பெண்பாற் புலவர்களிற்கான மகளிர் தினம்! பிறிசில்லா ஜோர்ஜ். பெண்ணுக்கென வகுக்கப்பட்ட அச்சம்இ மடம்இ நாணம்இ பயிர்ப்பு எனும் இலக்கியப் பண்புகளைத் துடைத்து அன்புஇ கண்ணியம்இ துணிவுஇ தெளிவு ஆகிய பாக்கியப் பண்புகளைத் தன்னகத்தே உட்புகுத்தி உன்னதமான படைப்பினமாக திகழும் பெண்ணின் பெருமையை உலகிற்கு பறைசாற்றும் முகமாக வருடாவருடம் மார்ச் 8ம் நாள் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகின்றது. இந்நாள் கொண்டாட்டத்திற்குரிய நாளாக பிரகடனப்படுத்தப்பட்ட போதிலும் இன்றுவரை இந்நாளை போராட்டத்திற்குரிய நாளாகவே நாம் காண்கின்றோம். மானுட வாழ்க்கையில் பெண்ணானவள் பற்பல பெயர்களுடன் பற்பல பதவிகளை வகுத்தாலும் 21ம் நூற்றாண்டிலும் கூட பெண்களுக்கான அடக்குமுறையும் அவமரியாதையும் மேலோங்கிக் கொண்டே செல்கின்றது என்பது மிகையாகாது. கல்விக்கும் பொருளாதாரத்திற்கும் பெண்கள் செய்யும் பங்களிப்பு அளப்பெரியதாக அமைந்தபோதிலும் பெண்கள் சந்திக்கும் இடர்பாடுகள் ஓய்ந்ததாக இல்லை. இக்காலத்திலும் தடைகளை தகர்த்து வெளியே வரும் பெண்கள் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியதாகவேயுள்ளது.
மேலும் கலாச்சாரப் போர்வைகள் பெண்களின் முன்னேற்றத்திற்கு பாரிய தடைகளாக இருந்தாலும் அக்கலாச்சாரத்தினூடேயே பெண்கள் தமது உயர்வை நிலைநாட்டியுள்ளனர். கடந்த காலங்களில் பெண்களுக்கான சம ஊதிய உயர்விற்காக ஜரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளில் அநீதிக்கு ஆளான பெண்களால் தொடங்கப்பட்ட போராட்டத்தின் விளைவாக மீட்கப்பட்ட உரிமைகளை தான் இன்றைக்கு நாம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். இப்போராட்டத்தின் ஒரு அங்கமாகவே மகளிர் தினம் மிளிர்கின்றது. சவால்களை தகர்த்து, சாதனைகள் பல படைக்க; உறுதியான மனம், உயர்வான எண்ணங்கள், வலிமையான ஊக்கம் உடைய மனவுறுதி கொண்ட பெண்கள் தான் தகுதியானவர்கள். “பெண் இன்றிப் பெருமையும் இல்லை; கண் இன்றிக் காட்சியும் இல்லை” எனும் முதுமொழிக்கமைய மண் முதல் விண் வரை சமூகத்தின் எத்துறையிலும் தங்கள் ஆளுமைகளை பெண்கள் விருத்தி செய்திருக்கின்றனர். ஏக்கத்துடன் காத்திருந்து ஏமாளியாகிப் போகும் பெண்ணினம் தான் பலரது வாழ்க்கைக்கு ஏணிப்படியாக இருக்கின்றது என்பதை நாம் மறக்கலாகாது. மானிட சமூகம் நாகரீகம், பொருளாதாரம், தகவல் தொழில்நுட்பம் என பலவகைகளில் வளர்ச்சியடைந்தாலும்; ஆண்களுக்கு சமமாக பெண்கள் முன்னேறுவதற்கு முட்டுக் கட்டைகள் காணப்படும் இன்றைய காலகட்டத்திற்கு சாவால் விடும் வகையில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பெண்பாற் புலவர்கள் போற்றுதலுக்குரியவர்கள்.
சங்க காலத்திலேயே பெண்கள் கல்வியில் சிறந்தவர்களாகவும் தலைமைப் பண்பு மிக்கவர்களாகவும் திகழ்ந்து சரித்திர சாதனை புரிந்துள்ளனர். அந்தவகையில் ஓளவையார், காவற்பெண்டு, பாரிமகளிர், குறமகள் இளவெயினி, வெண்ணிக்குயத்தியார், நன்முல்லையார், வெண்பூதியார், காக்கைபாடினியார், நச்சௌளையார், காரைக்காலம்மையார் போன்றோர் நாள்தோறும் நினைவுகூறப்பட வேண்டியவர்கள். அக்காலத்திலேயே இப்புலவர்கள் மன்னர்களுக்கு ஆலோசனை கூறி, துணிவுடன் அரசியலில் ஈடுபட்டமையும், கண்ணியத்துடன் தங்களது திறமைக்கேற்ப ஊதியம் பெற்றமையும், அன்புடன் தூது சென்றமையும், தெளிவுடன் வாதம் செய்தமையும் இக்கால பெண்களுக்கு எடுத்துக்காட்டாகவே அமைகின்றது. இவர்கள் வழிவந்த எல்லாப் பெண்களும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்களல்லர். அவர்கள் சமூகத்தை நேசிப்பவர்களாகவும் அநீதியைத் தட்டிக் கேட்பவர்களாகவும், அடக்குமுறையை அழிப்பவர்களாகவும் திகழ்கின்றனர். காரைக்கால் அம்மையார் பக்தி இலக்கியமான பெரிய புராணத்தில் நாயன்மார்களுக்கு இணையானவர்களாக கருதப்பட்ட 3 பெண்கள் காரைக்காலம்மையார், இசைஞானியார், மங்கையர்கரசியார் ஆவார்கள். இவர்களுள் மூத்தவர் காரைக்காலம்மையாராவார்.
இவர் இசைத்தமிழால் இறைவனைப் பாடியுள்ளதுடன் தமிழுக்கு அந்தாதி எனும் இலக்கண முறையையும் அறிமுகம் செய்தவராவார். இவர் பதினொராம் திருமுறையுள் இரண்டாவதாக இடம்பெற்றுள்ள பனுவல்களை பாடியுள்ளார். இதில் 4 பனுவல்கள் உண்டு. அவையாவன அற்புதத் திருவந்தாதி (101 பாடல்கள்), திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் 1ம் 2ம் (11 பாடல்கள் – (10 பாடல்கள், 1 திருக்கடைக்காப்பு பாடல்)) திரு இரட்டை மணிமாலை (20 பாடல்கள்) போன்றனவாகும். இவரது பதிக முறைகளைப் பின்பற்றியே பிற்காலத்தில் தேவாரப் பதிகங்கள் இயற்றப்பட்டன எனக் கூறப்படுகின்றது. “பிறவாமை வேண்டும், மீண்டும் பிறப்புண்டேல் இறைவா உனையென்றும் மறவாமை வேண்டும்” என இறைவனை உருகி உருகி பாடியவர். இவருக்கென புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் தனிக்கோயில் அமையப்பெற்றது வரலாற்று சிறப்பு வாய்ந்ததாகும். “கணவனுக்காக தாங்கிய உடல் நீங்கி, இறைவனைப் போற்றுகின்ற பேய் வடிவத்தை அடியேனுக்கு அருளவேண்டும்” என இறைவனிடம் வேண்டி சிவபூதகண வடிவம் பெற்றார். இவர் தனது பெண்மைக்குரிய அழகை தானே வெறுத்து ஒதுக்கி யாருமே பார்க்க முடியாத பேய் வடிவத்தைப் பெற்றார்.
