“சுதந்திரமாக இருங்கள், சமரசம் செய்யாதீர்கள்” -பெண் ஊடகவியலாளர் பஸீனா சலீம் ((Fazeena Saleem) – Whatsapp நேர்காணல் : சூரியகுமாரி ஸ்ரீதரன்

“அறிவுசார் முன்னேற்றம் இல்லாத எல்லாவற்றிலிருந்தும் நான் விலகிக்கொள்வேன்” – “எமது நாட்டில் மதச்சார்பின்மைக்கு (
(Seculism) ) மிகப்பெரிய தேவை உள்ளது” – .பஸீனா சலீம்


கண்டியை சேர்ந்த பஸீனா சலீம் இருபது வருட ஊடகவியல் அனுபவத்தினைக் கொண்டவர். தற்பொழுது கட்டாரிலிருந்து வெளிவரும் “The Peninsula” என்கின்ற தேசிய பத்திரிகையில் பணியாற்றுகிறார்.

பெண்ணியம் குறித்த அடிப்படைப் புரிதலுடன் செயலாற்றும் ஒரு பெண்ணாக இவர் அடையாளம் காணப்படுகிறார்.ஆரம்பத்தில் தமிழ் பத்திரிகையாளராக இருந்தவர் இன்று ஆங்கில மொழி மூல பத்திரிகையாளராகவும் தடம்பதித்துள்ளார். இவருடைய இந்த மாற்றம் அவருடைய நோக்கு நிலையிலும் பாரிய வேறு பாட்டினை வெளிப்படுத்துவதாக உள்ளது.பத்தோடு பதினொன்றாக அல்லாது வேறுபட்டு நிமிர்ந்து நிற்பதே இவருக்கான சிறப்பு. தனது பணியினைச் சரிவர செயற்படுத்த முனையும் தீவிரமும் .ஒரு பெண்ணாக அவர் எதிர் கொண்ட சவால்களும் விழ விழ எழுந்து நிற்கும் மனோ தைரியமும் எம்மை எல்லாம் ஆச்சரியப்படவைக்கிறது.இந்த நேர்காணலின் மூலம் பஸீனா சலீம் என்கின்ற பெண் பத்திரிகையாளரை புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாகவும் இன்றைய பெண்களுக்கு அவர் ஒரு நல்ல வழிகாட்டியாகவும் இருக்கின்றமையை நாம் புரிந்து கொள்ளலாம்.

?.இருபது வருட ஊடகத்துறை அனுபவத்துடன் பணியாற்றிக் கொண்டிருக்கிறீர்கள்.தற்போதைய தங்கள் தொழில் குறித்த சிறிய அறிமுகம் வாசகர்களுக்காக…

அச்சு ஊடகத்துறையிலும் மின் ஊடகத்துறையிலும் இருபது வருட அனுபவம் எனக்கு இருக்கிறது. இதில் ஆரம்பகாலத்தில் எட்டு ஆண்டுகள் இலங்கையிலும் பன்னிரண்டு ஆண்டுகளாகத் தற்போது கட்டாரிலும் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.பயில் நிலை ஊடகவியலாளராக சுடரொளி பத்திரிகையில் எனது ஊடக பயணத்தை ஆரம்பித்தேன்.தற்போது கட்டாரின் தேசிய பத்திரிகையான ‘ The Peninsula ‘ வில் ஊடகவியலாளராக பணியாற்றுகின்றேன்.(Deputy Head of News ). இந்தப் பயணம் இலகுவானதல்ல.அதேவேளை சுவாரஸ்யமானதும் கூட. நிறைய பாடங்களைக் கற்றுத் தந்திருக்கிறது.நிறைய அனுபவங்களையும் பெற்றுத்தந்திருக்கிறது. நான் ஒரு சிறந்த ஊடகவியலாளராக இருக்கிறேனோ தெரியாது.ஆனால் சிறந்தவர்கள் என்று ஏற்றுக் கொள்ளப்படடவர்களுடன் பணியாற்றி இருக்கிறேன். அவர்களிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். பத்திரிகைக்கு வருகை தரும் பல்கலைக்கழக ஊடகவியல் மாணவர்களுக்கு பயிற்றுநராகவும் வழிகாட்டியாகவும் எனது பணியினை செய்து வருகிறேன்.

இலங்கையிலும் கட்டாரிலும் நாட்டு நடப்புகள், பாராளுமன்ற அமர்வுகள்,உலக நடப்புகள் என்று பல்வேறுபட்ட செய்தி சேகரிப்பில் பங்கு கொண்டிருக்கிறேன்.சாதாரண தொழிலாளர் முதல் அரசியல்வாதிகள், உலகப்புகழ் பெற்றவர்கள், பிரபலங்கள் (celebrities) என்று பலரினையும் நேர்காணல் செய்திருக்கிறேன். இலங்கையிலும் கட்டாரிலும் சர்வதேச நிகழ்வுகளை பதிவுசெய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது.

?.ஊடகத்துறையினை உங்கள் துறையாகத் தேர்ந்தெடுத்ததற்கான காரணம் என்ன? இந்த ஈர்ப்பு எப்படி உங்களில் முளை கொண்டது

எனது பதினான்காவது வயதிலே ஊடகத்துறையை நான் எனது துறையாக ஏற்றுக்கொண்டேன்.அதை எனது பெற்றோருக்கும் அறியத் தந்தேன்.ஆரம்பத்தில் அவர்கள் அத்தகையதொரு துறை குறித்து அறிந்திருக்கவில்லை.வாசகர்களாக மட்டுமே ஊடகத்துறையை அறிந்திருந்தார்கள். எனது பெற்றோர் கல்வித்துறை சார்ந்து பணியாற்றியவர்கள். அதனால் இந்தத் துறையில் பணியாற்றுவது எப்படி இருக்கும் என்பது குறித்து ஆழமான அனுபவமோ அறிவோ இல்லாததினால் ஆரம்பத்தில் சற்று அச்சமடைந்திருந்த போதிலும் அவர்கள் தான் இன்றுவரை நான் இந்த துறையில் பணியாற்றுவதற்கு காரணமாக இருந்தவர்கள்.அவர்களுக்கு தெரியாத அந்த துறையில் கூட நான் முன்னேறி செல்வதற்கு உறுதுணையாக இருந்தார்கள். நான் பொதுவாக சொல்கின்ற ஒரு விடயம் “ஊடகவியல் எனது முதல் காதல்” என்பது. அந்தக் காதல் இன்றுவரை நிலைத்திருக்கிறது.கண்டியில் படித்துக்கொண்டிருக்கும் காலகட்டத்திலேயே நான் ஊடகத்துறையின் ஆரம்பத்தினை நானாகவே ஏற்படுத்திக் கொண்டேன். பாடசாலை நிருபராக ஒரு மாவட்ட பத்திரிகையில் இணைந்து சில பயிற்சிகளையும் பெற்றுக்கொண்டேன்.

?.இலங்கைப் பத்திரிகைத்துறையில் உங்கள் அனுபவம் எப்படி இருந்தது.எவ்விதம் உங்களை வளர்த்துக் கொண்டீர்கள் ?

இலங்கையில் தமிழ் பத்திரிகைத்துறையில் எனது பணியினை ஆரம்பித்து இருந்த போதிலும் காலப்போக்கில் நான் இலத்திரனியல் ஊடகத் துறைக்கு என்னை மாற்றிக் கொண்டேன்.ஒரு காலக்கட்டத்தில் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப்பிரிவிலும் பணியாற்றி இருக்கிறேன்.அதேபோன்று உள்நாட்டுத் தொலைக்காட்சியிலும் வெளிநாட்டுத் தொலைக்காட்சி சேவை யிலும் பணியாற்றினேன்.குறுகிய எட்டு வருடங்களுக்குள் சிங்கள தொலைக்காட்சி நிறுவனத்தின் Breaking News Team இலும் பணியாற்றினேன்.இவ்வாறாகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது இடைப்படட ஒரு காலப்பகுதியில் Sunday Leader பத்திரிகையில் ஒரு குறுகிய காலம் பணியாற்றி இருந்தாலும் அப்போதுதான் நான் தமிழிலிருந்து ஆங்கில மொழியில் பணியாற்றும் மாற்றத்தினை ஏற் படுத்தி கொண்டேன்.

அந்த கால கட்டத்தில் எனக்கு அவ்வாறு செய்ய வேண்டும் என்று தோன்றியது.அத்தகையதொரு அனுபவத்தினைப் பெறவேண்டும் என்று விரும்பினேன்.ஆரம்பத்தில் தமிழ்ப் பத்திரிகை ஒன்றில் தான் நான் பணியாற்றுவேன் என்றதொரு நிலைப்பாடு என்னிடம் இருந்தது.ஆங்கிலம் தமிழ் சிங்களம்.ஆகிய மூன்று மொழியும் தெரிந்தவர்கள் தமிழ் மொழித் துறையிலும் பணியாற்ற வேண்டும் என்ற மனப்பான்மை ஆரம்ப கால கட்டத்தில் எனக்கு இருந்தது. பின்னர் காலப்போக்கில் ஆங்கிலத்துறை எப்படி இருக்கிறது என்று அறிய முற்பட்டதன் விளைவாகவே அந்த மாற்றம் என்னில் நிகழ்ந்தது.இறுதியாக இலங்கையிலிருந்து டோஹா வருவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் The Decon Cronicle என்ற இந்திய பத்திரிகையில் இலங்கையின் கொழும்பு நிருபராகவும் பணியாற்றி இருந்தேன்.

?.இலங்கைத் தமிழ் பத்திரிகை துறையில் பணியாற்றியதற்கும் டோஹாவில் தற்பொழுது பணியாற்றுவதற்கும் இடையே குறிப்பிடத்தகுந்த வேறுபாடுகள் ஏதும் உள்ளனவா?.

அது ஒரு Learn, Unlearn and Re-learn மாதிரியான அனுபவம். ஒரு புதிய கற்றல் சூழலுக்குள் நுழையும் போது இது தவிர்க்க முடியாத ஒரு விடயம்

குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தின் கோட்பாடு என்பது அந்த நிறுவனம் எவ்வாறு செயற்படுகிறது அவர்களுடைய Political Agenda,Propaganda என்ன என்பன போன்ற விடயங்களை உள்ளடக்கி இருக்கும். ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கும் ஒரு பிராந்தியத்திலிருந்து இன்னொரு பிராந்தியத்திற்கும் ஊடக நிறுவனங்கள் பணியாற்றுகின்ற முறை வேறுபட்டதாக இருக்கிறது.ஊடகம் என்கின்ற வரையறை எல்லா இடமும் ஒன்றாகவே இருக்கும். அதாவது செய்திகள் சேகரிக்கப்படும் போது பின்பற்றப்படும் நடைமுறைகள். ஒரே மாதிரியானவை தான்.ஆனால் இங்கு செய்தியின் உண்மைத் தன்மை 100% கடைப்பிடிக்கப்படுகிறது.Check, double check and check again என்கின்ற நடத்தைப் போக்கு ஆழமாகப் பின்பற்றப்படுகிறது.

கத்தாரில், தேசிய ஊடகங்கள் தவறான அல்லது போலியாகப் புனையப்பட்ட செய்திகளுக்கு இடமில்லை. சமூக ஊடகங்கள் வழியாக வெளியிடப்பட்டாலும், உடனடியாக அவை கண்காணிக்கப்பட்டு தளங்களில் இருந்து நீக்கப்படும். எந்த ஒருதனி நபரினதும் புகைப்படத்தை, அவர்களின் அனுமதி இன்றி படம் பிடிக்கவோ , பிரசுரிக்கவோ மாட்டோம்.

இவ்வாறு தான் இயங்க வேண்டும் என்கின்ற வரையறை இங்கு உள்ளது.அரசு சார்ந்த அறிவிப்புகள் பத்திரிகை வெளியீடு (Press Release) பத்திரிகைகளுக்கு அனுப்பி வைக்கப்படும். முக்கியமான கூட்டங்களுக்கு பத்திரிகையாளர்கள் அழைக்கப்படுவார்கள். இலங்கையில் Press Release என்றால் அது பாதுகாப்பு அமைச்சிடம் இருந்து அல்லது ஜனாதிபதி செயலகத்திலிருந்து வரும் அறிவித்தல்களாக இருக்கும். ஆனால் இங்கு ஊடக அறிக்கைகளை பல்வேறுபட்ட நிறுவனங்கள் பல்கலைக்கழகங்கள் போன்றவை அனுப்பி வைக்கும்.

இவை எல்லாமே மறுநாள் செய்திகளாக வெளிவரும். ஒவ்வொரு பத்திரிகையும் எப்படி வழங்குகிறார்கள் பண்ணுகிறார்கள் என்பதில் தான் நாம் பத்திரிகைக்கு பத்திரிகை வித்தியாசத்தைக் கண்டு கொள்ளலாம். நான் இங்கு விரும்புகின்ற ஒரு விடயம் செய்தி ஒன்று எப்படி வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பது இங்கு மிகத் தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. அதற்குட்பட்டுத்தான் எல்லாவிதமான செயற்பாடுகளும் நடக்கிறது. எமது நாட்டில் பத்திரிகைத்துறை குறித்து பல்வகைப்பட்ட விமர்சனங்கள் வைக்கப்படுகிறது. ஆனால் இங்கு அப்படி அல்ல. News is News என்கின்ற போதிலும் அதை நாம் எவ்விதம் வழங்குகின்றோம் என்பதிலேயே அதன் Possitive தன்மை தங்கி இருக்கிறது.

இலங்கையில் மரணங்களும, இரத்தமும் நிறைந்த இடங்களிலிருந்து செய்தி சேகரித்த அனுபவம் எனக்கு உண்டு. , (ஒரு சந்தர்ப்பத்தில் பாதணிகளில் பட்ட இரத்தக் கறைகளை கழுவி இருக்கின்றேன்) காலமாற்றம் காரணமாக டோஹாவிற்கு வந்து குளிரூட்டப்பட்ட அறையில் செய்தி சேகரிப்பது வித்தியாசமாகவே இருக்கிறது.இலங்கையில் சனத்தொகை, தூர இடங்களுக்கு பத்திரிகை சென்றடைய வேண்டும் என்கின்ற காரணங்களுக்காக முதல் பதிப்பு, இரண்டாவது பதிப்பு, நகர பதிப்பு, என பதிப்புகள் வேறுபட்டிருக்கும். ஆனால் இங்கு ஒரு பதிப்பு மட்டுமே பாவனையில் உள்ளது. இலங்கையில் ஞாயிறு வார பத்திரிகை அதிக பக்கங்களுடன் வெளிவரும். ஆனால் இங்கு வார இறுதியில் பக்கங்கள் குறைக்கப்படும் சந்தர்ப்பங்களும் உண்டு. வாசிக்கின்ற பழக்கமும் வேறு வகைப்பட்டது. இங்கு Subscribers தான் அதிக பத்திரிகைகளை கொள்வனவு செய்கிறார்கள். cooperate நிறுவனங்கள், தூதரகங்கள் என subscription புதுப்பிக்கப்படுகிறது.

இலங்கையைப் போன்று காலை எழுந்ததும் போய் பத்திரிகை வாங்கி வந்து படிக்கும் வழமை மிகவும் குறைவு.அத்துடன் இங்கு பத்திரிகைகளை online இல் படிக்கும் வழமை அதிகமாக உள்ளது.இலங்கையிலும் காலமாற்றம் காரணமாக இந்த நிலை உருவாகி வருவதனையும் மறுக்க முடியாது.இலங்கையில் சேலையும், பருத்தி உடையும், தோல் செருப்பும், தோல் பையும் பாவித்த என்னை உயர்ந்த குதிக்கால் கொண்ட காலணிகள் அணிந்து வேலைக்கு செல்ல வலியுறுத்தியதும் இந்நாட்டு ஊடகத்துறை தான். ஆனால் ஒருபோதும் நான் என்ற அடையாளத்தை நான் இழக்கவில்லை. அறிவுசார் முன்னேற்றம் இல்லாத எல்லாவற்றிலிருந்தும் நான் விலகிக்கொள்வேன். மனிதர்கள், சூழ்நிலைகள், ஸ்தாபனங்கள் எல்லாவற்றிற்கும் இது பொருந்தும். நான் என்ற சாம்ராஜ்யத்திற்குள் எதை, யாரை அனுமதிக்க வேண்டும் என நான் மட்டுமே தீர்மானிக்கிறேன். பத்திரிகைத்துறையில் இருபது வருடங்களுக்கு மேலான அனுபவம் எனக்கு இருந்தாலும். நான் ஒவ்வொரு நாளையும் புதிய ஒரு தொடக்கமாகவே எடுத்துக்கொள்கிறேன். முதல் நாளில் வேலையை ஆரம்பிப்பது போலவே நான் அனைத்தையும் தயார் செய்கிறேன், அதுவே எனது கடைசி வேலை என நினைத்து எனது முழு முயற்சியினையும் ஈடுபாட்டுடன் செய்கிறேன்.

?.பெண் பத்திரிகையாளராக எதிர் நோக்கும் பிரச்சனைகளை எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள் ?

பெண் பத்திரிகையாளராக எதிர்நோக்கும் பிரச்சனை என்பது ஒருவகை பத்திரிகையாளராக எதிர்நோக்கும் பிரச்சனை என்பது இன்னொருவகை . இலங்கையில் இருக்கும்போது துரதிஷ்டவசமாக நிறைய சந்தர்ப்பங்களில் என்னுடைய இனம்,சமயம், பிரதேசம் பால்நிலை என்பவற்றினூடு விமர்சிக்கப்பட்டேன். செய்தி சேகரிப்பின் போதும் பொதுப்படையாக எல்லா பத்திரிகையாளரையும் போலவே நானும் பல்வேறுபட்ட பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்துள்ளேன். குறித்த ஒரு பத்திரிகை நிறுவனத்திலிருந்து விலகிய பின்னர் அரசியல் , பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகளுக்கு நான் முகம் கொடுக்க நேர்ந்தது. ஆனால் இன்று எனது பயணத்தினைத் திரும்பிப் பார்க்கின்றபோது நான் இன்று இவ்வளவு தைரியமாக எனது வாழ்க்கையை எதிர்கொள்ள அந்த அனுபவங்கள் கொடுத்த தைரியம் தான் என்னை இவ்வளவு தூரம் வழிநடத்தி வந்திருக்கிறது என்பதனை நான் ஆழமாக நம்புகின்றேன்.

கட்டாரைப் பொறுத்தவரையில் இங்கு அரசியல் பிரச்சனைகள் அல்லது செய்திகளை எழுதியதால் வருகின்ற பிரச்சனைகள் என வருவதில்லை..பதின் மூன்று வருடங்களாக பணியாற்றும் என்னை யாரும் வெளிநாட்டவராக என்னைப் பிரித்து பார்த்தது கிடையாது.என்னை இந்த நாட்டின் ஒரு பத்திரிகையாளராகவே பார்க்கிறார்கள்.எந்த ஒரு இடத்திலும் இனம், மதம் பால் நிலை சார்ந்து என்னை பார்த்தது கிடையாது.ஒரு ஊடக வியலாளராக சக மனுஷியாகவே பார்க்கப்படுகிறேன்.They see me as a Human . வேலை செய்யும் சூழ்நிலையாக இருந்தாலும், தொழில் சார்ந்த பொறுப்புகளை கொடுக்கும் போதும் எந்த விதமான பாரபட்சமும் இன்றி செயற்படுகிறார்கள்.இதனை ஒரு வரப்பிரசாதமாக நான் பார்க்கிறேன்.பயம் என்கின்ற உணர்வு இன்றி வேலை செய்யக்கூடியதாக இருக்கிறது.பல் வேறுபட்ட நாடுகளிலிருந்தும் கலாசார சூழலிலிருந்தும் வருகை தந்தவர்களுடன் வேலை செய்யும் போதும் பாதுகாப்பாகவே உணர்கிறேன்.

?.எமது சமூகம் பெண் ஊடகவியலாளர்களையும் பெண்கள் ஊடகத் துறையைத் தேர்ந்தெடுப்பது குறித்தும் எப்படிப் பார்க்கிறது என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

பத்திரிகைத்துறையில் மட்டுமல்ல வேறு எந்த துறையில் வேலை செய்யும் பெண்ணாக இருந்தாலும் எமது சமூகம் முற்போக்கு தன்மை இல்லாமலேயே இன்னமும் இருக்கிறது என்பது கவலைக்குரிய விடயம்.சமூகம் இத்தகைய பார்வையுடன் இருப்பதனை மாற்றிக்கொள்வது அவசியம். ஊடகத் தொழிலை எமது சமூகம் சரிவர புரிந்து ஏற்றுக்கொள்ளவேண்டும்.அதற்கு இன்னும் நீண்ட காலம் செல்லும் என்று நினைக்கிறேன். அடிப்படை சிந்தனையில் மாற்றத்தை கொண்டுவருவது அவசியமாகிறது.

?.தற்போதைய இலங்கை சூழலில் தமிழ் பேசும் இஸ்லாமியராக தாங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து

எமது நாட்டில் மதச்சார்பின்மைக்கு (Seculism) மிகப்பெரிய தேவை உள்ளது. இலங்கையில் உள்ள முஸ்லிம் சமூகத்துக்கும் சில விவேகமான நகர்வுகளை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு உள்ளது.நேரடியாக நான் பாதிக்கப்படவில்லை ஆயினும் நான்சார்ந்த சமூகம் பாதிக்கப்படுகின்ற போது அந்த சமூகத்தின் ஒரு அங்கமாகிய நானும் பாதிக்கப்படவே செய்கிறேன்.இந்த சந்தர்ப்பத்தில் ‘ஜான் டான்’ இனுடைய கவிதை வரிகள் எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது. ஒருவர் இறந்து போனால் அல்லது தாக்கப்பட்டால் நான் மனித குலத்தின் அங்கமாக இருப்பதால் அது என்னையும் பாதிக்கிறது. தீர்வுகாணப்பட வேண்டிய நிறைய பிரச்சினைகள் இலங்கையில் இஸ்லாமிய சமூகத்தினருக்கு உள்ளது . அரசியல் சமூகம் சார்ந்த பிரச்சினைகள் பத்து வருடங்களுக்கு முன்னரும் இருந்தது. ஆனால் தற்போதைய நிலையில் அது இன்னும் வளர்ச்சி அடைந்து காணப்படுகிறது. நாம் அந்த நாட்டு பிரஜைகள் என்ற வகையில் சகல உரிமைகளையும் பெறத் தகுதியானவர்கள்.இலங்கையில் நிம்மதியாக வாழ்கின்ற உரிமை அந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜைகளுக்கும் இருக்கிறது . ஒருவர் எந்த சமயத்தை, நம்பிக்கையை,இனத்தை அரசியல் கொள்கையை கொண்டவர் என்பதை வைத்து அவரது உரிமை குறித்து நாம் பேசுவது நிறுத்தப்பட வேண்டும்..தமது நாட்டில் வாழும் உரிமை எல்லோருக்கும் இருக்கிறது.அந்த உரிமை தமக்குக் குறைகிறது என்று ஒரு தனி நபரோ ஒரு சமூகமோ நினைக்கும் போதே பிரச்சினை ஆரம்பமாகிறது.அத்தகையதொரு பிரச்சினை முஸ்லீம் சமூகத்திற்கு இன்று இலங்கையில் இருக்கிறது.

