90 களின் காலத்தில் பாரிஸ் இலக்கியப் பரப்பில் லக்ஷ்மியை கடந்து யாரும் வரலாற்றை எழுத துணிந்து விட முடியாது. மறைந்த தோழர் கலைச் செல்வனின் இணையாகிய இவர், எக்ஸில் மற்றும் உயிர்நிழல் ஆசிரியர் பீடங்களில் இருந்து தனது இலக்கிய செயற்பாட்டினால் புலம்பெயர் இலக்கியத்தின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவராகின்றார். பின்நவீனத்துவம், தலித்தியம், பெண்ணியம், எதிர்ப்பிலக்கியம் ஆகியவை குறித்து எக்ஸில் உயிர் நிழல் ஆகிய இரு சஞ்சிகைகைகளாலும் அதிகம் கதைத்தவர் என்ற முக்கியத்துவத்தைப் பாரிஸ் எழுத்துப் பரப்பில் லக்ஷ்மி பெறுகிறார். Thankhttps://naduweb.com/s
உங்களுக்கு அறிமுகங்கள் தேவையில்லை என்றாலும் நான் மட்டும் தெரிந்து என்ன பலன் என்று எனக்குள் எண்ணத் தோன்றுகின்றது ?
என்னைப் பற்றிச் சொல்வதென்றால், நான் 1956 ஆம் ஆண்டு பதுளை மாவட்டத்தில் உள்ள ஹல்துமுல்ல என்னும் இடத்தில் பிறந்தேன். என்னுடைய அம்மாவும் அப்பாவும் ஆசிரியர்களாக இருந்தார்கள்.
அவர்கள் வேலையின் நிமித்தம் வெவ்வேறு இடங்களுக்கு மாற்றம் பெற்றுச் செல்ல வேண்டி இருந்தது. அதனால் நானும் நாட்டின் பல பகுதிகளில் கல்வி பயிலும் வாய்ப்பைப் பெற்றேன் என்று சொல்லலாம். எனது உயர்கல்விக் காலகட்டத்தில் நாங்கள் சுன்னாகம், சூராவத்தையில் உள்ள அம்மாவின் வீட்டுக்கு வந்துவிட்டோம். பிறகு எனது பொறியியல் பட்டப் படிப்பை கட்டுப்பெத்தை வளாகத்தில் 1975 – 1979 (தற்போது மொறட்டுவ பல்கலைக்கழகம்) முடித்து, ஓரிரு வருடங்கள் அங்கு பணிபுரிந்த பிறகு, 1981ம் ஆண்டு இறுதியில் பிரான்சிற்கு வந்தேன்.‘தமிழர் ஒருங்கிணைப்புக் குழு’வில் சில காலம் செயற்பட்டேன். 1984 ஆம் ஆண்டளவில் ‘இலங்கை மகளிர் சங்கம்’ என்ற பெண்கள் அமைப்பு ஒன்றிலும் அங்கத்தவராக இருந்து செயற்பட்டேன். 1986 தொடக்கம் ‘கண்’ என்னும் சஞ்சிகையை அந்த அமைப்பினால் கொண்டு வந்தோம். குறிப்பிட்ட சில காலம்; அது தொடர்ந்து வெளிவந்தது. அது தவிர சமூக அரசியல் செயற்பாடுகளிலும் என்னை ஈடுபடுத்திக்கொண்டேன். அக்கால கட்டத்தில் பல அரசியல் சமூக இலக்கிய செயற்பாட்டாளர்கள் அறிமுகமானார்கள். அதில் கலைச்செல்வனும் ஒருவர். அவருடன் இணைந்து செயற்பாடுகளை முன்னெடுக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.