பொதுவாகப் பெண்ணானவள் காலாகாலமும் கவர்ச்சிப் பொருளாகப் பார்க்கப்படும் தனது உடலை எண்ணில் அடங்காத அழகு சாதனங்கள், வாசனைத் திரவியங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி மெருகூட்டி அதற்காக தேவையற்ற செலவுகளை செய்து, அளவுக்கதிகமான நேரத்தை வீணாக்கும் காலத்தில் தனது உடலை சிதைத்து “பெண்மையின் உடல் கட்டமைப்பு” எனும் வரையறையை தகர்த்துள்ளார். இத்தகைய “சிந்தையில் தெளிவு” கொண்ட பெண்ணின் சிறப்பு எந்தக்காலத்திலும் வாழும் பெண்களுக்கு எடுத்துக்காட்டாகும். ஒளவையார் சங்ககாலப் புலவர்களுள் ஒருவராக போற்றப்படும் ஒளவை எட்டுத்தொகையில் உள்ள புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை ஆகிய நான்கு நூல்களில் மொத்தம் 59 பாடல்களை இயற்றியுள்ளார். அதில் 33 புறத்திணைப் பாடல்கள், 26 அகத்திணைப் பாடல்கள் ஆகும். தமிழ் மொழியின் தொன்மையை உலகுக்குப் பறைசாற்றும் விதத்தில் தமிழ்த்தொண்டு புரிந்தவர். மனித வாழ்வுக்கேற்ற மகத்தான தத்துவங்களை ஒருவரிக் கவிதைகளாக புனைந்து எளிய முறையில் ஆழமாகப் பதியும் வண்ணம் வாரி வழங்கியவர்.
ஆயிரம் ஆண்பாற் புலவர்கள் இருப்பினும் அவர்களுக்கெல்லாம் ஈடு கொடுக்கும் வகையில் ஒளவைப் பெருமாட்டி தனது புலமையாலும் பண்பாலும் சிறந்து விளங்கியமை போற்றுதற்குரிய சிறப்பேயாகும். இத்தகைய சிறப்பு மிக்க புலவர் மூவேந்தர்களை நாடி, அவர்கள் அரண்மனைகளில் தங்கி வாழ விரும்பாது தகடூரை ஆண்ட சிறுகுறுநில மன்னனான அதியமான் நெடுமான் அஞ்சியின் உற்ற நண்பராகி அவனது அவைக்களப் புலவராய் இறுதிவரை திகழ்ந்தார். இம்மன்னன் சேர வேந்தனோடு பொருது நின்ற காலத்திலும் இவர் தன் நண்பனுக்காகவே வீரம் செறிந்த பாடல்களைப் பாடினார். இவ்வாறு மனிதநேயம் மிக்க பண்போடு கண்ணியமான நட்பிற்கு இலக்கணமாய்த் திகழ்ந்து வாக்கும் வாழ்வும் சிறக்க வாழ்ந்து காட்டியவராவார். சிவரமணி யாழ்ப்பாணம் ஆனைப்பந்தியில் பிறந்த ஈழத்துப் பெருங்கவிஞை சிவரமணி இறந்து பல தசாப்தங்கள் ஆனாலும் அவரால் எழுதப்பட்ட கவிதைகள் இன்றும் நம்மிடையே வாழ்ந்துகொண்டிருக்கின்றன. தனது 23 வயதில் சுய அழிப்பால் தன் வாழ்வை முடித்துக் கொண்ட இவர் கலை-இலக்கிய வெளிப்பாடுகளில் பொதுப்படையாக ஆர்வம் கொண்டிருந்தார். இவர் தனியாற்றல் மிக்க பெண்ணாக வலம் வந்தபோதிலும் மத்தியதர வர்க்க வீடுகளிலிருந்து பொது வெளிக்குள் நுழையும் பெண்கள் உள்ளும் புறமும் சந்திக்க வேண்டியிருந்த பல்வேறு பிரச்சனைகளால் மனரீதியான அழுத்தங்களை அதிகமாகவே அனுபவித்திருப்பார் என்பது மிகையாகாது.
இவரது காலத்தில் நிலவியிருந்த ஜனநாயகமின்மை போக்கானது அக்கால முற்போக்கு சிந்தனையுடைய இளைஞர் யுவதிகளை வெகுவாக பாதித்தது போலவே இவரையும் பாதித்ததால் இவரது படைப்புக்களும் ஈழத்துத் தமிழரசியல் எழுச்சியின் பகைப்புலத்தில் உருவாகிய ஒன்றாகவே கருதப்படுகின்றது. சாதாரணமான வார்த்தைகளில் ஆழமான உணர்ச்சிகளை பிரவாகித்து அழகுணர்வுக்கு அப்பாற்பட்டுப் பாடுபொருளில் வேரூன்றி இவரது கவிதைளும் கவிதா நிகழ்வுகளும் காணப்பட்டன. இவரது இறப்பை ஒரு தனிமனித இழப்பாக மட்டும் கருதாமல் அக்கால நிலவரங்களின் குறிகாட்டிகளுள் ஒன்றாகவே கருதத் தோன்றுகின்றது. “எனக்குப் பின்னால் எல்லாப் பரம்பரைகளும் கடந்து கொண்டிருந்த வெளியில் நானும் விடப்பட்டுள்ளேன்.” என அறிவிப்புச் செய்யும் சிவரமணி நமது காலத்து ஈழத்துக் கவிதையின் கவித்துவச் சாட்சியாகவும் மனச்சாட்சியாகவும் திகழ்கின்றார். இவர் துணிவோடு படைத்த கவிதைகளின் காத்திரம் தமிழ்க் கவிதை வரலாற்றில் இவரைத் தவிர்க்க முடியாத ஆளுமையாக ஆக்கியுள்ளது. பத்தினியம்மா வடமராச்சி கரவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் சிதம்பர பத்தினி எனும் புனைபெயரில் தனது 16 வயது முதல் ஈழத்துப் பத்திரிகைகளில் கவிதை, சிறுகதை, கட்டுரை, வானொலி நிகழ்ச்சிகள், மேடைப்பேச்சு ஆகிய கலை இலக்கியத் துறையிலும் ஆன்மீகத் துறையிலும் ஆற்றல் மிக்கவராகத் திகழ்ந்தார்.
இவர் பெண் விடுதலை, காதல், குடும்பம், ஆண்களின் அடக்குமுறை காரணமாக அவதியுறும் பெண்களின் நிலை பற்றி தனது சிறுகதைகளினூடாக வெளிப்படுத்தியுள்ளார். தனது சிறுகதைகளில் பல்வேறு குணவியல்புகளைக் கொண்ட பெண்களை அறிமுகப்படுத்தியுள்ளார். குழந்தைகளுக்காக மழலை அமுதம், தேவதை ஆகிய கவிதைகளையும் எழுதியுள்ளார். பேராதனைப் பல்கலைக்கழக கலைப்பட்டதாரியான இவர் பாலபண்டிதர், சைவப்புலவர் பரீட்சையில் சித்திபெற்றுள்ளார். இலங்கை நிர்வாக சேவையில் இணைந்து பல காலம் சேவை செய்துள்ளார். வலி வடக்கு பிரதேச செயலகத்தின் “வசந்தம்” எனும் மாதாந்த சஞ்சிகையை முன்னின்று இயக்கி அம்மலரின் ஆசிரியையாகவும் இருந்து சில கட்டுரைகளை எழுதியுள்ளார்.
கவியரங்கம், கருத்தரங்கம் ஆகியவற்றிலும் தன் திறனாற்றலை வெளிப்படுத்தியதோடு “இணைந்தது ஒன்று” எனும் நாடகத்தையும் எழுதி நெறியாள்கை செய்துள்ளார். காதல், குடும்பம் என வாழ்க்கையின் அன்பான பக்கங்களை எழுத்துருவில் தந்த இவரை இந்நாளில் நினைவுகூறுவது சாலப்பொருந்தும். இவர்களைப் போன்று இனிவரும் பெண் சமுதாயமும் எழுத்தாளர்கள், இசையரசிகள், சொற்பொழிவாளர்கள், தலைவர்கள், ஆராய்ச்சியாளர்கள் எனப் பல்வேறு துறைகளிலும் கொடிகட்டிப் பறப்பது நாட்டிற்கும் வீட்டிற்கும் பெருமை என்றும் பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என்றும் நினைத்து சாதிப்போம், சாதிக்க இடமளிப்போம். மேலும் வெறும் பண்பாட்டுச் சித்திரங்களாகவும் சமூக அடிமைகளாகவும் பார்க்கப்பட்ட பெண்கள் நவீன உலகில் ஆளுமை மிக்க பெண்களாகவும் பொருளாதார அரசியல் மோதல்களிலும் உரிமைக்கான போர்க்களங்களிலும் பங்காளிகளாகவும் மிளிர வேண்டும். இவற்றை மனதில் நிறுத்தி பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்ற பாரதியின் கனவுகளை நனவாக்குவோம் என்று இம் மகளிர் தினத்தில் திடசங்கற்பம் மேற்கொள்வோம். நன்றி பிறிசில்லா ஜோர்ஜ்