பாலின பாகுபாடும் சமூக அடையாளங்களும் — பா. ரஞ்சனி

நூல் அறிமுகம்
பாலின பாகுபாடும்
சமூக அடையாளங்களும்
வ.கீதா, கிறிஸ்டி சுபத்ரா
பாரதி புத்தகாலயம்,
பக்:174 | ரூ.80
சென்னை-18
ஆண் பெண் பாகுபாடுகளை வேரறுக்கும் முயற்சி

ஒரு குழந்தை இந்த மண்ணில் பிறந்த கணம் துவங்குகிறது பாலினப் பாகுபாடும், சமூக அடையாளமும். அந்தக் குழந்தை (ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும்) வளர வளர குடும்பம், கல்வி நிறுவனங்கள் சமூகம் போன்ற எல்லா நிறுவனங்களிடமிருந்தும் உணவு, உடை, நடவடிக்கைகள் போன்றவை எப்படி இருக்க வேண்டும் என்கிற உத்தரவுகள் வந்த வண்ணம் உள்ளன. எல்லாக் குழந்தைகளும் வளர்ந்து பெரியவர்களான பின்பு, தாங்கள் கேட்டு வளர்ந்த அறிவுரைகளை, கட்டளைகளை தங்களது சந்ததியினரின் மீது செலுத்து கிறார்களே தவிர, ஏன் இப்படி உடுத்த வேண்டும், ஏன் இந்த செயலை ஆணாய் இருப்பதால்ஃ பெண்ணய் இருப்பதால் செய்ய வேண்டும் அல்லது செய்யக் கூடாது என்கிற கேள்வியை தங்களுக்குள்ளாகவோ, நண்பர்களிடமோ கேட்பதில்லை. மிகச் சிலருக்கு அந்தக் கேள்வி மனதில் ஓடியவாறு இருக்கும். அவர்களுக்கான பதிலே பாலின பாகுபாடும், சமூக அடையாளங்களும் என்கிற இந்த நூல்.

ஆறு அத்தியாயங்களை உள்ளடக்கிய இந்த நூலின் அறிமுகத்திலேயே பாலின சமத்துவம் சாத்தியமா? என்கிற கேள்வியை எழுப்பி, சமூகத்தில் உலவும் நையாண்டி கலந்த சொலவடைகளைப் பயன்படுத்தி, (உ-ம் பொண்ணா லட்சணமா இரு, ஆயிரன்னாலும் அவன் ஆம்பிள) வாசகர்களைத் தங்களை நோக்கி ஈர்க்கிறார்கள் நூலாசிரியர்கள் ஆண் தன்மை, பெண் தன்மை போன்ற கருத்துருவாக்கத்தின் வேர்களைத் தேடுவதே தங்களை நோக்கமாக முன்வைக்கிறார்கள். ஆண் பெண் பேதம் குறித்து மதரீதியாகவும், விஞ்ஞான ரீதியாகவும், சமகால ஜனநாயகப் பின்னணியிலும் பல்வேறு கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. பெண்கள் ஆண்களை விட தாழ்வானவர்கள் என்று எல்லா மதங்களும் சொன்னாலும், தாய்மையை மட்டும் போற்றும் முரண்பாட்டை நம்மால் உணர முடிகிறது. ஆண்மை, பெண்மை குறித்த மதரீதியான விளக்கங்களின் தாக்கம் மனித மனங்களில் அழுத்தமாகப் படர்ந்து பரவி நிற்கிறது என்கிற வரிகள் முற்றிலும் உண்மை. ஒரு ஆண், பெண்தன்மை பெறுவது என்பதை விட கேவலமான ஒரு நிலை இருக்க முடியாது என்ற கூற்று ஆணாதிக்க சிந்தனை சமூக அமைப்பில் எவ்வாறு வேரோடி உள்ளது என்பதை உணர்த்துகிறது. இன்றைய சூழலில் பெண்களுக்குரிய சரியான இடம் வீடு தான் என்பதையும், ஒரு தாயாக இருப்பது தான் அவள் வகிக்கக்கூடிய மிக அருமையான பதவி என்பதையும் ஊடகங்கள் எல்லா வடிவங்களிலும் சொல்லிக் கொண்டே இருக்கின்றன என்பதை படிக்கும் பொழுது . பெப்சிகோ PநுPளுஐஊழு)) கம்பெனியின் முதன்மை செயல் தலைவராக (ஊநுழு) பொறுப்பேற்ற இந்திரா நூயி அவர்களைப் பேட்டி கண்டவர் உங்கள் குழந்தைகளை எப்படி கவனிக்க நேரம் ஒதுக்குகிறீர்கள் அவர்களுக்கான உணவை எவ்வாறு தயாரிக்கிறீர்கள் என்றெல்லாம் கேட்டது நினைவுக்கு வருகிறது. ஆனால் எந்த விளம்பரத் தயாரிப்பாளரும் ஒரு ஆணை நீ ஆணாக இரு என்றெல்லாம் நினைவுபடுத்துவதில்லை என்பது முகத்தில் அறையும் உண்மை தான்.

நாம் பெண்ணாகவோ ஆணாகவோ பிறப்பதில்லை. அப்படி ஆக்கப்படுகிறோம் என்ற கூற்றின் பின்னணியை பாலின யுத்தம் என்ற அத்தியாயத்தில் பல்வேறு காலகட்டங்களில் இருந்த சிந்தனையாளர்களின் கருத்துக்களை விரிவாக ஒப்பிட்டு தொகுத்து ளது பிரமிப்பூட்டுகிறது. ஆழமான புரிதலோடு கூடிய, பல்லாண்டுகால வாசிப்பும், கருத்துச் செறிவும் இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.
காலங்கள் மாறினாலும், ஆணுக்கான சமூக பாத்திரமும், பெண்ணுக்கான பங்கும் போற்றிப் பாதுகாக்கப்பட்டு வருவதையும், அதை கேள்வி கேட்பதே மிகக் கடினமாக இருப்பதையும் நம்மால் காண முடிகிறது. ஆண்களுடைய வேலைகள் என்று பிரிக்கப்பட்டதை பெண்கள் கையிலெடுத்திருக்கிறார்களே தவிர, பெண்கள் செய்யும் அனைத்து வேலைகளையும் கையிலெடுக்க ஆண்கள் முனைந்ததாகத் தெரியவில்லை என்ற முரண்பாடு நம்மை சிந்திக்க வைக்கிறது.
குறிக்கப்பட்ட பாத்திரங்களாக வாழுதல் என்கிற அத்தியாயத்தில் மேற்சொன்னவாறு சமூக நிகழ்வுகளை உற்று நோக்குகிற, பல தரப்பினரின் நடவடிக்கைகளையும் யதார்த்தமாகப் பதிவு செய்த பாங்கு பாராட்டத்தக்கது.

ஆண்தன்மையும் பெண்தன்மையும் கருத்தாக்கங்களாக நம் மனதில் நிறுத்தப்பட்டாலும், அவை எவ்வாறு நிஜமாகின்றன என்பதை சொல்ல வரும் போது, சாதி,இனம் போன்ற பிற பாகுபாடுகள் எவ்வாறு பாலின பேதத்தோடு ஒத்துப் போகின்றன அல்லது மோதுகின்றன என்பதை மதம்,விஞ்ஞானம், அரசியல்,சமூகம் ஆகிய தளங்களில் இருந்து ஆசிரியர்கள் விவரிக்கின்றனர்.

கன்னடக் கவிஞர் அக்கம்மா தேவி, பெண்களின் மானம் மாண்பு முதலியவற்றின் குறியீடாகக் கருதப்படும் உடைகளைத் துறந்தார், நீண்ட முடி வளர்த்து நிர்வாணமாகவே வாழ்ந்தார் என்கிற செய்தி நமக்கு வியப்பூட்டினாலும், பாலினம் தொடர்பான எதிர்ப்புகளை பெண்கள் காலம்காலமாக தைரியமாகப் பதிவு செய்து வந்துள்ளனர் என்பது தான் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி.

வரலாற்றின் பார்வையில் பாலின பாகுபாடு என்கிற அத்தியாயத்தில் மிகவும் விரிவாக மார்க்சிய சிந்தனையாளர் எங்கெல்ஸ் அவர்களின் கருத்துக்களை எடுத்துரைத்து, அவற்றின் மீதான விமர்சனக் குழுக்களின் கருத்துக்களையும் கூறியிருக்கின்றனர். மார்க்சிய சித்தாந்தம் மீள் பார்வையை (சநஎநைற ) உள்ளடக்கியது என்று சொல்லப்பட்டுள்ளது, விமர்சனத்துடன் கூடிய மீள்பார்வை (உசவைiஉயட சநஎநைற) என்று குறிப்பிடுவதே சரியானதாக இருக்கும். முதலாளித்துவத்துக்கு எதிரான போராட்டத்தை எங்கெல்ஸ் முதலாளித்துவத்திற்கு எதிரான தொழிலாளர் போராட்டம், மற்றும் மனித மறுஉற்பத்தி என்பதில் மட்டும் அடைபட்டுக் கிடப்பதற்கு எதிரான பெண்களின் போராட்டம் என்ற இரண்டு தளங்களில் இருந்து இணைக்கிறார் என்பது, இன்றும் முழுமையான உண்மையாக உள்ளதை நினைக்கும் போது எத்தகைய தீர்க்கதரிசனத்துடன் அவர் வெளிப்படுத்தியுள்ளார் என்பது புரிகி