1992-ம் ஆண்டு, கலைச்செல்வனும் நானும் ‘எக்ஸில்’ பதிப்பகத்தை தொடங்கி முதலில் ‘மறையாத மறுபாதி’ என்ற புகலிடப் பெண்கள் கவிதைத் தொகுப்பு நூலை வெளியிட்டோம். பின்னர் திருமாவளவனின் ‘பனி வயல் உழவு’, றஷ்மியின் ‘காவு கொள்ளப்பட்ட வாழ்வு’ ஆகிய கவிதைத் தொகுப்புகளையும் சி.சிவசேகரத்தின் ‘தமிழில் தரிப்புக்குறிகளின் பயன்பாடு’ என்னும் நூலையும் வெளியிட்டோம்.‘எக்ஸில்’ சஞ்சிகையை இன்னும் சிலருடன் சேர்ந்து தொடங்கி, பின்னர் விலகி ‘உயிர் நிழல’ தோற்றுவித்தோம். ‘உயிர் நிழல்’ தொடர்ந்து வெளிவந்தது. கலைச்செல்வன் எம்மை விட்டுச் சென்றதன் பின்னரும் நண்பர்களின் உதவியுடன் ‘உயிர் நிழலை’ தொடர்ந்தும் கொண்டு வந்தேன். இப்போது அது சாத்தியப்படவில்லை.ஜெர்மனியில் ஆரம்பிக்கப்பட்ட இலக்கியச் சந்திப்பின் தொடக்க காலம் முதல் பங்குபற்றும் வாய்ப்புக் கிடைத்தது. அன்றைய காலகட்டத்தில் புகலிட இலக்கிய சந்திப்பு, “புகலிட இலக்கியத்துக்கான முதுகெலும்பு” என்று சொல்லலாம். இலக்கியச் சந்திப்பின் தொடர் பயணத்தில் 1989ஆம் ஆண்டு தொடக்கம் 2013ஆம் ஆண்டில் 40 வது சந்திப்பு வரை எனது சிறு பங்களிப்பும் இருந்திருக்கிறது. நீண்ட நாட்களாகவே ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் இருந்து தமிழுக்கு என்று சில மொழிபெயர்ப்புகளைச் செய்திருக்கிறேன், அவை பல சிறு சஞ்சிகைகளிலும் இங்கு வெளிவந்த தொகுப்புகளிலும் வெளியாகி இருக்கின்றன. இப்போதும் மொழியாக்கங்களை செய்து கொண்டிருக்கிறேன்.அத்தோடு ‘எக்ஸில் இமேஜ்’ -( Exil Image ) என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தையும் நண்பர்களுடன் சேர்ந்து 2008ஆம் ஆண்டில் தொடங்கினோம். இதுவரை பிரதீபன் ரவீந்திரனின் இயக்கத்தில் உருவான இரண்டு குறும்படங்களையும் ஒரு முழுநீளத் திரைப்படத்தையும் தயாரித்திருக்கிறோம்.
‘தமிழர் ஒருங்கிணைப்புக் குழு’வில் சில காலம் செயற்பட்டேன்.// அப்பொழுது எப்படியான அனுபவங்களை அங்கு பெற்றீர்கள் ?
1982-1983ஆம் ஆண்டு காலப்பகுதியாக இருக்கும் என்று நினைக்கிறேன். தளத்தில் இருக்கின்ற புலிகள் அமைப்புக்கு நிதி சேகரிப்பது என்பதுதான் முக்கியமான செயற்பாடாக இருந்தது. இரண்டு அல்லது மூன்று பேர்களாக இலங்கைத் தமிழர்களின் வீடுகளை தேடிச் சென்று காசு கேட்பது. அதன் பிறகு நடைபெறும் அமைப்பின் கூட்டங்களில், காசு சேர்க்கப் போன அனுபவங்களை பகிர்ந்து கொள்வதாகவே பெரும்பாலும் இருந்தது. எங்களுக்கு காசு தருவது என்று ஒப்புக் கொள்ள வைப்பதற்கு அவர்கள் நிறைய கேள்விகள் கேட்டார்கள். இது குறித்து கதைக்கும் போது காசு சேர்ப்பதுதான் முக்கியம் என்றும் அவர்களுடைய எல்லா கேள்விகளுக்கும் நீங்கள் பதில் சொல்ல தேவையில்லை என்ற அளவில் பேசப்பட்டது. அங்கு சென்று சில காலத்தின் பின், விடுதலைப் புலிகள் அமைப்பின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு இருப்போம் என்ற பாணியிலான ஒரு பத்திரத்தில் கையொப்பம் இட சொன்னார்கள். அத்துடன் நான் அங்கு செல்வதை நிறுத்திக் கொண்டேன்.ஜெர்மனியில் ஆரம்பிக்கப்பட்ட இலக்கியச் சந்திப்பின் தொடக்க காலம் முதல் பங்குபற்றும் வாய்ப்புக் கிடைத்தது. அன்றைய காலகட்டத்தில் புகலிட இலக்கிய சந்திப்பு, புகலிட இலக்கியத்துக்கானமுதுகெலும்பு என்று சொல்லலாம்.
