வேலை உலகில் பெண்களும் அவர்கள் எதிர்நோக்கும் சவால்களும் – சந்திரலேகா கிங்ஸ்லி

மார்ச் 8 சர்வதேச பெண்கள் தினத்திற்கான கட்டுரை.

பிரபஞ்ச இயக்கத்தில் ஆணும் பெண்ணும் சமபங்கு கொண்டவர்களாகவும் முக்கிய பாத்திரங்களாகவும் அவசியமான இயங்கு சக்திகளாகவும் சமபலம் கொண்ட உந்து சக்திகளாகவும் காணப்படுவது யாராலும் மறுக்க முடியாது உண்மையாகும். இருந்தாலும் பழங்காலம் தொட்டு இன்றுவரை பெண்கள்  தாழ்வாக கருதப்பட்ட இலக்கிய வரலாற்று பதிவுகளும் சமூகவியல் வரலாற்று பதிவுகளும் ஏராளமாகும் ஆனாலும் எவ்வளவுதான் மறுத்து பேசினாலும் எழுதினாலும் அவை தகர்க்கப்பட வேண்டியவைகள் என கருதப்பட்ட பொழுதும் அவை சுரத்து இல்லாமல் கணக்கில் எடுக்கப்படாமல் விடப்படுவது கூட சாதாரணமாக காணப்படுகின்றது.

இவற்றையெல்லாம் விஞ்சிக் கொண்டு அறிவியல் துறையில் அற்புதங்களுடன் இந்நூற்றாண்டில் பெண் முன்னேற்றங்கள் பல்வேறு கோணத்திலும் பல்வேறு துறைகளிலும் வியாபித்திருப்பது பாராட்டுக்குரியதும் வரவேற்கக் கூடியதும் உற்சாகப்படுத்த வேண்டியதும் ஆகும். காலம் காலமாய் கலாச்சாரம் பண்பாடு மதம் நாகரிகம் சமூக அரசியல் நிலைப்பாடுகள் என்பவைகள் பெண்ணை அடிமைப்படுத்தி ஆண்டு கொண்டிருக்கும் இவை பெண்ணை சிறை பறவையாக்கி வைத்திருப்பதும் சமூகவியல் பார்வையில் ஓர் உயிரரிற்கு இழைக்கப்பட்ட துரோகமும் ஒடுக்குதலும் ஆகும்.
எனவே இவற்றை உடைத்து வெளிவர வேண்டிய தேவைப்பாடு உயிரிக்கு உந்துதலாக வருவது உயிரியலினதும். உளவியலினதும் இயல்பான பாதையாகும். எனவே பெண் என்னும் உயிரி தன்னை முனைப்பாக காட்ட வேண்டிய தேவைப்பாட்டை உணர்வதும் அம்முனைப்பினை உலகுக்கு காட்டுவதும் கூட சமூக விடுதலையின் ஓர் அங்கமாகவே கருதப்படுகின்றது.இவ் அடிப்படையில் பெண்
முன்னேற்றம் பெண் சமத்துவம் பெண் விடுதலை பெண் ஒடுக்கு முறைக்கு எதிரான செயற்பாடுகள் பெண் அடிமை சூழலை ஏற்படுத்தும் சிந்தனைகள் தகர்க்கப்பட்டு அவை சமூகத்தில் உயர்ச்சிப் பெண்ணின் பங்களிப்பை உயர்த்த வேண்டிய நிலை காணப்படுகின்றது. இவ்வாறான தோற்றப் பாடுகள் ஆரம்ப கால முதல் இன்று வரை சமூகவியல் அடிப்படையில் தொடங்கி இன்று அறிவியல் சிந்தனைகளும் தொழில்நுட்ப உலகிலும் நீண்டு கொண்டிருக்கின்றது.

என்னதான் அறிவியல் சிந்தனைகள் உயர்ந்து இருந்தாலும் உலகம் எல்லா துறையிலும் வளர்ச்சி அடைந்து காணப்பட்டாலும் தொழில்நுட்பம் விஞ்ஞானம் விண்ணைத்தாண்டி விசாலித்து இருந்தாலும் உயிரினங்களின் உயர்ச்சி பற்றி பேசப்பட்டாலும் கூட ஆண் பெண் சமத்துவமின்மை என்பது எல்லா உயிரினங்களிலும் மிக முக்கியமாக மனித உயிரினத்தின் பெண்ணினம் பற்றிய நிலைப்பாடு தாழ்வாக சிந்திக்கப்பட்டதாயும் ;குறைவான பெருமானம் கொண்டதாயும் பலவீனம் உடையதுமான சிந்தனைகள் மாற்றப்படுவதாய் தெரிவதில்லை.இவ்வாறான நிலையில் எதார்த்த தடைகளை உடைத்து பெண்கள் என்று பல்வேறுபட்ட துறைகளிலும் தம்மை நிலை நிறுத்த உற்சாகம் எடுத்துக் கொண்டிருக்கின்றனர். அதற்குரிய கற்றலும் அவளுக்குள் அதிகமாய் உள்ளதாய் அடையாளம் காணப்பட்டிருக்கின்றது. பொதுவாகவே பெண்கள் தம்முடைய திறமைகளாலும், ஆற்றல்களாலும், உயர் பதவிகள் உயர் தொழில்கள், வணிகத் தொடர்பாடல்கள், தகவல் தொழில்நுட்பங்கள், விளையாட்டு துறைகள், அரசியல் பொது நிர்வாகம் சமூக முன்னெடுப்புகள் சமூக செயற்பாடுகள் சுதந்திர வீர தீர செயற்பாடுகள் என்பவற்றில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளும் பொழுது சமூக கலாச்சார பண்பாட்டு ரீதியான பல அமுக்கங்களையும் எதிர்ப்புகளையும் அவள் தகர்த்தெறிய வேண்டிய கட்டாயம் காணப்படுகின்றது.

