பொஸ்னியா யுத்தத்தில் Srebrenica massacre எனக் கூறப்படும் இனச்சுத்திகரிப்பு இடம் பெற்றது. பொஸ்னிக் முஸ்லீம்கள் படு கொலை செய்யப்பட்டனர். சேர்பியன் பரா மிலிட்டரியினர் ஒரு வீட்டினுள் சென்ற போது அங்கு பல பெண்கள் ஒளிந்திருந்தார்கள். கழுகு சின்னத்தை மார்பில் தரித்த கொமாண்டர், மற்றைய வீரர்களை வெளியே அனுப்பிவிட்டு, 15 வயது நேமாவை அறை ஒன்றுக்குள் பூட்டி வைத்து பாலியல் வன்புணர்வு கொள்கின்றான். அச் சிறுமியின் தாய் அறையின் வெளியே கதறியவண்ணமுள்ளார். பரா இராணுவம் தனது கடமையை முடித்துவிட்டுச் சென்று விடுகின்றது. நேமாவிற்கு பிறக்கும் பிள்ளையை நேமாவின் தாய் ஒரு பெற்றோரற்ற பிள்ளைகளை பராமரிக்கும் நிலையத்திடம் ஒப்படைத்துவிடுகின்றார். நேமாவிற்கு நடைபெற்ற கொடுமையின் பின்னர் நேமா மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு என்ன நடைபெற்றது ஞாபகத்திலில்லை. அவர் தொடர்ச்சியாக சிகிச்சை பெற்று வருகின்றார். இதன் தொடர்ச்சியாக அவருக்கு திருமணமாகி ஒரு மகனும் பிறக்கின்றார். பெற்றோரற்ற பிள்ளைகளை பராமரிக்கும் நிலையத்தில் வளர்ந்து வரும் சலியிடம் நேமாவின் தாயின் முகவரியை நிலைய அதிபர் கொடுக்கின்றார். அங்கு வரும் சலி, நேமாவின் தாயின் மூலம் உண்மைகளை தெரிந்து கொள்கின்றான். தனது தாயை வன்புணர்வு கொண்ட பரா இராணுவ கொமாண்டரை தேடத் தொடங்குகின்றான். அதன் பின்னர் என்ன நடைபெற்றது என்பதனை நடைபெற்றது என்பதனையும் நேமாவின் வாழ்வையும், நேமாவின் தாயின் வலியையும், சலியின் துயர் நிறைந்த தேடலையும், எந்தவித குற்றவுணர்வுமின்றி உலாவும் பரா இராணுவக் கும்பலையும் சிறப்பாக படம்பிடித்துள்ளார் துருக்கிய இயக்குனர் Ozan Açıktan. முற்றுமுழுதாக படம் போரின் பின்னரான காலத்துக்குரியது. ஆனால் போர் விட்டுச் சென்ற வலி நிறைந்த வாழ்வினை காட்சிப்படுத்தியுள்ளது. குறிப்பாக பரா இராணுவ கொமாண்டரின் போரின் பின்னரான வாழ்வில் எந்;தவொரு கணத்திலும், போரின் போது தான் செய்த கொடுமைகளின் குற்றவுணர்வு வெளிப்படவில்லை.
இதே முன்னால் இராணுவ வீரர்கள் சந்தித்து வேட்டைக்கு போகும் காட்சிகள் அவர்கள் மனதளிவில் கூட அவர்கள் மனதில் மாற்றமில்லை என்பதனையே காட்டுகின்றது. அல்லது அவர்கள் செய்த தவறுகளை அவர்கள் சார்ந்த சமூகமும் அரசும் சுட்டிக்காட்ட தவறிவிட்டனவா? அவ்வாறாயின் அவர்களது குற்றங்களுக்கு அரசும், சமூகமும் துணைபோயுள்ளது.இராணுவத்தின் பொதுப்பண்புகளில் ஒன்று பெண்களை பாலியல் வல்லுறவு செய்து கொடுமைப்படுத்தலாகும். அதனை உலகின் பல இராணுவங்களும் தொடர்ச்சியாக செய்து வருகின்றன. அவ்வப்போது ஊடகங்களால் அம்பலப்படுத்தப்படும் சில சம்பவங்களுக்கு தண்டனை வழங்கப்படுகின்றன. இனச்சுத்திகரிப்பினை செய்வதன் ஒரு படியாக அரசுகள் இராணுவத்திற்கு பெண்களை பாலியல் வல்லுறவு செய்யுமாறு ஆலோசனை கூறுவதாகவும் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனை ஆமேனிய படுகொலைககள் தொடங்கி பல இனவழிப்புக்களில் காணக்கூடியதாகவுள்ளது. கடந்த பல நூற்றாண்டுகளில் நடைபெற்ற போர்களின் போதும் இவ்வாறான செயற்பாடுகள் இடம் பெற்றுள்ளன. நாம் இன்னமும் மனிதத்துக்கு மாறவில்லை என்பதனை அரசுகள் தொடர்ச்சியாக நிரூபித்துவருகின்றன. ஈழப் போரில் இவ்வாறான பல சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன. ஈழப்போரின் முன்னர் இடம்பெற்ற ஜே.வி.பி யின் கிளர்ச்சியின் போது பிரேமாவதி என்ற பெண் இராணுவத்தால் சிதைக்கப்பட்டார்.
ஈழம், காஸ்மீர், பங்களாதேஸ் என உலகின் எங்கு இராணுவம் சென்றதோ, நிலைகொண்டதோ அங்கெல்லாம் இவை இடம்பெற்றன. இன்றும் உலகம் அமைதியாக உறங்கிக் கொண்டுதான் உள்ளது.
இலங்கை இராணுவத்தால் அழிக்கப்பட்ட கோணேஸ்வரியைப் பற்றிய கலாவின் கவிதை
இதுகோணேஸ்வரிகள் கவிதை
கோணேஸ்வரிகள்…! – கலா
நேற்றைய அவளுடைய சாவு – எனக்கு
வேதனையைத் தரவில்லை.
மரத்துப் போய்விட்ட உணர்வுகளுக்குள்
அதிர்ந்து போதல் எப்படி நிகழும்.
அன்பான என் தமிழிச்சிகளேஇ
இத்தீவின் சமாதானத்திற்காய்
நீங்கள் என்ன செய்தீர்கள் ! ?
ஆகவே: வாருங்கள்
உடைகளைக் கழற்றி
உங்களை நிர்வாணப்படுத்திக் கொள்ளுங்கள்
என் அம்மாவே உன்னையும் தான்.
சமாதானத்திற்காய் போரிடும்
புத்தரின் வழிவந்தவர்களுக்காய்
உங்கள் யோனிகளைத் திறவுங்கள்.
பாவம்
அவர்களின் வக்கிரங்களை
எங்கு கொட்டுதல் இயலும்.
வீரர்களே ! வாருங்கள்.
உங்கள் வக்கிரங்களை தீர்த்துக் கொள்ளுங்கள்.
என் பின்னால்
என் பள்ளித் தங்கையும் உள்ளாள்.
தீர்ந்ததா எல்லாம்.
அவளோடு நின்றுவிடாதீர் !
எங்கள் யோனிகளின் ஊடே
நாளைய சந்ததி தளிர்விடக்கூடும்.
ஆகவே :
வெடிவைத்தே சிதறடியுங்கள்.
ஒவ்வொரு துண்டுகளையும் கூட்டி அள்ளி
புதையுங்கள்
இனிமேல் எம்மினம் தளிர்விடமுடியாதபடி.
சிங்கள சகோதரிகளே!
உங்கள் யோனிகளுக்கு
இப்போது வேலையில்லை.
(கோணேஸ்வரி 17.05.1997 அன்று பத்து போலிசாரால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுஇ பெண்குறியில் கிரனைட் வைத்து கொல்லப்பட்ட மட்டக்களப்பு 11ம் கொலனியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாய்.)
Thanks Rathan Ragu