ஆக்கம், – ஸ்டெலா விக்டர்
எந்த மக்களின் விடுதலைக்காக போராடுவதாக கூறினார்களோ இறுதியில் அதே மக்களின் அவல அழிவுக்கு காரணமாகிவிட்டார்கள். அந்த யுத்த காலங்கள் வெறும் யுத்தகாலங்கள் மாத்திர மல்ல. மக்கள் மீதான சித்திரவதைக் காலங்கள். கொடுமையிலும் கொடுமையானது இந்த யுத்தம். |
யாழ்ப்பாணம் குருநகரில் ஒரு சிறிய வீடு. அதற்குள் சிறியோரும் பெரியோருமாய் பதினொன்றுக்கும் மேற்பட்ட ஜீவன்கள். வன்னி யுத்தத்தில் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு அவ்வீடு ஆதரவும் அடைக்கலமுமாயிருக்கிறது.
அங்கிருந்த பெண்களில் ஒருவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். அவருக்கு நாற்பத்தி நான்குவயது ஆகிறது. குருநகர்தான் அவரது சொந்த இடம். 17 வயதில் திருமணமாகி கணவனுடன் கிளிநொச்சியிலுள்ள கணேசபுரம் கிராமத்தில் குடியேறியிருக்கிறார். யுத்தம் மூண்டதால் 1990களில் குடும்பமாக இந்தியாவுக்கு இடம் பெயர்ந்து திண்டிவனம் குத்துப்பட்டு முகாமில் பத்து வருடங்கள் வசித்திருக்கிறார் கள். அங்கு இவரது கணவர் மேசன் வேலை, பூச்சு வேலை செய்து குடும்பத்தை பராமரித் துக் கொண்டிருந்திருக்கிறார்.
2002 இன் பின்னர் யுத்தம் ஓய்ந்திருந்ததால் சமாதானம் வந்துவிட்டதாக நம்பி 2004 இல் அவரது குடும்பத்தினர் மீளவும் இலங்கை திரும்பி தமது அதே கிளிநொச்சி கணேசபுரம் காணியில் குடியேறியிருக்கின்றனர். சிறிது காலம் வாழ்க்கை நிம்மதியாகக் கழிந்திருக்கிறது. வறுமை நிறைந்திருந்தாலும் வாழ்வு நிறைவாக இருந்திருக்கிறது.
அவருக்கு ஆறு பிள்ளைகள். ஐந்து பெண் பிள்ளைகளும் ஒரு ஆண் பிள்ளையும். மூத்த மகள் திருமணம் செய்து தனது கணவர், இரு பிள்ளைகளுடன் தனிக் குடித்தனம் நடத்திக்கொண்டிருந்திருக்கிறார். 2008 இல் யுத்தம் ஆரம்பித்ததும் கிளிநொச்சி யிலிருந்து புதுக்குடியிருப்புக்கு சென்றிருக் கின்றனர். இராணுவம் முன்னேறி வர வர ஒவ்வொரு இடமாக இடம் பெயர்ந்து இடம் பெயர்ந்து இறுதியில் வட்டுவானில் இருந்திருக்கின்றனர்.
“இடப்பெயர்வினால் மூத்த மகள் குடும்பத்துடனான தொடர்பு விடுபட்டு போனது. மகளும் செல்காயத்துக்கு உள்ளா னதாக அறிந்தோம். பின்னர் எந்தத் தொடர்பும் இல்லை. அவர்கள் அனைவரும் இறந்துவிட்டதாக எண்ணியிருந்தோம். இரண்டு மாதத்துக்கு முன்னர் தான் மகள் குடும்பம் வவுனியா முகாமில் இருப்பதாக அறிந்துகொண்டோம்” என்றார். தொடர்ச்சியாக இடம்பெயர்ந்து கொண்டிருந்தாலும் அவர் ஓய்ந்திருக்க வில்லை. குடும்பத்தைக் காப்பாற்ற “வாய்ப்பன்” போன்ற பலகாரங்கள் செய்து விற்றுவந்திருக்கிறார். இந்த சிறு வருமானம் குடும்பப் பசியை ஆற்றி வந்திருக்கிறது.
“வளைஞர் மடத்தில் இருந்தபோது மகள் இயக்கத்தில் சேர்க்கப்பட்டாள். இரண்டு மாதம் தான் மகள் இயக்கத்தில் இருந்தாள். எல்லோரும் வெளியேறத் தொடங்கியதும் பிள்ளை கடிதம் எழுதியிருந்தாள் ‘அம்மா எங்களை விட்டுட்டுப் போகாதீங்க. நாங்க தனிச்சிப் போயிடுவம்’ என்று. பிள்ளையை விட்டு விட்டுப் போக மனம் கேட்காததால் அத்தனை ஷெல்லடிக்குள்ளும் மகளின் வரவை எதிர்பார்த்து காத்திருந்தோம்.
“கடைசியாக நாங்கள் இருந்தது வெட்டை வெளி. ஒரு மர நிழல் கூடக் கிடையாது. பகலில் வெயிலில் துடித்துக் கொண்டிருப்போம். அங்கு கைவிட்டுக் கிடந்த இயக்கத்தின் வாகனங்களின் நிழலில் பிள்ளைகளை வைத்திருப்போம். மாலை ஐந்து மணிக்கு பின்னர் வெயில் தணியும் போது எங்களுக்கு சந்தோசமாக இருக்கும்.
நிலம் சதுப்புத்தன்மையாக இருந்ததால் பங்கர்வெட்ட முடியாது. ஆனாலும் எனது கணவர் மூன்றடி ஆழத்துக்கு பங்கர் ஒன்றை வெட்டினார். துவக்குச் சன்னம் படாதிருப்பதற்காக சீலைகளை எடுத்து நீள உறை களாக தைத்து மணல் நிரப்பி சுற்றிவர அரண்போல் வைத்துவிட்டு படுப்போம். மணல் அடைத்திருப்பதால் சன்னங்கள் மணல் உறையை ஊடுருவாது அதற்குள் புதைந்திருக்கும்.
“ஒரு நாளில் இரண்டு மூன்று மணித்தியாலம் தான் லீவு கிடைக்கும். (இங்கு இவர் லீவு எனக்குறிப்பிட்டது ஷெல்லடி ஓய்ந்திருக்கும் நேரத்தை). அந்த நேரத்துக்குள்தான் ஆட்கள் பங்கரில் இருந்து வெளியில் வந்து ஏதாவது வேலை பார்ப்பார்கள். சில நாட்கள் முழுநாளும் வெளியில் வராது பங்கருக்குள் இருக்க நேரும். தலையை வெளியில் காட்டினால் ஷெல் துண்டும் சன்னமும் படும். நிறையப்பேர் தலையில் காயப்பட்டுத்தான் இறந்தார்கள்.
“உணவு கிடையாது அத்துடன் பயங்கர விலை. அரிசி ஒரு கிலோ 1500 ரூபாவுக்கு விற்கப்பட்டது. பிள்ளைகளை இயக்கம் போக விட்டபோது மகளும் எங்களிடம் திரும்பி விட்டாள். எனது இரண்டாவது மகளுக்கு 21 வயது. அவளது கணவர் போன இடத்தில் காணமல் போய்விட்டார். மகளும் அவளின் ஒன்பது மாத மகன் ஸ்ரீகாந்தும் எங்களுடன்தான் இருந்தனர். அடுத்தது 16 வயது மகள் மரினா. இவள்தான் இயக்கத்துக்கு போய்வந்தவள். அடுத்தது 15 வயது மகன். இவருக்கு இளையவள் 14 வயது மகள். கடைசிமகளுக்கு 9 வயது.
மகள் திரும்பி வந்த மூன்றாவது நாள் பிள்ளைகளுக்கு ஒரு நேரமாவது ஒரு நல்ல உணவு தர வேண்டுமென்ற அவாவில் வாய்ப்பன் விற்று சேர்த்து வைத்திருந்த காசில் 1000 ரூபாவுக்கு ஒரு செமன் ரின் வாங்கிவந்து சமைத்தேன். மத்தியானம் எல்லாரும் சாப்பிட ஆயத்தமானோம். பிள்ளைகளை சாப்பிடத் தொடங்குமாறு சொல்லிவிட்டு நான் அடுப்பைக் கவனிக்க போனேன். ஷெல்லடி தொடங்கியது. முழங்கை அளவு நீளமுள்ள ஐந்திஞ்சி ஷெல் மற்றவைகளைப் போல் கூவிக்கொண்டு வராது. சத்தமில்லாமல் வரும். வந்து விழுந்த பின்னர்தான் ஷெல் விழுந்தது தெரியவரும். பிள்ளைகளை ஒரே இடத்தில் இருக்காது சற்று விலகிப்போகு மாறு சொன்னேன். மகள் மரினா சொன்னாள், உங்களை விட்டுட்டுப் போக மாட்டம் இனிப்
போறதுக்கு இடமுமில்லை. செத்தால் எல்லாரும் ஒன்றாக சாவமென்று சொல்லி வாய் மூடுவதற்குள் ஐந்திஞ்சி ஷெல் விழுந்தது. புகை மூட்டம் தான் எனக்குத் தெரிந்தது. அந்நேரம் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்த 15 வயது மகன் ஓடி வந்து என்னை இழுத்துக்கொண்டு சென்று வாகனம் ஒன்றின் கீழ் பாதுகாப்பாக வைத்தார்.
எனது கை காயப்பட்டு முறிந்தது எனக்கு அந்நேரம் தெரியாது. வட்டுவானில் இயக்கம் நடத்திவந்த ஆஸ்பத்திரியில் நானும் கணவரும் அனுமதிக்கப்பட்டோம். அவருக்கும் தலையிலும் காலிலும் காயம். பின்னர் அங்கும் n~ல் விழத்தொடங்க அங்கிருந்து வெளியேற நேர்ந்தது. அக்கா மாரும் தங்கைமாரும் குழந்தையுடன் வேறு இடத்துக்கு போய்விட்டதாக மகன் சொன்னார். காயப்பட்ட மூன்றாவது நாள் மகன் எங்களைக் கூட்டிக்கொண்டு ஆமி கட்டுப்பாட்டுக்குள் போகும் போதுதான் தெரிந்து கொண்டேன் எனது நான்கு மகள்மாரும் பேரக் குழந்தையும் அதே இடத்தில் இறந்து விட்டதை. எனது பிள்ளைகள் தலைவேறு கைவேறு கால்வேறாக சிதறிக் கிடந்திருககிறார்கள். கணவர் வெட்டி வைத்திருந்த பங்கரில் மகனும் தெரிந்த ஒரு இளைஞனும் அவர்களைப் புதைத்திருக்கிறார்கள்.
“நான் முகாமில் இருந்து யோசித்துக் கொண்டிருப்பதால் உறவினர் வீட்டுக்கு போய் மனதைத்தேற்றுமாறு கூறி முகாமுக்கு பொறுப்பான இராணுவ அதிகாரி எங்களை அனுப்பி வைத்தார். மகன் முகாமில் இருக்கிறார்” என்று தான் எதிர் ;கொண்ட சம்பவங்களையும் தனது நிலையையும் விபரித்தார் அச் சகோதரி. அவரால் தனது காயப்பட்ட கையைக்கொண்டு எதுவும் செய்ய முடியாது. கைக்குள் n~ல் துண்டு இருப்பதால் சத்திர சிகிச்சை செய்ய வேண்டி யுள்ளது. கணவரும் காயப்பட்டவர். எதுவித வருமானமும் இல்லாமல் இக்குடும்பம் திண்டாடிக் கொண்டிருக்கிறது. அதேவீட்டில் இன்னொரு இளம் பெண் இப்பெண்ணின் அக்காவின் மகள் ஜெனிற்றா. வயது முப்பது. மூன்று சிறு பிள்ளைகள். இவரது குடும்பத்தில் இவருடன் சேர்த்து ஐந்து சகோதரிகள்.
இன்று இவர்களில் மூன்று பெண்களுக்கு ஜெனிற்றா உட்பட கணவன்மார் இல்லை. ஷெல்லடி பட்டு இறந்து விட்டனர்.இரண்டு சகோதரிகள் பிள்ளைகளுடன் மெனிக் பாம் முகாமில் இருக்கின்றனர். திருமணமாகாத மூத்த சகோதரியும் ஜெனிற்றாவுடன் இருக்கிறார்.2008ம் ஆண்டு எட்டாம் மாதாம் கிளிநொச்சி கணேசபுரத்தில் இருந்து ஜெனிற்றா குடும்பம்இடம்பெயர்ந்துள்ளது. கணவர் கூலி வேலை செய்து வந்திருக் கிறார். இடப்பெயர்வினால் தொழிலும் செய்ய முடியாமல் மிகவும் பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியிருக்கின்றனர். இறுதியில் தன்னிடம் இருந்த நகைகளை விற்றுத்தான் உணவுப்பொருள் வாங்கியதாக கூறினார்.
“2007 இல் எங்கள் பிரதேசத்தில் அரிசி ஒரு கிலோ 25 – 27 ரூபாய்தான். ஆகக் கூடினால் 30 – 32 ரூபாய். அதற்குமேல் அரிசி விலை ஏறியதில்லை. யுத்தத்தின்போது வட்டுவானில் ஒரு கிலோ அரிசி 1500 – 1700 ரூபாவுக்கு விற்கப்பட்டது.“எனது கணவர் 2009 ஆம் ஆண்டு 2ம் மாதம் முள்ளிவாய்க்காலுக்கு சென்ற போது காயப்பட்டு இறந்துபோனார். கணவரின் உடலைத் தேடித்திரிந்து மூன்று நாட்களின் பின்னர்தான் கண்டுபிடித்து அடக்கம் செய்தோம். முகம் அடையாளம் தெரியாமல் உருக்குலைந்திருந்தது. “இடம்பெயர்ந்து வாழ்ந்த இடத்தில் எங்கள் அம்மா ஒரு கொட்டில் அமைத்து சிறுகடையொன்று நடத்திவந்தார். அதில் ஷெல் விழுந்து அம்மா இறந்துபோனார். அப்பாதான் என்னோடு இருந்தார். அப்பாவும் தேவிபுரத்தில் வைத்து ஷெல்பட்டு இறந்துபோனார். அப்பாவின் உடலைத் தூக்க முடியாது தேவிபுரம் ஆற்றங்கரையில் அப்படியே போட்டுவிட்டு வந்துவிட்டோம்.
“ஒரு பக்கம் ஷெல்லடி. சாப்பாடும் கிடையாது. வுசுழு தந்த கஞ்சியைத்தான் வாங்கிக் குடித்துசீவித்துக்கொண்டிருந்தோம். ஆயிரக்கணக்கில் எல்லா இடமும் ஆட்கள் நாய்கள் பூனைகள் போல் செத்துக்கிடந்தனர். எனது வாழ்வில் இப்படியொரு யுத்தக் காட்சியைக் கண்டதேயில்லை. ஒவ்வொரு நாளும் ஆட்கள்சாவார்கள். சாப்பாட்டைக் கையிலெடுக்கும்போது ஷெல்பட்டு குடும்பங்கள் இறந்தன. எப்பப் பார்த்தாலும் ஐயோ ஐயோ என்ற ஓலம்தான். ஒரே ஷெல்லில் அந்த இடத்தில் இருக்கும் அத்தனைபேரும் காயப்பட்டு இறப்பார்கள். நிறையப்பேர் ஷெல் காயத்தால் செத்துப்போனார்கள். மருந்து வசதி இல்லாததால்தான் நிறையப்பேர் இறந்தனர். எங்கள் கண்களுக்கு முன்னாலேயே 4 – 5 பேர் ஷெல்பட்டு அந்த இடத்திலேயே
துடிதுடித்து இறந்தார் கள்.
“நாங்கள் தனித்த பெண்கள். வருமானமும் இல்லை. ஷெல்லடி ஒரு பக்கம். எங்களையும்பிள்ளைகளையும் காப்பாற்றிக்கொள்ள ஏனைய ஆட்களோடு சேர்ந்து வளைஞர் மடத்திலிருந்து வெளியேற முயற்சித்தோம். வெளியேறப் போகையில் இயக்கம் மேல் வெடி வைக்கும். இயக்கத்தின் வெடிசத்தம் கேட்டதும் ஆமி அடிக்கத்தொடங்கும். இப்படி மூன்று முறை வெளியேற முயற்சித்து முடியாமல் திரும்பினோம். வெளியேற முதல் பொருட்களை பாதுகாப்பாக எல்லைவரை கொண்டுபோய் சேர்த்தோம். ஆனால் அவற்றைத் திரும்பக்கொண்டுவர முடியாது போட்ட இடத்திலேயே போட்டு விட்டு வந்துவிட்டோம்.
“இவ்வளவு பிரச்சினைகளுடன் இடம்பெயர்ந்துகொண்டிருக்கையில் நான்காம் நாள் வட்டுவானில் வைத்து மொட்டையாக அடையாளங்காண முடியாத நிலையில் ஆட்களுடன் ஆட்களாக அக்காவின் மகள் நின்று கொண்டிருந்தாள். கடைசியில் அவளைக் கண்டுபிடித்து கூட்டிக்கொண்டு வந்தோம். நாங்கள் அனைவரும் 2009 மே மாதம் 14 திகதி வெளியேறினோம். இப்ப எந்த உதவியும் இல்லாமல் இருக்கிறோம். முகாமில் பதிவு இருக்கிறது. அனுமதிபெற்று உறவினர் வீட்டுக்கு வந்திருக்கிறோம். திரும்பிப் போனால்தான் நிவாரணம்கிடைக்கும். முகாமில் நிறைய விதவைகள் திரண்டு நிற்பார்கள். எல்லாரும் இளம் விதவைகள். கண்கொண்டு பார்க்க ஏலாது. பயத்தில் சின்ன வயதில் நிறையப்பேர் இளம் வயதிலேயே திருமணம் செய்துகொண்டு விட்டனர். “ என்றார் ஜெனிற்றா.
மக்களைப் பற்றிய அக்கறையில்லாமல் யுத்த வெற்றியை மாத்திரமே இலக்காகக் கொண்டு இருதரப்பாலும் மக்கள் மீது நடாத்தப்பட்டது இந்த யுத்தம். இவர்களின் ஒரே நோக்கம் யுத்த வெற்றியேயன்றி மக்கள் அல்ல. எந்த மக்களின் விடுதலைக்காக போராடுவதாக கூறினார்களோ இறுதியில் அதே மக்களின் அவல அழிவுக்கு காரணமாகிவிட்டார்கள். அந்த யுத்த காலங்கள் வெறும் யுத்தகாலங்கள் மாத்திர மல்ல. மக்கள் மீதான சித்திரவதைக் காலங்கள். கொடுமையிலும் கொடுமையானது இந்த யுத்தம்.
this article published in Penn 14-2. writer is stella victor.
நன்றி. பெண் 14-2, ஸ்டெலா விக்டர்
–