வன்முறை என்பது அடிப்பதும் உடலால் காயப் படுத்துவது மட்டுமே என்று நினைப்பவர்கள் பலர் உண்டு. எண்ணத்தால், சொல்லால், செயலால், உடல் மொழியால், ஒருவரின் தனிப்பட்ட சுதந்திரத்தில், அவருக்கான இடைவெளியில் ( personal space) இருப்பதன் மூலம் கூட வன்முறை செலுத்த முடியும்.சரியாக திட்டமிடப்படாமல் நாளை ஆரம்பிக்கும் பெரும்பாலான குடும்பங்களில் இந்தச் சொல்வன்முறை காலையிலேயே ஆரம்பிக்கிறது. செல்லிடத்துக் காக்கின் சினம் காக்க என்று என்னதான் படித்திருந்தாலும், சினம் தலைக்கேற கணவன் மனைவியருக்குள் கடும் சொற்கள், குழந்தைகள் சற்றே தாமதித்தால் அவர்களைப் புரிந்துகொள்ளாமல், அவசரப்படுத்தும் போது வெளிப்படும் உடல் மொழியும், சொற்களுமாய் ஆரம்பிக்கிறது அன்றைய தினம். இதை எப்படித் தவிர்க்கலாம்? முதல் நாள் இரவே , குழந்தைகளை மறு நாள் பள்ளிக்கு செல்ல தேவையானவற்றை எடுத்து வைக்கப்பழக்கலாம். அவசரம் இல்லாமல், நிதானமாக அவர்களுக்குப்பிடித்த ஆடைகள் எடுக்க சொல்லி, காலுறைகள் மற்றும் புத்தகப்பையை தயார் நிலையில் வைக்கலாம். ஆடைகள் அவர்களே தேர்ந்தெடுக்க வைத்தல் என்பது எல்லா ஆடைக்குவியலில் இருந்தும் இல்லை, கால நிலைக்கு ஏற்ற இரண்டு அல்லது மூன்று ஆடைகளை மட்டும் காட்டி அதில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வைத்து அவர்களின் முடிவுக்கு மதிப்பளித்தல். அதே போல நாமும் அலுவலகத்திற்கு அணிந்து கொள வேண்டியவை, முக்கிய கூட்டங்கள் கலந்துகொள்ள இருந்தால் அதற்கான குறிப்புகள் எடுத்து வைத்தல் போன்றவற்றை செய்தல் என ஒரு முன்மாதிரியாகவும் இருக்கலாம்.
இதனால், அவசர மன அழுத்தத்தில், கடும் சொற்களை பயன் படுத்தாமலும் நாளை இனிமையாகவும் ஆரம்பிக்கலாம். சொல் வன்முறை முகவும் கடுமையானது. அதிலும் யாரேனும் குடி போதையில், அதிக கோபத்தில் சினந்து கடும் சொற்களை சொல்லுவது, அவர்கள் வேண்டுமானால் போதை தெளிந்தவுடன் அல்லது சினம் தணிந்தவுடன் மறந்து விடலாம். ஆனால் பாதிக்கப்படுபவர்க்ளுக்கு அதை மறக்க இயலாது அதிலும் இது அடிக்கடி நிகழும் நிகழ்வு என்றால், குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு மிக அதிகம். குழந்தைகள் அவர்கள் நண்பர்களுடன் பழகும் போதே கூட பயன் படுத்தும் சொற்கள், பாவனைகளை கவனித்து மாற்ற முயல வேண்டும். அமெரிக்காவில் தேர்தல் நேரத்தில், எப்போதும் போல் இல்லாமல் இந்த முறை மிகவும் தரம் தாழ்ந்த தேர்த்தல் பேச்சுக்களைக் கேட்க நேர்ந்தது. ஹிலரியை பற்றி தரக்குறைவாக பேசினால் எந்த அளவு வருத்தமும் கோபபமும் வந்ததோ அதே அளவு இவாங்கா பற்றிய தரக்குறைவான பேச்சுக்களும் சினமும் வருத்தத்தையும் தந்திருக்க வேண்டும். ஆனால் மக்கள் தங்கள் இனம், கொள்கை, சார்பு நிலை கொண்டு ஒருவர் இன்னொருவரை ஆபாசமான தரக்குறைவான சொற்களால் தாக்க தயங்கவே இல்லை. இப்போது ஆண்டாள் பற்றிய செய்திக்குறிப்பிலும் அதையே காண்கிறேன். முன் பின் தெரியாத ஒரு பெண்ணை, அன்னையை தரம் குறைந்த வார்த்தைகளால் பேச யாரும் தயங்கவே இல்லை. சொல் வன்முறை போதாதென்று, அன்பை போதிப்பதாக சொல்லும் ஒருவர், வன்முறையைத் தூண்டும் பாடலை உதாரணம் காட்டுகிறார். இதில் அன்பு வழி எங்கே? இதில் கட்டுரை எழுதிய கவிஞரோ, கடவுளாய்ப்போன ஆண்டாளுக்கோ கவலை இல்லை. நண்பர்கள் கூட பகைவர்களாகி திட்டிக்கொள்கிறார்கள் திருமணம் செய்துகொண்டதாலேயே மோசமான வசைவுகளை கேட்க கவிஞரின் மனைவி தள்ளப்படுகிறார். இது வன்முறை இல்லாமல் வேறு என்ன? சார்பு நிலை, மனிதத்தை கடைநிலைக்குத் தள்ளிவிட்டது.தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதேநாவினால் சுட்ட வடு என்பதைச் சொல்லித்தந்த தமிழ் அல்லவா? #வன்முறையை நிறுத்துவோம்
4No one is born hating another person because of the colour of his skin, or his background, or his religion. People must learn to hate, and if they can learn to hate, they can be taught to love, for love comes more naturally to the human heart than its opposite.NELSON MANDELA