633952/