செயல் திறன் அரங்க இயக்கம் அண்மைக்காலமாக அதிகளவு கவனம் செலுத்தும் ஒரு நாடக வடிவம் ஓராள் அரங்கு ஆகும். இதனை ‘தனிநடிப்பு’ என்று பொதுவாக அழைக்கும் வழக்கம் இருந்து வந்தது. இதனை one man acting என்றும் குறிப்பிட்டனர். இந்த ஆங்கிலப்பதம் ஆண்களை மட்டுமே குறிப்பதால் இருபாலாருக்கும் பொதுவான சொல்லைக்கண்டு கொள்ள வேண்டியிருந்தது. இதனால் ஓராள் அரங்கு என்றும் அதற்கான ஆங்கிலப்பதமாக Solo Theatre என்றும் அறிமுகம் செய்ய முற்படுகிறோம். ActiveTheatre Jaffna
தனியொருவர் மேடை வெளியில் அரங்க மூலகங்களைப்பயன்படுத்தி ஆற்றுகையைத் தருவதை இது குறிக்கிறது. பொதுவாக தனியொருவர் நடிப்பதென்பது வெறும் பேச்சுக்களும் வார்த்தைகளும் மட்டுமே என்று இருந்து வருகின்ற சூழலில் அரங்க மூலகங்களைப் பயன்படுத்தி நிகழ்த்தப்படும் ஆற்றுகைகள் பார்ப்போருக்கு பெருவியப்பாக இருந்தது.மரணச்சான்றிதழ் நாடகம் இறுதி யுத்தத்தில் தனது கணவனை இராணுவத்தினரிடம் ஒப்படைத்த ஒரு இளம் பெண்ணின் கதை, தனது ‘வாட்டசாட்டமான கணவனை’ தன்னிடம் தரவேண்டும் என்ற அவரது போராட்டத்தை தனியொருவராக நிகழ்த்திக்காட்டுகிறார் ஆசிரியர் நிதர்சனா, இதில் இராணுவமாக, பாதிக்கப்பட்ட பெண்ணாக, ஆணைக்குழுவாக என்று பல்வேறு பாத்திரங்களாக நடிக்கிறார். பாத்திர மாற்றங்களுக்கு வட்டமாக சுழலுவதனூடாக அதனை உணர்த்துகிறார்.
மிக அறபுதமாக உணர்ச்சிக்கிளர்ச்சியை ஏற்படுத்துவதாக நிதர்சனாவின் ஓராள் அரங்காற்றுகை காணப்பட்டது. ஒரு காலப்பதிவாக, தமிழ்சமூகத்தின் தீர்க்கப்படாத பிரச்னையை வெளிப்படுத்துவதாக, சமூக அவலமாக உள்ள ஒரு பிரச்னையை 2015 ஆண்டிலிருந்து ஓராள் அரங்காக காத்திரமாக வெளிப்படுத்தி வருவது இங்கு கவனிக்கத்தக்கது. நாடகத்தை எழுதி நெறிப்படுத்தியவர் தேவானந்த். புதிய முயற்சியில் பெண்ணொருவரின் ஆற்றுகை பாராட்டுதல்களுக்குரியது.