இது அவர்களுக்கு சமூகத்தில் உள்ள ஆண்கள், குடும்ப அமைப்புகள், மத அமைப்புகள், சமூக கட்டமைப்புகள், மனித குல மேம்பாட்டு மையங்கள், கலாச்சார பண்பாட்டு இலக்கிய அமைப்புகள், அரசியலமைப்புகள், பொருளாதார பங்குகள் என்பன சுதந்திரமான பெண்களின், தன்னிச்சையான பெண்களின் செயற்பாடுகளுக்கு இடைஞ்சலாகவும் முன்னேற்ற தடைகளாகவும் காணப்படுகின்றன. ஒரு பெண்ணை யாவரும் பார்க்கின்ற பார்வைக்குள் பழமையான எல்லா சோலிகளையும் உள்ளடக்கி ,எல்லா பிற்போக்கு தன்மமைகளிலும் அவளை அடிமைப்படுத்த கூடிய அம்சங்களை தம் கண்களில் அப்பிக்கொண்டு பார்க்கும் பார்வையில் அர்த்தத்திலிருந்து சரியான விளக்கத்தினை பெற்றுக்கொள்ளும் பெரும் முயற்சிகள் ஏதோ ஒரு வகையில் தோல்வி அடைந்தவையாகவே காணப்படுகின்றன. ஆகவே மனித குல வரலாற்றில் தேவையான சரியான பங்களிப்பினை வழங்கக்கூடிய பெண் முன்னேற்றங்களை இனம் கண்டு அவற்றை ஏற்றுக்கொள்வதும் முன்னெடுப்பதும் மனிதகுல வளர்ச்சியை ஆதரிக்கும் அனைவரினதும் கடமையாகும். எனவே சமூக விடுதலை பற்றி சரியான சிந்தனைகளை உலகிற்கு எடுத்துக்காட்டும் ஒரு சிலராவது செயற்பாட்டிலும் வாழ்விலும் கடைபிடிக்க வேண்டிய தேவை அவசியமானது.

சமூகத்தில் பெண்ணின் விடுதலை சமூக விடுதலைக்கு சரிசமமாக உதவக்கூடியதும் சமூக விடுதலையை நிலை பெறச் செய்வதாகவும் காணப்படுகின்றது பெண் விடுதலைப் பற்றிய சிந்தனைகளை பேசாது சமூக விடுதலை அர்த்தமற்றதாகவே காணப்படும்.
உயர் பதவிகள் உயர் தொழில் மற்றும் தொழில்நுட்ப பொருளாதார அரசியல் வாழ்வியல் தம்மை ஈடுபடுத்திக் கொள்கின்ற பெண்களின் பெருமானத்தையும், குடும்பப் பாங்கான கோயிலுக்கு போய் அக்கடா என்றிருக்கின்ற பெண்களின் பாவப்பட்ட பெருமானத்தை ஒப்பிட்டுப் பார்த்தே சமூக அமைப்பு முறையில் மாற்றம் கொண்டு வருதல் அவசியம் ஆகும். பெண்களின் உடைகள், ஆபரணங்கள், அணிகலன்கள், குணங்கள் ,இயல்புகள் தொடர்பான சரியான தெளிவான விளக்கம் சமூகத்தில் எடுத்துரைக்கப்படுவது கூட பெண் சார்ந்த பெருமானத்தை சரியாக எடுத்துக்காட்ட உதவுவனவாக காணப்படும்.

பெண் ஒழுக்கம் அளவீடுகள் உள உடல் சார்ந்த நிலையில் இருந்து தொடர்பாடல், தகவல் பரிமாற்றம், உழைப்பு அவளது இயலுக்கம் ஆண் பெண் கூட்டுழைப்பு, குடும்ப அமைப்பு முறை, இயந்திரம் பயன்பாடு என்பவற்றில் எல்லாம் விடுதலை எவ்வாறு தங்கி உள்ளது என்பதன் தெளிவை சமூகத்தில் ஊடகங்களில் வரையறுத்துக் காட்டப்படுதல் அவசியம் ஆகும். காலம் காலமாக பெண்களுக்கும் பெரும் பிரச்சனை ஒழுக்கம் சார்ந்த கட்டுமானத்தின் வரையறைகள் தான் இது சார்ந்த விளக்கம் சமூகத்தில் அழுத்தப்படுத்தப்பட்டு அர்த்தப்படுத்தப்பட வேண்டும். பெரும்பாலும் பெண்கள் உயர் பதவிகளுக்கு வரும் பொழுது அவர்களுக்கு எதிராக பேசப்படும் சமூகம் சார்ந்த பெருமானத்தின் மதிப்பீடு முறையாகவும் சரியாகவும் விளங்கிக் கொள்ளவும் அவற்றை எதிர்த்து நிலை நிற்கவும் வேண்டிய சவால் மிகுந்த ஆளுமையை அவள் தனக்குள் கட்டமைத்துக் கொள்வதும் மிக அவசியமானதாகும்.

ஒரு பெண் தன்னை உருவாக்கிக் கொள்ளும் விதத்தில் தன் சார்ந்தவர்களையும் உருவாக்கும் செயற்பாட்டிலுமே சமூகத்தின் பெண்களின் நிலைப்பாட்டை எம்மால் வழி நடத்த முடிகின்றது. அவற்றின் தெளிவான அறிவு, ஆற்றல், முன்னெடுப்புகள், அறிவியல் சிந்தனைகள், தோற்றப்பாடுகள் என்பவற்றை அச்சமின்றி கூறும் தைரிய மனப்பாங்கையும் வளர்த்துக் கொள்வது மிகவும் அவசியமானதாகும்.
அரசியலும் சமூக செயற்பாட்டிலும் சூழ்நிலைக்கு பொருத்தமான முறையிலோ எதிரான முறையிலோ செயல்படும் பொழுது தனக்கு ஏற்படும் அனுபவங்கள் சரியாக ஒழுங்கமைத்துக் கொள்ளும் ஆற்றலும் அதற்காக எடுத்துக் கொள்ளும் உழைப்பும் முயற்சிகளும் சுழற்சி முறையுடையதாக மீள் பரிசோதனைக்கு உட்படுத்துவதாக மாற்றப்பட வேண்டும் .இவற்றின் ஊடாக வரலாற்று ரீதியான மனித குல விருத்தியின் செயற்பாடுகள் ஆழப்படுத்தப்படுதலும் வேண்டும். இவ்வாறான சூழ்நிலையிலேயே பெண் விடுதலை மனித குல விடுதலைக்கு வித்திடக்கூடிய வலிமையை பெறுவதாக அமைகின்றது.

பெண் விடுதலைப் பற்றி பேசும் பொழுது தெரிவுகள் மிகவும் காத்திரமான பங்களிப்பனை செய்வதாக காணப்படுகின்றது. பெண் தன் வாழ்வில் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் கலாச்சார ,பண்பாட்டு, அரசியல், சமூக கட்டமைப்புகள், பொருளாதார, குடும்ப அபிலாசைகள், என்பவற்றில் தெரிவுகளில் அறிவுப்பூர்வமான நிலைப்பாட்டை கொண்டிருப்பது அவசியமானதாகும். தெரிவில் தடுமாறுவதும், தெரிவை சரி படுத்திக் கொள்வதையும், தெரிவை மீள் பரிசோதனைக்கு உட்படுத்துவதையும், தெரிவை மாற்றும் தெரியவை தெளிவுபடுத்துவதும் ,தெரிவை நிராகரிப்பதும் தெரிவை அர்த்தமுள்ளதாக்குவதும் பெண்ணின் உள ஆற்றல் சார் விடயங்களாக காணப்படுகின்றது. பெண்ணின் சரியான தெரிவுகள் பெண் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவுகின்றதாகவும் அவர்களின் வளர்ச்சியில் பங்கெடுப்பதாகவும் காணப்படுகின்றது. ஒட்டுமொத்தமாக பெண் தனக்கு ஏற்படும் எல்லாவிதமான சவால்களையும் எதிர்த்து நிற்கக்கூடிய சமூக வல்லமையை வளர்த்துக் கொள்ள வேண்டியதும் அவற்றை சரியாக புரிந்து கொள்வதும் மற்றவர்களுக்கு புரிய வைப்பதும் அது சார்ந்த எழுத்துக்களையும் செயற்பாடுகளையும் முன்னெடுப்பது பெண் விடுதலைக்கு வித்திடுவதாகவும் எதிர்கால சமூக விடுதலைக்கு உரஞ் சேர்ப்பதாகவும் அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *