ஈரான் – ஹிஜாப் – பெண்கள் – போராட்டம்22 வயதுடைய Masha Amini என்ற பெண் ஹிஜாப்/ முக்காடு சரியாக அணியவில்லை என்பதற்காக ஈரானின் கலாச்சாரப் பொலிசாரால் 13.09.22 அன்று கைதுசெய்யப்பட்டார். தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு தாக்கப்பட்டதால் மூன்றாவது நாள் இறந்துள்ளார். அதாவது கொலை செய்யப்பட்டுள்ளார். ஹிஜாப் அணிந்திருந்தார். ஆனால் தலையை முழுவதுமாக மூடவில்லை என்பது கலாச்சாரக் காவல்துறையின் கைதுக்கான காரணம்.அவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஈரானின் பெண்கள் போராட்டங்களில் இறங்கியுள்ளனர். 15 வரையான நகரங்களுக்குப் போராட்டம் பரவியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. முக்காடுகளைத் தீயிலிட்டு எரித்து இந்தக் கொலைக்கு எதிராக பெண்கள் வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றனர். காவல்துறையினர் கண்ணீர்ப்புகை, தண்ணீர்ப் பீரங்கிகளை ஏவி ஆர்ப்பாட்டங்களை அடக்க முயல்கின்றனர்.பெண்களின் இந்தப் போராட்டத்தில் ஈரானின் இஸ்லாமிய அடிப்படைவாத ஆட்சிக்கு எதிரான கோசங்கள் எழுப்பப்படுகின்றன. ஆட்சிபீடத்திற்கு எதிரான போராட்டமாக விரிவடையும் வாய்ப்பும் உள்ளது.