டான் ப்ரெளவுன் என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது எல்லாம் ‘டாவின்சி கோட் ‘ மட்டும் தான். அவர் எழுதிய இன்னொரு முக்கியமான புத்தகம் ‘angels and demons’. தேவதைகளும் அரக்கர்களும்.புனைவுகள் என்ற பெயரில் அவர் நடத்தி இருக்கும் அறிவியல் சாகசங்களை இப்புத்தகத்தில் காணலாம்.கலிலீயோ ஒரு இலுமனாட்டி என்று ஆரம்பிக்கிறார் டான் ப்ரெளவுன். சமயமும் அறிவியலும் ஒரெ உண்மையைப் பேசும் இருவேறு மொழிகள் என்று சொலவதோடு நிற்கவில்லை கலிலீயோ! தன் தொலைநோக்கு ஆடியில் பிரபஞ்சத்தின் கோள்கள் சுழல்வதைக் கண்டதுடன் அதற்கு நடுவில் இறைவனின் இசை ஒலி கேட்பதாக சொன்னார். (பக் 50, 51). ஆனால் இலுமனாட்டிகளின் அறிவுலகம் தங்களுக்கு ஆபத்து என்பதால் மதபீடம் அதையும் ஏற்கவில்லை! கலிலீயோவும் paradise lost எழுதிய ஜான் மில்டனும் சமகாலத்தவர்கள். அவர்கள் சந்தித்து இருக்கிறார்கள்.அக் காட்சிகள்ஓவியங்களாக இருக்கின்றன என்கிறார் டான் பிரவுன்.அறிவியலும் சமயமும் ஒன்றுக்கொன்று எதிரானவை. அறிவியலாளர்களை கொலை செய்தும் புதைத்தும் மத பீடங்கள் தங்கள் அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டன அச்சுழலில் அறிவியலின் ஒரு சாரார் அறிவியலும் சமயமும் ஒரே உண்மையை வெவ்வேறு பார்வையில் பேசுகின்றன.
இயங்கியல் சக்தி தான் படைப்பின் பிதா.Physics gods nature law என்றார்கள்.நம் பேச்சு வழக்கில் அறிந்தோ அறியாமலோ “இவ/ இவன் பெரிய இலுமினாட்டி ” என்று சொல்லுவதுண்டு. தனக்கு எல்லாம் தெரியும் என்று காட்டிக் கொள்பவர்களை இலுமினாட்டி என்ற வசை சொல்லால்நக்கலாக பேசுகிறோம். இலுமினாட்டி என்ற சொல் புத்திஜீவி , ஞானம் பெற்றவன், enlightment என்பதுடன் தொடர்புடையது . நம் உலகின் அனைத்து கண்டுபிடிப்புகளின் பிதாமகன்கள் இலுமினாட்டிகள்.இவர்கள் பிரபஞ்சத்தின் இயங்கு விசையை மாபெரும் சக்தி என்றார்கள். ஐம்பூதங்களால் ஆனது இவ்வுலகம் என்ற சங்க இலக்கியத்தின் ஆதித்தமிழன் கண்ட அறிவியல் உலகம் இங்கே நமக்கு நினைவுக்கு வரும்.எல்லாமும் கடவுள்தான் உருவாக்கினார் என்ற மதபீடங்களில் நம்பிக்கையை தங்கள் கண்டுபிடிப்புகளின் மூலம் தகர்த்தவர்கள் இலுமனாட்டிகள்.
குறியீடூ மொழிகளில் இவர்களின் ரகசியங்கள் புதைந்திருக்கின்றன.எகிப்தின் பிரமிடுகள் முதல் மயன் வழிபாடுகள் வரை குறியீடுகள் மூலம் தங்களை அடையாளப்படுத்தி இருக்கிறார்கள். அவர்களின் குறியீடு ஒற்றைக்கண் என்பதை அரக்கனுக்கு ஒற்றைக்கண் என்று இலுமனாட்டிகளை அரக்னாக்கியது அதிகார பீடம். இப்படித்தான் ஞானக்கண் , சாத்தானின் கண்ணாக கீழிறக்கம் செய்யப்பட்டது. இந்திய தத்துவத்தில் ஞானக்கண் நெற்றிக்கண்ணாக வளர்த்தெடுக்கப்பட்டது.சிவன் ஒரு இலுமினாட்டி. இலுமினாட்டிகள் தங்கள் ரகசியங்களை பனி மலைகளில் புதைத்திருக்கிறார்கள் என்று நம்பிக்கை.
அதனால் தானோ என்னவோ சிவனையும் பனிமூடிய இமயத்தில் கொண்டு உட்கார வைத்திருக்கிறோம். இந்த நெற்றிக்கண்ணையும் காமத்தையும்ஒன்றே ஒன்று எதிர்த்தும் ஈர்த்தும் இயங்கும் உயிரிகள் என விளக்க பல்வேறு கதைகளைக் கொண்டு புனைந்து இலுமினாட்டியை புனைவுக்குள் புதைத்துவிட்டோம் நாம்!!இப்புனைவுகளின் உச்சம், அவன் காதலியின் மூன்றாவது முலையோடு நெற்றிக்கண்ணை கொண்டு பொருத்தி இருக்கும் ஆண்மைய அதிகாரப் புனைவு.!!இலுமினாட்டிகள் எப்போதும் தங்கள் அறிவின் திறவுகோல் கொண்டு மூடநம்பிக்கைகள் , அதிகார பீடங்களுக்கு எதிராக உலகம் எங்கும் கருத்தியல் பரப்புரை நடத்தியவர்கள்.அப்போதும் இப்போதும்அதிகாரபீடத்திற்கு இலுமினாட்டிகள் என்றால் அச்சம்தான்.இலுமனாட்டிகளை இப்போது அவர்கள் கொலை செய்வதில்லை! கொலை ஆயுதங்கள் மாறிவிட்டன. அவ்வளவுதான்.நம்மிடம் டான் பரெளவுன் எழுத்துகள் இல்லை. காரணம் இங்கே எழுத்துலகம் தன்னை ஆண்டபரம்பரையின் எச்சிலாக இருப்பதில் பெருமை கொள்கிறது! இங்கே நடப்பதெல்லாம் அதிகார பீடம் கட்டி அணைத்து வெளிப்படுத்தும் திருதராஷ்டிர ஆலிங்கனம்.