இதனை சிறிது விரிவு படுத்துங்கள். ஏனெனில் இந்தப் புலம்பெயர் இலக்கிய சந்திப்பின் தோற்றுவாய் தொடர்பாகப் பல முன்பின் முரணான செவி வழிக் கதைகளையே கேட்கக் கூடியதாக இருக்கிறது. உங்கள் மூலம் உண்மைத் தன்மையை ஆவணப்படுத்தலாம் என எண்ணுகின்றேன்.?
சுருக்கமாகச் சொல்வதென்றால், இந்த சந்திப்புக்கான தளம் ஜெர்மனியின் ஹெர்னே (ர்நசநெ) என்ற நகரத்தில் உருவாகியது. இந்த முதலாவது சந்திப்பை ஒழுங்கு செய்தவர்கள் ‘தூண்டில்’ பார்த்திபன், பீற்றர் ஜெயரட்ணம் ஆகியோராவர். 1988ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதி இந்த ஒன்றுகூடல் நடைபெற்றது. அப்போது ஜெர்மனியில் இருந்து கிட்டத்தட்ட இருபது சிறு சஞ்சிகைகளுக்கு மேல் வெளிவந்தன. இச் சிறு சஞ்சிகைகள் ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள், இலக்கிய ஆர்வலர்கள் சந்திப்பதற்கான ஒரு ஏற்பாடாகத்தான் இது ஆரம்பிக்கப்பட்டது. அன்றிலிருந்து தொடர்ந்து சந்திப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு, ஜெர்மனியின் பல்வேறு நகரங்களிலும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை என்று சந்திப்புகள் நடந்திருக்கின்றன. அந்த நேரத்தில் கலந்து கொண்டவர்களில் பலர் ஒரு நகரத்தில் இருந்து இன்னொரு நகரத்துக்குச் செல்ல முடியாத கட்டுப்பாடுகள் ஜெர்மனியில் இருந்தது. எனினும் அந்த தடைகளையும் மீறி இந்த ஒன்றுகூடல்களில் கலந்து கொண்டு பலரும் பங்களித்தது நிச்சயம் பதிவு செய்யப்பட வேண்டியது. அப்போது பிரான்ஸில் இருந்த நண்பர்கள் சிலரும் இந்த பயண அனுமதி மறுக்கப்பட்ட நிலையிலும் கலந்து கொண்டு பங்களித்திருக்கிறார்கள். வெவ்வேறு ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் படிப்படியாகக் கலந்து கொள்ள ஆரம்பித்தார்கள். இரு சந்திப்புகளுக்கு இடைப்பட்ட காலத்தில் வெளிவந்த சஞ்சிகைகளின் அறிமுகம், விமர்சனம், விவாதங்கள் என்று முக்கிய நிகழ்வாக அமைந்திருக்கும். ஒரு நாள் நிகழ்வாக ஆரம்பித்த சந்திப்பு படிப்படியாக இரண்டு நாட்கள் நிகழ்வாக அமைந்தது. ஐரோப்பா, கனடா, இலங்கை என்று எல்லா இடங்களிலும் இருந்து பலர் கலந்து கொண்டிருக்கிறார்கள். முதல் தடவையாக ஜெர்மனிக்கு வெளியே பாரிஸில், 1992ம் டிசம்பர்மாதம், இலக்கியச் சந்திப்பின் 14 வது தொடர் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இச்சந்திப்புகள் சஞ்சிகைகளில் எழுதுபவர்களை மேலும் ஊக்கப்படுத்தின. மேலும் அவர்களின் ஆக்கங்களை புகலிட நாடுகளில் பரவலாக எடுத்துச் செல்லவும் உதவியதோடு, அது சார்ந்த உரையாடல்களுக்கும் வழிவகுத்தன என்றும் சொல்லலாம்.
