நான் நிறைய தடவை பாலியல் தொழில் செய்பவர்களோடு ஒரு சக மனுசியாக உட்கார்ந்து பேசியிருக்கிறேன். இருந்தாலும் அவர்கள் மனநிலை அல்லது உள நலன் கருதி சில விடயங்களை பேசுவதற்கோ , கேட்பதற்கோ மனது இடம் கொடுப்பதில்லை.ஆனால் எல்லா உரையாடல்களுக்கு பிறகும் அவர்களை குறித்ததான வருத்தத்தோடு சேர்த்து சில சமுதாய கூறுகள் மேல் ஒரு ஆத்திரமும் வந்து உட்கார்ந்து கொள்ளும்.முதல் முறையாக தலை நகரின் குறிப்பிட்ட பகுதியொன்றில் உள்ள பொதுக்கழிப்பறை ஒன்றினுள் உட்பிரவேசிக்க நேர்ந்தது. இரண்டு கைகளிலும் பொதிகளை சுமந்து கொண்டு கண்களை சுழல விட்ட போது அதிர்ச்சியாக உணர்ந்தேன்.ஒரு நாற்பதுகளை கடந்த பெண் , அந்த கழிப்பறையிலேயே, எந்த சலனமும் இல்லாமல் மிக இயல்பாகவே தன் ஆடைகளை மாற்றி கொண்டிருந்தார். ஓரளவு மாநிறமாக, மெல்லிய தேகத்தோடு இருந்த அவர் ஒரு கறுப்பு நிற குடைவெட்டு பாவாடையை அணிந்திருந்தார். காலில் இருந்த செருப்பு அவர் பாதங்களை விட அரை இஞ்சி சின்னதாக இருந்தது.பொதுக்கழிப்பறை ஒன்றில் ஒரு பெண் உடை மாற்றுவது எனக்கு கொஞ்சம் அசௌகர்யமாகவும் கழிவிரக்கமாகவும் இருந்தது. எந்த தீர்ப்பிடலையும் செய்ய விரும்பாமல் ,தலையை மறு புறம் திருப்பி திரும்பவும் வாய் பார்க்க தொடங்கி விடுகிறேன்
மலசல கூடத்துக்கு கொஞ்சம் தள்ளி ஒரு முப்பதுகள் மதிக்க தக்க ஒரு பையன் சிகரெட் புகைத்தபடி யாருக்காகவோ காத்துக் கொண்டிருந்தான்.இப்போது நான் பொறுமையிழந்து உள்புறமாக பார்க்கும் போது உறைந்து போய் விட்டேன். முடிந்து கிடந்த தன் சொற்ப தலைமுடியை வாரி அந்த பெண் ஏதோ ஒரு தைலத்தையோ அல்லது எண்ணெயையோ தலைக்கு தடவும் போது அவரது இடுப்பில் ஒரே அளவான சின்ன சின்ன காயங்கள். அவை பார்ப்பதற்கு பழைய காயங்கள் போல இருக்கவில்லை.எனக்கு உண்மையில் பாவமாக இருந்தது. அந்த காயங்களோடு ரீசேர்ட் ஒட்டினால் எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்யக்கூட முடியவில்லை. தொடர்ந்து அவதானித்த போது அந்த பெண் தன் முக ஒப்பனைக்காக வைத்திருந்த, ஏறக்குறைய தீர்ந்து போன ஒரு ஃபவுண்டேசனை எடுத்து முகத்துக்கு போலவே அந்த காயங்களிலும் அப்பி கொள்கிறார். அந்த ஷேட் அவருக்கு கொஞ்சமும் பொருந்தவேயில்லை. அது சீனர்களை போன்ற தோல் நிறம் கொண்டவர்களுக்கான வண்ணம். தொடர்ந்து ஒரு ஒப்பனை பவுடரை எடுத்து அவ்வாறே அப்பி கொண்டவர், கொஞ்சம் காஜலையும் ,ஒரு பிங் நிற லிப்ஸ்டிக்கையும் எடுத்து போட்டு கொண்டார். இப்போது அவர் முகத்தில் இருந்த திட்டு திட்டான பெரிய பருக்கள் இன்னும் பெரிதாக தெரிகிறது.
இந்த ஒப்பனைகளின் போது தொடர்ந்து அவரை அவதானித்த போதே சிலவற்றை கண்டு கொண்டேன். குறிப்பாக ,அவரது ஒப்பனை பொருட்களை பத்திரம் செய்து வைத்திருந்த அந்த பேர்ஸ் வருடக்கணக்காக சலவை செய்யப்பட்டிருக்க வாய்ப்பில்லை. இடது கையில் மணிக்கட்டுக்கு சற்று மேலே உட் புறமாக சில தழும்புகள். அவை பாடசாலை காலத்தில் காதலிக்கும் சில பைத்தியங்களின் கைகளில் இருப்பதை போல வெட்டு காயத் தழும்புகள். அதே கையில் கொஞ்சம் மேலாக அப்படியே பற்கள் பதிந்து போய் இருந்தது.யாரோ கடித்திருக்க வேண்டும். ஒருவாறு தனக்கான ஒப்பனைகளை முடித்து கொண்ட அந்த பெண் இப்போது மலசல கூட்டத்திலிருந்து வெளியேறி நான் ஏற்கனவே பார்த்த பையனோடு பயணப்பட்டுக்கொண்டிருந்தார். அப்போது அவன் கையிலிருந்த ஏறக்குறைய தீர்ந்து போன சிகரெட் எனக்கு அந்த இடுப்போர காயங்களுக்கான ஏதுக்களை நினைவு படுத்தின.இப்போது கொஞ்சம் குற்றவுணர்ச்சியாக இருந்தது. அந்த பெண் எந்த மொழி பேசுபவராக வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். நான் ஏதாவது பேசி இருந்திருக்கலாம். குறைந்த பட்சம் சின்ன புன்னகையாவது கொடுத்திருக்கலாம்.