இலங்கையின் மலையக சமுகத்தின் முதல் பெண் இயக்குனர் பவனீதா லோகநாதன்

இலங்கை தமிழ் சினிமாவின் இந்த தலைமுறை இயக்குனர்களில் முக்கியமானவராக அடையாளம் காணப்படுபவர் பவனீதா லோகநாதன்.

இலங்கையின் மலையக சமுகத்தின் முதல் பெண் இயக்குனராகவும்  கருதப்படுமிவர், சினிமா துறையில் பரந்துபட்ட அறிவும் ஆளுமையும் கொண்டவர்.

திரைக்கதை எழுத்தாளர், இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் டப்பிங் கலைஞர் என்ற பன்முக கலைஞராக இயங்கி வரும் இவர், சர்வதேச சினிமாவில் கால்பதிக்க வேண்டும் என்ற‌ இலக்கோடு செயற்பட்டு அதை நிகழ்த்தியும் உள்ளார்.‌ ஏற்கனவே இலண்டனிலும் ஜெர்மனியிலும் சர்வதேச அங்கீகாரம் பெற்ற பவனீதா லோகநாதன், இந்த ஆண்டின் இரண்டே மாதங்களில் நான்கு சர்வதேச அங்கீகாரங்களை பெற்று சாதனை நிகழ்த்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

மிகவும் வறுமையான குடும்பத்தில் பிறந்த பவனீதாவுக்கு சிறுவயதிலிருந்தே திரைப்பட இயக்குனராக ஆக வேண்டும் என்ற கனவிருந்தது. அதுவும் உலக சினிமாகளை உருவாக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். வறுமையான சூழலில் அதுவும் ஒரு  பெண்ணாக இது சாத்தியமில்லை என்று அனைவரும் எதிர்த்துள்ளனர். பலர் அவமானப்படுத்தியுள்ளனர்.‌ ஆனால் எதிர்ப்புகளையும் கேலிபேச்சுகளையும் பொருட்படுத்தாது மனம் தளராமல் தனது கனவை அடைய தொடர்ந்து கடுமையாக உழைத்து முன்னேறியுள்ளார்.

பவனீதா லோகநாதன், சினிமாவை சுய கற்றல் வழியாக கற்றுத்தேர்ந்தவர்; திரைப்பட ஊடகவியலாளராக தனது பயணத்தை ஆரம்பித்தார்.‌ இவருடைய உலக சினிமாகள், திரைவிமர்சனம், ஹொலிவூட் சினிமா உருவாக்கம் பற்றிய பல்வேறுபட்ட திரைப்பட நிகழ்ச்சிகளின் மூலம் இவருடைய சினிமா அறிவையும் பலரும் அறிந்து கொள்ள முடிந்தது. அடுத்து குறும்படங்களை இயக்க ஆரம்பித்தார். இவருடைய முதல் குறும்படமே இவரை இலண்டனுக்கும் ஜெர்மனிக்கும் அழைத்து சென்று ஆச்சரியப்படுத்தியது.

2018 ஆம் ஆண்டு, இலண்டனில் வெளிநாட்டு இயக்குனர்களிடம் பயிற்சி பெற்ற இவர், உலகப்புகழ் பெற்ற ஹொலிவூட் நடிகை ஏஞ்சலினா ஜோலியை சந்தித்து நேருக்கு நேரான கலந்துரையாடல் நிகழ்வில் அவரோடு இலங்கை சினிமா பற்றி பேசியுள்ளார்.‌ உலகத்தின் மிகச்சிறந்த உயரிய சர்வதேச திரைப்பட விழாவான ஜெர்மனியின் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவின் Berlinale talents 2020 க்கு தெரிவு செய்யப்பட்டார். இலங்கையில் முதன் முதலாக தேர்வுசெய்யப்பட்ட பெண் இயக்குனர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வானது ஒட்டுமொத்த இலங்கை தமிழ் சமுகத்திற்கும் பெண் கலைஞர்களுக்கும் பெருமை தரும் செயலாகும்.

ஒரே குறும்படத்தில் சர்வதேச களங்களை எட்டிப்பிடித்த பவனீதாவை கொவிட் சூழ்நிலை மிகவும் பாதித்தது. கொவிட் காரணமாக சர்வதேச திரைப்பட விழாக்கள் நிறுத்தப்பட்டதால் இவருடைய திரைப் பயணமும் தடைப்பட்டது. அமெரிக்காவின் மிக முக்கியமான திரைப்பட அமைப்பின் ஒரு சர்வதேச கற்கை வாய்ப்பை online மூலமாக செய்யும் நிலை உருவானது. இதுதவிர பல குறிப்பிடத்தக்க Online நிகழ்வுகளிலும் கலந்து கொண்டார். ஆனாலும் பல முக்கியமான பயணங்கள் கைவிட்டுப்போனதோடு இவருடைய படங்கள் நின்று போயின. மனம் தளராத பவனீதா, மாற்றுவழி ப்பாதைகளில் இயங்கத் தொடங்கினார்.‌ அக்காலக்கட்டத்தில் தொடர்ந்து குறும்படங்கள், அனிமேஷன் படங்கள், காமிக்ஸ் புத்தகங்களை உருவாக்க ஆரம்பித்தார். கூடவே இலங்கை முழுவதுமுள்ள இளம் தலைமுறையினருக்கு இணையவழியாகவும் நேரடியாகவும் சினிமா பற்றி கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார். சில மாணவர்களுக்கு  பயிற்சியளித்து திரைக்கலைஞராக உருவாக்கவும் செய்தார்.

கொவிட் தாக்கம் முடிந்து உலகம் வழமைக்கு திரும்பவே தற்போது மீண்டும் பவனீதாவின் சர்வதேச பயணம் தொடர ஆரம்பித்துள்ளது.‌ இந்த ஆண்டின் ஆரம்பித்தில் தனது முழுநீள திரைப்படத்திற்காக பங்களாதேஷ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டார். அதைத்தொடர்ந்து ஜெர்மனி மற்றும் தென்கொரியாவில் சர்வதேச திரைப்பட பயிற்சிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தற்போது பாகிஸ்தானில் திரைக்கதை தொடர்பான 6 மாதகால Fellowship ஐ வென்றுள்ளார். பாகிஸ்தானில் முக்கியமான திரைக்கதை ஆய்வகமான  Qalambaaz இன் 9வது வருட நிகழ்வில் பவனீதாவின் இரண்டவது முழுநீள படத்துக்கான திரைக்கதை தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தப் படமானது  மலையக சூழலில் நடைபெறும் ஒரு கதையாகும்.

பவனீதாவின் அனிமேஷன் படங்களும் இறப்பர் தோட்ட சமுகத்தின் கதைகளை மையமாக கொண்டமைந்தவை. பவனீதா கொழும்பில் பிறந்து வளர்ந்தவர் என்றாலும் அவருடைய தாத்தா பாட்டி இருவரும் களுத்துறை – மொனராகலை இறப்பர் தோட்டங்களை சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பவனீதாவின் படங்கள் மூலமாக மலையக சமுகத்தின் கதைகள் சர்வதேச சினிமாவை சென்றடையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.‌

பவனீதா லோகநாதன், வறுமையான குடும்பத்தில் பிறந்த யாருடைய ஆதரவும் வழிகாட்டலும்  இல்லாமல் தனித்து இயங்குபவர். வசதியற்ற நிலையில் தனது பெரிய குடும்பத்தை கவனித்துக் கொள்வதோடு தினந்தோறும் பல பகுதி நேர வேலைகளில் ஈடுபட்டு அதில் கிடைக்கும் பணத்தை சேர்த்து வைத்து படங்களை உருவாக்கவும் சர்வதேச விண்ணப்ப கட்டணங்களையும்  வெளிநாட்டு பயண செலவுகளையும் சமாளித்து வருகிறார். ஆனாலும் பலசமயம், பணமில்லாத நிலையில் பல சர்வதேச வாய்ப்புகளை இழந்ததுள்ளதோடு  விருதுவிழாக்களுக்கு படத்தை அனுப்ப முடியாத நிலை, இறுதிப்போட்டிவரை வந்த படத்தை பணம் கட்ட முடியாதநிலையில் திரும்ப பெற்ற தருணங்களும் இவரின் வாழ்வில் நடந்துள்ளன.‌ தற்போது கூட தென்கொரியா செல்வதற்கான பணத்தை திரட்ட பல்வேறு வேலைகளை செய்து வருகிறாராம். எத்தனை தடைகள் வந்தாலும் மன உறுதியுடன்  தொடர்ந்து உறக்கமின்றி உழைத்து வருகிறார்.‌

சினிமா துறையில் அதுவும் போட்டிமிக்க சர்வதேச சினிமாவில் நுழைவது  இலகுவான செயல் அல்ல. அதுவும் தமிழ் சமுகத்தில்  எதிர்ப்புகளையும் அவமானங்களையும் கடந்து ஒரு பெண் சாதித்துக்கொண்டிருப்பது பெரும் ஆச்சரியத்தையும் நம்பிக்கையையும் அளிக்கிறது.

https://malayagam.lk/2023/02/26/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%95-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/?fbclid=IwAR3WfpzFC8V7Bbk1apQAV6fCT6GFpCxehPzBO_kmBtGb_eibf22hO2_ct_c

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *