-நிருபமா-
அந்த முள்ளு வேலிக்கு வெளியே
சுண்டங்கத்தரி விதைகளைத்
திருடிக் கொண்டிருக்கிறான்!
சிறுகுடலும் பெருங்குடலும்
சத்தமிட்டுக் கலவரப்படுகிறது
பசித்திருப்பதை விடுத்து
அவனால் என்ன செய்துவிடமுடியும்?
முள்ளு வேலிக்கு வெளியே
அண்ணாந்து பார்க்குமளவிற்கு
அந்தப்பக்கம் இருமாடி வீடு!
தோட்டத்து மரங்கள் கனிந்து
தரையெங்கும் பழங்களால் செரியும்!
பார்ப்பாரும் இல்லை இங்கு
பயன்படுத்துவாருமில்லை!
சட்டிகளை விற்று பிழைக்கும் தாய்
படுக்கையில் கிடந்துவிட!
எட்டு வயது நிரம்பிய இவன்
சட்டத்தை உடைக்கிறான்
சட்டிகளைக் கையில் எடுக்கிறான்!
தலையிலும் கைகளிலும்
கனதிகள் சுமந்தவன் பயணம்
சாக்கடை வீதிகளில் தொடர்கிறது!
அன்று………..
நடை தளர்ந்துஇ இயக்கம் இழந்து
இடறி விழுகின்றான் தன்
இன்பக் கனவுகளுடன்!
அவன் விம்மல்………..
யார் காதுகளில் ஒலித்திடுமோ?
தளர்ந்த நடைப்பிணமாய்
நொருங்கிய சட்டிகளைப் பிரிகின்றான்!
அவனால் என்ன செய்துவிடமுடியும்!
முள்ளு வேலிக்கு வெளியே
சுண்டங்கத்தரி விதைகளைத் திருடுகிறான்!
இரு மாடி வீட்டின் இராசத மிருகங்கள்
திருடன் என்று பெயர் சூட்டி
திமிராகக் கூச்சலிட
படுக்கையில் கிடந்தவள்
விம்மலுடன் உயிர் பிரிகிறாள்……...