“இறுதி யுத்தத்தில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகளை பார்வையிடுவதற்காக சென்ற குழுவினரில் கெளரிசங்கரி தவராசாவும் இருந்தார், அப்போது தன்பாட்டில் அமைதியாக இருந்த சிலரை அவர் வலிந்து வம்புக்கிழுத்து “ஏன் என்னை அவதூறாக பேசினாய்?” என்கிற தொனியில் அந்த கைதிமீது வழக்கு தாக்கல் செய்தார், இப்படி பலர்மீது வழக்குகள் பதியப்பட்டன, இதனால் கொளரிசங்கரியை சிறைச்சாலை வளாகத்தில் கண்டவுடனேயே கைதிகள் முகத்தை திருப்பிக்கொண்டு பயத்துடன் இருந்து விடுவார்கள். பின்னர் ஒருநாளில் “ஏன் இப்படி வலிந்து சண்டைக்குச் சென்று அவர்கள்மீது வழக்கு தாக்கல் செய்கிறீர்கள்?” என்று கொளரிசங்கரியிடம் கேட்கப்பட்டது.“இனி அவன் காணாமற் போக மாட்டான், அவன் மீது ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது, அவனுக்கு இங்கு ஒரு முகவரி இருக்கிறது”. என்பதே அவருடைய பதிலாக இருந்தது. கெளரிசங்கரி தவராசா என்கிற மனிதத்தை எங்களில் எத்தனைபேர் அறிந்திருப்போம் என்பது தெரியாது.
தான் படித்த சட்டத்தை இன, மத, மொழி பேதமின்றி நீதியின் கதவுகளைத் தட்டுவதற்காக மட்டுமே பிரயோகித்த மனுசி அவர். காணாமல் ஆக்கப்படுதலும் கைதுசெய்யப்படுதலும் பயங்கரவாத தடுப்புச் சட்டமும் மலிந்து போன இந்தப்பூமியில் அடிப்படை மனித உரிமை மீறல் வழக்குகள், ஆட்கொணர்வு மனுத்தாக்கல்கள் அதற்கு அப்பால் இறுதி யுத்தம் முடிவடைந்த பின்னர் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் போராளிகளுக்கு முகவரியிட்டு காணாமல் ஆக்கப்படுவதை தடுத்தல் என்று எண்ணற்கரிய செயல்களை அமைதியாகச் செய்துவிட்டுச் சென்ற ஆளுமை. அனேகமான தமிழ் தலைமைகள், ஊடகவியளாளர்கள், பொதுமக்கள், ரணில் விக்கிரமசிங்க, ராஜித சேனாரட்ண, ரிசாட் பதியுதீன், ஜிஹாஸ் ஜிஸ்புல்லா, குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னைநாள் பணிப்பாளர் சானி அபயசேகர போன்ற பலருடைய வழக்குகளை ஜனாதிபதி சட்டத்தரணி கே.வீ தவராசா அவர்களோடு இணைந்து கையாண்ட சட்டத்தரணி கெளரிசங்கரி அவர்கள் கடந்த வருடம் கொரோணா பேரிடர் காலத்தில் இயற்கை எய்தினார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொலை வழக்கு உட்பட்ட பல வழக்குகளை கையாண்ட இவர்மீது கொலை மிரட்டல்கள்கூட விடுக்கப்பட்டன, பயங்கரவாத சட்டத்தரணிகள் என்று இவர்மீதும் இவருடைய கணவர் கே.வீ தவராசா அவர்கள் மீதும் முத்திரை குத்தப்பட்டு அரச வர்த்தகமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. முன்னைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச காலத்தில் இவர்களுடைய அலுவலக திறப்புகள் கோரப்பட்டு நின்றபோதும் தளராமல் நின்ற இந்தப் பெண்மணி பற்றிய ஆவணப்படம் ஒன்றை ஐபீசி தமிழுக்காக தயாரிக்க வேண்டிய பொறுப்பை ஏற்றுக்கொண்டேன். “நினைவுகளில் நீளும் நீதியின் குரல் – கெளரிசங்கரி தவராசா”.
மனிதத்தை நேசிக்கத்தெரிந்த மனிதர்களை அவர்கள் வாழும் காலத்தில் கண்டுகொள்ளத் தவறிவிடுகிறோம் என்பதுதான் நமது காலத்தின் மிகப் பெருந்துயராக நீளுகிறது.இந்த இணைப்பில் நேர்த்தியான குரலுக்கு சொந்தமானவர் துவாரகி, படத்தொகுப்பு யோண் பிரதீப்.