இன்றைய நிலையில் பெண்களுக்கான அரசியல் வெளியின் வலிமையை எதனை வைத்துத் தீர்மானிப்பது? அதற்கான அளவுகோல்கள் யாவை?பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் என்பது என்ன என்பது குறித்து சில அடிப்படையான நிலைகள் பற்றிய பார்வையை பகிர்ந்து கொள்ள வேண்டியது இன்றைய தலையாய தேவை என மனதுக்கு பட்டது. எனவேதான் இந்த பதிவு. இந்த பதிவு பெரிய அளவில் வாசிக்கப் படாது என்பதும் திட்டமிட்டு அலட்சியமாகக் கடக்கப் படும் என்பதும் எனக்கு நன்கு தெரியும். இன்று யாருடைய பார்வையையும் பெறுவதற்காகவோ பதில் வினைகளை எதிர்பார்த்தோ இந்த பதிவை நான் இடவில்லை. இந்த காலத்தின் வெளியில் எழுதப்பட வேண்டிய பதிவு இது. இதனை இட வேண்டியது என் கடமை. அவ்வளவே.சரி. இனி நான் மேலே எழுப்புயுள்ள கேள்விக்கு வருகிறேன்.
கடந்த சில ஆண்டுகளில் பெண்கள் அரசியலில் பங்கேற்பது அதிகரித்திருக்கிறது. அதாவது பஞ்சாயத்து பிரதிநிதிகளாக சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களாக பல்வேறு அரசியல் கட்சிகளில் பெண்கள் பிரிவு தலைவர்களாக சில இடங்களில் சற்று முன்னேறி மாவட்ட பொறுப்பாளர்களாக ஏன் சில நேரங்களில் சில கட்சிகளில் தலைவர்களாக பெண்கள் வலம் வருவதைக் காண்கிறோம். இது பெண்ணினம் பெற்றிருக்கும் வெற்றிதான் என்பதில் அய்யமேதுமில்லை. இருப்பினும் நாம் சுட்டிக்காட்ட வேண்டிய ஒரு விசயம் என்னவெனில் ஒரு கட்சியின் தலைவரேயானாலும் அந்தக் கட்சியின் கொள்கை அந்தக் கொள்கை அடிப்படையில் அந்தக் கட்சியின் நடைமுறை பெண் விடுதலை மற்றும் பாலின சமத்துவம் பற்றிய நிலைப்பாட்டில் ஆண் தலைமையிலான கட்சிகளுடன் மாறுபடாத பட்சத்தில் அந்தப் பெண் தலைமை ஆண் தலைமையிலிருந்து பெரிதாக மாறுபட்டு நோக்கத் தக்கதல்ல.
ஒரு பெண் தலைவராக இருக்கும் போது பெண்கள் பொது ஊக்கம் பெறுகிறார்கள். மேலும் ஒரு தெளிவான தத்துவார்த்த பார்வையில் பாலின சமத்துவத்துக்கான கொள்கை ஏதுமில்லாத நிலையிலும் கூட இயற்கை உந்துதலின் பாற்பட்டு பெண்களுக்கான சில விசயங்களையாவது அவர்கள் செயற்படுத்துவதையும் நாம் பார்க்கிறோம். உதாரணமாக ஜெயலலிதா அம்மையார் போன்றோரை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு பெண்ணாக இருந்தாலும் தங்கள் தானைத்தலைவியாக இவரை ஏற்றுக் கொண்டிருக்கும் ஆண்களால் மட்டுமே அவர் அந்தத் தலைமைப் பதவியில் தொடர்ந்து நீடிக்கிறார். ஓட்டுப் போடுவதைத் தவிர வேறு எந்த அரசியல் நடவடிக்கையும் இல்லாத பெண்களை நம்பி அந்தப் பெண் தலைவர் வாழ முடியாது. ஒரு வகையில் அவருக்கு அது அரசியல் தற்கொலையாகும். எனவே அவர் பெண்ணாக இருந்த போதிலும் பெண்களின் தலைவி அல்ல மாறாக ஆண்களின் தலைவியே ஆவார்.தலைவியின் நிலையே இதுதான் என்பதை நான் சொல்லி விட்டேன்.
