(நா.தனுஜா)
நாட்டில் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டுவந்த தன்னெழுச்சிப்போராட்டத்தின் முன்னரங்கில் நின்று இயங்கிய செயற்பாட்டாளர்களை இலக்குவைத்து அரசாங்கத்தினால் பிரயோகிக்கப்பட்டுவரும் அடக்குமுறைகளைக் கடுமையாகக் கண்டித்திருக்கும் சமூக செயற்பாட்டாளர் ஷ்ரீன் ஸரூர், சட்டத்தரணி ரணிதா ஞானராஜா, காலிமுகத்திடல் போராட்டக்காரர் நிலாஷினி, சமூக செயற்பாட்டாளர் சந்தியா எக்னெலிகொட உள்ளிட்ட ஜனநாயகப்போராட்டங்களுக்கான பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள், கடந்த சில தினங்களாக காலிமுகத்திடலில் கரையொதுங்கிவரும் சடலங்கள் மூலம் போராட்டக்காரர்களை அச்சுறுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றதா? எனவும் கேள்வியெழுப்பியுள்ளனர்.
நாட்டில் தீவிரமடைந்த பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து அதற்கு உரியவாறான தீர்வை வழங்கவேண்டும் என்றும், முறையற்ற பொருளாதார நிர்வாகத்தையும் தவறான தீர்மானங்களையும் மேற்கொண்ட ஆட்சியாளர்கள் பதவி விலகவேண்டும் என்றும் வலியுறுத்தி கடந்த 4 மாதகாலமாக முன்னெடுக்கப்பட்டுவந்த மக்களின் தன்னெழுச்சிப்போராட்டங்களைத் தொடர்ந்து தற்போது நாட்டில் பல்வேறு அரசியல் ரீதியான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.
இருப்பினும் அப்போராட்டங்களின் முன்னரங்கில் நின்று இயங்கிய செயற்பாட்டாளர்கள் பலர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டும், தேடப்பட்டும் வருகின்ற பின்னணியில் அமைதிவழிப்போராட்டக்காரர்கள் மீதான அடக்குமுறைகளைக் கண்டித்து ஜனநாயகப்போராட்டங்களுக்கான பெண்கள் அமைப்பினால் நேற்று செவ்வாய்கிழமை கொழும்பு, மருதானையிலுள்ள சமூக மற்றும் சமய மத்திய நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவ்வமைப்பின் பிரதிநிதிகள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
அங்கு ஒவ்வொரு பிரதிநிதிகளாலும் வெளியிடப்பட்ட முக்கிய கருத்துக்கள் வருமாறு:
சமூக செயற்பாட்டாளர் ஷ்ரீன் ஸரூர்
தற்போதைய அரசாங்கத்தினால் அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமையையும் போராட்டக்காரர்களை பாசிஸவாதிகள், பயங்கரவாதிகள், போதைப்பொருளுக்கு அடிமையானவர்களென முத்திரை குத்தி அவர்கள்மீது அடக்குமுறைகளைப் பிரயோகிப்பதையும் நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
அதேவேளை அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சிப்பதற்கும், எதிர்ப்பை வெளியிடுவதற்கும் தாம் கொண்டிருக்கின்ற உரிமையைப் பயன்படுத்துபவர்களை கைதுசெய்வதற்கும், அவர்களுக்கு எதிராக சட்டத்தைப் பிரயோகிப்பதற்கும் மேற்கொண்டுவரும் முயற்சிகளை அரசாங்கம் உடனடியாகக் கைவிடவேண்டும் என்றும் நாம் வலியுறுத்துகின்றோம்.
அரசாங்கத்தினால் பிரயோகிக்கப்படும் இந்த அடக்குமுறை உத்திகள் எமக்குப் புதிதல்ல. குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்டுவந்த ஜனநாயக மற்றும் அமைதிவழிப்போராட்டங்களை அடக்கியதில் இலங்கை அரசாங்கம் நீண்ட வரலாற்றைக் கொண்டிருக்கின்றது.
குறிப்பாக கடந்த காலங்களில் வட, கிழக்கில் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளைத்தேடிப் போராட்டங்களை முன்னெடுத்துவந்தவர்களும், உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத்தாக்குதல்களைத் தொடர்ந்து நாட்டிலுள்ள முஸ்லிம்களும் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்பட்டதுடன் பயங்கரவாதத்தடைச்சட்டம் உள்ளடங்கலாகப் பல்வேறு சட்டங்களின்கீழ் அவர்களுக்கு எதிராக அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டன.
எனவே கடந்த காலங்களில் போராட்டக்காரர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறைத்தாக்குதல்கள் தொடர்பில் உரியவாறு விசாரணைகளை முன்னெடுப்பதுடன், குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதிசெய்யுமாறு நாம் அரசாங்கத்தை வலியுறுத்தும் அதேவேளை, பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத்தேர்தலை முன்கூட்டியே நடத்துமாறும் கோரிக்கைவிடுக்கின்றோம் என்று தெரிவித்தார்.
சட்டத்தரணி ரணிதா ஞானராஜா
கடந்த காலங்களைப் பொறுத்தமட்டில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நீதியைக்கோரி முன்னெடுக்கப்பட்டுவந்த போராட்டங்களுக்கு பாசிஸவாதச் சாயம் பூசப்பட்டு, அவை பல்வேறு அரசாங்கங்களாலும் அடக்கப்பட்டமையை அவதானித்துவந்திருக்கின்றோம். குறிப்பாக 1989 ஆம் ஆண்டின் பின்னரான காலப்பகுதியில் அவசரகாலச்சட்டத்தின் சரத்துக்கள் மிகவும் உச்சளவில் பயன்படுத்தப்பட்டன. அதன்விளைவாகத் தற்போது பல பெண்கள் தமது தகப்பன், கணவன் உள்ளிட்ட அன்பிற்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதைக் கண்டறிவதற்காகவும் நீதியைக்கோரியும் தொடர்ந்து போராடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.
அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்றத்தில் மக்களின் பிரதிநிதிகளால் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதியை நாட்டுமக்களின் ஜனாதிபதியாக ஏற்றுக்கொள்ளவேண்டிய நிலையிலிருக்கின்றோம். இருப்பினும் அதற்கு அப்பால் ஜனாதிபதியிடம் வழங்கப்பட்டிருக்கும் நிறைவேற்றதிகாரம் முற்றாக இல்லாதொழிக்கப்படவேண்டும் என்பதே எமது கூட்டு நிலைப்பாடாக இருக்கின்றது.
அதேவேளை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள ஜெனீவா கூட்டத்தொடரில் எமது பிரச்சினைகள் தொடர்பில் வலுவான அழுத்தம் பிரயோகிக்கப்படக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஏனெனில் பல வருடங்களுக்கு முன்னர் கையடக்கத்தொலைபேசி மற்றும் சமூகவலைத்தள வசதிகள் போதியளவிற்குக் காணப்படாமையினால் அப்போதைய மனித உரிமைகள் மீறல்களை ஆதாரங்களுடன் ஆவணப்படுத்தவோ அல்லது அவற்றின் தீவிரத்தன்மையை உணர்த்தவோ இயலாத நிலை காணப்பட்டது.
ஆனால் இப்போது அண்மைக்காலங்களில் பதிவாகியிருக்கும் மனித உரிமை மீறல்கள் மற்றும் அடக்குமுறைகள் என்பன காணொளிகள் வடிவில் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டதன் மூலம் அவை பல்வேறு தரப்பினரையும் சென்றடைந்திருக்கின்றன. எனவே எதிர்வரும் ஜெனீவா கூட்டத்தொடரில் இவற்றுடன் இணைந்ததாக தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் வலுவான அழுத்தத்தைப் பிரயோகிக்கக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது என்று சுட்டிக்காட்டினார்.
காலிமுகத்திடல் போராட்டக்காரர் நிலாஷினி
தீவிர பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியவர்களுக்கு எதிராக ஒட்டுமொத்த நாட்டுமக்களும் ஒன்றிணைந்து முன்னெடுத்த அறவழிப்போராட்டத்தில் பங்கேற்ற பலர்மீது தற்போதைய அரசாங்கத்தினால் பல்வேறு வடிவங்களில் அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டுவருகின்றன.
எம்மிடமுள்ள தகவல்களின்படி கடந்த 4 மாதகாலத்தில் போராட்டத்தில் பங்கேற்ற 300 இற்கும் மேற்பட்டோர்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. சுமார் 100 பேர் வரையில் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டிருக்கின்றார்கள். சுமார் 15 பேர் சிறைப்படுத்தப்பட்டிருக்கின்றார்கள். அதுமாத்திரமன்றி 300 – 600 பேரின் வீடுகளுக்கு பொலிஸார் சென்றிருப்பதுடன் வாக்குமூலம் வழங்குமாறு அவர்களிடம் கோரப்பட்டிருக்கின்றது.
அதுமாத்திரமன்றி கடந்த சில நாட்களாக காலிமுகத்திடலில் பல சடலங்கள் கரையொதுங்கிவருகின்றன. இதுகுறித்து உரியவாறான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகத் தெரியவில்லை. இதன்மூலம் போராட்டக்காரர்களை உளவியல் ரீதியில் அச்சுறுத்தவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அதேவேளை அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்படுகின்ற போதிலும், போராட்டக்காரர்களை கடந்த 1981, 1989 ஆம் ஆண்டுகளில் அடக்கியதைப்போன்று அடக்கவேண்டும் என்று பகிரங்கமாகக் கருத்து வெளியிட்டுள்ள சனத் நிஷாந்த உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு எதிராக இன்னமும் சட்டநடவடிக்கை எடுக்கப்படவில்லை. எதுஎவ்வாறிருப்பினும் அரசாங்கத்தினால் பிரயோகிக்கப்படுகின்ற அடக்குமுறைகளுக்கு நாம் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை என்று அவர் தெரிவித்தார்.
சமூக செயற்பாட்டாளர் சந்தியா எக்னெலிகொட
குறிப்பாக பெருமளவான இளைஞர், யுவதிகள் உள்ளடங்கலாக நாட்டுமக்கள் அனைவரும் இணைந்து சில மாதங்களுக்கு முன்னர் ஆரம்பித்த போராட்டத்தின்மீது அரசாங்கத்தினால் இப்போது பல்வேறு வடிவங்களிலும் அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டுவருகின்றன. ஆனால் அமைதிவழிப்போராட்டக்காரர்களுக்கு எதிரான வெறுப்புணர்வுடன்கூடிய மிகமோசமான கருத்துக்களை வெளியிடும் அரசியல்வாதிகளுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே இவ்வாறானதொரு அடக்குமுறைக் கலாசாரத்தை உடனடியாக முடிவிற்குக்கொண்டுவருமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வலியுறுத்துகின்றேன். அதேவேளை காணாமலாக்கப்பட்ட எனது கணவர் பிரகீத் எக்னெலிகொடவிற்கு (ஊடகவியலாளர்) என்ன நேர்ந்தது என்பதைக் கண்டறிந்து, அவருக்குரிய நீதியை நிலைநாட்டுவதற்காக நாம் தொடர்ந்தும் எதிர்பார்ப்புடன் போராடுவேன் சந்தியா எக்னெலிகொட தெரிவித்தார்.