அன்பின் மறு உருவம் என்றாலே பெண் தானே?…..
இது அனுபவம் தந்த பாடம்.
பத்துத் திங்கள் தவமாய் தவம் கிடந்து
பத்தியம் பல காத்து பெற்றெடுத்த தன் மகவை,
பாலூட்டி சீராட்டி சிறு துரும்பும் அண்டாமல்
கண்ணின் கருமணியாய் காத்திடும்- அன்னையவள்
பேரன்பின் ஆதாரம்!
பொல்லாத துயரங்கள் நமை வந்து
சூழ்கின்ற பொழுதெல்லாம் – தாய்மடி போல்
தீர்வுகள் தருகின்ற உளச்சிகிச்சை நிலையம்
இந்த உலகினில் ஏதும் உண்டோ?
பேரன்பின் ஒரு வடிவம் தாய் என்றால் – மறு
உருவாய் விளங்குவது தாரம் அன்றோ?..
அன்பிலே தாயாய்…அறிவுரையில் தோழியாய்…
வாழ்வின் இறுதிப் பொழுது வரை- நிழலாய்த்
தொடர்ந்திருக்கும் உன்னத உறவு அது.
கொஞ்சியும்.. கெஞ்சியும்.. திட்டியும்..
இனிய மொழி பகன்றும் – தன்
இணையுடன் இரண்டறக் கலந்திடும்
இனிமையே பேரன்பு!
தாயாய்.. தாரமாய்.. தோழியாய்
காதலியாய்.. சோதரியாய்..மகளாய்..
பெண்களின் பேரன்பின் பரிமாணங்கள் ஏராளம்!
இருந்தும் என்னுள் ஒரு நெருடல்…….
இதிகாச புராண காலந்தொட்டு – இன்று வரை
அனைத்தையும் கட்டுடைத்துப் பார்த்த பின்பும்
பெண் என்றால் பேரன்பு என்றே கூறுகையில்
என்னுள் ஒரு விசனம்….
பேரன்பின் உள்ளே உள்ள
பெரு நெருப்பை யார் அறிவார்?
அன்பும் பணிவும் மட்டும் – எங்களின்
குணங்கள் அல்ல.
போலிப் புகழ்ச்சிக்கும் பசப்பு வார்த்தைக்கும்
மயங்கிக் கிடக்கும் சின்னச் சறுகுகள்
அல்ல நாங்கள்…..
உங்களைப் போலவே சராசரி உணர்வுகள்…..இயலுமைகள்
நிறைந்த சக மனுஷிகள்.
எங்களை நீங்கள் சிரசில் தூக்கி வைத்து
வாழ்த்தவும் வேண்டாம்….காலுக்கடியில் வைத்து
வார்த்தைகளால் வதம் செய்து தூற்றவும் வேண்டாம்.
பெண்கள் தானே என வாய் கோணிச் சிரிக்கும்
உங்கள் – நமட்டுச் சிரிப்பு
இனியேனும் ஒழியட்டும்!
வாழ்வின் ஆழத்தையம்… அர்த்தத்தையும்
புரிந்தும் புரிய வைத்தும் – கண்களாய்
வுpளங்கிடும் பெண்கள் இன்றி- இவ்
உலகினில் யாரும் ஏற்றம் கண்டிட முடிந்திடுமோ?
பெண்கள் பேரன்பு என்றால்…..
எங்களின் வாரிசுகள் – ஆண்கள்
நீங்கள் எல்லேரும்
பேரன்பின் சின்னங்களே!