கண்டிச்சீமையிலே கோப்பிக்கால வரலாறு 1823 – 18931820 களில் தமிழ் நாட்டின் பல கிராமங்களில் இருந்தும் பஞ்சம் பிழைப்பதற்காக லட்சக்கணக்காக கூலிகளாக வந்து சுமார் 130 மைல் தூரம் கால்நடையாக கண்டியை சென்றடைந்த இம்மக்கள் சென்ற வழியிலும், கண்டிச்சீமையிலும், சொல்லொண்ணாத் துயரங்களை அனுபவித்து லட்சக்கணக்கில் செத்து மடிந்து இந்நாட்டின் மலைச்சாரல்களில் மண்ணோடு மண்ணாகி கோப்பிச் செடிகளுக்கடியில் புதைந்து போன கண்ணீர்க்கதையைக்கூறும் நூல்தான் இந்நூல்.இக்காலத்தில் மட்டும் (1823 – 1893) இயற்கை மரணங்களுக்கு அப்பால் கொலரா, பசி, பட்டினி, கொடிய மிருகங்கள் மற்றும் பாம்புக்கடி, கடுமையான குளிர் போன்றவற்றுக்குப் பலியாகி சுமார் இரண்டு லட்சம் பேர் மாண்டொழிந்து போனதாக வரலாற்றாசிரியர் ஜ. எச். வண்டன் டிரைசன் (I.H. Vanden Drisson) கூறுகிறார்.
எனினும் இந்த நாட்டை, இந்த நாட்டின் பொருளாதாரத்தை கட்டியமைத்து கஷ்டப்பட்டு உருவாக்கிய இம்மக்கள் கூட்டத்தினர்க்கு இன்றுவரை இந்நாட்டின் மக்களும், மக்கள் தலைவர்களும் ‘நன்றி’ என்ற அந்த மூன்றெழுத்து வார்த்தையைக்கூட மனமுவந்து கூறியதில்லை. அன்று வெள்ளைக்காரன் கட்டிய சிறிய இருட்டு பொந்துகளான ‘லயக் காம்பராக்களிலேயே’ இன்றும் அவர்கள் கூனிக்குறுகி வாழ்ந்து வருகின்றார்கள்.அவர்களின் இந்த அவல வரலாற்றை அங்குலம் அங்குலமாகக் கூறும் கண்டிச்சீமையிலே என்ற இந்த வரலாற்று ஆவணத்தை கட்டாயம் ஒவ்வொரு தமிழ்க்குடிமக்களும் வாசித்துத் தெரிந்து கொள்ளக்கடமைப்பட்டுள்ளனர்.352 பக்கங்களில் A4 வடிவத்தில் 190 வரலாற்றுக்கால படங்களை உள்ளடக்கி எல்லாப்பக்கங்களும் 2 வர்ணங்களில் மின்னும் காகிதத்தில் வீரகேசரி நிறுவனத்தால் அச்சுப்பதிக்கப்பட்டுள்ள துன்பியல் காவியமான இந்நூலின் விலை ரூ. 1800/= ஆகும்.