என்ன காரணத்துக்காக இந்த இலக்கியச் சந்திப்பின் முன்னோடிகள் இந்த சந்திப்பில் இருந்து வெளியேறினார்கள்?
உங்களது கேள்வியை நான் எப்படி பார்க்கிறேன் என்றால், இலக்கியச் சந்திப்பை புகலிடத்தில் உருவாக்கியபோது, அதில் செயற்பாட்டாளர்களாக இருந்தவர்களில் சிலர் ஏன் இப்போது ‘இலக்கியச் சந்திப்பு’ இல் கலந்து கொள்வதில்லை என்பதாக.ஒவ்வொரு காலகட்டத்திலும் அதில் கலந்து கொள்பவர்கள் ஆரம்ப காலத்தில் இருந்தவர்கள் மட்டும் அல்ல, வெவ்வேறு சமூக ஆர்வலர்கள் கலந்து கொள்வது தொடர்ந்து கொண்டிருந்தது. பின்னர் வந்து தொடர்ச்சியாக இணைந்து கொண்டவர்கள், தாங்கள் ஒரு புதுமையை படைப்பதாக நினைத்திருக்கலாம். புகலிடத்துக்கு அகதிகளாக வந்தவர்கள், இன்றும் வருபவர்கள் புலிகளின் கண்காணிப்பில் இருந்து மட்டுமல்ல, இலங்கை அரசின் கண்காணிப்பில் இருந்தும் தப்பித்து வாழும் வெளியை உருவாக்குகிறார்கள் என்ற அடிப்படைப் புரிதல் அவசியம்.அதாவது புலப்பெயர்வு என்பது நிகழ்ந்து கொண்டிருக்கும் அல்லது நிகழ்ந்து கொண்டிருக்கப் போகிற ஒரு காலகட்டத்தில், அங்கு தமிழர்கள் மீதான ஒடுக்குமுறை தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு சமயத்தில், புகலிடத்தில் இருப்பவர்கள் அவர்களுக்கு சாத்தியப்பட்டிருக்கும் குறைந்தபட்ச ஜனநாயக வெளியை உபயோகித்து எமது நாட்டில் நிலவும் எல்லா விதமான ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக பேசத்தக்க வெளியை, அது அங்கு மறுக்கப்பட்டிருக்கும் சூழலில் இங்கு தக்க வைத்துக் கொள்வது மிகவும் முக்கியமான ஒன்று. அது சார்ந்த புகலிட இலக்கியச் சந்திப்பின் தொடர்ச்சி மிகவும் முக்கியமான ஒரு அரசியல் வெளிப்பாட்டை அடையாளமாகக் கொண்டிருந்தது. ஆனால் இலங்கையில் புலிகளின் அழிவின் பின்னர் ஒரு ஜனநாயக இடைவெளி தோன்றி இருப்பதாக வாதிட்டவர்கள், அங்கு கொடூரமான மஹிந்த ஆட்சியின் பரிமாணத்தை உள்வாங்கிக்கொள்ளத் தவறினர். அத்துடன் அதனால் ஏற்பட்ட இன்னொரு கட்டப் புலப்பெயர்வை (2009க்கு பின்னர்) கருத்தில் கொள்ள மறுத்தார்கள்.அத்தோடு இது குறித்து இலக்கியச் சந்திப்பில் விவாதம் நடந்தபோது சொல்லப்பட்ட காரணங்களில் ஒன்று, அங்கிருப்பவர்களுக்கு ஒரு கூட்டத்தை எவ்வாறு நடத்த வேண்டும் என்பதை, ‘இலக்கியச் சந்திப்பு’ நிகழ்வை மாதிரியாக வைத்து நடத்திக் காட்ட வேண்டும் என்பதாகவும் இருந்தது. என்னைப் பொறுத்த அளவில், இது மேற்கத்தைய அல்லது ‘வளர்ச்சியடைந்த’ என்று சொல்லப்படுகின்ற நாடுகளில் வசிப்பவர்கள் மேலானவர்கள் என்ற சிந்தனையின் வெளிப்பாடு என்று கருதுகிறேன்.
‘புகலிடம்’ என்பதற்கு ஒரு ஆழமான அரசியலும் வாழ்வியலும் இருக்கிறது என்பதை முதலில் நாங்கள் புரிந்து கொள்ளல் வேண்டும். இன்றும் நேற்றும் புகலிட நபராக இருந்த ஒருவர் நாளையும் இருப்பார் என்று எதிர்பார்ப்பது சாத்தியம் இல்லை, ஏன் என்றால் ஒருவருக்கு ஏற்படுகின்ற தனிப்பட்ட வாழ்வியல் மாற்றங்கள், அவரை புகலிட வாழ்வியல் வெளியில் இருந்து வெகு தூரம் விலகிச் செல்ல வைத்ததை நாம் கடந்த காலங்களில் அடிக்கடி பார்த்திருக்கிறோம்.
போருக்கு முந்தைய காலகட்டங்களில் மாற்றுக் கருத்துகளுக்கான தளமே புலம்பெயர் இலக்கியச் சந்திப்பின் ஊடாக முன்நிலைப்படுத்தப்பட்டது. ஆனால் இன்று எதன் காரணமாக இதன் தொடர் நீளுகிறது என எண்ணுகிறீர்கள்?
தொடர் ஏன்நீளுகிறது என்பது தொடர்பாக, நான் அதன் பங்கேற்பாளராக இல்லாத பட்சத்தில் கருத்துக் கூற இயலாது. ஆனால் மாற்றுக்கருத்து என்ற தளம் புலிகள் அமைப்பின் அழிவினால் அற்றுப்போகிறது. புலிகளின் கருத்தியல் மக்களிடையே இன்றளவிலும் தொடர்கிறது என்பதன் அடிப்படையில், மாற்று சமூக அரசியல் தளம் என்பது இன்றும் அவசியமாகிறது. அது இப்பொழுதும் இங்கு செயல்படுகிறது. மாற்றுக் கருத்துக்கான தளம் இலக்கியச்சந்திப்பினுள் மட்டுமே இருப்பதாக புரிந்து கொள்ளக் கூடாது. எப்போதும் இலக்கியச்சந்திப்புக்கு வெளியிலும் ஒரு மாற்றுத் தளம் இயங்கியே வந்திருக்கிறது.
மாற்றுக்கருத்துகளுக்கான அச்சுறுத்தல் இன்றும் உள்ளது எனக் கருதுகின்றிர்களா?
நாங்கள் எந்தத் தளத்தில் எப்படிச் செயற்படுகிறோம் என்பதைப் பொறுத்தும் அந்தச் செயற்பாடுகள் யாருக்கு இடைஞ்சலாக இருக்கின்றன என்பதைப் பொறுத்தும் அச்சுறுத்தல்கள் இருக்கும். எமது சமூகம் இன்றளவிலும் பல பிற்போக்கான நிலைப்பாடுகளுடன் வன்முறைகளையும் ஒடுக்குமுறைகளையும் தன்னகத்தே கொண்ட ஒன்றாகவே இருக்கிறது.
புலம்பெயர் இலக்கியம் ஆறாந்திணையாகப் பார்க்கப்படுகின்றது. முதன்முதலில் புலம்பெயர்ந்த தமிழர்கள் என்று பார்த்தால் அது மலையகத்தவரே. அவர்கள் தாங்கள் புலம்பெயர்ந்த நாட்டின் பாடுகளை எழுத்தில் கொண்டு வந்த அளவுக்கு மேற்குலகுக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் செய்யத் தவறி விட்டார்கள் என்ற பரவலான குற்றச்சாட்டுகளை இப்பொழுது பார்க்க முடிகிறது. இரண்டு சஞ்சிகையின் ஆசிரியர் பீடத்தில் இருந்த நீங்கள் என்ன சொல்கின்றீர்கள் ?
