ஊடறு பெண் நிலைச் சந்திப்பும் பெண்ணிய உரையாடலும்..
சக்தி அருளானந்தம்
ஊடறு பெண்கள் சந்திப்பு ஏலகிரியில் நடப்பதாக றஞ்சியின் அறிவிப்பை பார்த்ததும் எனக்குள்ஒருவித உற்சாகம் கலந்த பரபரப்பு.வழக்கமாக வெளிநாடுகளில் சிங்கப்பூர், மலேசியா என வெளிநாடுகளில் நடைபெறும். கடந்தமுறைகூட இலங்கையில்.எனவே இம்முறை தமிழகத்தில் அதுவும் நான்குமணி நேர பயணமென்பது கூடுதல் உற்சாகம். புதியமாதவியின் எண்ணுக்கு அழைத்தபோது அவர்என்னைத் தொடர்பு கொள்ள முயன்று முடியாது போனதை தெரிவித்தார்.மெசஞ்சர் பழுதானதில் பலரை அணுக முடியாது போனதை தெரிவித்தேன்.வெள்ளியன்றே வந்துவிடுங்கள்.நிகழ்ச்சி நிரல் முன்பே திட்டமிடப்பட்டுவிட்டது. இருந்தாலும்பத்து நிமிடங்கள் பெண்களும் ஓவியமும் எனும் தலைப்பில் பேசத்தயாராகிக் கொள்ளுங்கள்.ஆண் ஓவியர்கள் என்றால் நிறையபேர் நினைவுக்கு வருகிறார்கள்.பெண்கள் ஓவியத்தில் அவர்கள் பங்களிப்பு என யோசித்தபடி இணையத் தேடல் மற்றும் கவிஞர் பொன்.குமார்,ஓவியர் ஷாராஜ்,கவிஞர் கோ.லீலா ஆகியோருடன் ஓர் உரையாடல் நடத்த அது உதவியாக இருந்தது.கவிஞர் எழிலரசி பெண்ணிய உரையாடல்களில் பங்கேற்க விரும்புவார் என்பதால் மாதவியிடம் உடன் யாராவது வரலாமா எனக்கேட்டேன். ஒருவரைமட்டும் அழைத்துவரலாமென்றார் கவிஞர் எழிலரசியிடம் அலைபேசியில் சொன்னதும் அவரும் உற்சாகமாக ஒப்புக்கொண்டதுடன் குறுகிய கால அவகாசத்தில் தொடர்வண்டியில் சென்று திரும்பமுன்பதிவும் செய்தார்.நாமக்கல்லிருந்து எழில் வர 8.50க்கு சற்றுத் தாமதமாக ரயில் வந்தது. 11.30க்கு ஜோலார்பேட்டை.அங்கிருந்து திருப்பத்தூர்-ஏலகிரி.வேலூர் வெயில் பட்டையைக் கிளப்பியது.நிலம் காய்ந்து கிடந்தது. ஒருங்கிணைப்பாளர் சிநேகாவை அலைபேசியில் அழைக்க மாலைதான் அறைகள் பதிவு செய்யப்படுள்ளன.நான் ஒய்.எம்.சி.ஏ.கேம்ப் மேலாளரிடம் பேசுகிறேன். தற்காலிகமாக ஓர் அறை தரச்சொல்கிறேன்.
பைகளைவைத்துவிட்டு,சுற்றிப்பார்த்துவிட்டுவந்தால் சரியாக இருக்கும் என்றார்.பேருந்து நடத்துனரிடம் ஓய்.எம.சி.ஏ.கேம்ப் என்றதும் ரெண்டு மூணு இருக்கு.எந்த ஊர் என்றார்.அழைப்பிதழில் தாயலூர் எனப் போட்டிருந்த நினைவு.தாயலூர் என்றதும் தலையசைத்தார்.இடம் வந்ததும்சொல்லுங்கள் என்கையில் அருகிலிருந்த பெண்மணி அதுதான் கடைசி நிறுத்தம் என்றார்.14 வளைவுகள் கடையேழு வள்ளல்கள் பெயர்களும் கவிஞர்களின் பெயர்களும் பெண்களில் ஔவை ஒருத்திதான்கண்ணில் பட்டாள்.மலை சருகுகளால் மூடப்பட்டு காய்ந்து கிடந்தது. வெம்மை குறையவில்லை.வழிநெடுக குரங்குகள்.வாகனங்களைக் கண்டதும் எழுந்து கையை நீட்டுகிகின்றன.பயணிகள் தின்பண்டங்கள் கொடுத்து பழக்கியிருக்கிறார்கள்.பார்க்க கஷ்டமாக இருந்தது. ஒன்றரை மணிநேரப் பயணம்.ஓட்டுநரும் நடத்துநரும் உணவருந்த போனார்கள்.நாங்களிருவரும் சினேகாவின் பெயரைச் சொன்னதும் அறை ஒன்றைத் தந்தார்கள்.உணவு முன்னதாக சொன்னால் மட்டும் தானாம்.நல்லவேளை பேருந்து நின்றிருந்தது.வந்தவண்டியிலேயே திரும்பி இயற்கைப் பூங்கா அருகே இறங்கிவிட்டோம். உணவருந்திவிட்டு பூங்காவில் நுழைந்தோம். பூங்காவும் காய்ந்துதான் கிடந்தது.கூட்டத்திற்கு குறைவில்லை.குடும்பமாக,கல்லூரி மாணவ,மாணவிகள், காதலர்களென.குரங்குகளுக்கும் குறைவில்லை.குழந்தைகள் போல ஊஞ்சலாடிக் கொண்டிருந்தன!இரண்டு மணி நேரம் சுற்றிவிட்டு ஆட்டோவில் அறைக்குத் திரும்பி சற்றுநேரம் உறங்குகையில் தேநீருக்கான அழைப்பு..சுடச்சுட அருந்துவது ஒருசுகம்.கேம்ப்பின் உள்ளேயே சிறுவர் பூங்கா.குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தனர்.
பெரியவர்கள் அமர பெரு மரங்களையே சோபாவைப்போல குடைந்து இருக்கையாக்கியிருந்தனர். விதவிதமான பூச்செடிகள்.இருள் கவிய கவிய ஊடறு தோழிகள் ஒவ்வொருவராக.ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்துகொண்டபடி.நீலா,லதா,விஜி,சல்மா,மாதவி போல சிலர் முன்பே அறிமுகமானவர்கள்.பலரை அப்போதுதான் பார்க்கிறோம்.இரவு உணவுக்குப்பின் நீண்டகாலம் பழகியதுபோல நெருக்கமாகிவிட்டார்கள்.
யோகி,மதி,பாரதி,ரேவதி,ரம்யா,ஹேமா,கங்கா போன்ற இளம்தலைமுறையினர், றஞ்சி,மாதவி,ரஜனி,கல்பனா,நீலா,லதா,கீதா,சரோஜினி,சிவகாமி,அரங்க மல்லிகா,ஷப்னா, தர்சிகா இலங்கை, ரேவதி, கனகா மியன்மார், ஷெரின்..ஷெரின் இருக்குமிடமெல்லாம் கலகலப்பு.அவர் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்குபவர்.அவருடைய அனுபவம் கேட்கவே திகிலூட்டுவதாக இருந்தது. இளையதலைமுறை எத்தகைய தெருக்கடியான சூழலில் இருக்கிறார்கள் என்பதை உணர்த்தியது.இவர்கள் ஓவ்வொருவரும் பெண்ணியவாதிகள், பெண்ணிய செயற்பாட்டாளர்கள், கலைஞர்கள்,மனித உரிமை ஆர்வலர்கள்,இயற்கை வேளாண்மையில் ஆர்வம் கொண்டவர்கள், எழுத்தாளர்கள்,கவிஞர்கள்,வழக்கறிஞர்கள், பத்திரிக்கையாளர் ஊடகவியலாளர்கள்,பஞ்சாயத்து தலைவர்கள்,தொழிற்சங்கவாதிகள்..
ஓவ்வொருக்குள்ளும் எவ்வளவுஅனுபவங்கள்,செய்திகள்..உலகின்பல மூலைகளிருந்து பெண் என்றுதிரண்டவர்கள்.பகலின் வெம்மையைக் கேலி செய்வதுபோல இரவின் குளிர் நடுக்கிவிட்டது.அதிகாலை நடைபயிற்சி..நெடிதுயர்ந்த மரங்கள்,இதமான குளிர்,மெல்லியபனி,அழகிய மலர்கள் என மலைப்பிரதேசங்களில் தங்கும்வாய்ப்பு ஏற்பட்டால் அதிகாலை நடையைத் தவற விடுவதில்லை.காலை உணவுக்கூடத்தில் “நாம சமைக்காம,நமக்காக யாரோ சமைச்சு அத சாப்பிடறது எவ்வளவுநல்லா இருக்கு” அசரீரி குரலொன்று ஒலிக்க அதை ஆமோதித்தன பல குரல்கள்.11,12இரண்டு நாள்களும் 11அமர்வுகள்,கனமான தலைப்புகள்,பேசிய ஒவ்வொருவரும் மிகவும் சிரத்தையாக தங்கள் உரையை சுருக்கமாகவும், செறிவாகவும் வழங்கினார்கள்.நீதி எங்கே என்றநாடகத்தை ஜானகி,ஸ்ரீதேவி இருவரும் பார்ப்பவர்கள் மனதை உலுக்கும்படி வழங்கினார்கள்.கனமான தலைப்புகளிடையே கங்கா சூழலை லகுவாக்க குழு விளையாட்டு ஒன்றை நடத்த அத்தனை உற்சாகமாக பெண்கள் களமிறங்கினர்.தொடர் முயற்சி,கலந்துரையாடல், வேலைப்பகிர்வு, இணைந்து பணியாற்றுவதின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக அந்த விளையாட்டு இருந்தது. இரவு கேம்ப் பயர் ஆடலும் பாடலும் வயது தொலைந்தது.காலை மலையேற்றம்.நான் பாதியிலேயேநின்றுவிட்டேன்.மதிய உணவுடன்,மனம் கொள்ளா நிறைவுடன் அவரவர் திரும்பும் முனைப்புடன் விடைபெற்றோம்.
ஞாயிறு அமர்வுகள் நிறைவுபெற்றதும் ஏலகிரி ஊராட்சி மன்றத் தலைவர் ராஜஸ்ரீஅனைவருக்கும் ரோஜா பூங் கொத்துகளைத் தந்து வழியனுப்பினார்.நம்மாழ்வார் தூண்டலில் வேலையை விட்டுவிட்டு இயற்கைவேளாண்மை செய்யும் சரோஜினிகரூர் காரர்.அவருடைய காரில் என்னை சேலத்திலும்,எழிலை நாமக்கல்லிலும் விடுவதாகச் சொல்லி அப்படியே செய்தார்.அவருக்கு நன்றி.அத்துடன் அரங்கில் அவ்வப்போது தின்பண்டங்கள்,மூலிகைத்தேநீர்போன்றவையும் வழங்கினார்.இடையே எழிலுக்கு கால்பிசகியதும்,வழியில் ரஜனிக்குகாய்ச்சலும் வருத்தம் தந்தவை.ஏலகிரிப் பயணம் சோர்வை அகற்றி செயல்படத் தூண்டுவதாகஅமைந்தது.அனைவருக்கும் வாழ்த்துகள்.அமர்வுகளில் பேசப்பட்டவை குறித்த சிறு குறிப்புகள் அடுத்த பதிவில்.பயணிப்போம்.
பெண்நிலை சந்திப்பும்,பெண்ணிய உரையாடலும் எனும் பொருண்மையில் ஊடறு பெண்கள் சந்திப்பு 2023 மார்ச் 11,12ஆகிய தேதிகளில் தமிழ்நாடு,திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரியில் நடைபெற்றது.
இந்த இருநாள் மாநாட்டில் சுவிஸ்,இலங்கை,மலேசியா,மியான்மர்,சிங்கப்பூர் உள்ளிட்ட அயல்நாடுகளிலிருந்தும்,இந்தியாவிலிருந்து கர்நாடகா,மும்பை,தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல்வேறு துறைகளில் பணியாற்றும் பெண் ஆளுமைகள் பங்குபெற்றனர்.
11 அமர்வுகள்,பல்வேறு தலைப்புகளில் பௌத்தமும் பெண்விடுதலையும்,பெண் எழுத்து பின்நவீனத்துவம்,காமிராக் கண்கள்-பெண்ணுலகம்,மலேசிய வாழ்வும் உழைக்கும் பெண்களும்,இளையதலைமுறைசெயல்பாடுகளும் ஊடறுவின் பங்களிப்பும்,பெண்களை ஆவணப்படுத்துதல்,விராலிமலைகள ஆய்வுகள்,ஆண் பெண் பாலியல். உறவு பிரச்சினைகள், சூழலியல் பாதிப்பும் பெண்களும்,கல்வித்திட்டங்களும் குழந்தைகளும்,பெண்களின் முன்னேற்றம்,தேர்வுகள் தற்கொலைகள்,தொழிற்சங்கவாதியாக பெண்கள்,தொழிற்சங்கமும்ஐ.டி துறையும்,செய்திகளில் பெண்கள் எங்கே?,சட்டமும் பெண்களும்,அதிகாரப்பகிர்வும் பெண்களும்,நிலம் பெண் அதிகாரமையம்,விவசாயமும் பெண்களும்,பெண்களும் ஓவியமும் ஆகியத் தலைப்புகளில் தங்கள் உரையை நிகழ்த்தினர்.
இந்த உரைகளிலிருந்து சிறு குறிப்புகள்.
“பெண்கள் ஒன்றிணைந்து அவர்கள் தங்கள் வாழ்க்கையில் சந்தித்த சவால்கள்,போராட்டங்கள்ஆகியவற்றை சார்ந்த ஆரோக்கியமான விவாதங்களையும், கலந்துரையாடல்களையும் நடத்த வாய்ப்பளிக்கிறது. ஊடறு பெண்கள் சந்திப்புகள்”றஞ்சி”உதிரியாக இருக்கும் பெண்களை ஒன்று சேர்ப்பது பெரிய விஷயம்.பெண்கள் தனித்தனியாக இயங்குவதைக்காட்டிலும் இணைந்து செயல்படுவது நல்லது.தமிழ்நாட்டில் அத்தகைய இயக்கம் இல்லை.முரண்பாடுகளை பேசாத,உரையாடாத சமூகம் வளர்ச்சியடையாது.சொந்த சமூகத்தின் பலவீனங்களை எம்மைபோன்ற சிறுபான்மையினர் வைப்பது மாற்றத்தினைத் தேடி தீர்வுகள் நோக்கிப் பயணிக்கும் பெண்களை இணைக்கும் கண்ணியாக ஊடறு உள்ளது”-சல்மா.”உயிர்களில் ஆண் பெண் மட்டுமல்ல,145 பிரிவுகள் உள்ளனர்.
உடல் மட்டும் வாழ்க்கை இல்லை.அது வாழ்வின் ஒருபாகம்தான்.பெண் உடல் மட்டும் இல்லை.அன்பு மட்டும் போதாது.பரஸ்பலம் மரியாதையும்வேண்டும்”.-லதா” உலகம் முழுக்க பெண்களின் உழைப்பு ஒன்றுபோலவே உள்ளது.மலேசியாவில் பெண்களுக்கு சொத்துரிமை கிடையாது.சிங்கிள்தாய் சொத்து வாங்கமுடியாது.பேசப்படாத சமூகமாக உள்ளனர்.”-யோகி”நிலம் அதிகாரத்தை நோக்கி பயணிக்கும்போது பெண் ஏன் விலக்கப்படுகிறாள்.
அதிகாரத்தில்பெண்ணுக்கு பங்கு வேண்டும்.காணி நிலம் பெண்ணுக்கு வேண்டும்.வளமையான நான்குநிலங்களுக்கு ஆண் கடவுள்கள்,பாலை நிலத்திற்கு பெண்ணை கடவுளாக்கியுள்ளனர்”-புதியமாதவி”ஆவணப்படுத்துதல்..ஏன் ஆவணப்படுத்த வேண்டும் .மனிதநாகரிகத்தைப்பற்றிய மிக முக்கியமான இரண்டு புத்தகங்களில் பெண்ணைப்பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை பெண்ணைப்பற்றிய சிறுசிறு விஷயங்களைக்கூட ஆவணப்படுத்தவேண்டும்.ஓர் ஆணுக்கான சுமையைவிட பெண்ணுக்கான சுமை அதிகம்.அதையும் கடந்துதான் பெண் தன் படைப்புஐளைத் தருகிறாள்.வாய்மொழி வரலாறுகளை எழுத்தாக பதிவு செய்யவேண்டும்”.தர்ஷிகா ரமணாகரன்” நிலத்தை சார்ந்து வாழ்கின்றவை விலங்குகள்,தாவரங்கள், மனிதர்கள்.மனதர்கள்தாம் நிலத்தை உரிமை கொண்டாடுகிறார்கள்.நிலம் ஏன் சிலரிடம் இருக்கிறது/இல்லை.யார்நிலத்தில் வேலை செய்கிறார்களோ அவர்களுக்கு நிலத்தில் உரிமை இல்லை.சொத்து உள்ள பெண்கள்பெண்கள் பக்கம் இல்லை. கணவர்பக்கமே இருப்பார்கள்.நிலத்தில் 33%பெண்களின் பெயரால் பட்டா போட்டுத்தர வேண்டும்.சுய உதவிக்குழுக்களுக்கு குத்தகையாகத் தரலாம்.”-சிவகாமி”50%சதம் பெண்கள் இருக்கும் நாட்டில் சட்டமுன்முடிவு செய்யுமிடத்தி்ல் பெண்கள் இல்லை.குழந்தைகள், மகளிர்நலத்துறையை பெண்களுக்கு ஒதுக்குவது மாறி,சட்ட அமைச்சராக,சட்டங்கள் செய்யுமிடத்தில் பெண்கள் இருக்கவேண்டும்.
பாரதிசட்டம் படிக்க சொல்லவில்லை.சட்டம் செய்ய சொன்னான்.பெண்களுக்கான சட்டங்கள் நிறைய உள்ளன என்றால் பெண்களுக்கான பிரச்சினைகளும் நிறைய உள்ளன என்று பொருள்”-ரஜனி”சமூகம் பெண்ணுடலை சொத்தாக பாவிக்கிறது.உலகின் எந்த மூலையானாலும் உடல்தான் சமூகமாக இருக்கிறது.எந்த சமூக நடைமுறையானாலும் பெண் உடலைச் சார்ந்தே இருக்கிறது. பெண்ணுடல் சுரண்டப்படுகிறது.தேவதாசிகள் பாட்டு,நடனம்,பலமொழி அறிவு கொண்டவர்கள்.பரதம் என்று தற்போது அழைக்கப்படும் சதிராட்டத்தில் தேர்ச்சி பெக்றவர்கள்.விராலிமலைப் பகுதியில் பொதுச்சொத்தாக கருதப்பட்ட இவர்கள் தங்கள் தொழிலைவிட்டு பல்வேறு கஷ்டங்களுக்கிடையிலும் மன உறுதியுடன் பிற தொழில்களில் பிழைப்பு நடத்துகின்றனர்.”-நீலாநவீனத்துவம் அனைத்து துறைகளிலும் அதன் தாக்கம் இருக்கிறது.மையத்தை நோக்கிசெல்லுதல் நிறுவுதலை செய்கிறபோது,பின்நவீனத்துவம் அதை தகர்க்கிறது.இஸங்களை வைத்து எழுதமுடியாது.சமூகம் நம்மை எதைநோக்கித் தள்ளுகிறதோ அதை எழுதுகிறோம்.ஓர் ஆண் பெண்ணை எப்படி வேண்டுமானால் எழுதுவதை ஏற்கும் சமூகம் பெண் தன்னுடலை,வலியை எழுதுவதைஏற்க மறுக்கிறது.”-
ச.விஜயலட்சுமி.”வேலைக்குப்போகும் பெண்கள்கூட தனக்காக ஏன் யோசிப்பதில்லை.உன்னை நீகவனிப்பது அதுவே தவம்.பெளத்தம் தனி மனித விடுதலையை, பகுத்தறிவைப் பேசுகிறது. புத்தர் சொன்னார் என்பதற்காக அப்படியே எதையும் ஏற்க வேண்டியதில்லை. அறிவில் ஆண் பெண் பேதமில்லை. சுயவிடுதலையை, தனித்துவத்தைப் பெண்ணியம் பேசுகிறது என்றால் பெளத்தத்தின் கருத்தியலும் அதுவே. அதனால்தான் மாமேதை அம்பேத்கர் பெளத்தம் ஏற்றார். பெண்ணின் தற்சார்பு பெளத்தத்தின் நீட்சியே. மணிமேகலையும் அதையே நினைவுபடுத்துகிறது.வேட்டைப்பொருளை அனைவருக்கும் சமமாக பகிர்ந்தளித்தவள் பெண்.ஆபுத்திரனால் பராமரிக்க முடியவில்லை. மணிமேகலை செய்தாள்”-அரங்கமல்லிகா.”அரசுப்பள்ளிகளில்தான் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களின் குழந்தைகள், பெற்றோர் இல்லாக் குழந்தைகள்,மனவளர்ச்சிக் குறைவான குழந்தைகள் பயில்கிறார்கள்.கொரோனா காலத்தில் நிறைய ஆண்குழந்தைகள் வேலைக்குச்சென்றுவிட்டனர்.
