10.04.2022 ஒஸ்லோ Rommen Sceneஇல் என் மூன்று புத்தகங்களின் அறிமுகம், ‘ஒட்டகங்களின் பயணம்’ அரங்காற்றுகையுடன் இன்னுமோர் நிகழ்வும் சமாந்தரமாக முன்னெடுக்கப்பட்டது. நோர்வே தமிழ் புத்தகக் காட்சியும் விற்பனையும் அந்நிகழ்வாகும் . நோர்வேயிலுள்ள எழுத்தாளர்களினதும் உட்பட பிற புத்தகங்கள் பலவும் பார்வைக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டிருந்தன.
புத்தகங்களை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தவும் ஆர்வமுள்ள வாசகர்களின் கைகளில் சேர்ப்பதற்குமான முனைப்பில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.குறுகிய கால ஏற்பாடாகவிருந்தாலும் பொது அறிவித்தலோடு மட்டும் நின்றுவிடாது நோர்வேயிலுள்ள எழுத்தாளர்கள் பலரையும் நேரில் தொடர்புகொண்டு அவர்களின் புத்தகங்களைக் கண்காட்சியில் வைப்பதற்குரிய தகவலை வழங்கினோம். பலரும் தமது புத்தகங்களின் பிரதிகளைத் தந்து ஒத்துழைப்பினை வழங்கினர். இன்னும் சில நண்பர்கள் தம்மிடமிருந்த பல்வகைப் புத்தகப் பிரதிகளைத் தந்துதவினர். அவர்கள் அனைவருக்கும் நன்றியைப் பகிர்ந்து கொள்கின்றோம்.இம்முறை பரீட்சார்த்த முயற்சியாகத் தொடங்கப்பட்ட இந்நிகழ்வினை அடுத்த ஆண்டிலிருந்து முழுநாள் நிகழ்வாக நடாத்த எண்ணியுள்ளோம். ‘நோர்வே தமிழ் புத்தகக் காட்சி’ எனும் தனிநிகழ்வாக புத்தக அறிமுக அரங்குகள், இலக்கிய உரையாடல்களுடன் நடாத்தவுள்ளோம். இத்திட்டத்தில் இணைந்து பணியாற்ற விரும்புபவர்கள் என்னுடன் தொடர்பு கொள்ளலாம்.
இன்றைய காலத்தில் வாசிப்புப் பழக்கம் அருகிவருகின்றமை கவலைக்குரியது. சமூக வலைத்தளங்களில் நுனிப்புல் மேய்வதே பெரும்பான்மையினரின் அதிகபட்ச வாசிப்பு என்றாகியுள்ளது.வாசிப்பினைத் தூண்டுவதும் – புதியவையும் பயனுள்ளதுமான புத்தகங்களை அறிமுகப்படுத்துவதும் – வாசகர்களின் கைகளில் புத்தகங்களை இலகுவில் கிடைக்கச் செய்வதும் – புத்தக உரையாடல்களுக்கான களத்தினை அமைப்பதும் இத்தகைய நிகழ்வினை ஏற்பாடு செய்வதற்கான தேவையை உணர்த்தி, உந்துதலைத் தருகின்றது.நன்றி
Rooban Sivarajah