ஆர் கொலோ…

றஞ்சி (சுவிஸ்)

visnu 2

visnu

விஷ்ணுவர்த்தினியின் மனதில் உறுதி வேண்டும்  சிறுகதைத் தொகுப்பு பற்றி சிறுவிமர்சனம்

பெண்களின் எழுத்து, வாசிப்புத் தளங்களில் பல்வேறுபட்ட பார்வைகளாக பதிவாகிக் கொண்டிருக்கும் இவ்வேளையில்  ஈழத்தமிழ் பெண்கள் தங்களுடைய அறிவாற்றலின் பரப்பை சமூகம் பற்றியும் மண்ணின் போர் பற்றியும் அனுபவத்தின் சோகங்களை பதிவுகளாய் மாற்றியிருக்கிறார்கள்.

 இவ்வேளையில் பெண்களால் எழுதப்படும் சிறுகதைகள் சில தொகுப்புக்களாக  வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் யாழ்ப்பாணத்திலிருந்து விஷ்ணுவர்த்தினியின் மனதில் உறுதி வேண்டும்  என்ற சிறுகதைத்தொகுப்பு ஜீவநதியின் வெளியீடாக அண்மையில் வெளிவந்துள்ளது. இன்று சலனி,  விஷ்ணுவர்த்தினி,தாட்சாயினி,யாழினி,கார்த்திகாயினி, மற்றும் பிறெவ்பி   போன்ற பல இளம் படைப்பாளிகள் இன்று கதைகள் சிறுகதைகள் கவிதைகள் என எழுதி வருகிறார்ள்

ஆனாலும் ஈழத்திற்கும் இலக்கியத்திற்குமான உறவு நெருக்கடி மிகுந்த போர்ச்சூழலில் சிக்கியிருந்தது மட்டுமல்ல யுத்ததினால் எழுந்த உணர்வலைகள் இலக்கியங்களாக படைக்கப்பட்டன. ஆனால்   ஒரு பக்கம் யுத்ததினால் ஏற்பட்ட கோர அழிவுகள் மனச்சோர்வு, பயம் விரக்தி, என பலர் உள்ள நிலையிலும்   மறுபக்கம் பெண் விடுதலையை நோக்கிய புறவுலகின் பயணம் என ஒரு சில நிகழ்வுகள் நடைபெற்றாலும்  பெண் குடும்பம் சார்ந்து கணவன் துணையுடன் வாழ்வது மட்டுமே அவளுக்கான சமூக அந்தஸ்து  என்ற சமூக வாழ்வின் அகநிலையிகளுக்கிடையிலான முரண்களின் இடைவெளியில் இன்றைய பெண்களின் வாழ்க்கை இன்னும் வேரூன்றி வரும் நிலையில் பெண்களின் எழுத்துக்கள் அதுவும் ஈழத்திலிருந்து  இளம் படைப்பாளிகளிடம் இருந்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது.

அந்த வகையில் ஒரு இளம் எழுத்தாளர் என்ற வகையில் விஷ்ணுவர்த்தினியின் கதைகளில் பெரும்பாலும் இளம் வயதினரைப்பற்றிய கதாபாத்திரங்களையே  இத்தொகுதியில் உள்ள சிறுகதைகளில் பாத்திரங்களாக சித்தரித்துள்ளார்.

தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தில் மலிந்து கிடக்கும் அடக்குமுறைகளைக் கண்டு விழிக்கும் விஷ்ணுவர்த்தினி குடும்பப் பெண்ணின் உரிமைகளைச் சொல்வதோடு அதனைப் பேணுவதன் அவசியத்தையும் கூறுகிறார். அத்துடன் அவற்றை தனது கதைகளின்   கருக்களுக்குள் தோற்றம் பெறச் செய்கிறார்.

மனதில் உறுதி வேண்டும் என்ற கதையில் திருமணம் தடைப்பட்டு போனபோது அந்தப் பெண் எடுத்த முடிவு மிகவும் வரவேற்கத்தக்கது. திருமணம் செய்து தான் ஒரு பெண் இந்த உலகத்தில் வாழவேண்டுமென்பதில்லை ஆணின் அதிகாரத்தின் கீழ் தங்கியிருக்க வேண்டுமென்பதில்லை பெண்கள் திருமணம் என்ற பந்தத்துக்குள் அடைபட்டுத் தன் சுதந்திரம் ஆசாபாசங்கள் என எல்லாவற்றையும் தொலைத்து தன் கணவணுக்காகவே வாழ நேரிடுகிறது திருமணம் தான் ஒரு பெண்ணிற்கு உலகமல்ல போன்ற கருத்துக்களை இக்கதையில் முன் வைத்துள்ளார்.

அத்துடன்  வேரூன்றிப்போய் இருக்கும் சாதி பற்றியும் விஷ்ணுவர்த்தினி சொல்லத் தவறவில்லை. கிராமத்துப்பெண்ணின் இயல்பான பாணியில் இவரது கதைகள் சொல்லி நிற்கின்றன. பாத்திரங்களுக்கிடையில் உள்ள உரையாடல் மூலமே பெரும்பாலான கதைகள் இயல்பான மனிதர்களின் வாழ்வை பதிவு செய்கிறது. வாழ்நாள் முழுக்க கடக்க வேண்டிய துன்ப துயரங்களை குறிப்பாக பெண் என்பதால் பேசுகிறது. அவமானம், கௌரவம் எல்லாவற்றையும் பெண்ணை அவளின் நடத்தையை முன்னிட்டு வெகு எளிதில் அடக்கிவிட சமூகம் நினைக்கிறது. அது குறித்த சந்தேகத்தை சமூகமே  பிரச்சினையாக்கி பழிவாங்குகிறது.  இதனால் பெண்கள் எல்லோருமே வெகு எளிதாக ஆயுதங்களாகின்றனர்.

சில கதைகள்  காலத்தின் அவலங்களை எல்லாவிதத்திலும் புரிகின்ற விதத்தில் வெளிப்படுத்தியது படைப்பின் சிறப்பாக உள்ளது. சில கதைகள்  பிரச்சினைகள்  குவிகின்ற மையப்புள்ளியும் கருத்தும்  ஒன்றாகவே இருக்கிறது அது சமுதாயத்தின் மேன்மையும் அதன் அடிநாதமான கலாச்சாரத்தின் படிமக்கதைகளாகவும் உள்ளன

விஸ்ணுவர்த்தினி  கைக்கொண்டுள்ள மொழி உயிர்ப்பும் மண்வாசனையும் சுமந்து, பல கதைகளை தந்துள்ளார். சமூகத்திலிருந்து உள்வாங்கிக்கொண்ட கருத்துக்களை வீரியத்தோடு வெளிக்கொணர முயலும் போதுதான் அப்படைப்பு வாசகர்களிடத்தில்  கவனம் கொள்ளும் அந்த வகையில் விஷ்ணுவர்த்தினி நல்ல சிறுகதைகளை படைப்பார் என்ற நம்பிக்கை இச்சிறுகதைத் தொகுதியை வாசிக்கும் போது புலப்படுகிறது..

************************

மனதில் உறுதி வேண்டும் என்ற சிறுகதைத்தொகுப்பிலிருந்து ஆர் கொலோ என்ற சிறுகதை நன்றியுடன் பிரசுரமாகிறது.

ஆர் கொலோ…

ஆனி மாதத்து வெயில் தலையைப் பிளக்கிறது. கந்தையாக் கிழவனுக்கு வெளிச்சம் பட்டுக் கண்கள் கூசத் தொடங்கின. தெருவில் வருவோர் போவோர் எல்லோரும் கிழவனின் கண்களுக்கு மங்கலாகவே தெரிந்தனர். நீண்ட தடியொன்றினால் தட்டித் தட்டி கந்தையாக் கிழவன் நடந்து கொண்டிருக்கிறார். வெட்டப்படாமலிருந்த தலை முடியும் சவரம் செய்யப்படாமல் நீண்டு வளர்ந்திருந்த தாடியும் அவரின் குடும்ப நிலையை உணர்த்தின. அரையிலே உடுத்தியிருந்த வேட்டியின் நிறம், தோய்த்து பல நாட்கள் ஆகிவிட்டன என்பதைக் காட்டியது.

