”ராதா, உனக்குச் செவ்வந்தி பிடிக்குமா?…”
”ச்சீ…எனக்குப் பிடிக்காது…”
அவன் முகம் ஏமாற்றத்தில் சுருங்கியது. அடிக்கடி செவ்வந்திப் பூக்களின் வாசனை நாசியில் ஏறுவதான பிரேமை அவனுக்கு. கால இடங் கவனியாதபடி அவன் உணர்விலேறி அவனை எதுவுமில்லாத வெறுமையுள் தள்ளிவிட்டுப் போகும் அந்தப் பூவாசனை. இப்போதெல்லாம் அது அடிக்கடி அவனது பொழுதுகளைக் குறுக்கீடு செய்கிறது. அதன் கடுமை தாங்கமாட்டாதவனாய் மனோவியல் வைத்தியரிடம் போகலாமா என்று கூட யோசித்திருக்கிறான். முதலில் சடுதியான செவ்வந்திப்பூவாசனை. பிறகு தொடர் நினைவுக் கோலங்கள். அதன் தொடர்ச்சியாகத் தாங்கமுடியாத தலையிடி. இதிலிருந்து அவன் எப்படித் தப்பித்துக் கொள்ளப் போகிறான்?
”ஏனப்பா கேட்டீங்கள்…?”
மனைவி காலைச்சாப்பாட்டை வாய்க்குள் வைத்தபடியே கேட்டாள். அவன் அதற்குப் பதில் சொல்லாமல் அடுத்த கேள்வியைக் கேட்டான்.
”ஏன் பிடிக்காது உனக்கு?’
‘
”அந்த மணம் பிடிக்கிறதில்லை. அதோடை அதைக் கஷ்டப்பட்டு வளர்க்கவும் தேவை இல்லை. கண்ட கண்ட வீட்டு முத்தமெல்லாம் முளைச்சு நிற்கும். அது தான் பிடிக்காது.”
தெளிவான பதில். எவ்வொரு விஷயத்திலும் ஏழ்மையைக் காலால் ஒதுக்கித் தள்ளும் பணக்கார வர்க்க மமதை. பூவுக்கு என்ன தெரியும் தான் வளரும் இடங்களின் அந்தஸ்து பற்றி?
”உனக்கு என்ன பூப்பிடிக்கும்?”
”ஒக்கிட்…”
கவனமாய் அவற்றை வளர்த்துப் பூக்க வைத்து சினேகிதிகள் வரும்போது அவற்றைக் காட்டிப் பெருமையடிக்க வேண்டும். ராதாவின் உலகத்தில் பூக்களின் பணி அவ்வளவுதான். பணத்தின் மீது தான் அவளது சகல பிடிப்புக்களும் நிலைகொள்ளுமோ? அவ்வாறெனின், அவனை அவளுக்குப் பிடிக்குமோ? அந்தக் கேள்வியை வெளிப்படையாகக் கேட்கும் துணிச்சல் அவனிடமில்லை. ஏனெனில் அவள் சொல்லக்கூடிய பதிலையும் அவனால் எதிர்வுகூறமுடியாது. இனம்புரியாத கவலை தொண்டை வரை ஏறி அவனை வாட்டியது. சாப்பிடமுடியாதிருந்தது. கைகழுவி எழும்பினான். ராதா ஒருமுறை அவனை ஏறிட்டுப் பார்த்து விட்டு மீண்டும் சாப்பிடத் தொடங்கினாள். திருமணமான புதிதிலிருந்தே கணவனின் உணர்வுச் சிக்கல்களோ, மனக்கஷ்டங்களோ தன்னைப் பாதிப்பதை அவள் அனுமதித்ததில்லை. நாளடைவில் அவனுக்கும் அது பழகிப் போய் விட்டிருந்தது.
காலைச் செய்தித்தாளை எடுத்துக் கொண்டான். இன்று சனிக்கிழமை. ஓய்வு நாள். அவனது கண்கள் பத்திரிகைத் தலைப்புக்களில் மிதந்தன. னால் மனமோ கடந்தகாலத்து ஞாபகச் சுவடுகளில் தன்கால் பதித்து நடந்தது.
* * * *
கீதாவை மிகச் சிறு வயதிலிருந்தே அவன் அறிவான். எனினும் மூன்றுவருடங்கள் வவுனியாவில் வேலை பார்த்து விட்டு யாழ்ப்பாணத்துக்கு மாற்றலாகி வந்தபோது அவனது பார்வையில் அவள் புதியவளாய்த் தான் தோன்றினாள். தற்செயலாகத் தனது அலுவகத்தில் அவளைச் சந்தித்தான். இரண்டு பெண்களின் வம்படிப்புக்குள் அகப்பட்டுக் கொண்ட நிலையிலும் அமைதியாகத் தலை குனிந்தபடி தட்டச்சுப் பொறித்துக் கொண்டிருந்த அவள் முதற்பார்வையிலேயே இவனது இரக்கத்துக்குள்ளாகி விட்டாள்.
”கீதாவைப் பாரன்…செவ்வந்தியைத் தலைக்கு வைச்சுக் கொண்டு வந்திருக்குது…”
”எதை வைச்சென்ன…? பூ வைச்சுப் பொட்டு வைக்க… சைப்பட்டால் போதுமே? அதுக்குக் கொடுப்பினையுமெல்லோ வேணும்?”
அவனது காதில் விழுந்த வார்த்தைகள் இவ்வளவு தான். னால் அவனுக்குப் புரிந்து கொள்ள முடிந்தது. முப்பதைக் கடந்து மூன்று வருஷங்களாகியும் தாலி சூடிக்கொள்ள முடியாத அவளது வாழ்வு வேலியில்லாத் தோட்டம் போலக் காப்பில்லாதது. எவரும் துணிச்சலாக வார்த்தைகள் துப்பக்கூடிய சுதந்திரம் மிக்கது. வீதியோரப் பையன்கள் வயது பார்க்காது ”ஏய் , நல்லாய் இருக்கு” என்று போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போக அனுமதிப்பது. தலை நரைத்தபிறகும் சை நரைக்காத கிழவர்களும் ஒருமுறை தமது ஓநாய் விழிகளால் அவளது முகம் தவிர்ந்த பாகங்களை உற்றுப் பார்க்க வைப்பது.
வருந்துகின்ற ஒரு பெண்ணின் மனத்தை இன்னொரு பெண்ணால் புரிந்து கொள்ள முடியாதிருப்பதேன்? அவனுக்குள் கேள்வி எழுந்தது. பிறகு அவளைக் கடந்து போன பொழுது தலைப்பூவை எடுத்துத் தன் சின்னக்கைப்பைக்கு அருகில் வைத்திருந்த அவளைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. அந்தப் பெண்களின் கேலியில் மனம் வெம்பிப் பூவை எடுத்து வைத்திருக்க வேண்டும் அவள்.
அதற்கு அடுத்த நாள் அவளது தலையில்பூ இருக்கிறதா என்பதை அவனது கண்கள் இயல்பாய்த் தேடின. அங்கு பூ இல்லை. அவன் கீதாவைப் பார்ப்பதை உற்றுப் பார்த்த வம்புப் பெண்களின் முகஞ் சுருங்குவதைப் பார்க்கும் வல் அவனுள் கிளர்ந்தது.
”கீதா…”
எதிர்பார்த்தேயிராத அவனது அழைப்புக்குச் சடுதியாய் எழும்பி நின்றாள் அவள். ‘தட்டச்சுச் செய்ததில் எங்காவது தவறிவிட்டோமோ’ என்று அவள் நினைப்பது முகத்தில் தெரிந்தது.
”என்ன…செவ்வந்திப்பூ வைக்கிறதை விட்டிட்டீங்களோ?”
”ம்…”
”ஏன்? நல்லாத்தானே இருந்துது…”
அவள் மெளனமாக நின்றாள். அவளது பொன் மஞ்சள் நிறக் கன்னங்கள் சிவந்தன. உடல் முழுவதும் பதட்டப் படுவதை மறைக்கமுடியாதவளாக அவள் இருந்தாள். தட்டச்சின்றியே அவளது விரல்கள் தடதடத்தன. மெல்லியகுரலில் சொன்னாள்.
”அது ஒருத்தருக்கும் பிடிக்கேல்லை…அதுதான்…”
”உங்களுக்குப் பிடிச்சிருக்கு இல்லையா?”
”ம்…”
”உங்களுக்குப் பிடிச்சிருந்தால் வைச்சுக் கொள்ளுறது…உங்கடை தலையிலை தானே வைக்கிறீங்கள்…மற்றவையின்ரை தலையிலை இல்லையே…”
சொல்லிவிட்டுப் பதில் எதிர்பார்க்காதவனாய் நடந்தான். அந்தப் பெண்களின் அஷ்ட கோணலாகும் முகத்தைப் பார்ப்பதற்கு அவன் திரும்ப முன்னரே அவர்கள் நிலைமையைப் பொறுக்கமுடியாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டிருந்தார்கள். அவனுக்குத் திருப்தியாக இருந்தது.
மறுநாள் அவளைப் பார்த்தபோதும் அந்த நீண்ட கருங்கூந்தல் பூவின்றித் தான் கிடந்தது. யாராவது வம்புக்கதை பேசுவார்களோ என்று அதைத் தவிர்த்திருக்கக்கூடும். அத்துடன் அந்த விஷயத்தை அவன் மறந்து போனான். அவனது வேலைப் பளு அப்படி.
* * * * * * * * * *
இரண்டு மாதங்களின் பின்னர் ஒருநாள் அலுவகத்துக்குப் போகப் புறப்பட்டவன் பார்வையில் செம்மஞ்சள் சூரியனாய் அப்ப்பிற்று அது. அவர்களின் வீட்டுத்தோட்டத்தில் ஒதுக்குப் புறமாகச் சிறுவரிசையில் செவ்வந்தி. அவற்றில் ஒன்றுதான் தன் முகம் மலர்த்தியிருந்தது. இவன் மனமெங்கும் இனந்தெரியாத உற்சாகக் குமிழ்களின் பிரவகிப்பு.
”அம்மா…செவ்வந்தி வைச்சீங்களா? பூத்திருக்குது”
”நானெங்கை வைச்சன்…உன்ரை தங்கச்சிதான் வைச்சிருக்கவேணும்…”
யார் வைத்தால் என்ன? அவன் வீட்டில் செவ்வந்தியின் மலர்வு. அதனால் அது அவனுக்கு ஏதாவது செய்தி சொல்கிறதோ? அருகில் சென்று குனிந்து அதன் நறுமணம் நுகர்ந்தான். அருகில் அமர்ந்து அதனை மெல்ல முத்தமிட்டான். இதயத்தில் படபடப்பு ஏறியது. மீண்டும் பூமுகம் பார்த்தபோது அது கீதாவின் அழகிய முகமாய்த் தெரிந்தது.
”நல்லாத்தானே இருக்குது…”
அது முன்பொருநாளிலான வம்புப் பெண்களின் வார்த்தைக்குச் சொன்ன பதில் போல் இருந்தது. சடுதியாய் எழுந்து வேகமாய் நடந்தான். அவன் மனம் கீதாவில் இத்தனை பிரியம் வைத்திருக்கிறதா என்ன? அதை அவனே அறியாமல் இருந்து விட்டானே. பாவம் அந்தப் பெண். அவள் உரத்த்துச் சிரித்தோ, கதைத்தோ அவன் அறியான். நிலம் பரவிய பார்வை. மிக வேகமாய் தட்டச்சில் மிதக்கும் விரல்கள். விழிமலர்ந்த பார்வையிலேயே அதிக விஷயங்களை முடித்துக் கொள்கிறாள்.
முதலில் அவளின் மனப் போக்கு என்னவென்று அறிந்து கொள்ள வேண்டும். திருமணத்தின் பின் அவளுக்குப் பிரியமான செவ்வந்திப் பூவை நீண்டகூந்தலில் சூட்டி விட வேண்டும். அவளைச் செல்லமாக ”கீதுக்குட்டி…..கீதுக்குட்டி…..” என்று கூப்பிடவேண்டும். உற்சாகமாய் நடந்தான்.
மறுநாளிலேயே கிடைத்த சந்தர்ப்பதில் அவளிடம் கேட்டதையும் அந்த வாரமுடிவிலேயே அவளது இதய அன்பை அறிந்து கொண்டதும் நினைக்கக் கனவு போல இருந்தது. கதைக்கக் கிடைக்கும் அரிதான பொழுதுகளில் மிகுந்த அப்பாவித்தனமாய்க் கதைப்பாள். கண்களை மூடினாலும் திறந்தாலும் அவனது அன்பு முகந்தான் தெரிவதாகச் சொன்னாள்.
ஒருவிடுமுறை நாளில் தட்டச்சு வேலை ஒன்றைக் காரணமாக வைத்துக்கொண்டு கீதாவின் வீட்டுக்குப் போயிருந்தான். கறுத்து அடர்ந்த அவளது கூந்தலில் பெருமிதமாய் உட்கார்ந்திருந்தது அழகான செவ்வந்திப்பூ. அவனைக் கண்டவுடன் அவசரமாய் எடுக்கப் போனவளைத் தடுத்து விட்டான்.
பிறகு தனிமையில் சந்தித்தபோது கேட்டான். செவ்வந்திப் பூவை வைத்துக் கொள்ளும் போது மனத்தில் திருப்தியும் சந்தோஷமும் பரவுவதாகச் சொன்னாள். அவனது அன்பை அறிமுகமாக்கிய அந்தப் பூவில் விருப்பம் கூடியிருப்பதாகவும் சொன்னாள்.
எவருமே கவனம் திருப்பியிருக்காத அவளது இதயத்தில் பரிவு பொழியும் அவனுடனான நல்வாழ்விற்கு விரதமிருப்பதாகச் சொன்னாள். இளமைக் கனவுகளுடனும் சைகளுடனும் அவளுள் துடிக்கின்ற சின்னஞ்சிறு இதயத்தை அவன் நன்றாகவே அறிவான். திருமணவயதுப் பெண்களின் தேக்க நிலை பற்றி சமூகத்தில் இன்னும் விழிப்புணர்வு ஏற்படாதிருப்பதேன்? ஒவ்வொரு பெண்ணும் உணர்ச்சிக் கடல். அவளுள் குமுறும் வயதிற்கான உணர்வுகளுக்கும் வழிந்தோட வழிதேடும் அன்பின் பிரவாகத்துக்கும் வடிகால் அமைப்பது சமூகத்தின் கடமையில்லையா?
செவ்வந்தியின் குடும்ப நிலை மீட்சிக்குரியதில்லையா? செவ்வந்தியின் கீழ் தொடர்ந்து ஏழு சகோதரிகள். தந்தையின் எழுதுவினைஞர் சம்பளம் தினச் சாப்பாட்டுக்கே போதாத நிலை. மூத்த தங்கை சனசமூகநிலையம் ஒன்றில் வேலை தேடிக் கொண்டுவிட்டாள். இரண்டாவது தங்கையின் நாட்கள் தையல் தொழிலுடன் போகிறது. மூன்றாவது தங்கை கலைப் பட்டதாரி. வேலைக்காகக் காத்திருக்கிறாள். நான்காவது தங்கை விஞ்ஞானபீடத்துக்குத் தெரிவுசெய்யப்பட்டிருக்கிறாள். மற்றத்தங்கைகள் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.
கருகும் இளமொட்டுக்களாய் அவர்களின் வாழ்வு நியதிப்படுத்தப் பட்டிருக்கிறதா என்ன? அந்தக் குடும்பத்தில் துணிந்து தன் கால்பதிக்கத்தக்க முதலாவது ண்மகன் அவனாக இருப்பதில் அவனுக்குத் துன்பமேதுமில்லை. னால் தங்கையின் திருமணம் முடிந்தபின் தான் வீட்டில் கதைப்பது நல்லது. பலவிதமான சிந்தனைகளுடன் அவனது நாட்கள் நகர்ந்தன.
அவனுக்கும் அதிசயமாகத்தான் இருந்தது. கீதுவுடன் பழக்கமாகி அவளது குடும்ப இயலாமைகளை வார்த்தைகளில் பகிர்ந்து கொண்டு ற்றாமைகளுக்கு றுதல் சொல்லி எட்டு மாதங்களாகி விட்டன. அவனது மனமெங்கும் வசந்தகாலத்துளிர்ப்பு. அவளது ழ்ந்த அமைதி பொங்கும் விழிகள் அவனுள் மகிழ்வை நிறைத்தன. மெல்லப் புகையத்தொடங்கிய அவர்களது அன்பைப் பற்றிய கதைகள் அவன் மனதில் துன்பத்தை க்கியது உண்மை. அவர்கள் கதைத்துக் கொள்வது மிகக் குறைவு. எனினும் ஒற்றைப் பார்வையில் உள்ளத்து அன்பு முழுதும் பரிமாறிவிடத்தக்க விழிகள் அவளது. நல்ல பொழுதொன்றில் பெற்றவர்களிடம் கதைத்து விடவேண்டும். நினைவுகள் நிறைய வீட்டுக்கு வந்தவனை அப்பாவின் குரல் வழிமறித்தது.
”அருண்…கொஞ்சம் கதைக்கவேணும் …”
குழப்பமாய்த் திரும்பிப் பார்த்தான்.
”தங்கச்சிக்கு ஒரு நல்ல இடத்திலை சம்பந்தம் பேசி வந்திருக்குது…”
அவன் மனமெங்கும் தீபாவளி மத்தாப்பூச் சிதறல்கள்.
”நல்லதப்பா…மாப்பிள்ளை என்ன செய்யிறார்?
”அவர் டொக்டராய் இருக்கிறாராம். நல்ல பொடியனாம். குடி போதை இல்லையாம்…புரோக்கர் சொன்னார் தம்பி…”
சொன்னபடியே அம்மா பளீர்ச் சிரிப்போடு சமையலறைக்குள்ளிருந்து வெளிப்பட்டாள். தன் பெண்ணுக்குத் திருமணமாவதில் அந்தத் தாய் முகம் எவ்வளவு பூரித்துக் கிடக்கிறது?
”எவ்வளவு கேக்கினம்…?”
”எதுவுமே கேக்கேல்லைத் தம்பி…மாத்துச் சம்பந்தம் மட்டும் தான் விருப்பப் படீனம். உன்னைப் பற்றி விசாரிச்சவையாம். அவையளுக்குப் பிடிச்சுக் கொண்டுதாம்…”
தன்னைச் சமநிலைப் படுத்திக் கொள்ள அவன் பெரிதும் முயற்சிக்கவேண்டியிருந்தது.
”ரெண்டு பேரும் ஒண்டுக்கை ஒண்டு…எப்பவும் தங்கச்சிக்குத் துணையாய் இருக்கலாம். இப்பிடிக் கிடைக்கக் குடுத்து வைக்கவேணும்…”
”ம்…”
முணுமுணுத்தபடியே விலகி நடந்தான்.
அவனது இதய அன்பினைச் சொல்லிப் பெற்றவர்களின் முகத்து மலர்வினை அழிக்கும் துணிவு அவனிடத்தில் இல்லை. அவனுக்கும் ஒரு இதயம் உண்டு என்பதை ஏன் அவர்கள் உணரவில்லை? யன்னலூடாக வெளியே பார்த்தான். செவ்வந்தி நிரையில் ஒரு மலர்வும் இல்லை. மலர்ந்தபூக்கள் கருகியிருந்தன.
