டினோஜா நவரட்ணராஜா
Thanks :-(https://hashtaggeneration.org)
ஒவ்வொரு மனிதனுடைய தனிப்பட்ட வாழ்வியலும் பல்வேறு சவால்கள் சிக்கல்கள் போராட்டங்கள் என பல்வேறு அம்சங்களுடன் பிணைக்கப்பட்டதாகவே இருக்கும். அவ்வாறே ஒவ்வொரு வெற்றிகள் ஒவ்வொரு சாதனைகள் ஒவ்வொரு அடைவுகளின் பின்னரான பெரும் பயணத்தில் அத்தனை அம்சங்களும் அடங்கியே இருக்கும். இதிலும் பெண்களின் வாழ்வியல் என்பது சற்று கடினமானதாக அணுகப்படுகின்ற போதிலும் பெண் தலைமைத்துவ குடும்பங்களது வாழ்வியலானது மேலும் சிக்கல் நிறைந்ததாகவே காணப்படுகின்றது. பெண் தலைமைத்துவ குடும்பத்தின் பொருளாதாரம், வாழ்வாதாரம், கல்வி, வேலை வாய்ப்பு என அனைத்திலும் பல வகை போராட்டங்களை சந்திக்க நேரிடுகிறது. முதலில் தலைமைத்துவம் என்ற அம்சம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான ஆளுமை மற்றும் திறன்கள் சார்ந்த வெளிப்பாடுகளாக காணப்படுகின்ற போதிலும் குடும்பத்திற்கான தலைமை பொறுப்பானது விரும்பியோ விரும்பாமலோ பெண்கள் எதிர்கொள்ளும் நிலையில், இச் சமூக பொருளாதார கண்ணோட்டங்கள் மற்றும் அணுகுமுறைகள் முற்றிலும் மாறுபட்டதாகவே காணப்படுகிறது.
இலங்கையில் பெண் தலைமைத்துவம் சார்ந்த பின்னணியை நோக்குகின்றபோது, காலம் காலமாக இப்பதம் சார் அணுகுமுறைகள் இருந்து வந்துள்ள போதிலும் இலங்கையில் நீண்டகால போரின் பின்னரே இவ் எண்ணக்கரு பெருமளவு பேசுபொருளாக நாடளவில் முக்கியத்துவம் பெற்றதெனலாம். குறிப்பாக வடக்கு கிழக்கில் 89000ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பெண் தலைமைத்துவ குடும்பங்களாக காணப்படுகின்றன என்பது அதிர்ச்சியூட்டும் செய்தி என இலங்கை பிபிசி செய்திகள் தெரிவிக்கின்றது. இவ்வாறான நிலைகளில் அவர்கள் பெரும்பாலும் கணவனை இழந்தவர்களாகவும், திருமணம் செய்து கொள்ளாத முன்னாள் போராளிகளாகவும், விவாகரத்து பெற்றவர்களாகவும் காணாமல் போன/ காணாமல் ஆக்கப்பட்டவர்களின் துணையாகவும் இருக்கின்றனர். இவை தவிர குடும்ப தலைவர்கள் ஊனமுற்றவர்களாக இருக்கும் சந்தர்ப்பங்களில் பெண்கள் குடும்ப பொறுப்பை ஏற்கும் சந்தர்ப்பங்கள் அதிகமாக உள்ளன. மேலும் இதில் வருத்தப்பட வேண்டிய விடயம் யாதெனில் இன்றளவிலும் பல பெண் தலைமைத்துவ குடும்பங்கங்களை சார்ந்த பெண்கள் ஊனமுற்றவர்களாகவும் தாழ் வருமானத்தை பெறுபவர்களாகவும் அதிக அளவிலான குடும்ப அங்கத்தவர்களை கொண்டவர்களாகவும் இருப்பதே.
இவற்றை விட பெண் தலைமைத்துவ குடும்பங்கள் பலரது பொருளாதார இடர்ங்களில் அவர்களை தங்கி வாழும் ஏனைய குடும்ப உறுப்பினர்களது அடிப்படைத் தேவைகளையும் நிவர்த்தி செய்யும் நிமித்தம் மேலும் இறுக்கமானதாக இருக்கின்றது. சாதாரணமாக உணவு, உடை, உறையுள், கல்வி, சுகாதாரம், மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்வதற்கு கூட பல்வேறான இடர்களை எதிர்கொள்பவர்களாக இருக்க நேரிடுகின்றனர். பசி பட்டினியற்ற வாழ்வியலும், சம உரிமைக்கல்வியும், உடல் ஆரோக்கியமும், பாதுகாப்பான வாழ்வும் வெறும் கனவாகவே நகர்கின்றன. இவை மட்டுமன்றி வீடற்ற வறிய குடும்பங்களிற்கான வீட்டுத்திட்டமுறை இலங்கை அரசினால் வழங்கப்படுகின்ற போதிலும் அவை பெரிதும் குடும்ப அங்கத்தவர்களது எண்ணிக்கையிலேயே தங்கியிருக்கின்றது. இவ்வாறான நிலையில் குடும்ப வருமானம் தாழ்நிலையில் இருப்பனும் குடும்ப அங்கத்தவர் தொகை குறைவாக இருக்கும் பட்சத்தில் சலுகைகள் பெற முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர். குடும்ப அங்கத்தவர்களையும் கவனித்துக்கொண்டு, பிள்ளைகளது பாதுகாப்பையும் அடிக்கடி உறுதி செய்து கொண்டும் வருமானத்திற்காக தொழிலுக்கு செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இதன் காரணமாக முறையான போதியளவு வருவாயை ஈட்டிக் கொள்ளுதல் என்பது சவாலாகவே அமைகின்றது.
அதிலும் குறிப்பாக இச்சமூகத்தில் உடல் உள ரீதியான துன்பங்களால் பாதிக்கப்படும் சமூக வகுப்பினருள் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் சார்ந்த பெண்கள் எளிதில் அடங்குகின்றனர். சமூகத்தின் அணுகுமுறை என்ற அளவில் நோக்குகின்றபோது பெண் தலைமைத்துவ குடும்பங்கள் வலுவிழந்தவர்களாக அணுகப்படுதல் கவலைக்குரியது. அத்துடன் இலகுவில் விமர்சனங்களை இத்தகைய குடும்பங்கள் மீது இச்சமூகம் எளிதில் வீசிச் செல்கிறது. உதாரணமாக பணிக்குச் செல்லும் ஒரு பெண் தலைமைத்துவ பெண்ணினது நடை, உடை, பாவனை, பதவி உயர்வு, சம்பளம் போன்றவற்றை அவளது கடின உழைப்பு என்ற பார்வைக்கும் அப்பால் அவரது சுயநடத்தை வெளிப்பாடுகள் குறித்த எதிர்மறையான கருத்துக்களை வேண்டுமென்ற சுமத்துகின்றனர்.
உடல் ரீதியான துஷ்பிரயோகங்கள் என்ற அளவில் இவ்வாறான குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் மட்டுமல்லாமல் தலைமை பொறுப்பில் இருக்கும் பெண்களும் நெருடல்களை சந்திக்கவே செய்கின்றனர். வறுமை, பொருளாதார பின்னணி, ஆள்பலமின்மை, பயம், விரக்தி, என்ற பல்வேறுபட்ட காரணிகளால் சந்திக்கும் துன்பங்கள் தொடர்பாக பேசுவதற்கும் பின்னிற்பதாகவே தெரிகிறது. குறிப்பாக நெருங்கிய உறவினர்களாலேயே இத்தகைய அசௌகரியங்கள் ஏற்படுத்தப்படுகின்றன என ஆய்வுகள் புலப்படுத்துகின்றன. இதனால் குடும்பப் உறவுகளுக்கிடையே பிறழ்வுகள், புறக்கணிப்புகள், தனித்து விடப்படலாம் எனும் அச்சம், உதவிகள் மறுக்கப்படலாம் போன்ற காரணிகள் இவை தொடர்பான முறைப்பாடுகளுக்கு முரணாக அமைகின்றது என்பது வருத்தத்திற்குரியது. இவற்றையும் தாண்டி இவ்வாறான பிரச்சினைகள் சமூக அளவில் பேசப்படும் போது பாதிக்கப்பட்ட நபரையே குற்றவாளி எனும் கோணத்தில் அணுகுதலும் அதன் பின்னரான புறக்கணிப்புகளும் ஆரோக்கியமானதன்று.
பொதுவாகவே பெண்களது குடும்ப தலைமை பொறுப்பானது மேலைத்தேய நாடுகளை விட கீழைத்தேய நாடுகளின் கலாச்சார போர்வைக்குள் திணிக்கப்பட்டதாகவும் முடக்கப்படும் அம்சமாகவுமே அணுக்கப்படுகின்றது. எதிர்பாராத நிலைமைகளில் திடீரென திணிக்கப்படும் குடுப்ப பொறுப்புக்களை மனதளவில் ஏற்றுக்கொள்வதற்குரிய தயாராகும் காலத்தை கூட சமுதாயம் அவர்களுக்கு கொடுப்பதில்லை. உலகில் எத்தகைய சமூக அமைப்புகளும் தற்கால கட்டத்தில் அபிவிருத்தியை நோக்கி பயணிப்பதாக இருக்கும் சந்தர்ப்பங்களில் பெண்களுக்குக்கோ அல்லது பெண் தலைமைத்துவ குடும்பங்களிற்கோ முன்னேற்றத்தை நோக்கி பயணித்தல் என்பதொன்றும் தவறல்லவே. ஆயினும் இச் சமூகம் அதனை எவ்வாறான கண்ணோட்டத்தில் அணுகுகின்றது எத்தகைய ஆதரவுகளையும் ஊக்குவிப்புகளையும் வழங்குகின்றது என்பது தான் இங்கு கேள்விக்குறியே.
குடும்பத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் பல குடும்பப் பெண்களின் கல்வியறிவு போதுமான அளவு இல்லாத நிலையில் ஒப்பந்தமற்ற வேலைகளுக்கும் செல்கின்றனர். இன்னும் சிலர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாக இதர பணிகளுக்காகவும் செல்கின்றனர். அனைத்து பெண்களும் பொதுவாக ஏற்கும் பணித்தளங்களே ஆயினும் இவை பெரிதும் பெண்தலைமைத்துவ குடும்பங்களை சேர்ந்த பெண்களிற்கு எதிர்மறையாக அமைகின்றன. ஒப்பந்தமற்ற பணிகளில் ஈடுபடும் பெண்கள் குறிப்பிட்டளவு ஊதியத்தையோ பணி தொடர்பான இதர சலுகைகளையோ பெறுவதற்கான உரிமைகள் இருந்த போதிலும் அவை அவர்களுக்கு மறுக்கப்படுகிறது.
கல்வி என்பதனை எடுத்துக் கொண்டால் இலங்கையைப் பொறுத்தவரை இலவச கல்வியானது வழங்கப்படுகின்ற போதிலும் சகலருக்கும் கல்வியானது சம உரிமை என அறிவிக்கப்பட்ட போதிலும் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் பெண் தலைமைத்துவ குடும்ப மாணவர்களில் பலர் பாடசாலை இடைவிலகல், வரவு ஒழுங்கீனம், முறையாக கற்றல் கற்பித்தல் பூர்த்தி செய்யப்படாமை போன்ற பாதக விளைவுகளை பரவலாக எதிர்கொள்ளக்கூடியவர்களாக உள்ளனர். காரணம் கற்றலுக்காக அதிகரிக்கும் இதர செலவீனங்கள் மற்றும் மேலதிக செலவுகள் போன்றவற்றை பூர்த்தி செய்வதில் உள்ள இடர்பாடுகளே. பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு கல்வியை பூர்த்தி செய்தல் பெரும் சவால் என்பதுடன் அதிகரிக்கும் வேலையற்றோர் தொகை போன்ற பிற சமூகச் சூழல்களாலும் குழந்தைகள் கல்வி இடைவிலகலோடு தொழில் வாய்ப்புக்களை நாடுவதற்கான விருப்பங்களை தெரிவிக்கின்றனர்.
இதில் அதிர்ச்சி தரும் விடயம் என்னவென்றால் தொழில் முயற்சிகளின் போதும் வேலை தளங்களிலும் பெண்களிடமிருந்து பாலியல் லஞ்சம் மற்றும் சுரண்டல்கள் கோரப்படுதலே. மிகவும் வலுவான குடும்ப பின்னணி அற்றவர்களாகவும் சமூக பொருளாதார ரீதியில் இவர்கள் பலவீனமாக சித்தரிக்கப்படுதலுமே இதற்கு பிரதான காரணமாக உள்ளது. அத்துடன் இக் குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கு ஆளுமைகள் ஆற்றல்கள் இருக்கின்ற போதிலும் இச்சமூகத்தின் பிறழ்வான கற்பிதங்கள் பெண் தலைமைத்துவம் என்ற பதத்தையே பாதிப்புற்றதொன்றாக சித்தரித்து விடுகிறது. அதாவது ஆண்களே குடும்பத்தின் பிரதான உழைப்பாளிகளாகவும் தீர்மானம் எடுப்பதில் திடமானவர்களாகவும் பெண்கள் அவர்களின் தங்கி வாழ்பவர்களாகவும் ஆண்களற்ற நிலையில் பெண்கள் நிராதரவானவர்களாகவும் அணுகப்படுதலே. இதனடிப்படையிலான உளவியலாக பெண்களிடம் பொறுப்புக்கள் சிறு வயதிலிருந்து பகிர்ந்தளிக்கப்படாத போது திடீரென ஏற்றுக்கொள்ளல் கடினமே.
மேலும் இவ்வாறான குடும்பங்களை சேர்ந்த பெண்கள் வட்டியற்ற மற்றும் வட்டியுடனான கடன் தொகை சுழல்களில் சிக்கிக் கொள்கின்றனர். வாழ்வாதார தேவைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டோ, பொருளாதார வருமானங்கள் தாழ் நிலையிலிருத்தற் பொருட்டோடு இணைந்த தொழில் ஆரம்பித்தல் மற்றும் மேம்படுத்தல் தேவைகளின் நோக்கோடு அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பண உதவி தொகையை நாடிச் செல்கின்றனர். ஒரு சில அமைப்புகள் வட்டி முறைகள் தொடர்பில் இயலுமான அளவு சலுகைகளை வழங்குகின்ற என்ற போதிலும் பெரும்பாலான நிறுவனங்களில் வட்டியுடனான நுண்கடன் வசதிகளை தேவையின் நிமித்தம் பெறுவதும் பின் அதனை பூரணப்படுத்த இயலாமல் உழல்வதும் தற்காலகட்டத்தில் அதிகரித்து வரும் பெரும் பிரச்சனையாக உள்ளமை யாவரும் அறிந்ததே. இதில் பெரிதும் பெண் தலைமைத்துவ குடும்பங்களை சேர்ந்த பெண்களே சிக்கிக்கொள்கின்றனர். இவற்றில் வெறுமனே கடன்களை வழங்கும் நிறுவனங்களை மட்டும் குறை கூறி விட இயலாது. பெறப்படும் கடன்களை திட்டமிட்ட முறையில் தொழில் மற்றும் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் படிக்கும் சுழற்சிப்பொருளாதார அடிப்படையிலும் செயற்படுதல் நன்று.
இவைதவிர நுண்கடன் சூழலில் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் அறிந்தோ அறியாமலோ பாதிக்கப்படும்போது எவ்வாறான இடர்களை எதிர் கொள்கின்றனர் என்பது தொடர்பாக நோக்க வேண்டியது அவசியமாகும். குறைந்தளவு வட்டியில் கடன்களை இலகுவாக பெறமுடியும் என்கின்ற போது இக்கடன்களை பெற கிராமப்புறங்களை சேர்ந்த பெண்களே அதிக அளவில் முன்வருகின்றனர். பெரும்பாலும் நிறுவனங்கள் கடன் பெறுவோரது தொழில் முயற்சிகள் கடன் மற்றும் வட்டியை மீளச் செலுத்த இயலுமான காரணங்களை ஆராய்கின்ற போதிலும் அதிகரிக்கும் விலைவாசி, காலநிலை மாற்றங்கள், வாழ்வாதாரம் பாதிப்புறல், தொழில் வீழ்ச்சி, முறையான திட்டமிடலின்மை போன்றவற்றால் கடன்தொகை மீளச்செலுத்த முடியாமல் போவதோடு மேலும் கடனாளி ஆகின்றனர். துரதிஷ்டவசமாக கடன்தொகைகள் தொடர்பான சட்டரீதியான பாதுகாப்பு இந்தியா, இலங்கை முதலான நாடுகளில் இல்லையென்பது கவலைக்குரியது. சட்ட பாதுகாப்பின்மை மட்டுமல்லாமல் கடன் மற்றும் வட்டி வசூலிக்கும் முகவர்களது அணுகுமுறைகளும் பெரிதும் நெருடலை தோற்றுவிக்கின்றது. வட்டி வசூலிக்கும் முறைகள், மிரட்டல்கள் மற்றும் சமூக விமர்சனங்களுக்கு அஞ்சி கடனை செலுத்த இயலாமல் தற்கொலை முதலான முடிவுகளை நாடுகின்ற பெண்களும் அதிகளவில் உண்டு.
இலங்கையை எடுத்துக்கொண்டால் அரசினால் குறிப்பிட்டளவு சலுகைகள் வழங்கப்படுகின்ற போதிலும் ஒப்பீட்டளவில் கணிசமான அளவு உயர் நன்மைகளை இக்குடும்பங்கள் பெறுவதில்லை. இன்றைய காலப்பகுதியில் இத்தகைய குடும்பங்களுக்கு வாழ்வாதார தொழில் முதலீடுகள் என அனைத்துமே பெரும் சவாலாக மாறியுள்ளது. தொற்றுநோய் காலத்தில் ஆண்களை விட பெண்களே தமது வாழ்வாதாரங்களை அதிகமாக இழக்கின்றனர் என்று இலங்கையின் ஐநா பெண்கள் அமைப்பின் பிரதிநிதியான ரமாயா விளக்குகின்றார். இந்நிலையில் பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் நிலை தொடர்பாக சிந்திக்க வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது.அத்துடன் இவற்றிற்கான தீர்வுகள் பலவும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வலுவூட்டலாக அமைதலிலும் பார்க்க அதிகமாக வாழ்வியலுக்கான உதவிகளாகவே அமைகின்றது.
பெண் தலைமைத்துவ குடும்பங்களது சமூக பொருளாதார உயர்வுக்காக அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் பல முயற்சிக்கின்ற வகையில் பல விழிப்புணர்வு நிகழ்வுகள் , வாழ்வாதார செயற்பாடுகள் என பல்வேறு திட்டங்களை செயல்முறை படுத்துவதாக இருப்பினும் இன்றளவிலும் இலங்கையின் சமூக கட்டமைப்பில் பெண் தலைமைத்துவம் எனும் பதம் சிக்கலானதொன்றாகவே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இங்கு பெரிதும் உதவி என்பது பகிரப்படும் என்ற போதிலும் குறித்த பெண்களுக்கே தம் வாழ்வியலை முன்னேற்றத்தின் போக்குக்கு இட்டுச் செல்லக்கூடிய உதவியாக எது தேவையென்ற தெளிவற்ற நிலையில் இருக்கின்றனர். அத்துடன் குடும்ப சுமை காரணமாக வீட்டிலேயே குறைந்த வருமானம் தரக்கூடிய தொழில்களையே ஆற்றல்கள் இருப்பினும் நாடுகின்றனர். முதலில் பெண்கள் தமது குடும்ப பொருளாதார முன்னேற்றம் தொடர்பான தெளிவு நிலை ஏற்படுத்திக்கொள்ளல் வேண்டும். இவ்வாறான தெளிவற்ற நிலையினாலோ என்னவோ பெருமளவு உதவி வாய்ப்புக்கள் இருந்தும் அவை அனைத்தும் கோழி வளர்ப்பு, ஆடு மற்றும் மாடு வளர்ப்பு, தையல், வீட்டுத்தோட்டம் போன்றவற்றையே மையப்படுத்தியதாக இருக்கின்றது. இவை மட்டுமல்லாது சந்தைப்படுத்தும் வாய்ப்புக்கள் போட்டித் தன்மை காரணமாக இவற்றை பாரியளவில் மேற்கொள்ள இயலாத நிலைக்கும் தள்ளப்படுகின்றனர்.
இவை தவிர பெறப்படும் சலுகைகளும் உதவிகளும் முறையான பயன்படுத்தப் படுகின்றனவா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. உதாரணமாக கோழிக்கூடு அமைப்பதற்கான உதவிகள் வழங்கப்படும் போது அதற்குள் வளர்ப்பதற்கான கோழிக்குஞ்சுகளை வாங்க இயலாமல் இருக்கின்றனர். தொழில் இயந்திரங்கள் வழங்கப்படும் போது அதனை பயன்படுத்தவும் பழுது பார்க்கவும் தெளிவில்லாமல் இருக்கின்றனர். இதனால் வளங்களையும் வாய்ப்புகளையும் முறையாக பயன்படுத்த இயலாத நிலைக்குள் தள்ளப்படுகின்றனர். சமுர்த்தி, அமரா, WIN, CPCED, விழுது, சர்வோதயா போன்ற பல அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் உதவிகளையும் ஆலோசனைகளையும் வழங்க தயாராக இருக்கின்றன.அதேவேளை பெண்களும் தமது வாழ்வியல் தொடர்பான முன்னேற்றங்கள் தொடர்பில் விழிப்புடன் செயலாற்ற வேண்டும்.
பெண்கள் கடன் உதவிகளை பெறும்போது அவை வெறுமனே உதவிகளாக மட்டுமே நின்று விடாது அவற்றை ஒரு முதலீடாக இருக்குமாறும் எக் காரணத்திற்காக கடனுதவியை நாடினார்களோ அவற்றை பூரணப்படுத்துபவர்களாகுவும் தம்மை வலியைப் படுத்திக் கொள்ளுதல் குடும்பங்களின் பொருளாதார நிலைப்பாட்டை உறுதிசெய்யும். இவ்வாறான குடும்பங்களது வலுவூட்டல் தொடர்பில் அரசிற்கும் பெருமளவு கடப்பாடு இருக்கின்றது. ஆகவே உதவிகள் அனைத்தும் ஆக்கபூர்வ முயற்சிகளாக மாறுவதற்கான அழுத்தங்களையும் ஊக்குவிப்புகளையும் வழங்குதல் நன்று. கலாச்சார ரீதியாகவும் தலைமைத்துவ பெண்கள் போராட வேண்டிய நிலையில் இருக்கின்ற போது அவர்களது கல்வி மற்றும் பொருளாதார உயர்வே இவ்வாறான சமுதாய தடைகளை முறியடிக்கவும் வலுசேர்க்கும்.
போராட்டங்களை சந்தித்த மூதூர் கிராமத்தின் பல பெண்கள் சத்துணவு உற்பத்தியில் ஈடுபட்டு ” சஞ்சீவி” எனும் அமைப்பில் அரசின் உரிமை சாதனத்துடன் பாரிய அளவில் தொழில் முயற்சிகளை முன்னெடுக்கின்றனர். இவ்வாறு பெண்களது முயற்சிகள் பயனுள்ளதாகவும் ஆக்கபூர்வமானதாகவும் இருத்தல் நன்று. அத்தோடு பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் தனிமனித மற்றும் சமூகத்திற்கும் பெரும் பங்கு உண்டு. பிரச்சனைகள் பிரச்சினைகளாக மறைக்கப்படுவதனால் மட்டுமே தீர்வுகள் காண இயல்வதில்லை. வன்முறைகள் வெளியே சொல்லப்படுமளவிற்கு பெண்கள் தயாராக வேண்டும். உரக்க குரல் கொடுப்பதன் மூலம் உரிமைகளை வென்றெடுப்போம் என உறுதி செய்து கொள்ள வேண்டும். வளம் மிக்க ஆற்றல் மிக்க எதிர்கால தலைமுறைக்கொரு வழிகாட்டியாக வாழ ஒவ்வொரு பெண்களும் மனதளவிலும் வாழ்வியலிலும் பயணித்தல் பயன்மிக்கது. வாழ்தல் இனிது.