கந்தையாக் கிழவன் தன் ஒட்டிய உடம்பில் சுற்றியிருந்த வேட்டியின் ஒரு தொங்கலில் போட்டிருந்த முடிச்சை தொட்டுப் பார்த்து பத்திரப்படுத்திக் கொண்டார். தன் தூரத்துச் சொந்தக்காரர்களிடமிருந்து வீடு வீடாய் ஏறி இறங்கிச் சேர்த்த இரண்டாயிரத்து நானூறு ரூபாப் பணம் அந்த முடிச்சில் தான் இருக்கிறது. அப்பணத்தைக் கொண்டு தான் கந்தையாக் கிழவன், தன் குழி விழுந்த கண்ணுக்கு அறுவைச் சிகிச்சை செய்யவேண்டும். அதனால் தான் அப்பணத்தை அடிக்கடி தொட்டுப் பார்த்து பத்திரப்படுத்திக் கொண்டார்.

தவமணி ரீச்சர் வீட்டு நாய், கந்தையாக் கிழவனைப் பார்த்து குரைத்து அவரின் வருகையை வீட்டுக்குத் தெரிவிக்கிறது. தவமணி ரீச்சர் வெளியே வருகிறாள். வழமையாக அவ்வீட்டில் மழைக் காலத்தில் புல் வெட்டி துப்பரவு செய்தல், விறகு பிளந்து கொடுத்தல் போன்ற வேலைகளை கந்தையாக் கிழவனே செய்து கொடுப்பது வழக்கம். ரீச்சரும் அதற்கேற்ப கூலி கொடுப்பாள். அதை வைத்துத் தான் கிழவன் தன் மகளையும் இரு கால்களும் ஊனமான தனது பேத்தியையும் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்.

“வாங்கோ ஐயா” என்று ரீச்சர் கந்தையாக் கிழவனை வழமையான பரிச்சயத்தோடு வரவேற்றாள்.

கந்தையாக் கிழவன் அமைதியாக எதுவுமே பேசாமல் மௌனமாக இருந்தார். தவமணி ரீச்சர் கிழவனுக்கு எவ்வகையிலும் உறவு இல்லை. ஆனபோதிலும், ரீச்சர், கிழவனின் உறவினர்களை விட அவர் மேல் மிகுந்த அன்புடையவள். கிழவன் அவ்வீட்டில் வேலை செய்யும் போதெல்லாம் அடிக்கடி சாப்பாடு, தேநீர் கொடுப்பாள். அதுமட்டுமில்லாமல் அவருக்கு அணிந்து கொள்ள நல்ல வேட்டி, சட்டை கொடுப்பதோடு மட்டுமல்லாமல் அடிக்கடி பணமும் கொடுப்பாள். இப்படி நிறைய உதவிகளை செய்துகொண்டிருக்கும் ரீச்சரிடம் கண்ணுக்குச் சிகிச்சை செய்யவும் பணம் எப்படிக் கேட்பது என்ற தயக்கமே அவரை மௌனம் காக்க வைத்தது.

கிழவனின் மங்கிய கண்ணிலிருந்து நீர் ஒழுகிக் கொண்டிருப்பதைக் கண்ட தவமணி ரீச்சருக்கு மனம் பரிதவித்தது.

“என்னையா, கண்ணில இருந்து நீர் வடியுது. கண்ணில ஏதும் பிரச்சினையோ?” இவ்வாறு ரீச்சர் கண்ணைப் பற்றிக் கேட்டதும் ரீச்சரிடம் பணம் கேட்பதற்கு இது தான் ஒரு சந்தர்ப்பம் என்று கிழவன் நினைத்தார்.

“அது ஒண்டுமில்லை பிள்ளை. கண்ணில ஏதோ சவ்வு வளந்திட்டுதாம். அதுதான் இப்பிடி நீர் வடியுது. இதோட பெரிய கஸ்ரமாக் கிடக்கு. அதுதான் பிள்ளை, போன கிழமை பெரியாஸ்பத்திரியில் போய்க் காட்டினனான். அவங்கள் தான் சொன்னவங்கள் சவ்வு வெட்ட வேணுமாம்”

“அப்படி என்றால் அந்த ஒப்பரேசனை செய்யுறது தானே. உங்களை இப்படிப் பார்க்க எனக்கு மனக்கஸ்ரமாக் கிடக்கு”

கந்தையாக் கிழவன் பதில் எதுவும் பேசாமல் மீண்டும் மௌனமானார். அவரின் தயக்கத்தைப் பார்த்து ஏதோ விளங்கிக் கொண்டவளாய் ரீச்சரே மீண்டும் தொடர்ந்தாள்.

“ஏன் ஐயா பேசாமல் இருக்கிறியள். காசு ஏதும் பிரச்சினையே… என்னெண்டாலும் தயங்காமல் கேளுங்கோ” இப்படி ரீச்சர் கூறியதும் கந்தையாக் கிழவன் ரீச்சரை நன்றிப் பெருக்குடன் பார்த்தார்.

“என்ர ரண்டு பிள்ளைகளும் என் மேல இவ்வளவு பாசமாக இருந்ததில்லை. ஆனால் நீ என் மேல இப்படி பாசமாக இருக்கிறியேயம்மா. நானும் என்ர ஒரே ஒரு மகனை பாசமாத் தான் வளர்த்தனான். ஆனால் அவன் எங்களையெல்லாம் ஏமாத்திப் போட்டான். அவன் கண்டியில போய்ப் படிக்க வேணும் எண்டதுக்காக நான் ஓடாய்த் தேய்ஞ்சு உழைச்சது மட்டுமில்லாமல் என்ர காணியையும் வித்துத் தானே அவனை படிக்க வைச்சனான். அவன் என்ஜினியராக வந்து அவன்ர தமக்கையையும் அவளின்ர  பிள்ளையையும் காப்பாத்து வான் எண்டெல்லே நினைச்சன். ஆனால் அவன் சிங்களத்தியோட ஓடி எங்களெல்லாரையும் நடுத்தெருவில விட்டிட்டுப் போட்டான்” என்றபடி கிழவன் தன் கழுத்திலிருந்த நைந்த துவாயால் கண்களைத் துடைத்துக் கொண்டார்.

கந்தையாக் கிழவன் இப்படி கவலைப்படுவதைப் பார்த்ததும் தவமணி ரீச்சருக்கு, எப்படி ஆறுதல் கூறுவதென்றே தெரியவில்லை. கிழவன் எத்தனையோ எதிர்பார்ப்புக்களுடன் கஸ்ரப்பட்டு வளர்த்த மகன் இப்படிச் செய்ததை ரீச்சராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மீண்டும் அவரே தொடர்ந்தார்.

“கண்ணில ஒப்பரேசன் செய்ய ஐயாயிரம் ரூபா வேணுமாம் பிள்ளை. இனிமேல் என்ர மகனோட எந்த உறவுமே வைக்கிறேல்லை என்றிருந்த நான், மனதைக் கல்லாக்கிக் கொண்டு, நேற்றுக் காலமை அவனோட ரெலிபோனில கதைச்சனான். அவன் வேண்டாவெறுப்பாத் தான் கதைச்சவன். என்ர மகன் தானே என்ற உரிமையோட, ஒப்பரேசனுக்கு காசு கேட்டன். அவனுக்கு இப்ப தான் குழந்தை பிறந்திருக்காம்… அதனாலை நிறைய செலவெண்டு சொல்லி ரெலிபோனை வைச்சிட்டான் பிள்ளை”

“இனி என்னையா செய்யுறது. எல்லாம் விதி தான். இந்தக் காலப் பிள்ளையளெல்லாம் சொகுசு வாழ்க்கையைத் தான் விரும்புதுகள். நாங்கள் கஸ்ரப்பட்டு அதுகளை வளர்த்துவிட, அதுகள் பிறகு எங்களை மறந்து வாழுதுகள். ஒரு காலத்தில தாய் தகப்பனா வரும்போது நாங்கள் பட்ட கஸ்ரங்களை அவையளும் அனுபவிப்பினம். அப்பத் தான் தெரியும் நாங்கள் எவ்வளவு கஸ்ரப்பட்டு அதுகளை வளர்த்தம் என்று… அதை விடுங்கையா. பூமலர் சுகமா இருக்கிறாளே. எனக்கொரு சாறிச் சட்டை தைக்க வேணும். போகும்போது தாறன். கொண்டுபோய்க் கொடுங்கோ”

“பூமலர் என்ர மகளாப் பிறந்து எவ்வளவோ கஸ்ரத்தை அனுபவிச்சுப் போட்டாள் பிள்ளை. பிரியனைத் தின்னி அந்தப் பிள்ளையோட எவ்வளவு கஸ்ரப்படுறாள். நானும் அங்க இங்க கூலி வேலை செய்து தான் அவளைக் கவனிக்கிறன். ஆனால் அவள் ஊனமான தன்ர மேளுக்கு சில்லு வண்டி வாங்கிக் கொடுக்க வேணுமெண்டு இரவு பகலாய் தையல் மெசினோடேயே இருக்கிறாள்…” கிழவர் பெருமூச்செறிந்தார்.

தவமணி ரீச்சர் அறைக்குள் சென்று கையில் பணத்துடன் வந்தாள்.

“இந்தாங்கோ ஐயா, இதில ரெண்டாயிரம் ரூபா இருக்கு. இதை வச்சு ஒப்பரேசனைச் செய்யப் பாருங்கோ. அடுத்த மாதச் சம்பளம் வந்தவுடனே இன்னும் கொஞ்சக் காசு தாறன்”

கிழவனுக்குக் கண் கலங்கியது. “இது போதுமம்மா. நான் என்ர சொந்தங்களிட்டயும் போய் கொஞ்சக் காசு சேத்திட்டன். இது போதுமம்மா” கையெடுத்துக் கும்பிட்டு விட்டு கிழவன் தன் வீடு நோக்கிச் செல்கிறார்.

கந்தையாக் கிழவனின் வீட்டில் அவரது பேத்தி கண்மணி முற்றத்தில் இருந்து அழுது கொண்டிருப்பது அவர் காதில் கேட்கிறது. ஓடிப்போய்ப் பிள்ளையைத் தூக்கி அணைத்தபடி கேட்டார்.
“கண்மணிக் குஞ்சு, ஏனம்மா அழுறாய். அம்மா பிள்ளையை அடிச்சிட்டாளே”

குழந்தை பதில் எதுவும் சொல்லாமல் அழுது கொண்டேயிருந்தது. பூமலர் வந்து அவரின் கேள்விக்குப் பதில் சொன்னாள்.

“பாருங்கோ ஐயா இவளை. எங்கட விரலுக்குத் தக்க வீக்கம் வேணும். நாங்கள் சாப்பாட்டுக்கே படாத பாடு படுறம். இந்த நிலையில, இவவுக்கு சில்லு வண்டில் வேணுமாம். ஊரில உள்ள மற்றப் பிள்ளையள் ஓடி விளையாடுறதைப் பார்த்திட்டு தனக்கொரு சில்லுவண்டில் வாங்கித் தரட்டாமையா… உங்கட கண் ஒப்பரேசனுக்கே நான் காசுக்கு எங்க போறதெண்டு தெரியாமல் அல்லாடுறன்” – பூமலர் விம்மினாள்.

