நான் கண்ட அற்புத ஆளுமை கெகிராவ ஸுலைஹா….Foumi Haleemdeen

எழுத்தாற்றலும் ஆர்வமும் இருந்தால் ஆக்கங்கள் பிறக்கும் . அவ்வாறு பிறக்கும் ஆக்கங்கள் பொதுவாக அவரவர் தாய் மொழியில் எழுதப்பட்ட படைப்புகளாகவே காணப்படும் . சில படைப்பாளிகளது பிரத்தியேக ஆற்றல் அவர்களது தாய் மொழியையும் தாண்டி பிறமொழிப் படைப்புகளின் மொழிபெயர்ப்பாக உருவாகும். இவ்வாறான இலக்கிய ஆளுமைகளில் நான் கண்ட ஒரு சிறப்பாற்றல் மிக்கவர் கெகிராவ ஸுலைஹா. 
கெகிராவையின் பிரபல எழுத்தாளர் மர்ஹுமா ஸஹானாவின் சகோதரி இவர். கெக்கிராவ முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அதிபராகக் கடமையாற்றினாலும் இலக்கியத்துக்கான இவரது பங்களிப்பு அபரிமிதமானது. 

க ட்டுரைகள், சிறுகதைத் தொகுதி, கவிதைத் தொகுதி, குறுநாவல், ஆய்வு , சுயசரிதை போன்ற பல நூல்களை வெளியீடு செய்திருப்பது மட்டுமன்றி அவை பல உயர் விருதுகளையும் பெற்ற நூல்கள் என்பது  சிறப்பம்சம்.

அண்மையில் இவரது படைப்புகளில் உருவான எட்டு நூல்களை எனக்கு அனுப்பியிருந்தார். என் இலக்கியப் பசிக்குத் தீனி போடும் அத்தனை நூல்களும் ஒன்றை விட ஒன்று ஒவ்வொருவிதத்திலும் சிறப்பானவை. மொழிபெயர்ப்பு நூல்களுக்கான பல தேசிய விருதுகளையும் பெற்றவை அவை.
எட்டு நூல்களை ஒரே நேரத்தில் கண்டதும் எதை முதலில் சுவைப்பதென்ற ஆர்வம் என்னை ஒருகனம் தடுமாறச் செய்தது.

மேலோட்டமாக ஒவ்வொரு நூலையும் கண்கள் மேய்ந்தன. “பூக்களின் கனவுகள்” என்ற மொழிபெயர்ப்புக் கவிதைநூல் என் பசிக்கு உடனே தீனி போட்டது.  அத்தனை பக்கங்களையும் புரட்டிப் பார்க்கச் சொன்னது. கண்களைக் கட்டிப் போட்டு ஆர்வத்தோடு படிக்கத் தூண்டியது.  
அபாரம் என்பதா அற்புதம் என்பதா…? எழுத்தாற்றலுள்ள எல்லோராலும் சாதிக்க முடியாத இவரது அசாத்தியத் திறமையை சாதனை என்பதா…?

தாய்மொழியில் தன் கருத்தை எழுதுவது எழுத்தாற்றலுள்ள எவருக்கும் முடிந்த காரியம். பிறமொழியிலிருந்து அவை எழுதப் பட்ட கருத்து சிதையாமல் மொழிபெயர்ப்பதுசாராணமல்ல. அதற்கென பிரத்தியேக ஆற்றல் வேண்டும் . தன் தாய்மொழியில் இருந்து தன்னை விடுவித்து  பிற மொழியில் எழுதப்பட்ட கருத்தை கண்டறிய வேண்டும் . மொழிபெயர்க்கப் போகும் ஆக்கத்தின் ஆழம்வரை சென்று அதன் அடித்தளத்தை அகத்தால் உணர வேண்டும் . அதுவும் ஒரு அசாதாரண ஆற்றல் தான். அந்த ஆற்றலுக்கு தோழி ஹுலைஹா மொழி பெயர்த்த ஆக்கங்கங்களே ஆதாரம்.

ஸுலைஹாவின் ஆற்றலில் வியந்து போனேன். அந்த இலக்கிய உறவின் நட்பில் பெருமை கொள்கிறேன். எனது தலைமையில் நடந்த கவியரங்கில் அவர் பங்குபற்றியதிலிருந்து பல விடயங்களையும் அடிக்கடி பரிமாறிக் கொள்வோம். எமது இலக்கிய ஆர்வம் பற்றியும் ஆக்கங்கள் பற்றியும் பேசிக்கொள்வோம். முகநூலில் பிரபலமாக விரும்பாத ஒரு முழுமையான திறமைசாலி அவர். அபரிமிதமான ஆற்றல்களுக்கு சொந்தக்காரி. இன்னுமின்னும் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற தனது இலக்கிய வேட்கையை மிகவும் அடக்கமாக ஆர்ப்பாட்டமின்றி எப்போதும் பகிர்ந்து கொள்வார். புகழையும் பெருமையையும் கடுகளவும் விரும்ம்பாத அந்த அழகான குணம் தான் அவருக்குப் பல உயர் விருதுகளையும் பட்டங்களையும் பெற்றுக் கொடுத்தது என்பதை அவரோடு பழகும் எவரும் புரிந்து கொள்வர்.

முதலில் நான் சுவைத்த அவரது “பூக்களின் கனவுகள்” நாற்பத்தி மூன்று வேற்றுமொழிக் கவிதைகளின் மொழிபெயர்ப்பு நூல். பிரபல கவிஞர்களான Langsto Hughes, William blakes, D.H. Lawrance ரவீந்திரநாத் தாகூர் மற்றும் பலரது கவிதைகளும் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன.
“முதிர்ந்த ஆலமரத்தின்கரடுமுரடான வேர்களைபடரும் பச்சைப் பாசிமூடித் திரையிடுவது போல்சாயங்காலப் பொழுதுபதுங்கிப் பதுங்கி எட்டிப் பார்த்ததுஎன் பாட்டன் பாட்டியின்மடிப்புகள் மீதும்…..
Bina Agarwal எழுதிய கவிதையின் தமிழாக்கம் இது.அது போலவே,Langston Hughes இன் Dreams எனும் கவிதையின் தமிழாக்கமும்….
“விரைவாக கனாக் காணுங்கள்கனவுகள் இல்லையென்றால்பறக்கவே முடியாத சிறகொடிந்த பட்சியென ஜீவிதம் மாறும்.விரைவாக கனாக் காணுங்கள்கனவுகள் நம்மை விட்டுப் போய்விட்டால்பனியில் உறைந்து போனவெற்றுக் கட்டாந்தரையாய்ஜீவிதம் மாறிவிடும்….”
இவ்வாறு இலகுவான சொற்பிரயோகத்தில் அற்புத மொழிபெயர்ப்பு ஆற்றலைக் காண முடிகிறது.
“காதலின் தோட்டத்துக்கு நான் விஜயம் செய்தேன்என்றும் கண்டிராதவற்றையெல்லாம்கண்ணுற்றேன்
பச்சைப் புல்வெளியில் நான் முன்னம் விளையாடித் திரிந்த அவ்விடத்தே நட்டநடுவிடத்து…
எனத் தொடரும் கவிதையில்,

“நீ உள் நுழைய முடியாது” எனும் வாசகம்தனை வரைந்து வைத்து.பற்பல இனிய புஷ்பங்கள் தமைச் சுமந்திருந்த காதலின் தோட்டம் நோக்கி நடந்தேன்.
அதுவோ கல்லறைகள் நிரம்பியிருக்கக் கண்டேன்.புஷ்பங்கள் இருக்கவேண்டிய இடத்தெல்லாம்புதைகுழிகளவை காட்சி தந்தன….
என அழகான மொழிநடையில் நகர்கிறது வரிகள்.
எந்தக்கவிதையை எடுத்தாலும் மொழிபெயர்ப்புக் கவிதைகளென சொல்ல முடியாதளவு தன் சொந்தக் கவிதை போல எழுதப் பட்டிருக்கிறது.
இது ஒரு மொழிபெயர்ப்பாளருக்கு இருக்க வேண்டிய மிகச் சிறப்பான ஆற்றல். இவ்வாறு அத்தனை ஆற்றல்களும் எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளரான தோழி  ஸுலைஹாவிடம் முழுமை பெற்றுக் காணப்படுகிறது.

இந்நூலில் பல நாடுகளின் பல மொழிகளிலும் எழுதப்பட்ட பல கவிதைகளைத் தேர்வு செய்து எழுதி இருக்கிறார் கவிஞர். இறுதிப் பக்கங்களில் மொழிபெயர்க்கப்பட்ட அத்தனை கவிஞர்களைப் பற்றிய விபரங்களையும் விரிவாக எழுதியிருப்பது இன்னும் சிறப்பு.
கதை, கட்டுரை போன்ற ஆக்கங்களின் மொழிபெயர்ப்புக்களை விட கவிதை மொழிபெயர்ப்பு  மிகச் சிரமமானது. அதை பாமரனும் புரிந்து கொள்ளும் இலகுவான மொழிநடையில் திறம்பட மொழிபெயர்ப்பது மிகச் சிறப்பாற்றலுள்ள ஒரு சிலராலேயே முடியுமான காரியம். அதற்கான ஆதாரமே கெகிராவ ஸுலைஹாவின் படைப்புகள்.
அதற்கான அங்கீகாரம் அவர் பெற்ற பல உயர் விருதுகள். இன்னும் பல விருதுகளும் பாராட்டுகளும் பெறவேண்டும் . இலக்கிய உலகின் இமயம் அவரைத் தொட வேண்டும் என “வேட்டை ” சஞ்சிகையூடாக வாழ்த்திப் பிரார்த்திக்கின்றேன்.

Vettai Email-vettai007@yahoo.com

Thanks -https://vettaigalhinna.blogspot.com/2022/03/blog-post_65.html?fbclid=IwAR0ZrVEeOZwALY-On3f2THnn1HXN8KVcsCWnGdCxcrnIPjxkBoVO9hYvVSM#.Yh7ceKTePH8.whatsapp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *