இப்படியாக்கப்பட்ட என் இரவுகளுக்காய்
நான் எப்பொழுதும் பயப்பட்டதாயில்லை
அந்தப் பெரும் கொடும் இரவுகளில் இருள் சூழ்ந்து இருப்பதாய் தான் சொன்னார்கள்
ஆனாலும்
அந்த இருண்ட கடும் நிறத்துக்காய் நான் ஒருபோதும் பயப்பட்ட தாகவேயில்லை
நான் இருட்டில் பயப்படுவேன் என்பதற்காக
தாயத்துகளையும் மந்திர கயிறுகளையும் என் கழுத்தை சுற்றியும் கைகளிலும்
கலர் கலராய் கட்டியிருக்கின்றார்கள்
எந்த இருட்டடிப்புக்கும்
நான் பயப்பட்டதாய் அடையாளமில்லை
சுதந்திரமான உலக வெளிகளை
நான் தரிசிக்கும் பொழுதுகளில் லெல்லாம்
என் நெஞ்சு படபடப்பதாய்
என் சகபாடிகள் கற்பனை செய்தார்கள்
இரவையும் இருட்டடிப்பையும் கூட நான் உயிர்ப்புடன் தரிசிக்கின்றேன் என்பதனை
எந்த பாஷையில் கூறுவதாயினும் அவர்கள்
ஏற்றுக் கொள்ள தயங்குகின்றனர்
இந்த கால இடைவெளியில்
வாழ்வின் நிச்சயங்களையெல்லாம் தின்று தீர்த்து விட்டதான உணர்வெனக்கு
என்
சந்ததியினரின் கல்வி /கருத்து/ உணர்வு
சூனியமாய் போய்விடுமோ என்ற பயம்
மிக தூரத்திலே நின்று
இவ்வுலகை பார்க்க உருமாற்றப் படுவார்களோ?
உணர்வுகளை செல்லரிப்பது போன்ற நமைச்சல்
சுதந்திர காற்றை சுவாசித்தல்
இனி
சாத்தியமாகுமோ
பூமிக்கு மிக ஆழத்தில்
பெரும் பாறாங்கற்களுக்கு அடியில் நித்தியமாய் புதைக்கப்பட்ட என் ருத்ர பயத்தையல்லாம்
எளிய ஓநாய் வந்து தோண்டிக் கொண்டிருப்பது
எரிச்சலை உண்டாக்குகிறது
இப்போதெல்லாம் எனக்கு இருக்கும் பயமெல்லாம்
இருட்டும் இருட்டடிப்புக்குமல்ல
சூனியமாய் போய்விட்ட
எம் குழந்தைகளின் உலகம் எதிர்காலம்
கடனால் சூழப்பட்ட
என் தேசத்தின் கதையும் கவிதையும் பூமியின் மொத்த அழகையும் பூக்களில் ஒளித்திருக்கும்
என் தாய் மண்ணே
நீ எப்போது மீள்வாய் நான் பயமில்லாமல் கண்மூடிக்கொள்ள.