பெண்குழந்தைகளுக்கு திருமணம் செய்துவிட்டனர்.பிள்ளைகள் படிக்கும் மனநிலையில் இல்லை.அலைபேசிப் பயன்பாடு காரணமாக பத்துநிமிடங்களுக்குமேல் பாடங்களில் கவனம் செலுத்தமுடிவதில்லை.பாடச்சுமை அதிகம்.அரசு உளவியல் ஆலோசகரை நியமிக்க வேண்டும்.இன்றைய சூழலில் மாணவர்,ஆசிரியர்,பெற்றோர் மூன்று தரப்புக்கும் கவுன்சிலிங் தரவேண்டும்”-மு.கீதா”ஆண்டுக்கு 5000பேர் தற்கொலைசெய்துகொள்கிறார்கள்.புத்தகத்தை படிப்பதல்ல கல்வி சிந்திக்கவைக்கவேண்டும்.உணர்வுகளை கையாள சொல்லித்தரவேண்டும்.மனம்சார்ந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல் எதுவொன்றும் சரியாகாது.”ஷெரின் பஞ்சாயத்து ராஜ்யம் எனும் தலைப்பில் தோழர் கல்பனா உள்ளாட்சி முறையின் முக்கியத்துவம்,பஞ்சாயத்து தேர்தலில் வெற்றிபெறும் பெண்பிரதிநிதிகள் எதிர்கொள்ளும் சிக்கல்கள்,பொறுப்பிலிருக்கும் ஆண் பிரதிநிதிகள் எந்தப் பிரச்சினைக்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள்,
பெண் பிரதிநிதிகள் எதற்கு முன்னுரிமைகொடுக்கிறார்கள்,உள்ளாட்சித் தேர்தலுக்கு அதிகரித்து வரும் செலவினங்கள் என்பதாக இருந்ததுடன்,பொதுப்பிரிவில் போட்டியிட்டு வென்று சிறப்பாக மக்கள் பணியாற்றும் மூன்று பஞ்சாயத்து தலைவிகளையும் அறிமுகப்படுத்தினார் அதில் திருச்சி கிருஷ்ணசமுத்திரம் தலைவியான ரம்யா மிகவும் இளையவராக இருந்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.ஐ.டி.துறையில் தன்னுடைய தொழிற்சங்க பணிகளை பரிமளா பகிர்ந்து கொண்டார்.தோழர் மதி தன் கள அனுபவங்கள், போராட்டங்களை பதிவு செய்தார்.பத்திரிக்கையாளர் பாரதி வணிகநோக்குடன் ஊடகங்கள் எத்தகைய செய்திகளுக்கு முன்னுரிமை தருகின்றன என்பதைக் குறிப்பிட்டார்.சந்திரா திரைப்படம் தொடங்கியதிலிருந்துஅத்துறையில் பெண்களின் பங்களிப்பு குறித்து பேசினார்.சரோஜா இயற்கை வேளாண்மை குறித்து பேசியதுடன் மூலிகைத் தேநீர்,தின்பண்டங்களையும் அனைவருக்கும் வழங்கினார்.சிலர் உரைகளைத் தவற விட்டுவிட்டேன் விடுபட்டவர்கள் மன்னியுங்கள்.குறிப்புகள் இருந்தவரை பகிர்ந்துள்ளேன்.பங்கேற்ற,பகிர்ந்துகொண்ட அனைத்து தோழமைகளுக்கும்,வாய்ப்பளித்தபுதியமாதவி,றஞ்சி இருவருக்கும்நன்றி.
உலகமெங்கும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண் ஆளுமைகளை ஒன்று கூட்டி “ஊடறு” அமைப்பு ஏலகிரியில் பெண்கள் சந்திப்பை ஒழுங்கு செய்தது… கல்வியாளர்கள், களப்பணியில் ஈடுபடுபவர்கள், பஞ்சாயத்து தலைவிகள், பேராசிரியர்கள், அரசியல்வாதிகள், வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள், இயற்கை விவசாயத்தில் கரை கண்ட ஆளுமைகள் ஊடகவியலாளர்கள் என்று பல்வேறு ஆளுமைகள் தங்கள் துறைகள் குறித்து பகிர்ந்து கொண்டவைகள் அனைத்தும் சமூக மேம்பாட்டுக்கானவை.. வருடந்தோறும் இப்படியான அமர்வை சாத்தியப்படுத்தி மிக முக்கியமான சமூகப் பகிர்வை நடத்திக் கொண்டிருக்கும் ஊடறு அமைப்பைச் சேர்ந்த றஞ்சி, யோகி, புதிய மாதவி உள்ளிட்ட அனைத்து தோழிகளு க்கும் அன்பும் வாழ்த்துகளும்…இந்த பெண்கள் சந்திதிப்பில் நிறைய கற்றுக் கொள்ள முடிந்தது.. சமூகத்தில் பெண்களின் இருப்பையும், அனைத்து துறைகளிலும் சமூக முன்னேற்றத்திற்கான முன்னெடுப்பையும் தெரிந்து கொள்ள முடிந்தது.. ஊடறு பெண்கள் சந்திதிப்பில் நான் கலந்து கொண்டதில் மிக முக்கிய நிகழ்வாக கருதுகிறேன்.
கீதா
. சுவிட்சர்லாந்தில் இருந்து வெளிவரும் ஊடறு வின் (இணைய இதழ்) வருடாந்திர பெண்கள் சந்திப்பு. உலக அளவில் உள்ள பெண்கள் கலந்து கொண்டு உரையாடும் சந்திப்பு., சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, மலேசியா, சிங்கப்பூர், பர்மா, இலங்கை ஆகிய நாடுகளில் இருந்தும் இந்தியாவில் டெல்லி, மும்பை, கர்நாடகா,மற்றும் தமிழ் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பெண்கள் 11.3.23,12.3.23 ஆகிய இரு நாட்கள் திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரிக்கு முதல் நாள் இரவே சென்றோம்.
புதுக்கோட்டையில் இருந்து கவிஞர் நீலாவுடன் Neela R நானும் கலந்து கொண்டேன்.10 அமர்வுகளில் கருத்தரங்கம் நடைபெற்றது…
முதல் அமர்வில் கவிஞர் புதிய மாதவி, ஊடறு றஞ்சி, கவிஞர் சல்மா ஆகியோர் ஊடறு பற்றிய அறிமுக உரை நிகழ்த்தினார்கள் இரண்டாம் அமர்வில்பேராசிரியர் அரங்க மல்லிகா அவர்கள் பௌத்தமும் பெண் விடுதலையும், கவிஞர் ச. விஜயலெக்ஷ்மி பெண் எழுத்தும் பின் நவீனத்துவம் , இயக்குனர் சந்திரா தங்கராஜ் காமிராகண்கள் பெண்ணுலகம் ஆகிய தலைப்புகளில் சிறப்பான உரையாற்றினர்.மூன்றாம் அமர்வில் மலேஷியா யோகி மலேசிய வாழ்வும் உழைக்கும் பெண்களும், இலங்கை சப்னா இக்பால் இளைய தலைமுறை செயல்பாடும் ஊடறுவின் பங்களிப்பும், இலங்கை தர்சிகா ரமணாகரன் பெண்களை ஆவணப்படுத்தல் ஆகிய தலைப்புகளில் உரையாற்றினர்.இந்த அமர்வை கோலார் தங்க வயல் புவனேஸ்வரி ஒருங்கிணைத்தார்.
நான்காம் அமர்வை முனைவர் கல்பனா சமூகம் பெண்ணுடல் என்ற தலைப்பில் ஒருங்கிணைத்தார்.கவிஞர் நீலா விராலிமலை கள ஆய்வு, எழுத்தாளர் லதா Latha ஆண் பெண் பாலியல் உறவுகள் பிரச்சினைகள், மு.வி.நந்தினி சூழலியல் பாதிப்பும் பெண்களும் ஆகிய தலைப்புகளில் மிகச் சிறப்பாக உரையாற்றினர்.
ஐந்தாம் அமர்வு கல்வியும் கற்பித்தலும் கவிஞர் ச.விஜயலெட்சுமி ஒருங்கிணைத்தார்.இதில் கவிஞர் Devatha Tamil Geetha கல்வி திட்டங்களும் குழந்தைகளும் (இந்திய அளவில்), சிங்கப்பூர் கங்கா பெண்களின் முன்னேற்றம்,உளவியளாளர் ஷைரின் ஆஷா தேர்வுகள் தற்கொலைகள் ஆகிய தலைப்புகளில் ஆழமான உரையாற்றினர்.
ஆறாம் அமர்வு தொழில்துறையில் பெண்கள் கங்கா ஒருங்கிணைத்தார்.தோழர் மதி தொழிற்சங்கவாதியாக பெண்கள், தோழர் பரிமளா தொழிற்சங்கமும் ஐடி துறையும்,சரோஜா விவசாயமும் பெண்களும் ஆகிய தலைப்புகளில் சிறப்பாக உரையாற்றினர்.
ஏழாம் அமர்வு “பெண்கள் இன்று ” யோகி ஒருங்கிணைத்தார்.இதில் சக்தி சக்தி “பெண்களும் ஓவியக்கலையும்”, நிருபர் பாரதி ” செய்திகளில் பெண்கள் எங்கே?”, ஆகிய தலைப்புகளில் மிகச் சிறப்பாக உரையாற்றினர்.
எட்டாம் அமர்வில் கவிஞர் Puthiyamaadhavi Sankaran அதிகாரப் பகிர்வும் பெண்களும் “, சிவகாமி ஐஏஎஸ் “நிலம், பெண்,அதிகார மையம் ” ஆகிய தலைப்புகளில் ஆற்றிய ஆழமான உரை காலத்தின் தேவை.
ஒன்பதாம் அமர்வு “சட்டமும் பெண்களும் ” வழக்கறிஞர்கள் மணிமொழி,சினேகா, ஹேமாவதி ஆகியோர் சட்டங்கள் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.
பத்தாம் அமர்வு பஞ்சாயத்து முனைவர் கல்பனா ஒருங்கிணைப்பு செய்தார்.பஞ்சாயத்து தலைவியாக சிறப்பாக பணிபுரியும் ஏலகிரி ராஜஸிரி,கிருஷ்ண சமுத்திரம் ரம்யா,சீமுட்டூர் வேதநாயகி ஆகியோர் தங்களின் அரசியல் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
பெண்கள் இணைந்து சமூக பற்றிய உரையாடல்கள் நிகழ்த்துவார்கள் என்று ஊடறு பல ஆண்டுகளாக நிரூபித்து வருகிறது.
நிகழ்வில் பாரம்பரிய உணவுப்பொருட்களில் செய்த உணவுப்பொருட்களை முருங்கை கரிசலாங்கண்ணி லட்டு, கறிவேப்பிலை இலந்தை வடை, சப்போட்டா வத்தல் ,மூலிகை டீ , அத்திப்பழம் பாக்கெட் போன்ற ஆரோக்கியமான சிற்றுண்டி தந்து உபசரித்த தோழர் சரோஜா ,கார்த்திக் இருவரும் அன்பால் திணறவைத்தனர்.அவர்கள் தயாரிப்பு முறை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இரவு நடந்த கேம்ப் ஃபயர் நிகழ்வு குழந்தைமையை மீட்டெடுத்தது.இரண்டாம் நாள் காலை கரடி மலையில் டிரக்கிங் சென்றோம்… மறக்க முடியாத அனுபவம்.
இப்படி ஒரு ஆரோக்கியமான அமைப்பான ஊடறுவை அறிமுகம் செய்த கவிஞர் நா முத்துநிலவன் அவர்களுக்கு மிக்க நன்றி. தமிழ் நாட்டில் இப்படி ஒரு அமைப்பை துவங்கி மாவட்டந்தோறும் பெண்கள் இணைந்து செயல்பட வேண்டும் என்ற கனவு நிறைவேற வேண்டும்.
அரங்கமல்லிகா
ஊடறு பெண்கள் சந்திப்பு நிகழ்வில் கலந்து கொள்ள11.3.23 அன்று ஏலகிரி சென்றிருந்தேன்.மலையே அழகு. உச்சி வெய்யிலில் ஒரு க்ளிக்.அந்நிகழ்வில் பெளத்தமும் பெண் விடுதலையும் குறித்து எழுத்தாளர் புதியமாதவி பேச அழைத்திருந்தார். பேசினேன். குறைவாகப்பேசியதே சிறப்பு என்றார்கள். பெளத்தம் தனி மனித விடுதலையை, பகுத்தறிவைப் பேசுகிறது. புத்தர் சொன்னார் என்பதற்காக அப்படியே எதையும் ஏற்க வேண்டியதில்லை. அறிவில் ஆண் பெண் பேதமில்லை. சுயவிடுதலையை, தனித்துவத்தைப் பெண்ணியம் பேசுகிறது என்றால் பெளத்தத்தின் கருத்தியலும் அதுவே. அதனால்தான் மாமேதை அம்பேத்கர் பெள த்தம் ஏற்றார். பெண்ணின் தற்சார்பு பெளத்தத்தின் நீட்சியே. மணிமேகலையும் அதையே நினைவுபடுத்துகிறது. உணவிலும் அறிவிலும் பகிர்தல் எப்போதும் பெண் சார்ந்ததே.ஆதி தாய் தொன்மம் இரு விரலால் சோறு பதம் பார்க்கும் பெண் வேறு எதற்கும் பயன்படமாட்டாள் என்ற கருத்தை மாற்றிய தேரி கதையின் தொடர்ச்சியை மீட்டெடுப்பதே பெண் விடுதலையாகும் எனச்சொல்லி என் உரையை முடித்தேன். முதல் நாள் இரவிலிருந்து “நாளை அரங்கமல்லிகா வருவார்” என்ற பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருந்திருக்கிறேன். நிறைவாக இருந்தது உரை என்ற பார்வையாளர்களின் ஆர்வம் கலந்த விமரிசனத்தில் ஏலகிரி குளிர் மறைந்து போனது.
ஷெரின் ஆஷா
உலகமெங்கும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண் ஆளுமைகளை ஒன்று கூட்டி “ஊடறு” அமைப்பு ஏலகிரியில் இரண்டு நாள் (11/03 – 12/03/23) பெண்கள் சந்திப்பை ஒழுங்கு செய்தது… கல்வியாளர்கள், களப்பணியில் ஈடுபடுபவர்கள், பஞ்சாயத்து தலைவிகள், பேராசிரியர்கள், அரசியல்வாதிகள், வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள், இயற்கை விவசாயத்தில் கரை கண்ட ஆளுமைகள் ஊடகவியலாளர்கள் என்று பல்வேறு ஆளுமைகள் தங்கள் துறைகள் குறித்து பகிர்ந்து கொண்டவைகள் அனைத்தும் சமூக மேம்பாட்டுக்கானவை.. வருடந்தோறும் இப்படியான அமர்வை சாத்தியப்படுத்தி மிக முக்கியமான சமூகப் பகிர்வை நடத்திக் கொண்டிருக்கும் ஊடறு அமைப்பைச் சேர்ந்த றஞ்சி, யோகி, புதிய மாதவி, கல்பனா உள்ளிட்ட அனைத்து தோழிகளு க்கும் அன்பும் வாழ்த்துகளும்…இந்த பெண்கள் சந்திதிப்பில் நிறைய கற்றுக் கொள்ள முடிந்தது.. சமூகத்தில் பெண்களின் இருப்பையும், அனைத்து துறைகளிலும் சமூக முன்னேற்றத்திற்கான முன்னெடுப்பையும் தெரிந்து கொள்ள முடிந்தது.. ஊடறு பெண்கள் சந்திப்பில் நான் கலந்து கொண்டதில் மிக முக்கிய நிகழ்வாக கருதுகிறேன்.
மு.வி.நந்தினி
ஒருவரை ஒருவருக்குத் தெரியாது, தெரிந்திருந்தாலும் நெருங்கியதில்லை. ஆனபோதும் அத்தனை பேரும், நெருக்கமானவர்கள் போன்று இரண்டு நாட்களும் பழகினார்கள். ஒருவரிடம்கூட எதிர்மறை உணர்வை பெறவில்லை. என்ன பேசினோம், விவாதித்தோம், சண்டையிட்டோம் என்பது குறித்து தனிப்பதிவாக எழுதுகிறேன். இந்த அருமையான சந்திப்புக்கு அழைப்பு விடுத்த தோழர் RanjaniPathmanathan என்றென்றும் அன்பு. ஊடறு மென்மேலும் சிறப்புடன் பெண்களின் கூட்டுக்குரலை ஒலிக்க வாழ்த்துகிறேன்.
ஸ்ரீதேவி
Where is Justice நாடகம் 10 வது தடவையாக ஊடறு சந்திப்பின் மேடையில் அரங்கேறியது.(ஏலகிரி )ஏலகிரியில் ஊடறு பெண் ஆளுமைகளை சந்தித்ததில் பெறும் மகிழ்ச்சியும் அன்பும்…லண்டாய் கவிதையிலிருந்து Where is justice நாடகம் 10வதாக மேடையில் நடித்ததில் பெறும் மகிழ்ச்சியும் அன்பும், அதற்கு ஏற்படுத்தி கொடுத்தமைக்கு அன்பும்,நன்றியும்
மணிமொழி
அன்பிற்கினிய ரஞ்சி, மணிமொழியின் மடல்… தொலைதூரத்தில் இருந்து வந்த நீங்கள் என் மனதுக்கு மிகவும் நெருக்கமாக வந்து விட்டீர்கள்… ஏலகிரி மலையில் மார்ச் 10, 11 தேதிகளில் நீங்கள் ஊடருக்காக நிகழ்த்திய பெண்நிலை சந்திப்பு! பெண்ணிய உரையாடலும்! என்ற கருத்தரங்கம் மிகவும் சிறப்பாக இருந்தது, என்ற ஒற்றை வரியில் நான் என் கருத்தை சொல்லி விட முடியாது..இரண்டு நாட்கள்… 10 அமர்வுகள்… 30க்கும் மேற்பட்ட பெண் ஆளுமைகள்… சற்றும் சளைக்காத கருத்தாழமிக்க உரைகள்… ஆரோக்கியமான விவாதங்கள் உரையாற்றியவர்களுக்கு, தாங்கள் அன்புடன் பரிசளித்த புத்தகங்கள்… இடையிடையே நீங்கள் உபசரித்து அளித்த இனிப்புகள்…. மலேசியா யோகியின் கலகலப்பான பங்களிப்பு… கல்லூரியில் உயர்கல்வி படித்தவர்களையும், வாழ்க்கையில் அனுபவக் கல்வி படித்தவர்களையும், ஒன்றிணைத்த பாங்கு… இதற்கு பின்னால் உங்கள் அனைவரினதும் பல மாத உழைப்பு தெரிந்தது…என எதைச் சொல்ல, எதை விட… மீண்டும் சந்திக்க விருப்பம்… மிக்க மகிழ்ச்சியுடனும்… நெகிழ்ச்சியுடனும்…
சந்திரா தங்கராஜ்
உலகமெங்கும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண் ஆளுமைகளை ஒன்று கூட்டி “ஊடறு” அமைப்பு ஏலகிரியில் பெண்கள் சந்திப்பை ஒழுங்கு செய்தது… கல்வியாளர்கள், களப்பணியில் ஈடுபடுபவர்கள், பஞ்சாயத்து தலைவிகள், பேராசிரியர்கள், அரசியல்வாதிகள், வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள், இயற்கை விவசாயத்தில் கரை கண்ட ஆளுமைகள் ஊடகவியலாளர்கள் என்று பல்வேறு ஆளுமைகள் தங்கள் துறைகள் குறித்து பகிர்ந்து கொண்டவைகள் அனைத்தும் சமூக மேம்பாட்டுக்கானவை.. வருடந்தோறும் இப்படியான அமர்வை சாத்தியப்படுத்தி மிக முக்கியமான சமூகப் பகிர்வை நடத்திக் கொண்டிருக்கும் ஊடறு அமைப்பைச் சேர்ந்த றஞ்சி, யோகி, புதிய மாதவி உள்ளிட்ட அனைத்து தோழிகளு க்கும் அன்பும் வாழ்த்துகளும்…இந்த பெண்கள் சந்திதிப்பில் நிறைய கற்றுக் கொள்ள முடிந்தது.. சமூகத்தில் பெண்களின் இருப்பையும், அனைத்து துறைகளிலும் சமூக முன்னேற்றத்திற்கான முன்னெடுப்பையும் தெரிந்து கொள்ள முடிந்தது.. ஊடறு பெண்கள் சந்திப்பை நான் கலந்து கொண்டதில் மிக முக்கிய நிகழ்வாக கருதுகிறேன்.
தர்சிகா ரமணாகரன்
ஊடறு பெண்நிலைச்சந்திப்பும் பெண்ணிய உரையாடலும் ஊடறு சந்திப்பிற்காக முதன் முதலில் இலங்கையில் இருந்து சென்னை(இந்தியா) ஊடாக ஏலகிரி செல்கின்றேன். ரஞ்சி அக்கா கொடுத்த நம்பிக்கையில் என்றுமே கண்டிராத முகங்கள். அறிமுகமில்லாத பெண்களை சந்திப்பதற்காக அங்கு சென்ற எனக்கு எல்லோரும் பழக்கமானவர்கள் .. பல வருடங்கள் பழகியவர்கள்இ மிக நெருங்கியவர்கள் போன்றே நடந்துகொண்டார்கள்.ஊடறுவின் மிக சிறப்பானதொரு மகுட வாசகம் “அதிகாரவெளியை ஊடறுத்து” இது யாரும் சொல்லாமலே அங்கு செயற்பாடுகளில் தெட்டதெளிவாக உணர்த்தப்பட்டது. நான் வயதில் முத்தவள், படிப்பில் பெரியவள், பணமுடையவள், பட்டம், பதவி எதுவுமே அங்கு துளியேனும் வெளிப்படவேயில்லை. சகோதரித்துவம். நட்பு மட்டுமே அங்கு ஆட்சி செய்தது. எனக்கு இது ஒர் ஆச்சரியமே. சந்திப்பு நிகழ்வில் 10 அமர்வுகள் எல்லோருக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது. ஓவ்வொரு அமர்வும் மிக மிக ஆழமான கருத்துக்கள், செயற்பாடுகனள் வெளிப்படுத்தல்கள். சிந்தனையை தட்டிச்சென்ற களஞ்கள் என பல புதிய நட்புக்களை ஏற்படுத்திய சந்தர்ப்பம் வாழ்வில் ஏதோ ஒரு ஏற்றம் கண்டதான உணர்வைத் தந்தது. இவ் வாய்ப்பபை ஏற்படுத்தி தந்த ரஞ்சி அக்காவிற்கும் ஊடறு செயற்குழுவினருக்கும் என்றும் எனது அன்பும்.நன்றிகளும்
கனகா
ஊடறுவின் சந்திப்பில் மியன்மார் (பர்மா) நாட்டிலிருந்து கலந்துகொள்ள வாய்ப்புக் கொடுத்த றஞ்சிமாவுக்கும் மற்றும் அனைவருக்கும் முதற்கண் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன். இரண்டு நாள் கலந்துரையாடலுக்குப் பிறகு எனக்கு மனத்தைரியமும்இ தெளிவும் மிகுதியானது. ஊடறுவின் அனைத்து பெண்களின் உரையாடலும் என்னைத் தெளிவான முடிவுயெடுக்கவும்இ என்னால் அனைத்தையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையையும் தந்துள்ளது இவ் “ஊடறு” சந்திப்பு….