* * * *
”அருண்…என்ன நல்ல செய்தியாம்?…”
”ம்…”
”எப்ப நாள் பாத்துக் கிடக்குது?…”
”வாறமாதம் முதலாம் திகதி…”
அவன் விரைவாகத் தன் அறையை நோக்கி நடந்தான். அலுவலகம் முழுவதும் அவனது திருமண விடயம் பரவி விட்டது.
”கீதாவோடையாமே …”
”அருணுக்கென்ன பைத்தியமே…”
கதவை அறைந்து சாத்தினான். அவனது கோபத்தின் வல்லமை அவ்வளவுதான். கீதாவிற்கும் அந்தக் கதை கேட்டிருக்கும். கேட்கவேண்டுமென்று பேசப்பட்ட வார்த்தைகள் தானே. இப்போதும் மனதுக்குள் மெளனமாக அழுவாள் அவள். அவளது இந்தத்துயரத்துக்கு அவனால் றுதல் சொல்ல முடியாது. அதிகம் ஏன்? அந்தப் பளிங்கு முகத்தை ஏறெடுத்துப் பார்க்கவும் திராணியற்றுப் போய் விட்டானே அவன். அவளை விலகி விலகி நடந்தான் அவன். அதனால் அவளது வாழ்வையல்லவா தவிர்த்து நடந்தான்? கோழைமனத்தின் நடத்தைகளும் நீதியான மனத்தின் இடித்துரைப்புக்களுமாய் அவனது வாழ்வு நரகமாகி விட்டது.
தாய் தந்தையர் பேச்சுக்கு மறுவார்த்தை பேசி அறியாத நல்ல மகன் அவன். அன்புத் தங்கைக்கு நல்வாழ்வு அமைத்துத் தரவேண்டிய பொறுப்பு மிகுந்த அண்ணன். இதற்கு மேல் அவனைப் பற்றி எவருமே சிந்திக்கவில்லை. ஏன்? அவனுங் கூடத்தான் சிந்திக்கவில்லை. உண்மையில், தங்கைக்காகத் தனது வாழ்வை மற்றொருவருக்குத் தாரை வார்த்து விட்ட அவலம் தான் அவனது வாழ்வாகப் போய்விட்டது.
திருமணமான பின்னரும் மனம் கீதாவை ராதாவோடு ஒப்பிடுவதை நிறுத்தாதிருந்தது. எத்தனை முரண்பாடுகள். கீதாவின் மென்மையான பேச்சு, மிருதுவான நடை, முத்துப் பற்கள் தெரியாத புன்சிரிப்பு எதனையும் அவன் ராதாவில் கண்டதில்லை. அவனும் எத்தனையோ விதங்களில் அவளை மாற்றப் பார்த்து விட்டான். தோல்விதான். மாறாத பிடிவாதம் அவளது. அவன் ஒரு மணித்தியாலம் பேசாதிருந்தால் அவள் ஒரு வாரம் பேசாதிருப்பாள். சிறுகிழிசல் விரிசலாகி விடக் கூடாத கவனம் அவனுக்கு எப்போதும் இருந்தது. தங்கையின் நல்வாழ்வுடன் பிணைந்த வாழ்வென்பதில் அவனது வாழ்வு சீராகப் போயே க வேண்டும். அதை ராதாவும் அறிவாள். அதனால் அவனது கோபத்தை அவள் எப்போதுமே ஒரு பொருட்டாகக் கருதியதில்லை.
திருமணமான அடுத்தடுத்த மாதமே கொழும்புக்கு மாற்றலாகிப் போனான். அதனால் கீதாவை அடிக்கடி சந்திக்கும் கஷ்டத்திலிருந்து மீள முடிந்தது. னால் அவளது நினைவுகளை இலகுவாகத் துரத்தி விட முடியவில்லை. கொடிய வார்த்தைகளால் சமூகம் அவளைக் குத்திக் கிழிக்கும். நெருஞ்சிக் காட்டிடையே தவிக்கும் சின்னஞ்சிறு மென்மலர் அவள். அவளை கரம் பற்றி மீட்கும் அந்தத் துணிச்சலான ண்மகனை அவள் சந்திக்கமாட்டாளா? அவன் அல்லும் பகலும் ஏங்கினான். அந்த ஏக்கமும் துயரமும் செவ்வந்திப் பூவாசனையோடு பிணைந்திருந்தன.
இவனது திருமணச் செய்தியின் பின்னரும் கூட ஏனென்று ஒரு வார்த்தை கேளாமல் இவனது வாழ்விலிருந்து விலகிப் போனாளே அவள். அந்த மெளனமான பெண்ணுக்காக இவனுள் இருந்து குரல் கொடுக்கும் மனச்சாட்சிதான் இந்த வாசனையோ? க, மனச் சாட்சி என்பது வெறும் நுகர் புலன் தானோ? ஓய்வுறும் நேரங்களில் எல்லாம் அவனை வதைக்கும் சிந்தனை இதுதான். இதிலிருந்து அவன் எப்போது மீளப் போகிறான்?
செவ்வந்திப்பூ கீதாவையும் நிச்சயமாகத் துயரப்படுத்தும். கேவலமான தப்பியோடுதலின் சாட்சியாக, கோழைத்தனமான ண்வர்க்கத்தின் குறியீடாக அவளது வாழ்வில் அது பதியப்பட்டிருக்கும்.
”என்னப்பா, கண்ணனைப் பாருங்கோ…”
திடீரெனச் சிந்தனைகளை இடைவெட்டியது ராதாவின் குரல்.
”என்னவாம்…?”
”சாப்பிடமாட்டானாம்…தோட்டத்துக்கும் போகமாட்டானாம்…”
”சாப்பாட்டைத் தாரும்…பார்ப்பம்…”
எழும்பிக் கைகளைக் கழுவினான். கழுவி விட முடியாத நினைவுகளோடும் சாப்பாடுத் தட்டத்தோடும் மகனைக் கூட்டிக் கொண்டு தோட்டத்துப் பக்கமாய் நடந்தான். வீட்டின் பின்னே விரிந்திருந்தது தோட்டம். பச்சைப் புல் மத்தி. சூழவும் வித விதமான குரோட்டன்கள். சில விலை உயர்ந்த பிறநாட்டுப் பூவினங்கள். ஒருநாள் மலர்ந்து மறுநாள் வாடிவிடும் பூக்களை ராதாக்குப் பிடிக்காது. அவனது மன றுதலுக்காக வேண்டியேனும் அங்கு செவ்வந்தி வைக்கக் கூடாதா என்று நினைத்தான் அவன். னாலும் ராதாவின் நியதிக்குட்பட்ட பிரதேசத்தில் அவனது கனவுகளைப் பயிரிடமுடியாது.
”வேண்டாம்…மாட்டேன்…”
”சரி…தண்ணித்தொட்டியடிக்குப் போவம்…”
மகன் விரும்பிய திசையில் நடந்தபடி கேட்டான்.
“ஏன் இந்த தோட்டம் பிடிக்கேல்லை…?”
“எனக்கு பிடிச்ச பூக்களே இல்லை. நான் அங்கை போக மாட்டேன்.”
சின்ன மகனின் மாறாத பிடிவாதம் அவனுள் சொல்லமுடியாத திருப்தியை ஏற்படுத்தியது. தலைவலி குறைந்தது போல உணர்ந்தான். சந்தோஷமாக மகனுடன் சேர்ந்து நடந்தான். மகன் நடக்கும் பாதை அவனது அல்லாத புதியது. வெளிச்சமானது. அது அவனுக்கும் பிடித்தமானது.