எமக்கு (ஊடறு) கிடைத்த ஓர் உயிர்ப்பான தருணம் நாம் என்ன செய்ய வேண்டும் யாருடன் கைகோர்க்க வேண்டும் என்பதை இந்த 100 க்கும் மேற்பட்ட அருந்ததிய பெண்கள் எமக்கு உணர்த்தி இருக்கிறார்கள். ஊடறு சந்திப்பு முடிந்த மறுநாள் 14 ம் திகதி மார்ச் சேலம் “தாரமங்கலத்தில்” அருந்ததிய பெண்கள் விடுதலை இயக்கத் தோழிகளை சந்திப்பதற்கு கல்பனா ஒழுங்குகளை மேற்கொண்டிருந்தார்.. அவ் இயக்கத்தின் தலைவி அலுமேலுவும் இன்னும் ஐந்தாறு பெண்களை மட்டுமே நாம் சந்திக்கவுள்ளோம் என எண்ணியிருந்தோம். ஆனால் அச்சந்திப்பில் கலந்து கொண்ட 100 க்கும் மேற்பட்ட பெண்களையும் அவர்களின் வாழ்க்கையின் கண்ணீர் கதைகளையும் கேட்ட நாமும் அங்கிருந்தவர்களும் கண்ணீர் விட்டு அழுதோம். வார்த்தையே வரவில்லை தொண்டைக் குழிக்குள் சிக்கியது கண்ணீர் துளிகள். பின்னர் அங்கிருந்து விடைபெற மனமேயில்லாமல் கிளம்பினோம். கௌரவம், ஈகோ,சாதி ,மதம் கலாச்சாரம் என இவற்றிலேயே ஊறி வாழும் எம்மை போன்ற நடுத்தர மக்கள் மேலும் மேலும் தேவைகளை தேடி ஒடிக்கொண்டேயிருக்கிறோம். சாதியின் பெயரால் இந்தப்பெண்களின் அன்றாட வாழ்வே சிதைந்துள்ளது. ஒரு நேர உணவுக்கே அல்லாடும் இப்பெண்களின் கதைகளும் கண்ணீரையும் தமிழ்நாட்டில் உள்ள பெண்கள் அமைப்புக்கள், பெண்ணிய செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள், சமூகசெயற்பாட்டாளர்கள், பெண்கள் அமைப்புக்கள் இவர்களை கண்டுகொள்ள தவறிவிட்டன என்றே சொல்லத் தோன்றுகின்றது.ஊடறு தோழிகள் இவர்களை சந்தித்க்க வாய்ப்பு கிடைத்ததையிட்டு பெருமைகொள்கிறோம். ஊடறு சந்திப்பின் தொடக்கமே அங்கு தான் ஆரம்பித்துள்ளது போன்று இருந்தது. ஊடறு சந்திப்புக்கான ஒரு அங்கீகாரம் அப்பெண்களை சந்தித்தில் கிடைத்துள்ளதென்றே நான் நான் நம்புகிறேன். இவர்களுடனான சந்திப்பை ஏற்படுத்திக் கொடுத்த கல்பனாவுக்கு கோடி நன்றிகள்