பாதங்கள் நனைக்கும் அலைவருடலில்
பதறி உயிர்க்கும் நேசத்தில்
சிறகுடைந்த பறவையொன்றின் வானேகும்
உத்தரிப்பு ஏக்கத்தின் பெருமூச்சாய்
மரகதப் பச்சையுடன் கதைபேசத் தவிக்கும் சருகுகளில்
கொழுந்துவிட்டெரியும் பிரியத்தின் வாதை
நிராசை அறையும் பேருண்மை
அனிச்சைத் தலைச் சரிவுகளின்
தோள்களின்றிய அந்தரிப்புக் கணங்களில்
வனம் குடிக்கத் துடிக்கும்
பாலையொன்றின் நெடுந்தாகம்
எரிதழல் மூர்க்கம்
கனலும் மௌனத்தை தணிக்க
சலனமற்ற விழிகள் உரைக்கும் சங்கேத மொழி
போதுமா என்ன?
சித்தார்த்தனின் ஆழ்நிஷ்டையில்
இப்போதும் அலைக்கழிந்துகொண்டிருக்கிறது
யசோதரையின் உயிர்த் தாபம்