இரவுகள் ஒவ்வொன்றும்
கசையடிகளின் வலி தின்றன
அவள் ஒவ்வொரு இரவின்
நட்சத்திரங்களையும் தன் ஆடையில்
முடிந்து வைத்தபடி காத்திருப்பாள்
யாரேனும் ஒருவன் வருகிற போது
அவள் அந்த நட்சத்திரங்களை அவன் முன் விசிறி
ஒளி வட்டமொன்றைச் சிருஷ்டிக்க வேண்டும்
நட்சத்திரங்களின் ஒளி
அவள் மயிர்க்கால்களைக் கூச வைக்கிறது
அவன் தரும் காசில் தான்
அவள் குழந்தைகளின் பசி ஒழிந்திருக்கிறது
ஒவ்வோர் இரவையும்
அவள் ஒவ்வோர் கசையடிகளெனச்
சகித்துக் கொள்கின்றாள்
முதுகிலிருக்கின்ற கசையடித் தடங்கள்
குருதி விறால்களாகின்றன
கசையடியின் கடைசி நாளன்று
நட்சத்திரங்கள் காணாமலாகின
அவள் ஆடையில் எந்த நட்சத்திரமும் மீதமில்லை
வந்தவன்
அவளைத் திரும்பிப் பாராமலே போகிறான்
இப்போது கசையடித் தழும்புகள்
அவளிலிருந்து
உக்கிரமாய் வழிய ஆரம்பிக்கின்றன
உடலிலிருக்கின்ற மயிர்க்கால்கள் ஒவ்வொன்றும்
முள்இ முள்ளாகி
அவளைக் குத்துகின்றன
புரள முடியவில்லை படுக்கை குத்துகிறது
பகலின் வெயிலிலும் முட்கள்
இரவின் கருமையிலும் முட்கள்
மழையின் துளிகளிலும் முட்கள்
அவள் குரலெடுத்துக் கதற நினைக்கையில்
குரலொரு முள்ளாகி
அவளது தொண்டையைக் கீறுகிறது
சுனைக்குள்இ கடலுக்குள்
வானுக்குள்இ மண்ணுக்குள்
எங்கும் துருத்திய முட்களுக்குள்
அவளொரு முள்ளாக மாறித்
தன்னைத்தானே குத்திக் கொண்டிருக்கிறாள்