“குழந்தை ஆசைப்படுறது சரி தானேயம்மா. மற்றக் குழந்தையள் ஓடியாடித் திரியிறதைக் கண்டால் அவளுக்கும் ஆசை இருக்காதே… சில்லு வண்டிலிலை எண்டாலும் அசைஞ்சு திரிஞ்சால் என்ன என்று நினைக்கிறது ஞாயம் தானே…”

ஒரு தீர்மானத்துக்கு வந்தவராய் கந்தையாக் கிழவன் தன் வேட்டியிலிருந்த முடிச்சை அவிழ்க்கத் தொடங்கினார்.

திடீரென்று அவரிடம் ஒரு தயக்கம் எழுந்தது.

‘தவமணி ரீச்சர் என்ர கண் ஒப்பரேசனுக்காகத் தந்தது. அவள் என்னைப் பற்றி என்ன நினைப்பாள்… நான் பொய் சொல்லித் தான் காசு வாங்கிப் போட்டன் எண்டு நினைச்சால் எவ்வளவு கேவலம்…’

இந்த நினைப்பும் ஒரு கணம் தான். கிழவனுக்கு தன் மீதே வெறுப்பாக வந்தது.

‘சே, என்ர சுகத்தைத் தான் இப்பவும் நினைச்சுப் பாக்கிறன். என்ரை பேத்தீன்ரை ஆசைக்கு முன்னாலை சாகிற வயசிலை எனக்குக் கண் பெரிசில்லை. தவமணி ரீச்சருக்கும் இது விளங்கும்…’

தன் மன ஓட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டுக் காசைக் கையிலெடுத்தார்.

“இந்தா பிள்ளை… இது என்ரை கண் ஒப்பரேசனுக்காகத் தவமணி ரீச்சர் தந்தது… என்ரை பேத்தியின்ரை ஆசையை விட என்ரை கண் பெரிசே. அவளுக்கு சில்லு வண்டில் வாங்கிக் குடு…”

பூமலருக்கு முதலில் திகைப்பாக இருந்தது. தவமணி ரீச்சரை ஒரு கணம் நினைத்து பார்த்தாள். காசைக் கையில் வாங்கியபோது அவள் கண் கலங்கியது. பூமலரின் கண்களில் கண்ணீரைக் கண்டதும் அவள் தனக்காகக் கலங்குவதாக கந்தையாக் கிழவன் எண்ணிக் கொண்டார்.’’’


3 Comments on “ஆர் கொலோ…”

  1. ஊடறுவுக்கும் ஜீவநதிக்கும் விஷ்ணுவர்த்தினக்கும் எமது பாராட்டுக்கள் யுத்தம் முடிவடைந்த நிலையில் பல இளம் படைப்பாளிகளின் படைப்புக்கள் பலவற்றை நான் ஜீவநதி,கலைமுகம் மறுபாதி பெண் ஆகிய சஞ்சிகைகளின் வாசித்து வருகின்றேன். அதே போல் ஊடறு இணையத்தளம் பல புதிய எழுத்தாளர்களை அறிமுகம் செய்வதில் ஊடறுவுக்கு நிகர் ஊடறுவே அண்மையில் ஊடறு ஆசரியர் இலங்கை வந்ததாக அறிந்தேன்

  2. Good story heart little paining but one thing Vishnu varthini Dont try to make some thoughts against to SINGALATHTHIGAL because that son is not care that father we will blaim to that singhala wife again again we going to divide the humans

  3. I want to comence about kingslys idea.
    Some times, most probebly the lady also might be educated up to some what higher level.

    We have to accept there is a negligence about their parents by borth of
    them.That should be joint exercise.

    May be due to unbalance educational system.

    We have ,borth singhalease & tamils good cultural habits about treating parents and elders.

    So it is weak point of educating ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *