“அயலி”

பெண்கள் அனைவரும் கடமை போல் கருதி இந்த வெப் சீரியலைப் பார்க்க வேண்டும்..

இயக்குனக்கு பாராட்டுக்கள்ஜீ 5 ஓடிடியில் வெளியான அயலி என்கின்ற வெப் சீரியலை முழுமையாகப் பார்த்தேன். பெண் விடுதலைக்கான மிக முக்கியமான படைப்பின் இடத்தை இந்த வெப் சீரியல் எடுத்துக் கொண்டு விட்டது. கடந்த ஒரு நூற்றாண்டாக இந்த மண்ணில் ஒலித்து வருகின்ற பெண் விடுதலைக் குரல்களை தொகுத்து ஒரு மாலையாக்கி தந்திருக்கிறது இந்தத் தொடர். பெண்ணை அடிமைப் படுத்துவதில் மதத்துக்குள்ள தொடர்பை அழுத்தமாகச் சுட்டிக் காட்டியுள்ளதை வெகுவாகப் பாராட்ட வேண்டும். தாய், மகள் ஏன் கோவில் பூசாரி என்கின்ற அனைத்து நிலைகளிலும் பெண் அடிமைப்படுத்தப்பட்டே நிற்கிறாள் என்பதை சமரசமின்றி எடுத்துச் சொல்லிச் செல்கிறது கதை. கதாபாத்திரத் தேர்வுகள் மிக அருமை. கிட்டத்தட்ட அனைவரும் கறுத்த களையான முகத்துடனிருக்கிறார்கள். நடிப்பும் பாராட்டத்தக்க அளவில் இருக்கிறது. தமிழ்ச் செல்வியின் தாயாருக்கு மட்டும் உச்சரிப்பு இடிக்கிறது.‘பழக்க வழக்கம்’ என்கின்ற சொல்லை மீண்டும் மீண்டும் எடுத்தாள்வது பல அரசியல் அர்த்தங்களை உள்ளடக்கி ஒலிக்கிறது. கதைக்களம் சபரிமலைக் கோவிலில் பெண்கள் நுழைவு நீதிமன்ற தீர்ப்பு இவற்றை உள்வாங்கி தயாரிக்கப் பட்டிருப்பதை உணர முடிகிறது.

பல்வேறு உறவு நிலைகளில் பிரிந்து கிடக்கும் பெண்களை ஓரணிப் படுத்த வேண்டும் என்கின்ற இயக்குனர் முத்துக்குமார் அவர்களின் இலக்கு தெளிவாய் நேர்த்தியாய் காட்சிபடுத்தப் பட்டுள்ளது. உண்மையில் இயக்குனரின் எண்ணத்தின் தெளிவுதான் இந்தத் தொடரை பாராட்டத்தக்க பெருமுயற்சியாக எடுத்து செல்கிறது. முக்கியமாக மாதவிடாய் பிரச்சினையை அவர் கையாண்டிருக்கும் விதம் மிகவும் குறிப்பிடத்தக்கது. எனக்கு தெரிந்து 1990 களில்தான் இந்து அறிநிலையத் துறையில் மாதவிடாயைக் காரணங்காட்டி பெண்கள் அதிகாரிகளாக வரமுடியாது என்று இருந்த நிலையை கண்டித்து நாங்கள் தமிழினப் பெண்கள் விடுதலை இயக்கம் சார்பாக மதுரையில் ஊர்வலமும் போராட்டமும் நடத்தினோம். ‘மலம் ஜலம் தீட்டாகாத போது மாதவிடாய் மட்டும் தீட்டாகுமா?” என்று மதுரைத் தெருக்களில் நாங்கள் முழக்கமிட்ட போது பார்வையாளர்களாக இருந்த பெண்கள்தான் எங்கள் மீது அதிகம் ஆத்திரப்பட்டார்கள். இந்து அறநிலையத் துறையில் நாங்கள் விண்ணப்பம் அளித்த போது எங்கள் கோரிக்கை ஏற்கப்பட்டால் எந்தப் பெண்கள் பலனடைவார்களோ அவர்கள்தான் அந்த விண்ணப்பத்தை கண்ணெடுத்துப் பார்க்கவும் மறுத்தார்கள்.

அயலியின் காலின் ஊடாக வழிந்த இரத்தம் என் மனதில் கடந்து போன முப்பதாண்டுகளின் வளர்ச்சியை எழுதிக் காட்டியது.நிற்க. 1990 களில் நடப்பதாகக் கதை புனையப் பட்டுள்ளது, இப்படிப்பட்ட அல்லது இதைவிட மோசமான உள் கிராமங்கள் 90 களில் மட்டுமல்ல இப்போதும் இருக்கவே செய்கின்றன. ஆனால் கதையில் சற்று நாடகத்தன்மை வெளிப் படத்தான் செய்கிறது. பெண்களையும் ஆண்களையும் இரு தனித்துருவங்களாகப் பிரித்துப் பார்ப்பதில் செயற்கைத் தன்மை வெளிப்படுவதை நாம் தவிர்த்து விட முடியாது என நான் நினைக்கிறேன். ஏனெனில் இயற்கை அவ்விதமாய் இல்லை. நமக்கு தெரிந்து, முன்மாதிரியாகப் பேசப் பட்ட ‘முத்துலட்சுமி’ அம்மையாரை எடுத்துக் கொண்டால் அவர் தனது சுயசரிதையில் தனது கல்விக்கும், முன்னேற்றத்திற்கும் தனது தந்தையாரையும் அதன்பின் கணவரையுமே முதன்மைப் படுத்துகிறார். இன்னொருபுறம் தன் தாய், பிற்போக்காக இருந்து தன்னைக் கட்டுப்படுத்தியதையும் பதிவு செய்கிறார்.

சமுதாயக் காரணிகளை முத்துலட்சுமி அம்மையார் உண்மைத் தன்மையுடன் பேசவில்லை. எனவே இங்கு கறாராகப் பாலினத்தின் மீது கருத்துக்களை நம்மால் ஏற்ற முடிவதில்லை. இதை இங்கு நான் குறிப்பிடக் காரணம் ‘அயலி’ பல உண்மைகளின் தொகுப்பாக நிற்கிறது. ஆனால் அவற்றின் ஒருங்கிணைப்பில் ஒருவித செயற்கைத் தன்மை இருக்கிறது. இதனைக் களைய படைப்பாளர்கள் இன்னும் சமுதாயத்துக்குள் பயணிக்க வேண்டும் என்பதைச் சுட்டவே.அயலி ஒரு புதுத் தொடக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *