புரோட்டீன்கள்
|
சுதா: போன முறை சித்திரலேகாவின் பேட்டியில் உள்ள அரசியல் பற்றி கதைக்க நேரமிருக்கவில்லை. இந்த முறையாவது சில விஷயங்களைச் சொல்லலாம் என நினைக்கிறேன். இந்தப் பேட்டியில் சித்திரலேகாவுக்கு கோணேஸ்வரிகள் கவிதையோடும் பிரச்சனை. அதை எழுதிய கலாவோடும் பிரச்சனை.முதலில் சொல்கிறார் கவிதையில் “சிங்களப் பெண்களை விரோதிகளாகப் பார்க்கிற தன்மையும், அந்தக் காலகட்டம் தொடர்பான போதிய விளக்கமின்மையும்” இருக்கிறதாம். பிறகு சொல்கிறார் கலா “சிறிய சிறிய வேலைகளை” சரிநிகரில் செய்துகொண்டிருந்தாராம்.
இதே கலா “எமது சிங்களச் சகோதரிகளே உங்கள் யோனிகளைத் திறந்து வையுங்கள்” என்பதற்குப் பதிலாக “எமது தமிழ்ச் சகோதரிகளே என்றோ எமது சகோதரிகளே” என்று விளித்திருந்தால் “பெரிய பெரிய வேலைகளைச் செய்யும்” சித்திரலேகா என்ன செய்திருப்பார்? அதையும் இப்படித்தான் மறுத்திருப்பார். ஏனென்றால் இதே பேட்டியில் ‘எப்போதும் முலைகள் என்று எழுதிக் கொண்டிருக்க முடியாது’ என்கிறார். (இதிலிருந்து தெரியவில்லையா சித்திரலேகாவின் கோபம் ‘சொல்’லுக்கானதே என்று) ‘எப்போதும் முலைகள் என்று எழுதிக் கொண்டிருக்க முடியாது’ என்ற கண்டுபிடிப்பைச் சொல்லத்தானா ஐந்தாறு மாதங்கள் தமிழ்நாட்டில் தங்கியிருந்தார்.
தமிழ்நாட்டிலும் சரி, புலம்பெயர், ஈழத்து பெண் எழுத்துகளிலும் எவரும் முலையையும், யோனியையும் மட்டுமே எழுதிக்கொண்டிருக்கவில்லை. அது மட்டுமே பெண்மொழி என்று எந்தப் பெண் படைப்பாளியும் சொல்லவில்லை. அவர்கள் தமக்கான வாழ்வின் ஃமொழியின்ஃஅரசியலின் தேடலில், உருவாக்கத்தில், பல பரிசோதனைகளைச் செய்ய வேண்டியவர்களாக இருக்கிறார்கள். சொற்களை மறுப்பதும், கோர்ப்பதும், உருவாக்குவதும், சிதைப்பதுமான தேடல்களில் இருக்கும் போது இப்படியான குற்றச் சாட்டுகளை வைக்கும் உங்களுக்கும், மரபுவழியில் நிற்கும் ஓர் கொழுத்த ஆணாதிக்கவாதிக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?
அடுத்து தமிழ்நாட்டில் பெண்கள் செயற்பாடுகள் தனித்தனியாக இயங்குவதாகவேயுள்ளது, ஒற்றுமையில்லை….மொழி பற்றிக் கதைப்பவர்கள் வேறாக இயங்குகிறார்கள் என்றெல்லாம் சித்திரலேகா சொல்கிறார். அப்படியானால் என்ன பன்மைத்துவம் இன்றி ஒரே குட்டையில் கிடந்து ஊறிக்கொண்டிருக்கச் சொல்கிறாரா? பெண்களுக்கு இருக்கும் பல திறன்களையும், திறமைகளையும், ஆளுமைகளையும் வௌ;வேறு துறைகளில், தளங்களில், பார்வைகளில் சமூகத்தின் பல மட்டங்களிலும் வளர்த்துக் கொள்ளவே நாங்கள் விரும்புவோம்.
இந்த ஒரே குடைக்குக் கீழ் அனைத்தையும் வைத்து அரசியல் பண்ணுவதை ஆபத்தான போக்காகவே பார்க்கவேண்டியிருக்கிறது. ‘ஒரு குடைக்குக் கீழ்’ என்ற அதிகாரப்பரவலாக்கம் இல்லாத கோட்பாடு, எதேட்சையான அதிகாரத்துக்கு வழியிட்டுச் செல்லும். பெண்களின் சுயாதீன முன்னேற்றம் பற்றி பேசுபவர்கள் பன்மைத்துவ வெளியில் வௌ;வேறு இயங்குதளங்களில் இயங்குதலே நல்லது என நான் நினைக்கிறேன்.
துளசிகா – நாங்கள் அடுத்த விஷயத்துக்கு போகலாமா? (மல்லி குறிப்புகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்)
சுதா – சரி. மல்லி நீ சொல்.
மல்லி – நான் அனாரின் கருத்துகளுக்கு வருகிறேன். தமிழ் இலக்கியவரலாற்றில் ஆண்டாள், ஒளவையார், வெள்ளிவீதியாரின் பாடல்கள், கவிதைகளை சமூகம் ஏற்றுக் கொண்டிருக்கிறதே அப்படியானால் ஏன் பெண்மொழி சார்ந்த சொற்களை இன்றைய சமூகம் ஆபாசம் என்கிறது எனும் பொருள்பட மலர்ச்செல்வன் கேட்ட கேள்விக்கு அனாரின் பதில் என்னைச் சொக்கவைத்தது.
சுதா – என்ன உங்களச் சொக்க வைச்சதோ?
(சுதா கதிரையை விட்டெழுந்து போய் மல்லியின் வலச் சொக்கையை விளையாட்டாய்க் கிள்ளுகிறாள். சுதா, துளசிகா, மல்லி மூன்று பேரும் கிடந்து சிரிக்கிறார்கள்)
‘விளையாடாம கதய கேளுங்கடி’ என்று விசயத்துக்கு வந்தா மல்லி.
மல்லி: அவை கடவுளைப் பற்றிய பாடல்கள் என்பதால்தான் அனுமதித்திருக்கிறார்கள் என்று அனார் சொல்கிறார். ஆண்டாள் கண்ணனை நோக்கிப் பாடிய பாடல்களைப் பற்றி சித்திரலேகா இரண்டு நிமிடத்துக்கு முன் பேட்டியில் சொன்னதை வைத்துக்கொண்டு ஒளவையாரும், வெள்ளிவீதியாரும் கடவுளைப் பற்றிய பாடல்களைப் பாடினார்களாம். இன்றைக்கு ஒரு ஒளவையைப் பற்றிக் கதைப்பதை விடுத்து பல ஒளவைகளைப் பற்றிக் கதைக்கும் காலத்தில் இருக்கிறோம். இந்தப் ‘பல’ ஒளவைகளும் ‘பழம் நீ அப்பா ஞானப்பழம் நீ அப்பா’ என்று கே.பி.சுந்தராம்பாள் உருவத்தில் திரிபுண்டரந் தரித்த கோலத்தில் மட்டும் திரியவில்லை. பல ஆளுமைகளையுடைய பல ஒளவைகளை, கடவுள் பாடல்களை மட்டுமே பாடிய ஒரு ஒளவையாக அனார் சித்தரித்திருப்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயமல்ல.
இந்த ‘பல’ ஒளவையார்கள் ஆத்திசூடியில் இருந்து, விநாயகர் அகவல், அகநானூறு, குறுந்தொகை, புறநானூறு என பலவகை செய்யுள் மற்றும் பாடல்களைப் பாடியவர்கள். வெள்ளிவீதியார் எங்கே கடவுள் பாட்டுப்பாடினார்? இந்த தமிழ் இலக்கிய வரலாற்று அடிப்படையைக் கூட அறிந்து வைப்பதில்லையா?
அது மட்டுமல்ல அனார் ஒளவையார், வெள்ளிவீதியார் போன்றாரின் பாடல்கள் பற்றி மேலும் கூறுகிறார். இப்பாடல்களை ‘ஆணை நோக்கிப் பாடுகின்றேன் என்றோ, ஆணை நோக்கியோ பாடப்பட்டிருந்தால், பாடமுயன்றிருந்தால் அதனை சமூகம் அங்கீகரித்திருக்காது’ என்கிறார்.
இந்த ஒளவையார்கள் கம்பன் என்ற பெருங் கவிஞனை நோக்கியும், மூன்று ராசாமாரான சேர சோழ பாண்டியர்களை நோக்கியும் (சந்தேகமற இவர்கள் ஆண்கள் தான் என்கிறது history) பாடியஃசாடியஃசண்டைக்குப் போன பல பாடல்கள் தமிழ் இலக்கியத்தில் இருக்கின்றன. இந்தப் பேட்டியில் மலர்ச்செல்வன் மேற்கோள் காட்டியிருக்கும் ‘முட்டுவன் கொல் தாக்குவவேன் கொல்’ என்ற பாடல் கூட தூங்கும் ஊரைத் திட்டும் பாடல். ஆணை நோக்கி மட்டுமல்ல முழு ஊரையுமே நோக்கிப் பாடும் பாடல். அதை அக்காலச் சமூகம் அங்கீகரித்தது என்பதுதான் உண்மை. (இதைத்தான் மலர்ச்செல்வன் பாடல் மூலம் நாசூக்காக மேற்கோள் காட்டினார்)
இந்த அடிப்படைகள் கூடத் தெரியாதுஃதெரிய விரும்பாது சகட்டுமேனிக்கு பெண்மொழி, பெண்எழுத்து பற்றி அனார் உளறுவது ஏன்? அத்தோடு இந்த அடிப்படைப் புரிதல் இல்லாது பாணன், குறிஞ்சியின் தலைவி, பாலை, மருதம், கள், களிவெறி, மலைத்தேன், வெந்த இறைச்சி போன்ற பதங்களை சரமாரியாக கவிதைகளில் என்ன விளக்கத்தோடு தூவிவிடுகிறார் என்பதற்கு அவர்தான் பதில் சொல்லவேண்டும்.
அனாரின் வாசிப்பு ஆர்வம் மட்டுப்படுத்தப் பட்டதாக இருக்கலாம். அது அவரின் தனிப்பட்ட தெரிவு. அது குறித்து நான் ஏதும் சொல்லவில்லை. ஆனால் பொதுவெளியில் பேட்டி என்று ஒளவையார், வெள்ளிவீதியார் போன்றோரின் பங்களிப்புக்களைக் கூட திரித்துவிடும் காரியத்தை செய்யும் போது அதைக் கேள்விக்குட்படுத்த வேண்டியிருக்கிறது.
துளசிகா – மறுகா பேட்டியில் பதிப்பக அரசியல் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு (பக்கம் 14ஐ வாசிக்கிறேன்) அனார் சொல்கிறார், “பதிப்பகங்கள் ஏதோ ஒரு அரசியலுடன் செயற்படுகின்றன”….. பெண்களின் எழுத்துக்களை வெளியிடுவோர் அவற்றை வியாபாரமாக்க முயல்கிறார்களாம். “இதன் மூலம் அவர்கள் இலாபமடையலாம். இது தவிர்க்கமுடியாததாகி விடுகிறது. இங்குள்ள சூழலில் பெண்களே பதிப்பித்து வெளியீடு செய்கின்ற நிலமை இல்லை. அவ்வாறான தனித்த நோக்கமுடைய ஒரு பதிப்பகமும் இல்லை”….என்று கூறிப் பின் பல்கலைக்கழகங்களையும், பல்வேறு அமைப்புகளையும் பொத்தாம் பொதுவில் திட்டத்தொடங்குகிறார்.
பதிப்பகங்கள் அரசியலுடன்தான் செயற்படுகின்றன. ஏன் நம்மில் எல்லோருமே பல்வேறுபட்ட அடையாளங்களுடனும் அவற்றுடனான அரசியலுடனும் தான் வாழ்கிறோம். விழிப்பாய் இருப்பது நம் தெரிவு. ‘ஏதோ’ ஒரு அரசியலுடன் செயற்படும் பதிப்பகங்கள், நமது அரசியல்களுக்கு ஒத்துவருமா, நமது எழுத்துக்களை மலின வியாபாரமாக்குவார்களா என்றெல்லாம் பார்த்து, தேர்ந்து வெளியிடுவது அனார் என்ற படைப்பாளியின் – பெண் இருப்பின் செயற்பாடுகளில் ஒன்று. ஆனால் அனார் அந்தப் பிரச்சனைக்கு நேரடியாக முகங் கொடுக்காது ‘அது தவிர்க்க முடியாதது’ என்று நழுவிக்கொள்கிறார்.
போதாததற்கு மேலும் சொல்கிறார் அனார் பெண்களே பதிப்பித்து வெளியீடு செய்கின்ற, தனித்த நோக்கமுடைய ஒரு பதிப்பகமும் இல்லையா(என்ன ஒரு புழுகு).
புதுஉலகம் எமைநோக்கி (சக்தி) ‘உயிர்வெளி’ பதிப்பித்த (சூரியா பெண்கள் அபிவிருத்திச் நிலையம்), விஜயலட்சுமியின் ‘வானம் ஏன் மேலே போனது’, பஹீமா ஜஹானின் ‘ஒருகடல் நீரூற்றி’ பதிப்பித்த (பனிக்குடம் பதிப்பகம்), பெண்ணியாவின் ‘என் கவிதைக்கு எதிர்த்தல் என்று தலைப்பு வை’, “மை” ‘இசை பிழியப்பட்ட வீணை’ – மலையகப் பெண் கவிஞர்களின் கவிதைகள் பதிப்பித்த (ஊடறு பதிப்பகம்), இவையெல்லாம் பெண் படைப்புகளை பதிப்பித்து வெளியிடவில்லையா?
சூரியா பெண்கள் அபிவிருத்திச் நிலையம் சக்தி, பனிக்குடம், ஊடறு போன்ற பெண் பதிப்பகங்கள் மூலம் தமது படைப்புக்களை வெளியிட்ட பெண் படைப்பாளிகளின் சிந்தனை, செயற்பாடுகளை ஒரே வரியில் இப்படி மறுதலிக்க வேண்டியதன் காரணம் என்ன? பெண் பதிப்பாளர்களை, பெண் எழுத்து வெளியீட்டாளர்களை – எத்தனையோ கஷ்டங்களுக்குள் அவர்கள் முன்னெடுத்துச் செல்லும் பெண்ணியச் செயற்பாடுகளை – அனார் எதற்காக இருட்டடிப்புச் செய்கிறார்?
சுதா – இப்படி எந்த முதிர்ச்சியுமற்று அனார் போன்றவர்கள் கதைப்பதை வைத்துக் கொண்டு பார்க்கும் போது பெண் இருப்பிற்கான செயற்பாடுகள் கேலிப் பொருளாக, பகடிக் குரியதாக பார்க்கப்படும் அபாயங்கள் அதிகமாகுமே தவிர குறையாது.
மல்லி: கண்டிப்பா குறையாது. இவர்கள் போன்றவர்களின் பொறுப்பற்ற வார்த்தைகளால், மீண்டும் மீண்டும் அடிப்படையான விஷயங்களையே சொல்லவும், திருப்பித் திருப்பி கோனார் நோட்ஸ் மாதிரி விளக்கத்தை இவர்கள் போன்ற ஆட்களுக்கு கொடுக்கவுமே நேரம் கடந்து போகிறது.
துளசிகா – கோனார் நோட்ஸா அதென்ன? (பொய்யாய் முகத்தை வைத்துக் கேட்கிறாள்)
மல்லி – அடிபடுவடீ (சிரித்தபடி மறுகா இதழ்-6ஆல் அடிப்பது போல் அசைக்கிறாள்)
சுதா – நாளைக்கு ஊருக்குப் போகவேணும். வேலையள் கிடக்கு. வாங்கோ மிச்சத்தை பிறகு கதைப்பம்.
மறுகா பற்றிய வாசக உரையாடல் அடுத்த பகுதியுடன் முடிவடையும்