இனி மேற்கொண்டு கட்சியில் பொறுப்புகளேற்றிருக்கும் பெண்களைப் பற்றி சொல்ல ஏதுமில்லை. ஆண்களின் தயவை இரசனையை ஆதரவைப் பெற்றதால் மட்டுமே இவர்கள் அந்த இடத்தில் வைக்கப் பட்டிருக்கிறார்கள். இவர்களைச் சுற்றி இருப்பவர்கள் கூட பெரும்பாலும் பெண்கள் வரமுடியவில்லை. அப்படியே வந்தாலும் தோழிகளின் கதை சொல்லத்தரமாயில்லை.எனவே ஆண்களின் மேடையில் பெண்கள் ஏற்றப்படுவதில் கூட நாம் வரவேற்கத்தக்க விசயங்கள் உண்டுதானெனினும் அது பெண்கள் ஏற்றப்படுவதாலேயே பெண்களின் மேடையல்ல என்பதை மறந்து விடக் கூடாது.இதற்கு விதிவிலக்காக பெரிதாக யார் பெயரும் என் நினைவில் உடனே வரவில்லை அன்னை மணியம்மையாரைத் தவிர. ஏனெனில் அன்னை மணியம்மையார் தலைமையேற்ற திராவிடர்கழகக் கொள்கையில் உலகளாவிய பெண்ணியம் எற்கனவே மலர்ந்திருந்தது.எனில் பெண்களின் அரசியல் வெளியை இறுதியாகத் தீர்மானிக்கக் கூடிய வல்லமை எங்கிருக்கிறது என்றால் எவ்வளவு சிறிய முயற்சியெனினும் பெண்ணிய நோக்கிலான பெண்கள் இயக்கங்கள் மற்றும் பாலின சமத்துவத்தை அதனை அடைவதற்கான நீதியை தங்கள் முதன்மை இலக்காகக் கொண்ட பெண்களும் ஆண்களும் சமமாக இணைந்திருக்கும் இயக்கங்கள் இவற்றின் கையில்தான் இருக்கிறது.
சரி. அதற்கென்ன இப்போது என்று நீங்கள் கேட்கலாம். சமகாலத்திய இரண்டு அனுபவங்களை நான் பகிர விரும்புகிறேன். நான் முன்பே குறிப்பிட்டது போல் இந்த கால வெளியில் பதிவிட விரும்புகிறேன். இரண்டாண்டுகளுக்கு முன் நடந்தது இது. பொதுவெளியில் பெண்கள் பெண் அமைப்புகள் பற்றிய ஒரு பிரச்சாரம் எழுப்பப் பட்டது. பொதுவாக பெண்களுக்கான அனுதாபக் குரலை அனைத்து கட்சிகளும் முந்திக் கொண்டு எழுப்பும். ஆனால் பெண்ணுரிமை சார்ந்த பாலின சிக்கல்கள் குறித்த பிரச்சினையென்றால் அதனை கருத்து சொல்லத்தக்க விசயமாக எடுத்துக் கொள்ளாமல் புறக்கணித்து விடுவது அனைத்த கட்சிகளின் பழக்கம். ஆனால் பெண்கள் அமைப்புக்கு ஒரு நிலைப்பாடு எடுத்துத் தெரிவிக்க வேண்டிய கடப்பாடு இருக்கிறத என்று நான் கருதினேன். அப்போது அனைத்துப் பெண்கள் கூட்டமைப்பு ஒன்று இடதுசாரிப் பெண்கள் அமைப்பின் தலைமையில் ஏற்படுத்தப்பட்டிருந்தது. அந்த அமைப்பு இது குறித்துக் கருத்து கூற வேண்டுமென என் எதிர்ப்பார்ப்பு இருந்தது. ஆனால் அவர்கள் இறுதி வரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