?.உங்கள் பெற்றோரின் இழப்பு உங்களை மிகவும் பாதித்ததாகவும் அத்தகையதொரு உளவியல் சிக்கலிலிருந்து இப்போ ஓரளவு மீண்டுள்ளீர்கள் என்றும் அறிகிறோம். இத்தகைய மனப்பாதிப்புக்குள்ளாகி மீளமுடியாது தத்தளிப்பவர்களுக்கு உங்கள் ஆலோசனை என்ன ?

எனது பெற்றோரின் இழப்பு என்பது என்னை முழுமையாக இழந்ததாக நான் உணர்ந்த ஒரு இடம்.எனக்கு சகோதரர்கள், குழந்தைகள், வாழ்க்கை துணை என்கின்ற உறவுகள் கிடையாது.எனது பெற்றோருக்கு நான் ஒரே மகள்.அவர்களை ஒருநாள் இழப்பேன் என்பது எனது அறிவுக்குத் தெரிந்திருந்தது.அது இயற்கையின் நியதி என்பதும் எனக்குத் தெரியும். ஆனாலும் அது நிஜமாக நடந்தபோது அதனை இலகுவாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.இன்று வரை அது எனக்கு இலகுவாந ஒன்றாகத் தெரியவில்லை. எனது வாழ்வை முழுமையாக சீர்படுத்தி என்னோடு வந்த இருவர் திடீரென்று இல்லாமல் போய் விட்டார்கள்.

எனது தாயாரின் இழப்பு 2018 இல் நிகழ்ந்தது.அதன்போது நான் அவருடன் இருந்தேன்.அவருக்கான எல்லா காரியங்களையும் செய்தேன்.உண்மையில் I let her go.அவருடைய உடல் நிலை கருதி சரியான முடிவுகளை எடுக்க வேண்டிய ஒரு தருணம் ஏற்பட்டது.கெளரவமாக வாழ்ந்த எனது தாயார் கெளரவமாகவே இந்த உலகிலிருந்து விடை பெறவேண்டும் என்று கருதினேன்.அதற்கான சூழ்நிலையையும் ஏற்படுத்திக் கொடுத்தேன்.ஆனால் அதனால் ஏற்பட்ட தாக்கம் மிகவும் ஆழமாக இருந்தது. அம்மாவின் சம்பிரதாயங்களை இலங்கையில் முடித்து விட்டு நான் டோஹா விற்கு வந்தபின்னர் P T S D (Post-Traumatic Stress Disorder) எனப்படுகின்ற நிலைமை எனக்கு ஏற்பட்டது..நான் அத்தகையதொரு நிலையில் இருக்கிறேன் என்பது எனக்கு அந்தவேளை தெரிந்திருக்கவில்லை.மிகவும் கலங்கியநிலையில் இருந்தேன்.

அப்பொழுது என்னுடன் பணியாற்றியவர்கள் எவ்வளவோ ஆறுதல் வார்த்தைகள் கூறினார்கள். நான் இப்படி இருப்பதனை எனது தாயார் விரும்பமாடடார் என்றெல்லாம் கூறி எனது மனதை மாற்ற முயன்றார்கள்.அப்படியும் எனது மனம் ஆறாமல் இருந்ததைக் கண்ட நண்பர்கள் இறுதியாக என்னை மருத்துவ ஆலோசனை பெறும்படி வற்புறுத்தினார்கள்.அவர்களின் வற்புறுத்தலினால் நான் மருத்துவ ஆலோசனை பெற்றுக் கொண்டேன்.I was self harming, I was suicidal என்னை நானே துன்புறுத்திக் கொள்ளும் தன்மை, தற்கொலைக்கான முயற்சி போன்ற கட்டங்களை நான் கடந்திருக்கிறேன்.என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டேன்.இருட்டை விரும்பினேன்,என்னையே நான் வெறுத்தேன். எனக்குச் சில சிந்தனைகள் வந்தன. நான் இறந்தால் எனது தாயாரை சந்திக்க முடியும் என்று நம்பினேன்.இவை எல்லாவற்றுக்கும் மேல் ஒரு படியாக எனது தாயாரின் குரலைக் கேட்கத் தொடங்கினேன். மருத்துவரீதியாக இறந்த ஒருவரின் குரலைக் கேட்பது அபாயமான அறிகுறி என்பார்கள்.

இந்த நிலைமையிலேயே நான் மருத்துவ ஆலோசனை பெறத் தொடங்கினேன்.மருந்து, மனநல ஆலோசனை, என்பனவற்றைப் பெற்றுப் பாரிய அளவில் நான் எனது தாயாரின் தாக்கத்திலிருந்து விடுபட்டு வருகின்ற போது இந்த வருடம் ஏப்ரல் 4ஆம் திகதி சற்றும் எதிர்பாராத முறையில் காலை ஒரு தொலைபேசி அழைப்பு உறவினர்களிடம் இருந்து வந்தது எனது தகப்பனாரும் போய் விட்டார் என்று.Covid காரணமாக எனக்கு இலங்கை செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது.அவரது இறுதிக் கடமைகளில் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை.இரண்டு இழப்புகளும் எனக்கு இருவேறுபட்ட அனுபவத்தைத் தந்தது.முதலாவதில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள முடிந்தது.

மற்றையது எனக்கு பெருங்கனவு போல் தோன்றியது.எனது தகப்பனாரின் இழப்பை இன்றுவரை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு மனநிலையில் இருக்கிறேன்.சில நேரங்களில் நான் என் தந்தையின் இறப்பு சான்றிதழைப் பார்க்கிறேன், அது உண்மையா என்று நினைக்கிறேன்.நான் என் அம்மாவை நேசிக்கிறேன், ஆனால், நான் என் தந்தையுடன் நெருக்கமாக இருந்தேன். நான் என்னை நம்புவதை விட அவர் என்னை அதிகமாக நம்பினார். அவர் என் உந்து சக்தியாக இருந்தார். நான் எதையும் பகிர்ந்து கொள்ளக்கூடிய என் நண்பரை இழந்துவிட்டேன்.ஆனால் என் தந்தையின் இழப்பு என்னில் Extrem Behaviour இல்லாமல் இருப்பதை உணர்கிறேன்.எனக்குக் கவலையாக இருக்கிறது. மனம் வலிக்கிறது. ஆனால் அதற்கும் மேலான உணர்வு நிலைக்கு நான் செல்லவில்லை.எனது தாயாரின் இழப்பின்போது நான் பெற்ற மருத்துவ உதவியினால் கிடைத்த நன்மை இது என்றே கருதுகிறேன்.

உடம்புக்கு நோய் வருவது போலவே மனதுக்கும் நோய் வரும்.அப்படியான சந்தர்ப்பங்களில் நாம் முழுமையான மருத்துவ உதவியைப் பெறவேண்டும்.அதில் எந்தவிதமான தவறும் இல்லை.எம்மை நாம் மீட்டுக்கொள்ள அதுவே சரியான வழி. நாம் வெளியில் எப்படி இருக்கிறோம் என்பது முக்கியமல்ல. மூளை என்பது எமக்கான ஒரு ஆசீர்வாதம்,வாழ, வாழ, செழிக்க விரும்புவது மனித இயல்பு. ஆனால் மனநோயினால் நீங்கள் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு நிலைக்கு வரலாம்.உடல் காயங்களைக் கண்டறிவது எளிது. ஏனென்றால் நாம் அவைகளைப் பார்க்க முடியும். நீங்கள் இரத்தத்தைக் காணலாம், உடைந்த எலும்பைக் காணலாம். ஏனெனில் காயத்திற்கு உடலில் ஆதாரம் உள்ளது. நீங்கள் எப்போதாவது இதுபோன்ற சூழ்நிலையில் இருந்திருந்தால், அது எப்படி இருக்கும் என்று உங்களுக்குத் தெரியும். உடல் காயங்கள் ஏற்பட்டால் நீங்கள் வேதனையை வெளிப்புறமாகவே அனுபவிக்கிறீர்கள். நீங்கள் வலியால் கத்தலாம். நீங்கள் உணரும் அனைத்தையும் மற்ற அனைவரும் அறிவார்கள்.

ஆனால் உணர்ச்சிகரமான காயங்கள், அவை வேறுபட்டவை. சில நேரங்களில் அனுபவம் முற்றிலும் உள்நோக்கி இருக்கும்.நான் என் தாயை இழந்தபோது முற்றிலும் உடைந்துவிட்டேன். அது என் உடல் மற்றும் ஆன்மாவின் ஒரு பகுதியை இழந்தது போல் இருந்தது..என் உலகம் இருண்டது. But I survived it. எனது பெற்றோரின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வாழ்வதற்குக் கற்றுக்கொள்கிறேன். என் இதயம் வலிக்கிறது, இது எளிதானது அல்ல, ஆனால் வாழ்க்கை நகர வேண்டும்உடல் காயங்களைப் போலவே, மனதின் காயத்திற்கும் சிகிச்சையளிக்கப்பட வேண்டும். நான் என் பெற்றோரின் பாரம்பரியத்தை, அவர்களின் நல்ல செயல்களை முன்னோக்கிக் கொண்டு செல்ல விரும்புகிறேன்;

?.பெண்கள் வலுவூட்டப்படுதலின் அவசியம் குறித்த உங்கள் பார்வை?

வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் சில விடயங்களை நாம் இழக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்படுகிறது. குறிப்பாகப் பெண்கள் தமது சுதந்திரத்தினை முழுமையாக இழந்துவிடும் சந்தர்ப்பங்களும் உண்டு.சிலர் தாமாகவே அதனை மனமுவந்து ஏற்றுக்கொள்ளவும் செய்கிறார்கள்..அவற்றுள் முக்கியமாக திருமணத்தின் பின்னர் செய்த தொழிலிலிருந்து விடுபட்டு குடும்பம் என்ற சூழ்நிலைக் கைதியாகி விடுகிறார்கள்.இதன் காரணமாக தமது சுயத்தினை முற்றுமுழுதாக இழந்து விடுகிறார்கள்.

இத்தகைய நிலையினை ஒவ்வொருவரும் மாற்றிக் கொள்ள வேண்டும். ஆண்களாக இருக்கட்டும் அல்லது பெண்களாக இருக்கட்டும் யாருமே தமது சுயத்தினை ஒருபோது இழக்கக் கூடாது. சுதந்திரம் என்பது சுயமாக ரோட்டிலிறங்கி நடப்பது அல்லது Financial Independance என்று கூறப்படுகின்ற பணம் சார்ந்த தன்னிறைவு மட்டுமல்ல.ஒருவகையில் பணம் எமது ஆளுமையை நிர்ணயித்தாலும் கூட, எமது சுயத்தினை விட்டுக்கொடுக்கும் போது தான் சார்ந்த அறிவு ரீதியான நம்பிக்கைகளையும் சேர்த்தே இழந்து விடுகிறார்கள்.ஒரு இல்லத்தரசியாக இருந்தாலென்ன வேலைக்குப் போகிற பெண்ணாக இருந்தாலென்ன தமது அறிவுத்தேடலை என்றுமே நிறுத்திக்கொள்ளக் கூடாது. தாம் விரும்புகின்றவற்றை நடை முறைப்படுத்த முயற்சி செய்ய வேண்டும். உதாரணத்துக்கு பாட விருப்பம் என்றால் பாடுங்கள்.எழுத விருப்பம் என்றால் எழுதுங்கள்.தைக்க விருப்பம் என்றால் தையல் தொழிலை செய்யுங்கள்.இவை போல ஏதோ ஒன்று உங்களுக்கானதை நீங்களே தேர்ந்தெடுத்து அதனைத் தொடர்ந்தும் செய்ய முற்படுங்கள். உங்களை ஒரு மனித ஜீவியாக உணர்ந்து உங்கள் விருப்பங்களை செய்யுங்கள். அதற்கான தடைகள் வரும்போது அவற்றினை மற்றவர்க்குப் புரிய வையுங்கள்.

அடுத்தாக, எதிர்பாராத ஒரு விடயம் நிகழும் போது அதற்கு முகம் கொடுக்க வேண்டிய மன உறுதியைத் தொடர்ந்தும் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.எது நடந்தாலும் அதற்கு முகம் கொடுக்கத் தயார் என்கின்ற மனஉறுதியுடன் இருங்கள்.தானாகஇருத்தல், அறிவை வளர்த்துக் கொள்ளல் போன்ற அம்சங்கள் உங்களைத் தன்னம்பிக்கை உள்ளவராக வளர்க்க உதவும். எனது வாழ்க்கையும் எனது சிந்தனையும் பலரையும் வழி நடத்திச் செல்ல உதவும் என்று நம்புகிறேன்.பலர் நான் தனியே இருப்பதன் காரணமாக என்னிடம் பல விதமான கேள்விகளைக் கேட்பார்கள் உங்கள் வயதான காலத்தில் என்ன செய்வீர்கள் என்றும் .உங்கள் தனிமையிலிருந்து எப்படி உங்களை விடுவிக்க போகிறீர்கள் என்றும் கேட்பார்கள்..அதற்கு எனது பதில், தனிமையை நான் சுயமாக மனம் விரும்பி ஏற்றுக்கொண்ட ஒன்று என்பது..இது நான் எடுத்த முடிவு.

இன்னொருவருடன் அல்லது பலருடன் இருக்கும் போதும் கூட தனிமை வரக்கூடும்.தனிமையாக இருக்கும் போதும் தனிமை வரக்கூடும்.. அடுத்த கட்டம் என்று நினைக்கும் போது … நான் இப்போதே முதியோர் இல்லத்தில் சக்கர நாற்காலியில் என்னைக் கற்பனை செய்து பார்க்கிறேன்.எனது வாழ்க்கை இப்படித்தான் இருக்கப்போகிறது என்பதனை நான் முன் கூட்டியே என்னைத்தயார் நிலையில் வைத்திருக்கிறேன். பலர் இத்தகைய நிதர்சனத்தை கற்பனை செய்து பார்ப்பது கிடையாது. அடுத்து என்ன செய்ய போகிறோம் என்ற முடிவு இல்லாமல் இருக்கிறார்கள்.என்னைப் பொறுத்த வரையில் குறித்த வயது வரை தான் என்னால் தொழில் செய்ய முடியும் என்றும் வயதான காலத்திலே நோய் வாய்ப்பட்டால் என்னை யார் பார்த்துக்கொள்வார்கள் வயதான காலத்தில் நான் எங்கு இருப்பேன் என்றெல்லாம் கேட்கப்படும் கேள்விகளுக்கு நான் விடைகளை வைத்திருக்கிறேன்.இத்தகைய கேள்விகள் என்னைப் போன்று தனித்து வாழ்பவர்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே இது பொதுவானது என்பதனை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.இதன் காரணமாகவே நாம் எமது சுதந்திரத்தை என்றுமே இழந்து விடக்கூடாது என்கிறேன்.இதுவே ஒரு பெண் தன்னைத் தானே வலுவூட்டுதல் என்பது.

அடுத்து இன்னொரு முக்கியமான விடயம், வாசித்தல் பற்றியது.வாசிப்பு என்பது எல்லோருக்குமே அத்தியாவசியமானது.எதனை வசிக்கிறோம் எந்த அளவிலான வாசிப்புப் பழக்கத்த்தினை நாம் கொண்டிருக்கின்றோம் என்பது ஆளுக்கு ஆள் வேறுபடும். வாசிக்கும் போது எம்மில் ஆளுமை வளர்கின்றது. ஒரு புத்தகத்தினை நாம் வாசிக்கும் போது அந்த புத்தகத்தில் உள்ள வாழ்வை நாம் வாழ்ந்துவிடுகின்றோம்.அது எங்கள் ஆளுமையை பாரியளவில் நிர்ணயிக்கிறது.favourite readings என்று இல்லாமல் நான் எதையும் வாசிப்பேன்.எனக்கு வாசிப்பதற்கு interest ஆக இருக்கின்ற அல்லது எனக்கு வாசிப்பதற்கு விருப்பமாக இருக்கின்ற அனைத்து விடயங்களையும் நான் வாசிப்பேன்.2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கத்தார் National Library திறந்த போது நான் மூன்று புத்தகங்களைப் பெற்றுக்கொண்டேன்.அவை மூன்றும் End of Life care பற்றியது.அதாவது End of Life care decision making பற்றியது.எமது குடும்பம் சார்ந்த ஒருவர் அப்படியான நிலையில் இருந்தால் நாங்கள் எப்படி முடிவுகளை எடுக்க வேண்டும் என்பது குறித்தும் விஞ்ஞான ரீதியாகவும் மருத்துவ ரீதியாகவும் சரியான முடிவுகளை எப்படி எடுக்க வேண்டும் என்பது குறித்தும் கூறப்பட்டுள்ளது.இந்த மூன்று புத்தகங்களையும் நான் அலுவலகத்தில் கொண்டு வந்து வைத்த போது எல்லோரும் என்னிடம் வந்து இவற்றை எல்லாம் ஏன் வாசிக்கிறீர்கள் என்று கேட்டார்கள். எனக்கு அவற்றை வாசிக்க வேண்டும் போல் இருக்கிறது என்று கூறினேன்.

இதுபோன்ற புத்தகங்களை நான் வாசித்துப் பெற்ற அறிவு தான் என் தாயார் கடைசியாக ICU வில் இருந்தபோது அவர் குறித்து சரியான முடிவினை எடுக்கின்ற அறிவினை எனக்குக் கற்றுக் கொடுத்தது. அதனாலேயே இதைத்தான் வாசிக்க வேண்டும் இப்படித்தான் வாசிக்க வேண்டும் என்ற வரையறை தேவையற்றது என்று கூறுகிறேன்.எது எமக்கு வாசிக்கப் பிடிக்கிறதோ அது Fiction, Nonfiction Science, Current affairs என எதுவாக இருந்தாலும் எமது அறிவுக்குப் பயன்படும் எதையுமே நாம் வாசிக்க தவறுதல் கூடாது.வாசிக்கின்ற பழக்கத்தினை ஒவ்வொருவரும் தமது வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும். அது ஏதோ ஒரு வகையில் எமது வாழ்க்கைக்கு உதவத்தான் போகிறது.தமது அறிவை வளர்க்க மட்டுமல்லாது தன்னைச் சார்ந்தவர்களுக்கு உதவி செய்யவும் குழந்தைகளுக்கு அறிவு புகட்டிடவும் என ஏதோ ஒருவகையில் உதவி செய்யும். எனது வாசிப்புப் பழக்கமே நான் பத்திரிகையாளராக வருவதற்கும் உந்துதலாக அமைந்தது.நான் இளம் வயதில் கூட்டுக் குடும்ப அமைப்பில் வளர்ந்தவள்.ஞாயிற்றுக் கிழமைகளில் எல்லோரும் ஒன்றாக இருந்து பத்திரிகை வாசிப்போம்.பெரியவர்களைப் பார்த்து நானும் வாசிப்பதில் ஈடுபாடு கொண்டேன்.இந்த ஈடுபாடே இன்று வரை சரியான முடிவுகளை எடுக்கவும் எனது ஆளுமையினை ஓரளவுக்கேனும் வளர்த்துக்கொள்ளவும் காரணமாய் அமைந்தது.

?.ஒரு பெண் சுயமாகவும் சுதந்திரமாகவும் இருக்க வேண்டுமென்பதில் தீவிரமான அக்கறையுடன் செயற்படுகிறீர்கள். அது குறித்து சில வார்த்தைகள்

பெண்கள் குறித்து நான் சொல்ல விரும்புவது “சுதந்திரமாக இருங்கள், சமரசம் செய்யாதீர்கள்” என்பது தான்.

இங்கு சுதந்திரம் என்பது நிதி, தொழில், உணர்ச்சி, தனிப்பட்ட கருத்து மற்றும் நம்பிக்கைகள் உட்பட வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் குறிக்கிறது. சுயாதீனமாக இருப்பதன் மூலம் நீங்கள் எதிர்பார்க்கின்ற விரும்புகின்ற புதிய விஷயங்களை முயற்சிக்க அதிக வாய்ப்புள்ளது.புதுமையானதும் புதியதுமான ஒன்றை உருவாக்க புதியதை நீங்கள் கனவு காணும்போதே அதன் இறுதி வடிவத்தைப் பெறமுடியும். பெண்கள், “நானும் சுய அறிவுள்ள ஒரு மனித பிறவிதான்.” என தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும்போது, தனக்கு எதிரான தடைகளை அவள் உடைக்கிறாள்.

இதன் வாயிலாக பெண்கள், கல்விய றிவு பெற்ற சமூகமாக முன்னேறும். அங்கே ஆண் , பெண் சமத்துவம் உண்டாகும். வறுமை குறையும். கலாசார மாற்றங்கள் ஏற்படும். ஆரோக்கியம் பெருகும்..ஆண் பெண் சமத்துவத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளும்போது சமுகம் வளம் பெறும். இத்தகைய சமத்துவத்தை மக்கள் ஏற்றுக்கொள்வதற்கு பகுத்தறிவுச் சிந்தனைகள் மிகவும் அவசியமாகும்.நம் பாடப் புத்தகங்கள் செய்திகளைத் தருகின்றன, சிந்தனைகளை விதைப்பதில்லை. மானுட விழுமியங்களும் மாண்புகளும் வகுப்பறைகளில் பேசப்படுவதில்லை.ஆண் பெண் சமத்துவம், அனைவருக்கும் பொதுவான மனிதநேயம், மனித உரிமைகள்,மேடைப் பேச்சுகளே அன்றி பள்ளிப் பாடங்களாக ஆக்கப்படவில்லை. பெண்களின் சுயமதிப்பு உணர்வு (women empowerment), அவர்களின் சொந்தத் தேர்வுகளைத் தீர்மானிக்கும் திறன் மற்றும் தமக்கும் மற்றவர்களுக்கும் சமூக மாற்றத்தைப் பாதிக்கும் உரிமை ஆகியவற்றை ஊக்குவிப்பதற்காக பெண்களின் அதிகாரம் வரையறுக்கப்படுகிறது.

பெண் அதிகாரம் சமூக, கல்வி, பொருளாதாரம், அரசியல் மற்றும் உளவியல் என ஐந்து பிரிவுகளாக வரையறுக்கலாம்.பெண்களின் பார்வையை ஏற்றுக்கொள்வது அல்லது அவர்களைத் தேடுவதற்கு முயற்சி செய்வது, கல்வி, விழிப்புணர்வு, எழுத்தறிவு மற்றும் பயிற்சி மூலம் பெண்களின் நிலையை உயர்த்துவது உட்பட பல வழிகளில் இது வரையறுக்கப்படலாம்.

புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் இருந்தால் சக மனிதர்களை நேசிக்கும் பழக்கம் இயல்பாக வரும் என்பார்கள். சிந்தனையின் தூண்டுகோல் புத்தகம். நேரம் கிடைக்கும்போது வாசிக்கிறேன் நேரம் ஒதுக்கி வாசிப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும் என்பதே வாசித்தலை நேசிப்பவர்களின் கருத்து. வாழ்க்கையில் வெற்றிபெற திறமையும் நம்பிக்கையும் அவசியம்!ஒவ்வொரு தனி நபருக்கும் பொறுப்பு உள்ளது. நல்ல சிந்தனை மாற்றங்கள் எங்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் தொடங்கட்டும்- அது நல்லதாக இருக்கட்டும், அது அனைவரின் எதிர்காலத்திற்காகவும் இருக்கட்டும்.

?.உங்கள் அனுபவத்தில் மறக்க முடியாத நேர்காணல்கள் என்று குறிப்பிடும்படியாக ஏதும் உள்ளனவா ?

நேர்காணல் செய்வது எனக்கு மிகவும் பிடிக்கும். அறிவை மேம்படுத்த இது ஒரு வாய்ப்பை அளிக்கிறது என்று நான் நம்புகிறேன். கண்டியில் ஒரு நடுத்தர வர்க்க வீட்டில் வளரும் போது, என் சுற்றத்தார் ஒருபோதும் நான், ஒரு நாள் உலக அழகியையோ, உலக தலைவர்களையோ சந்திப்பேன் என்று நம்பவில்லை. என் பெற்றோர் நம்பினார்கள், நான் நம்பினேன். அது நடந்தது. எனது முதல் நேர்காணல் மிலிந்த மொரகொடவுடன். அந்த நேரத்தில் நான் ஒரு இளைய நிருபர். மிலிந்தா ஒரு வியாபாரியாக இருந்து அரசியல்வாதியாக மாறிக்கொண்டிருந்தார். ஆசிரியர் திரு இரத்னசிங்கம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நாளை நீங்கள் மிலிண்டாவை நேர்காணல் செய்ய வேண்டும். அவர் யார் எண்டு தெரியும் தானே என்றார். ஓம், ஆனால் என்ன கேள்வி கேட்க வேண்டும் என்றேன். இப்போது மனதில் என்ன தோன்றுகிறது என்று கேட்டார் .

அவர் ஏன் வியாபாரத்தில் இருந்து அரசியலில் நுழைகிறார்? என்றேன் சரி, அது உங்கள் முதல் கேள்வியாக இருக்கட்டும் என்றார் ஆசிரியர். அடுத்த கேள்விகள் அவருடைய பதில்களிலிருந்து தொடங்கும் என்றார். நான் கிருலப்பனவில் உள்ள மிலிந்தாவின் அலுவலகத்திற்குச் சென்றேன், அவருக்காகக் காத்திருந்தேன். அவர் என்னை ஒரு கூர்மையான பார்வையில் பார்த்தார்நீங்கள் நேர்காணலை நடத்தப் போகிற பத்திரிகையாளரா? என்றார். ஓம், என்றேன். அப்போது எனக்கு சுமார் 21 வயது, என் வயதுக்குரிய முதிர்ச்சி தோற்றத்தில் இல்லை.நேர்காணல் 40 நிமிடங்களுக்கு மேல் நடைபெற்றது.நான் விடைபெறும் போது அவர் கூறினார், முதல் பார்வையில் அவர் என்னை தவறாக மதிப்பிட்டார் என்று. இப்படியான அனுபவத்தை நான் பல சந்தர்பங்களில் பெற்றிருக்கிறேன்.பல நேர்காணல்களின் இறுதியில் விருந்தினரோடு தனிப்பட்ட்ட முறையில் பேசுவேன்.

உக்ரேனிய துணை வெளியுறவு அமைச்சர் அண்மையில் சந்தித்த போது, முன்னர் உக்ரேன் என்றால் எனக்கு போர் விமானங்கள் நினைவிற்கு வரும், இப்போது உல்லாச பிரயாணிகள் நினைவிற்கு வருகிறது என்றேன். சற்று சந்தேகத்துடன் ஏன் அப்படி என்றார்? நான் இலங்கையை சேர்ந்தவர், தற்போது இங்கு பணியாற்றுகிறேன் என்றேன்.

கஜோல் என்ற இந்திய நடிகை டோஹாவிற்கு வந்தபோது, அவரை நேர்காணல் செய்ய எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.. இந்தி சினிமா பற்றி எனக்குத் தெரியாது என்று சொல்லி மறுத்தேன். அவர் சிறுவர்களின் கல்வி தொடர்பான ஒரு நிகழ்விற்கே வந்திருக்கிரார் என்று என் செய்தி ஆசிரியர் கூறினார். நேர்காணல் முடிந்து விடைபெறும் போது, நான் சொன்னேன், “வெண்ணிலவே வெண்ணிலவே, விண்ணை தாண்டி வருவாயா” பாடலில் தோன்றும் நடிகையாக எனக்கு அவரை தெரியும் என்று.சொன்னதற்கு நீங்கள் தமிழரா என்று கஜோல் கேட்டார், இலங்கை தமிழர் என்று பதில் கூறினேன்.I have done only one Tamil film but I’m working on a new Tamil project என்றார். அவர் குறிப்பிட்ட திரைப்படம் ‘வேலையில்லா பட்டதாரி 2’ என்பது எனக்குப் பின்னர் தெரிய வந்தது. நேர்காணல் குறித்து எனது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் நான் குறிப்பிட்டபோது, கஜோலுடன் நேர்காணலின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிருமாறு அவர்கள் என்னை வற்புறுத்தினார்கள். அப்போது தான் கஜோலின் ரசிகர்களைப் பற்றி எனக்குப் புரிந்தது.

இன்னுமொரு சற்று வித்தியாசமான அனுபவம் உள்ளது. அது வேலை தெரிவுக்காக நான் கலந்து கொண்ட ஒரு நேர்காணல் (job interview)இந்திய பத்திரிகை ஆசிரியரும், எழுத்தாளரும், அரசியல்வாதியுமான எம் ஜே அக்பரை ஒரு முறை வேலை நேர்காணலுக்காக சந்தித்தேன், அது வழக்கத்திற்கு மாறான ஒரு சந்திப்பு, இருப்பினும் எனக்கு எந்த புகாரும் அவர் மீது இல்லை. அவர் என்னை மிக்க கண்ணியத்துடன் நடத்தினார்.ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தோடம் பழச்சாறு பருகிக்கொண்டு வேலைக்கான நேர்காணலை எதிர்கொள்ளும் அந்த அனுபவம் ஒரு வாழ்நாள் கற்றல் வாய்ப்பு என்பேன்..

“எனக்கு மது அருந்தும் பழக்கம் உண்டா” என்று கேட்டரர்; “இல்லை” என்றேன், ஏன் என்று கேட்டார்; அது என் தனிப்பட்ட விருப்பம் என்றேன். நல்லது என்று கூறி, சிரித்துக்கொண்டே அவரது குவளையில் இருந்த மதுவை அருந்தினார். பின்பு, என் பெற்றோரை போல நான் ஏன் கல்வி துறையில் பணிபுரிய வில்லை என்று கேட்டார், ஒருவரது தொழில் தெரிவு பரம்பரை சார்ந்து இருக்க வேண்டுமா என்று கேட்டேன் : அப்படி ஒன்றும் இல்லை, சாதாரணமாக கேட்டேன் என்றார். அப்போது அவர் பற்றிய பின்புலம் பற்றி பெரிதாக நான் அறிந்திருக்கவில்லை. அவர் ஒரு ஊடகத்துறை ஜாம்பவான் என்று பின்னர் தான் தெரிந்துகொண்டேன்.’டெக்கான் குரோனிக்கல்’ (Deccan Chronicle) மற்றும் Asian Age இல் இரண்டு வருடங்களாக நான் பெற்ற அனுபவம், என் வாழ்க்கையில் ஒரு பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. (It wsa a game changer in my career.)ஒவ்வொரு முறையும் நான் மின்னஞ்சல் மூலம் MJ உடன் தொடர்பு கொள்ளும்போதும் நான் புதிதாக ஒவ்வொன்றைக் கற்றுக்கொண்டேன். நான் எப்போதும் கூறும் ஒரு விடயம் உள்ளது, நான் ஒரு சிறந்த ஊடகவியாளராக இல்லாவிடினும், அப்படியானவர்களுடன் பழகிய அனுபவத்தைப் பெற்றுள்ளேன்.

?.Sunday Leader இல் பணியாற்றிய அனுபவம் மற்றும் இலங்கையின் ஊடகத்துறை ஜாம்பவானான மறைந்த லசந்த விசக்ரமதுங்க குறித்து உங்கள் பதிவுகள் ஏதாவது

1997/98 காலப்பகுதியில் Sunday Leader செய்தித்தாள் இடைநீக்கம் செய்யப்பட்டது. ஆனால் அவர்கள் ஒரு சர்வதேச விருதை வென்றனர். பத்திரிகையாளராக வர விரும்பிய பள்ளி மாணவியான எனக்கு இச்செய்தி ஒரு உத்வேகமாக இருந்தது. 2006/7 இல் Sunday Leader இல் நான் பணியாற்றியது, தமிழ் மொழி ஊடக துறையிலிருந்து ஆங்கில மொழி ஊடகத் துறைக்கான மாற்றத்திற்கு வழிவகுத்தது.என்னை நான் கண்டடைய இன்னுமொரு பெரும் புள்ளியாக இது இருந்தது. (A main point in the Transition.).

என் வீட்டில் ஞாயிற்றுக்கிழமைகளில் Sunday Leader தவிர்க்க முடியாத ஒரு பத்திரிகையாக இடம்பிடித்திருந்தது.லசந்த விக்கிரமசிங்க தொழில் சார்ந்த நேர்காணலுக்கு தொலைபேசியில் அழைத்தபோது, என் அம்மா பூரித்து போனார். என்ன செயவது என்று தெரியாமல், “Is this Our Lasantha?” என்று கேட்டாராம். நேர்காணலின் போது லசந்த, மிகவும் எளிமையாகப் பேசினார். என் அம்மாவுடனான தொலைபேசி உரையாடல் பற்றி பின்னர் ஒருநாள் அவருக்குக் கூறினேன். உங்களை எங்களில் ஒருவராக பார்த்துப் பழகிவிட்டார்கள் என்றும் சொன்னேன். “I’m humbled” என்றார்.நான் Sunday Leader துணை ஆசிரியராக (sub editor) சேர்ந்து உத்வேகத்துடன் பணியாற்றினேன்.. என் தவறுகளைச் சுட்டிக்காட்டி அதனை அவர் சரிசெய்து, எப்படி ஒரு செய்தியை வெளியிட வேண்டும் என்று லசந்த விபரித்தார்.சில நேரங்களில் நான் முட்டாள்தனமான தவறுகளைச் (silly mistakes )செய்தபோது என்னை திட்டியும் தீர்த்திருக்கிறார்.

ஒருமுறை காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஒரு நிகழ்விலிருந்து செய்திகளைச் சேகரிப்பதற்கான வாய்ப்புக் கிடைத்தது. அந்த செய்தி 5.8.2007 என் சக ஊழியர்களுடன் சேர்ந்து ஒரு கூட்டு ‘பைலைன்’ மூலம் வெளியிடப்பட்டது. எனது வாழ்நாள் முழுவதும் வெளியிடப்பட்ட பைலைன்களின் எண்ணிக்கையை விட அதிக பெறுமதி வாய்ந்ததாக இதை நான் கருதுகிறேன்.ஆனால் சில தனிப்பட்ட காரணங்களால் நான் Sudnay Leader இல் குறுகிய காலம் மட்டுமே வேலை செய்ய முடிந்தது..மே 3,2009 அன்று, யுனெஸ்கோவின் இயக்குனர்-ஜெனரல் டோஹாவில் நடந்த விழாவில் லசந்த விக்கிரமதுங்கவுக்கு அவரது மரணத்திற்குப் பின் 2009 இல் உலக பத்திரிகை சுதந்திரத்துக்கான பரிசை வழங்கினார்.யுனெஸ்கோ மற்றும் ஊடக சுதந்திரத்துக்கான டோஹா மையம் விழாவை ஏற்பாடு செய்திருந்தன. ஆவணங்களைத் தயாரிக்க என்னிடம் உதவி கேட்கப்பட்டது. அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அதை நான் செய்தேன்.

?.உங்கள் பொழுதுபோக்கு மற்றும் விருப்பங்கள் குறித்து ….

தமிழ் சினிமா பார்க்க மிகவும் பிடிக்கும். அதில் ஏதோ ஒரு திருப்தி இருக்கிறது.சினிமாவை நான் அறிவு வளர்ச்சிக்காக மட்டும் பார்ப்பதில்லை. ஈரானிய சினிமா மிகவும் பிடிக்கும். எனது தோழர் Bashana Abeywardane. எனக்கு முதன் முதலில் ஈரானிய சினிமாவை அறிமுகம் செய்தார். அவரிடம் பல வாழ்வியல், அரசியல் விடயங்களை கற்ற நான், ஈரானிய சினிமா பற்றியும் அறிந்துகொண்டேன்.

Turtles Can Fly பார்த்து, நெகிழ்ந்து போனேன். அது ஈராக்கை மையப்படுத்திய படம். அப்பாஸ் கியரோஸ்டமியின் ‘Life goes on’ திரைப்படம் குறித்தும் அறிந்துகொண்டேன்.. இதன்காரணமாகத் தொடர்ந்தும் ஈரானிய படங்களை பார்க்க விரும்பினேன் டோஹாவில் அந்த வாய்ப்பு எனக்கு நிறைய கிடைத்தது.ஈரானிய திரைப்படங்கள் பெரும்பாலும் மனிதநேயத்தை வெளிப்படுத்துவன. அவை மிகச்சிறிய கதைக்களத்தை ஆராய்கின்றன, ஆனாலும் அவை அரசியல் உட்பொருள் நிறைந்தவை.நான் அணியும் உடைகளில் மிகுந்த கவனம் செலுத்துவேன்.உடைகள் எனும்போது சேலை, கவுன் அணிய எனக்கு மிகவும் பிடிக்கும். கவுன் அணியும் போது மிகவும் வசதியாக உணர்வேன். என் அம்மாவைப் போல நேர்த்தியாக சேலை அணிய வேண்டும் என்று எப்போதும் விரும்புவேன். எனக்கு உருளைகிழங்கினால் செய்த எல்லா உணவுகளும் பிடிக்கும். சர்க்கரைப் பொங்கல் மிகவும் பிடிக்கும். விடுமுறைக்கு வீட்டிற்கு போகும் போதெல்லாம், அம்மா சக்கரைப் பொங்கல் செய்து தருவார். எனது தாயாரின் இழப்புக்குப் பின்னர் சில காலம் சர்க்கரைப் பொங்கல் சாப்பிடாமல் இருந்தேன். இப்போதெல்லாம் நானே சக்கரை பொங்கல் செய்து சாப்பிடப் பழகிக்கொண்டிருக்கிறேன்.

?.இறுதியாக விடுபட்டுப்போன விடயங்கள் என ஏதும் குறிப்பிட விரும்புகிறீர்களா?

இந்நாள் வரையிலான எனது பயணத்தில், நான் கடந்து வந்த அனைவருக்கும் – குறிப்பாக எனக்கு உறுதுனையாக இருந்த, என் வலிமையை உரசிப் பார்த்த அனவருக்கும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். என் மீது நம்பிக்கை வைத்து, என் ஊடகப் பயண்த்தில் துணையாக இருந்த, கற்றுக்கொடுத்த சிலரின் பெயரைக் குறிப்பிட்டு நன்றி கூற வேண்டும். Trust me, she will go places என்று கூறி நான் கொழும்பு வர என் பெற்றோரை சம்மதிக்க வைத்தவர் கே. இரத்தினசிங்கம், மற்றும் பி.கே பாலச்சந்திரன், என். வித்தியாதரன், நாகலிங்கம் பத்மசீலன், இளையதம்பி தயானந்தா, இரா. புத்திரசிகாமணி ஆகியோர். இவர்கள் நிறையவே எனக்குக் கற்றுத் தந்திருக்கிறார்கள், வழி நடத்தி இருக்கிறார்கள்.எனது பணியினூடாகத் தொடர்ந்தும் மக்களை சந்திக்க விரும்புகிறேன், நண்பர்களை உருவாக்குவேன். நான் ஒவ்வொருவரிடமிருந்தும் ஏதாவது கற்றுக்கொள்கிறேன் என்று உறுதியாக நம்புகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *