?.ஓவியம் ஆதி மொழி என்பதை புராதன மனிதனின் வாழ்வியல் தொடர்பாடல் முறைமை வெளிப்படுத்தும் வேளையில், ஓவியம் ஊடாக எவ்வாறான கலைகள் மேலெழுந்தன
இனம்,மதம்,மொழி கடந்து எல்லோருக்கும் பொதுமொழி என சிறப்பிக்கப்படும் ஓவியமானது , புராதன மனிதன் தன் கையில் கிடைத்த ஊடகங்களால் தான் வாழ்ந்த குகைச்சுவர்களில் கீற ஆரம்பித்த தருணத்தின் வளர்ச்சிபோக்கே ஆகும். சிற்பத்துறை, அச்சுப்பதித்தல் கலை(print making),மரச்செதுக்கல் வேலைப்பாடுகள்,Textile designs(பக்திக் ஓவியங்கள்) ,ஆபரண வடிவமைப்பக்கள், கேலிச் சித்திரங்கள், டிஜிட்டல் ஓவியங்கள் என இன்னும் குறிப்பிடப்படாத கட்புல ரீதியான கலைகள் யாவற்றுக்குமே அடிப்படையானது ஓவியமே எனலாம்.
?.ஓவியத்தின் அடிப்படை என்று எவற்றைக் கூற விழைகின்றீர்கள்
Elements and principals -ஓவிய கூறுகள் மற்றும் கொள்கைகள் அதாவது கோடு,வர்ணம், வடிவம்,இடம்,தொணி, அமைப்பு, போன்ற ஆறு ஓவியத்தின் கூறுகளும், சமநிலை , ஒருமை,அசைவு, லயம், ஓவியப் பாங்கு,வேற்று இயல்பு (contrast) போன்ற ஓவிய கொள்கைகளுமே அவை. ஒரு ஓவியத்தை படைக்கவும்அதனை உள்வாங்கிக் கொள்ளவும் இவை அவசியமாகின்றது.
?. ஓவியம் வரையும் நுட்பங்களைக் கூற முடியுமா
ஓவியத்திற்கென வரையும்போது கவனிக்கவேண்டிய நுட்பங்கள் பல காணப்படுகின்றன. இதனை பயன்படுத்தும் விதம் ஆளுக்காள் வேறுபடும். perspective,முப்பரிமாண தன்மை , கேத்திரகணித வடிவமைப்புகள், அளவு திட்டங்கள், போன்றவற்றை உதாரணங்களாக கூறலாம். எனினும் இவை ஓவியத்தின் அடிப்படை நுட்பங்களான அகடமிக் பாணி ஆகும்.இவற்றினைப் பயின்று முழுமையான தேர்ச்சி பெற்ற கலைஞர்கள் பிற்காலத்தில் தனக்கென தனியான பாணியினை உருவாக்கிக் கொள்கின்றனர். அதற்கான நுட்பங்களை தனக்குத்தானே உருவாக்கியும் கொள்கின்றனர்.
?.ஓவியக் கண்காட்சியினை நடாத்தியுள்ளீர்களா
ஆம் , எனது பல்கலைக்கழகத்தின் இறுதியாண்டில் “கருஞ்சாயங்கள்”( The dark dyes)எனும் தொனிப்பொருளில் நடாத்தியுள்ளேன். கருஞ்சாயங்கள் என்றாலே மலையகத்தின் தேயிலைச்சாயத்தையே நினைவுபடுத்தி செல்லும் அளவு மிக நெருங்கிய தொடர்புடையதென்பதால் அதனையே தலைப்பாக வைக்கலாம் என முடிவுசெய்தேன். காட்சிப்படுத்தப்பட்ட அனைத்து ஓவியங்களுமே மலையக அரசியல், பொருளாதார,வாழ்வியல் பிரச்சினைகள் பற்றிப் பேசும் ஓவியங்களாகும்.இதனை கன்வஸ், எண்ணெய் வர்ணம் ,தேயிலைச்சாயம் போன்ற ஊடகங்களை பயன்படுத்தி சித்தரித்துள்ளேன்.மூன்று நாட்கள் நடைபெற்றது. எதிர்ப்பார்த்தை விட மிகப்பெரிய அளவிலான வரவேற்பையும்,பாராட்டுக்களையும் தந்த தருணம் அதுவாகும். அத்தருணத்தில் நன்றிக்குரிய ஊடகவியலாளர் ஹுஸைன் அப்துல் மூலம் எனது கண்காட்சி பற்றி தமிழ்மிரர்,வீரகேசரி, தினத்தந்தி போன்ற பத்திரிக்கைகளிலும் , பல இணையதளங்களிலும் மக்கள் மயப்படுத்தப்பட்டமையும் மிகுந்த உற்சாகத்தையும் அளித்தது.
?.நவீன ஓவியங்களை எவைகளில் எவ்வாறு எதனால் காட்சிப்படுத்த முடியும்
மரபு ரீதியான நியம விதிகளுக்கு அப்பாற்பட்டு கலைஞர்கள் சுதந்திரமாக சிந்திக்க ஆரம்பித்த காலமே நவீன ஓவியங்களின் தொடக்கமாகும் . தொனிப்பொருள், ஊடகம் ,காட்சிமுறை ,சிந்தனை வெளிப்பாட்டு திறன் போன்ற எண்ணக்கருக்களில் ஏற்பட்ட பாரிய மாற்றமானது நவீன ஓவியங்களின் படைப்பாக்கத்திறனின் அடிப்படையாகும். படைப்பாளன் அல்லது கலைஞன் தனதுஓவியத்திற்கு பொருத்தமான ஊடகம் என எதனை தெரிவு செய்கின்றானோ, அதனை எவ்வாறான வெளியில் காட்சிபடுத்துவது பொருந்தும் என எண்ணுகின்றானோ அதனை அவ்வாறே ஏற்றுக்கொள்வதே நவீன ஓவியச்சிந்தனையின் சிறப்பாகும்.
?. பெரும்பாலான ஓவியர்களிடம் நவீன ஓவியம் மீதான ஈடுபாடு இருக்கிறதா
ஆம் என நிச்சயமாக கூறமுடியாது ,பெரும்பாலான ஓவியர்கள் நவீன ஓவியம் மீதான ஈடுபாடு கொண்டிருந்தாலும், பலர் பாரம்பரிய ஓவிய நுட்பங்களையும் தனது ஓவியங்களில் பின்பற்றுகின்றனர்.
?.சமகாலத்தில் எவ்வாறான ஓவியங்களை பொதுமக்கள் கண்டுகளிக்க விரும்புகின்றனர்
அதிகமான பொதுமக்கள் ஓவியக் கலையில் ஈடுபாடு உடையவர்களாக காணப்படுகின்றனர்.இருப்பினும் நவீன ஓவியம் தொடர்பான புரிந்துணர்வு சற்று குறைவாகவே காணப்படுகிறது.ஆனால் பொருத்தமான சூழலில் பொதுமக்களுடன் மிக நெருங்கிய தொடர்புடைய ஊடகங்களினூடாக மக்கள் பங்குபற்றும் நவீன ஓவியங்களை இலகுவாக மக்கள் புரிந்துக்கொள்ளும் தன்மை காணப்படினும் , அனேகமானோர் யாதார்த்தபூர்வமான (Realistic )ஓவியங்களையை கண்டுகளிக்க விரும்புகின்றனர்.
?.ஓவியத்திற்கும் புகைப்படத்திற்கும் மாத்திரமே காலத்தை காட்டும் தன்மையுள்ளது என்பர். அவ்வகையில் ஓவியப் படைப்பாளராக இத்தன்மையினை வெளிப்படுத்தியூள்ளீர்களா
ஆரம்பகாலத்தில் எனது ஓவியங்கள் அகடமிக் ரீதியானதே.பல்கலைகழக மூன்றாம் ஆண்டில் நவீன ஓவியங்கள் மீதான புரிதலின் பின்னரே என் சமூகம் சார்ந்த பிரச்சினைகளை வெளிப்படுத்த ஆரம்பித்தேன்.150 வருடங்களுக்கு மேலாக இற்றைவரை மலையக சமூகம் எதிர்நோக்கும் வாழ்வில் பிரச்சினைகளே contemporary முறையில் எனது ஓவியங்களின் உள்ளடக்கமாகும். நெரிசலான இடையூரான லயத்து வாழ்க்கைமுறை, உழைப்புக்கேற்ற ஊதியமின்மை, மாற்றம் பெறாத வாழ்க்கை முறை, பாதுகாப்பற்ற தொழில்முறை ,நாடற்றவர்களாக திரிந்த காலம் ,பிறப்புச்சான்றிதலில் இன்னும் கூட இந்திய வம்சாவளி என்ற அடையாளம் என இலங்கை வாழ் ஏனைய சமூகங்களுக்கு சமமான அந்தஸ்து இல்லாத மலையக வாழ்வியல் என கருத்தாழம் கொண்ட எனது ஓவியங்கள் எதிர்கால சந்ததியினருக்கும் நிச்சயம் புரிந்துக் கொள்ள கூடியதாக இருக்கும்.
?. புகைப்பட ஒளிக்கலையினால் (ஒளிக்கருவி) ஓவியக்கலை எவ்வாறான நிலையிலுள்ளது ?
புகைப்பட ஒளிக்கருவியின் வருகை ஓவியக்கலையின் வீழ்ச்சிக்கே வழிசமைத்துள்ளது. ஒரு குறிப்பிட்ட காட்சியையோ,நிழற்படத்தையே சித்தரிக்க ஒரு கலைஞன் எடுத்துக்கொள்ளும் காலதாமதத்தையும்,வேலைப்பலுவையும் தகர்த்தெறிந்து மிகக்குறுகிய நேரத்தில்,மிகத்துள்ளியமாக தனது வேலையினை புகைப்பட ஒளிக்கருவி செய்து முடிக்கும் தொழில்நுட்பமே இதற்கு காரணமாகும்.இதுவே ஓவியக்கலைஞர்களுக்கும், ஓவியக்கலைக்கும் சவாலான ஒரு விடயமாக அமைந்தது.ஒளிப்படக்கருவியின் தோற்றம் ஓவியக் கலையின் தேவையை இல்லாமல் ஆக்கிவிட்டது.எனினும் இதுவே புகைப்படக்கலையால் காண்பிக்க முடியாத உள்ளார்ந்த உணர்வுகளை வெளிப்படுத்தும் புதிய ஓவிய மரபு ( modernisum) உருவாக காரணமாயிற்று என்பதையும் குறிப்பிட்டாகவே வேண்டும்.
?.ஓவியரின் படைப்பாக்க தூர நோக்கச் சிந்தனை எவ்வாறு இருக்க வேண்டும்?
“ஒரு படைப்பை படைத்தவுடனேயே படைப்பாளி இறந்து விடுகின்றான்,ஆனால் அப்படைப்பானது பார்ப்போர் ஒவ்வொருவரிடமும் தன்னை புதிது புதிதாக தன்னை வியாக்கியனப்படுத்தி கொண்டே இருக்கும்”(இக் கூற்று எனது பாட விரிவுரையாளர் மூலம் அறிந்துக் கொண்டது) இதுவே நிதர்சனமான உண்மை . இதற்கேற்ப ஓவியரின் படைப்பாக்க சிந்தனையானது,அப்படைப்பை பார்க்கும் ரசிகனின் சிந்தனை உணர்வை தூண்டக் கூடிய வகையிலும் ,ரசிக்கத் தூண்டும் வகையிலும் மீண்டும் மீண்டும் காலத்துக்கு காலம் செயற்பட்டு கொண்டே இருக்கும் “கலை முழுமை ” பெற்ற ஓவியங்களை படைப்பதில் கலைஞனின் தூரநோக்கு இருக்க வேண்டும்.
?.ஈழத்தில் ஓவியத் துறை தொழில்துறை சார்ந்து விருத்தியடைந்துள்ளது என கருதுகின்றீர்களா
குறைவான வளர்ச்சியே காணப்படுகின்றது என்றே கருதுகிறேன்.ஓவியத்தின் பெறுமதிக்கேற்ப அதனை நுகர்வதற்கான வசதி பொதுமக்களிடம் இல்லாமையும், கலைஞர்களிடம் காணப்படும் ஊடக தட்டுப்பாடுகள் போன்ற பொருளாதார பின்னடைவுகள் மற்றும் பெரும்பாலான பொதுமக்களிடையே ஓவியத்துக்கான அங்கீகாரம் கிடைக்காமை நாட்டில் ஓவியத்துறைக்கு நிலவும் குறைந்தளவிலான தொழில்வாய்ப்புகள் என்பன இதன் காரணங்களாக கூறலாம்.
?.ஓவியம் என்ற சொல்லுக்கும் ஓவியத்திற்கும் உயிர் கொடுப்பது வர்ணங்கள் மாத்திரம்தானா
வர்ணங்களே இல்லாத வெறுமேன கோடுகளால் ஆக்கப்பட்ட சிறந்த பல ஓவியங்கள் இதற்குரிய பதிலை கூறுகின்றன,நிச்சயமாக இல்லை. ஒரு ஓவியத்திற்கு உயிர்கொடுப்பது வர்ணங்கள் மாத்திரம் என கூறமுடியாது ஓவிய கூறுகள் அடிப்படையானவை ஓவியக்கூறுகள்கொள்கைகள் என அனைத்தையும் உள்ளடக்கும்போதே ஒரு ஓவியம் உயிர்பெறுகிறது .அவையே முழுமைப்பெற்ற ஓவியங்களாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.
?.ஈழத்திலுள்ள தமிழ் ஓவியர்கள் மாணவர்கள் மத்தியில் பெயரளவில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர் என கருதுகின்றீர்களா
இல்லை.எஸ்.ஆர்.கனகசபை மாற்கு,இராசையா,,எம்,எஸ்.கந்தையா, க.செல்வநாதன், சி.பொன்னம்பலம் போன்ற தமிழ் ஓவியர்கள் பாடசாலைக்கல்வியை பொருத்தமட்டில் பெயரளவில் கூட அடையாளப்படுத்தபடவில்லை என்றே நினைக்கின்றேன்.
?. தென்னிந்தியாவை போன்று, ஈழத்து தமிழர்கள் மத்தியில் ஓவியத்துறை வளர்ச்சியடைந்துள்ளதென்று கருதுகின்றீர்களா
இல்லை.பொருளாதாரம் மற்றும் கலை ரீதியான மேற்படிப்புக்களுக்கான வளம் ஈழத்தில் இல்லாமல் இருக்கின்றன நிலை மற்றும் ஓவியத்துறை ரீதியான சமூக ஊக்குவிப்பு. ஓவியத்துறை வளர்ச்சியடைவதற்கான வளங்கள், கலைக்கல்லூரிகள்,ஓவியக்கூடங்கள், கலைஞர்களுக்கான அங்கீகாரம் ,ஓவியம் ஒன்றினைப் படைப்பதற்கான ஊடக தன்னிறைவு என்பன தென்னிந்தியாவுடன் ஒப்பிடுகையில் ஈழத்தில் மிக அரிதாகவே காணப்படுகின்றது.
?.இலங்கை சிங்கள மக்களிடையே ஓவியத்துறைக்கு வரலாறு இருப்பது போன்று ஈழத்துத் தமிழ் ஓவியங்களுக்கென்று வரலாறு இருக்கிறதா
இருக்கின்றது, எனினும் ஈழத்து தமிழ் ஓவியர்கள் ,ஜோர்ஜ்கீர்த் போன்ற கலைஞர்களைப்போன்று நம் நாட்டுக்குரிய தனித்தன்மையை பேனாமல் ஐரோப்பிய செல்வாக்குட்பட்ட தாக்கத்தினை தனது ஓவியங்களில் வெளிப்படுத்தியமையே பெருமளவில் பேசப்படாது போனமைக்கான முக்கிய காரணமாகும்.எஸ்.ஆர்.கனகசபை அவர்களின் தலைமையில் வின்சன்ட் ஆட் கிளப்(winsant art club), இனை இராசையா முதலான ஓவியர்களும், அதன் வீழ்ச்சியுடன் (holidays painters group) விடுமுறை கால ஓவியக்கழகம்” இனை மாற்கு போன்ற ஓவியர்களும் ஈழத்து தமிழ் ஓவிய வரலாற்றை சிறப்பானமுறையில் முன்னெடுத்தும் சென்றுள்ளனர்.
?.ஈழத்து தமிழ் மக்கள் மத்தியில் ஓவியப் பயில்வு மற்றும் ஓவியக்கூடங்கள் எவ்வாறான நிலையிலுள்ளது ?
ஓவியக்கூடங்கள் என்ற கலாச்சாரம் தமிழ் மக்கள் மத்தியில் மிக அரிதாகவே காணப்படுகின்றது ஏன் ஈழத்தை பொருத்தமட்டிலும் விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய அளவிலான ஓவியக்கூடங்களே காணப்படுகின்றன. ஓவியப்பயில்வு என்பது பெரும்பாலும் பாடசாலைக் கல்வியுடனேயே நின்றுவிடுகின்றது. இருப்பினும் ஓவிய ஆளுமைமிக்க,மேற்கல்வியை தொடரவிரும்பும் மாணவர்களுக்கு ஓவியம்பயில தேவையான ஊடகங்களை(materials) இலகுவாக கொள்வனவு செய்ய முடியாமல் போகும் பொருளாதார சிக்கல் ஓவியத்துறை மீதான அதிருப்தியை ஏற்படுத்திகின்றது. மற்றும் ஓவியக்கலைஞர்களுக்கும் சமூகத்தில் கிடைக்கும் குறைந்தளவிலான அங்கீகாரம் மற்றும் தொழில் ரீதியாக வருமானம் ஈட்டிக் கொள்ள முடியாமை ,குறைந்தளவிலான தொழில்வாய்ப்புக்கள் என்பன ஓவியப்பயில்வினை மட்டுமடுத்தும் காரணிகளாகும்.
பாடசாலை, பல்கலைகளில் சித்திர ஓவிய போதனாசியரியர்களாக நியமனம் பெறுபவர்கள் மாணவர்கள் மத்தியில் கலைஞர்களாக பரிணமிப்பதில்லையே ?
ஓவிய ஆசிரியர்கள் மாணவர்கள் மத்தியில் ஓவியத்தை போதிக்கும் நிலை காணப்படுவதே இந்நிலைக்கு காரணம் ஆகும். ஈழத்தின் ஓவிய கற்கையானது ஒரு தொழிற்பாடமாக பார்க்கப்படுகின்றதே தவிர சமூகம் பங்குகொள்ளும் கலையாக அது வளர்க்கப்படவில்லை. ஓவிய ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமான தொடர்பு பாடவிதானத்துடனேயே நின்றுவிடுகின்றது.
?. உங்களது எதிர்கால தூர நோக்குகள் மற்றும் முன்னெடுப்புகளைக் கூறமுடிமா
தூரநோக்கு என்றால் நிச்சயமாக பல கண்காட்சிகளை எம்சமூகத்திலும்,ஏனைய இடங்களிலும் நடாத்தி ஒரு ஓவியராக எம் சமூக பிரச்சனைகளை வெளிக்கொண்டு வருவதுடன்,மாணவர்கள் மத்தியில் ஓவியத்துறை மீதான ஆர்வத்தை வளர்த்து ஆளுமைமிக்க சிறப்பான கலைச்சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டும். முன்னெடுப்புக்களாக கண்காட்சியொன்றினை நடாத்தியுள்ளேன், ஒரு ஆசிரியர் என்ற வகையில் ஓவியம் மீதான ஈடுபாட்டை மாணவர்கள் மத்தியில் கொண்டுவர முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். கடந்த வருடம் இடம்பெற்ற 2020க்கான அரச சிற்ப ,ஓவிய விழாவிற்காக “முடிவிலி” (Infinity) எனும் எனது ஓவியமும் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. தற்போது ஓவிய தயார்படுத்தல் நிலையில் கண்காட்சிக்கு ஏதுவான சூழலை எதிர்ப்பார்த்த வண்ணம் காத்துக்கொண்டு இருக்கின்றேன்.