மூன்று பெண்ணியக் குழுக்கள் எங்கெல்சின் கருத்துக்களின் மீது வைக்கும் விமர்சனங்கள் சொல்லப்பட்டுள்ளன. இதில் முதல் இரண்டு குழுக்களின் காலகட்டம் குறித்த குறிப்புகள் இல்லை. தொடர்ச்சியாக, பிராய்டின் உளவியல் ரீதியான ஆய்வு, பின்னர் ஜாக் லக்கான் அவர்களின் கருத்து, மேற்கத்திய சிந்தனையாளர்களின் கருத்துக்கள் வரிசையாக சொல்லப்பட்டுள்ளன. மேலும், இந்த அத்தியாயம் முழுவதிலும் சித்தாந்த ரீதியான விளக்கங்களும், கடினமான வாக்கிய அமைப்புகளுமே இடம் பெறுவதால் வாசகர்களுக்கு கருத்துக்களை முழுமையாக உள்வாங்குவதில் சிரமம் இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து. இந்தியச் சூழல் என்று வரும் பொழுது பெரியாரின் கருத்துக்கள், குறிப்பாக வரலாற்று ரீதியாக உருவாகியுள்ள ஆணைப் பூஜிக்கும் தந்தை வழிச் சமூகக் கூறுகளே இவற்றின் அடிப்படை என்று சொன்னது மறுக்க முடியாத உண்மையாகும்.தனிச் சொத்துரிமை வந்த பின் பெண் அடிமைப்படுத்தப்பட்டாள் என்கிற எங்கெல்ஸ் அவர்களின் வாதத்தை ஏற்ற பெரியார், சாதிய அடிமைத்தனத்தையும், பெண்ணின் அடிமைத்தனத்தையும் ஒப்புமைப்படுத்தி விளக்கியது அந்த காலகட்டத்தில் மிகப் பெரிய விவாதத்தை, விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

14 வயது ஆதிவாசிச் சிறுமியை காவல் நிலையத்தில் வைத்து காவலர்கள் பாலியல் பலாத்காரம் செளிணித சம்பவத்தில், அந்தப் பெண் பாலுறவுக்கு பழக்கப்பட்டவள் எனவே, காவலர்கள் அவளை பலாத்காரம் செய்தாகக் கொள்ள முடியாது என்ற தீர்ப்பு கூறப்பட்டது என்றால், பாலியல் வன்முறை என்ற அதிகாரத்தை வெளிப்படுத்தும் அத்துமீறல் சர்வசாதாரணமாக நியாயப்படுத்தப்பட்ட நிகழ்வு நம்மை உலுக்கிப் போடுகிறது, சாதி, சமூகநீதி என்று பேசும் பொழுதும் கூட இடஒதுக்கீட்டு சலுகைகளை அந்தந்த இனத்தைச் சேர்ந்த ஆண்களே அதிகமாகக் கைக்கொள்கின்றனர் என்பது நாம் சிந்திக்க வேண்டிய கூற்றாகவே உள்ளது. அதனால் தான் பிற்காலத்தில் 1ஃ3 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது என்பதையும் இணைத்துப் பார்க்க வேண்டும்.

பாலினம் சார்ந்த பழக்க வழக்கங்கள் நடைமுறைகள் பற்றி கூறும் பொழுது பாலின வேறுபாடுகள் நம்மை பயமுறுத்தும் கட்டளைகளாக இல்லாமல், நாம் உணர்ந்து ஏற்கும் நிஜங்களாகவே செயல்படுகின்றன என்பதும், பாலின வேறுபாடு என்பது வெறும் வேறுபாடு மட்டுமல்ல, அது ஒரு உறவுநிலையை உள்ளடக்கியதாகவும் இருக்கிறது. ஆண் பெண் என்று குறிப்பிடும் பொழுதே ஆழ்ந்த பிணைப்பும் இறுக்கமும் கொண்ட இரு பாலரைத்தான் குறிப்பிடுகிறோம் என்று சொல்வதும், புத்தகம் முழுவதும் சொல்ல வந்த கருத்துக்களின் சுருக்கமாகவே பார்க்கிறேன்.
நிறைவாக தந்தை வழிச் சமூகம் என்பது வெறுமனே ஒரு கட்டமைப்பு மட்டுமல்ல, அது நாம் வாழும் உலகாக நமது உணவு, உடை, பேச்சு, காதல், சாவு ஆகியவற்றை உள்ளடக்கி நகமும் சதையுமான ஒரு தொகுப்பாக உள்ளது என்பதும் அதில் பாலின பாகுபாடு என்பது அதன் முக்கிய கூறாக உள்ளது என்றும் கூறுகிறார்கள் ஆசிரியர்கள்.

புத்தகத்தைப் படித்து முடிக்கும் பொழுது ஒரு தகவல் சுரங்கத்துக்குள் பயணித்து வந்த அனுபவமே மனதை நிறைக்கிறது. வார்த்தைக்கு வார்த்தை கருத்துச் செறிவும், ஆழமான அர்த்தங்களும் பொதிந்துள்ளன.. பல முறை வாசித்தால் தான் படித்தேன் என்றே சொல்ல முடியும். பெண்ணியம் குறித்தோ, பாலின பாகுபாடு குறித்தோ ஆய்வு செய்பவர்களுக்கு மிகச் சிறந்த வழிகாட்டியாக இந்தப் புத்தகம் விளங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *