கழிவறை இருக்கைஇந்த நூலை வாசித்த போது இதுபற்றிய என் பார்வையை எழுதலாமா வேண்டாமா என்று பல தடவை யோசித்தேன். எழுதுவதற்குக் கைகள் கூசுகின்றன. ஆனாலும் ஒரு பெண் முன்வந்து தன் சொந்தக் கதை பல பெண்களின் வேதனைப் புலம்பல்களை வெளிப்படுத்தியமை, காமம் பற்றி அவருடைய கண்ணோட்டம் போன்றவற்றை வாசித்த போது இவ்வரிகள் ஒரு கைதட்டலாக அமையட்டும் என்றே நான் இதைக் கருதுகின்றேன். எதையும் தவறான பார்வையில் நோக்காமல் எந்தத் தவறுக்கும் ஒரு காரணம் இருக்கும் என்னும் தெளிவுடன் தொடர்கிறேன். இந்நூல் என் வாசிப்பில் இவ்வருட முதல் புத்தகம். கடல் பயணத்தில் ஆரம்பித்து ஆழக்கடல் போல் எழுத்தாளரை மனதுக்குள் இழுத்த புத்தகம்.
புத்தகம்: கழிவறை இருக்கை
ஆசிரியர்: லதா
பக்கங்கள்: 224
வெளியீடு: நவம்பர் 2020 நோராப் இன்பிரின்டர்ஸ். சென்னை
“நாம் காமத்தைப் பற்றி மிக அதிகமாகச் சிந்திப்பதில்லை. அதைப் பற்றித் தவறகவே சிந்திக்கின்றோம்” என்ற Alain de Boton அவர்கள் வரிகளில் தன்னுடைய முன்னுரையைத் தொடங்கும் லதா அவர்களின் எடுத்துக்காட்டு என் ஆர்வத்தைத் தூண்டியது. தன்னை வளர்த்த வளர்த்துக் கொண்டிருக்கின்ற சமூகத்திற்கு இப்புத்தகத்தை அர்ப்பணிப்புச் செய்கின்றார்.தன்னுடைய 8 வயதிலே மாமா போல் பழகிய ஒருவராலும், அண்ணா என்று பழகிய பக்கத்து வீட்டுப் பையனாலும், 14 வயதிலே தான் இந்த உலகத்துக்கு வருவதற்குக் காரணமான தந்தையாலும் காமம் என்பது என்ன என்று அறியாத வயதிலே தனக்கு ஏற்படுத்திய காயங்களை நடந்த சில விடயங்களை எழுத்தாளர் எடுத்து வைக்கின்றார். வளர வளரத்தான் தெரிந்தது ஏதோ ஒரு வகையில் எல்லாக் குழந்தைகளும் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் இறக்கும் தறுவாயில் இருக்கும் கிழவியானாலும் தீண்டுதலுக்கோ வன்புணர்வுகளுக்கோ ஆட்படுத்தப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றார்கள் என்று ஆசிரியர் கூறுகின்றார்.
இந்நூல் வாழ்வின் அடிப்படைத்தேவைகள், தகாத வாழ்க்கை, பெண்ணும் சமூகமும், உடல் – உள்ளம் சங்கமிப்பு, ரகசியம், ஒடுக்கம் மற்றும் கல்வி, கழிவறை இருக்கை, காமத்தைத் தவறெனக் கருதுவதால் ஏற்படும் விளைவுகள், காதலின் வெளிப்பாடாகக் காமம், திருமணம் தாண்டிய உறவுகள், நம்பிக்கையையும் கடந்து, நட்பே அடித்தளமாக, பரிதவிப்பு சுய இன்பம், ஈர உரையாடல்கள், திருமணம் எனப்படும் அமைப்பு, திருமணமும் குடும்பமும், சொந்தம் கொண்டாடும் மனப்பான்மை, ஒருவரை ஒருவர் முழுமையாக்குதல், மனத்தடைகளின் நீக்கம், ஆண் அகந்தை, பாலியற்கல்வி, உணவும் உடலுறவும், பெண்களின் உடலுறவு குறித்த ஆர்வமின்மை, சமூகக் கட்டமைப்பு, நல்லுறவுக்கான விதிமுறைகள், குழந்தை விளையாட்டு, காதல் காமம் குறித்த கட்டுக்கதைகள், நம் கோட்பாடுகளின் வழி ஒரு பார்வை, அனுதினமும் பேணப்பட வேண்டியதா திருமண உறவு, காமத்திற்கு வயதென்ன, குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையில் பெற்றோர்களின் பங்கு, இப்போதைய தேவையும் எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையும், என்கின்ற 32 தலைப்புக்களில் கட்டுரைகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. தலைப்புக்களே வாசகர்களுக்கு ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்தக் கூடியனவாக இருக்கின்றன. பெண்களின் மனஉளைச்சல்கள், மனத்தடைகள் இயல்பாக இயங்க முடியாத மனநலச் சிக்கல்கள் போன்றவற்றை ஆண்கள் உணர்ந்து கொள்வதில்லை. மனிதனின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறையுள் என்பவற்றுடன் காமத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஆசிரியர் எடுத்துக்காட்டும் போது சில தவறுகளுக்கு குற்றப்பத்திரிகை வைக்க முடியாத நிலையுள்ளது.
இதற்கு அடிப்படைக் காரணம் பாலியல் கல்வி சிறுவயதில் போதககப்படாமையே என்பதை ஏற்றுக் கொள்ளக் கூடிய காரணங்களாக இருக்கின்றன. பெண் ஆணுக்குப் பணியாளாகவும், பாலியல் சின்னமாகவும் ஆக்கப்பட்டு கற்பு, பத்தினி, குடும்ப விளக்கு என்றெல்லாம் புகழ்ந்துரைக்கப்பட்டு ஆணின் கழிவறையாகவே இன்றுவரை இயங்குகின்றாள் என்னும் போது கழிவறை என்னும் தலைப்பின் ஆழமான விளக்கம் புரிகின்றது. கழிவறையில் பொறுக்கமுடியாத அவசரத்தில் அமர்ந்து கழிவகற்றி முடிந்த பின் ஒரு அமைதி நிலையை அடைந்து திருப்தி அடைந்து விடுகின்றார்கள். இக்கழிவறை என்பதன் தலைப்பு இந்நூலுக்குப் பொருத்தமாகவே அமைந்திருக்கின்றது. சமூகம் காலம் காலமாக உருவாக்கி வைத்திருக்கின்ற கலாசார, பண்பாட்டுக் கூறுகளை எடுத்து விசாரணைக்கு உட்படுத்துவது இலகுவான காரியமில்லை.
ஆனால், நிதானமாக ஆசிரியர் லதா அவர்கள் கூர்மையான கத்திமுனையில் இருந்தே மேற்சொல்லப்பட்ட விடயங்களை ஆய்வு செய்திருக்கின்றார். காமத்தை மறைத்து வைக்க வேண்டிய ஒன்றாகவும், மிகவும் தவறான விஷயமாகவும், திருமணத்துக்கு முன்பான காம உணர்வுகளை ஒதுக்கி வைக்க வேண்டிய ஒன்றாகவும் இருக்கின்ற ஒரு சூழலில் அவற்றால் ஏற்படுகின்ற பாதிப்புக்களை இக்கட்டுரைகளில் அலசியுள்ளார். ஒரு முதிர்ந்த அறிவுப் பார்வையில், சிந்தனையில் உச்சத்தில், ஆழமாக அவதானமாக இந்நூலைக் கையாண்டு வாசிக்கின்ற போது இந்த சமூகம் விடுகின்ற தவறுகளும் புரிந்துணர்வுகளும் திருத்தப்படலாம். 241 பக்கங்களில் இந்த சமூகத்தின் குறைகளையும், திருத்தப்பட வேண்டிய ஆண் பெண் உறவுகளின் எழுதப்படாத சட்டங்களையும் சுய மதிப்பீட்டுக்கு உட்படுத்தி வாசகர்கள் சமூகத்தின் துப்பரவுப் பணிக்கு தம்மை ஈடுபடுத்தலாம்.புத்தகங்கள் வெறுமனே வாசித்துவிட்டுத் தூக்கிப் போடுபவை அல்ல. மூளைச் சலவை செய்து அழுக்குகளை அகற்றுபவையாக இருக்க வேண்டும். இவ்வாறான புத்தகங்களின் வரிசையில் இப்புத்தகம் மேலடுக்கில் வைக்கப்பட வேண்டிய புத்தகம். ஆசிரியர் லதா அவர்களுக்கு பாராட்டுக்கள்.