ஏன் பாலினம் சார்ந்த கேள்விகள் வரும்போது அதன்மீது கருத்து தெரிவிக்க அந்த அமைப்புகளால் முடியவில்லை என்பது முக்கியமான கேள்வி என்று நான் கருதுகிறேன். அதன்பிறகு நான் எந்த கூட்டமைப்பிலும் சேரவில்லை. எமது அமைப்பாகிய புதியகுரலும் அதன்பின் எந்த கூட்டமைப்பு முயற்சியிலும் பங்கேற்கவில்லை. உண்மையில் அவர்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கான கூட்டமைப்பை கட்ட விரும்புகிறார்களேயொழிய தாங்கள் இருக்கும் கட்சிகளைத் தாண்டி பெண்களுக்கான தத்துவார்த்தமான ஓர் அமைப்பில் பங்கு பெறும் சுதந்திரத்தைக் கொண்டவர்களாக இல்லை என்பதே நான் கண்ட உண்மை. தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை இணைத்து கட்டப்படும் கூட்டமைப்புகளே அதில் சாத்தியமாகின்றன. இதனை நான் கண்டனக் குரலாக எழுப்பவில்லை. இந்த எதார்த்த நிலையை பதிவு செய்யவே முயல்கிறேன்.இரண்டாவது அனுபவம் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு. ஒரு கட்சியை தனிப்பட்ட முறையில் கட்டும் போது அய்மபது சதவீதம் பெண்களை பொறுப்பாளர்களாக வைத்து கட்டுங்கள் என்கின்ற கோரிக்கையை நான் வைக்க மாட்டேன். அந்த கோரிக்கை நடக்கும் வேலைகளையும் நடக்காமல் செய்வதற்கான கோரிக்கை என்பது எனக்கு நன்கு தெரியும். ஆனால் நீங்கள் கட்டுவது கூட்டமைப்பு. அதிலம் 150 அமைப்புகளை இணைத்திருக்கிறீர்கள். 150 அமைப்புகளும் பல்லாயிரக்கண்கான உறுப்பினர்களுடன் இருக்க வாய்ப்பில்லை என்பது ஒன்றும் சிதம்பர இரகசியமெல்லாம் இல்லை.
அப்படி இருக்க ஒரு சில பெண்கள் மற்றும் பெண்ணிய அமைப்புகளை இணைக்க வேண்டும் என்றோ அந்த மேடையில் குறைந்தது நான்கைந்து பெண்களையாவது உட்கார வைக்க வேண்டும் என்றோ சிந்திக்கக் கூடவா இவர்களுக்கு முடியவில்லை? பெரியார் பெயரை நீங்கள் வைத்த காரணத்தினால் இந்தக் கேள்வி. இல்லையென்றால் கேட்க மாட்டோம். பொதுவாக பெண்கள் உதிரிகளாக இருந்தால் அவர்களை புரட்சியாளர்களாக ஆதரிப்பதில் இருக்கும் ஆர்வம் அவர்கள் அமைப்பு கட்ட முயற்சிப்பவர்களாக இருந்தால் ஏன் வருவதில்லை…..மீண்டும் சொல்கிறேன். இந்தக் கேள்விகளை நான் கண்டனக் குரலாக எழுப்பவில்லை. இவ்வளவுதான் இதுதான் இன்றைய நிலையில் உண்மை என்று எடுத்துக் காட்டவே எழுப்புகிறேன். அரசியலில் பெண்களுக்கு தரப்பட்டிருக்கும் இடம் பெண் விடுதலைத் தத்துவத்துக்கு தரப்படவில்லை என்பதற்கு இவையெல்லாம் சாட்சிகள். அவ்வளவுதான்.