“ஆறாம்திணையாக பார்க்கப்படுகின்றது” – அதாவது நிலங்கள் ஐந்திணைகளாக குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று பகுக்கப்பட்டிருப்பதன் அடிப்படையில் – அதன் நீட்சியாக புலம்பெயர்ந்தோர் (அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் நோக்கி) நிலத்தை பனியும் பனி சார்ந்த நிலமும் என்ற அடிப்படையில் ஆறாம் திணை என அ. முத்துலிங்கம் அவர்கள் ஒரு வரைவிலக்கணத்தைத் தந்திருக்கிறார்.மலையக மக்களின் அரசியல் சமூக கலாசார வாழ்வியலைப் பிரதிபலிக்கும் இலக்கியத்தையும் ஈழப் பின்புலம் சார்ந்த புகலிட எழுத்துகளையும் ஒரே தராசில் வைத்துப் பார்க்க வேண்டிய அவசியத்தை நான் உணரவில்லை. அது தேவையற்றது என்பது என் அபிப்பிராயம்.
எந்தவிதத்தில் தேவையற்றது என்று சொல்கின்றிர்கள் ?
ஏனென்றால் இருவரின் சமூக கலாசார அரசியல் பிரச்சினைகள் வெவ்வேறு வகையானவை. இலக்கியங்கள் அதைப் பிரதிபலித்து நின்றன, அதனதன் வடிவில் வெளிப்பாடுகளை செய்திருக்கின்றன. இதில் எது பெரியது சிறியது என்ற விவாதத்தில் எனக்கு ஆர்வம் இல்லை.
ஆறாம் திணையை ‘புலம்பெயர் இலக்கியம்’ என்றுதான் இதுவரையில் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், இப்பொழுது ‘புலம்பெயர்ந்தோர் இலக்கியம்’, ‘புகலிட இலக்கியம்’ என்று புதுவகையான வியாக்கியானங்களைப் பார்க்க கூடியதாக இருக்கின்றது. இதை நீங்கள் எப்படியாகப் பார்க்கின்றீர்கள்?
‘புலம்பெயர் இலக்கியம்’, ‘புகலிட இலக்கியம்’ என்ற சொற்பிரயோகங்கள் தொடர்பான விவாதங்கள் தொண்ணூறுகளிலேயே இங்கு ஐரோப்பாவில் களம் கண்டிருக்கின்றன. ‘புலம்பெயர்’ என்பதற்கும் ‘புகலிடம்’ என்பதற்கும் இடையிலான வித்தியாசத்தை முதலில் விளங்கிக் கொள்வது முக்கியம்.‘புலம்பெயர்’ என்பது ஒருவர் தனது நிலத்தில் இருந்து இன்னோர் இடத்துக்குப் பொருளாதார மற்றும் தொழில்முறை காரணங்களுக்காகவோ அல்லது திருமணம் போன்ற இன்னோரன்ன காரணங்களுக்காகவோ இடம்பெயர்ந்து வாழ்வது என்றும். ‘புகலிடம்’ என்பது ஒருவர் அரசியல் மற்றும் சமூகரீதியான ஒடுக்குதலின் காரணமாக இடம்பெயர்ந்து அகதியாக தஞ்சம் புகும் வாழ்வு என்றும் நான் பார்க்கிறேன். இந்த இரண்டும் ஒரு பொட்டலத்துக்குள் போட முடியாதவை என்பதுதான் எனது கணிப்பீடு. ஏனென்றால் இந்நிலைகளில் கிடைக்கும் வாழ்வு என்பது ஒன்றுடன் ஒன்று ஒப்பிட முடியாத அளவு வித்தியாசமானது. புலம்பெயர்வு என்று வரும்போது அவர்களுக்கு இருக்கும் சுதந்திரம் புகலிடத்தில் இருப்பவர்களுக்கு பல்வேறு வகையில் கேள்விக்கு உள்ளாகும். உதாரணமாகப் புலம்பெயர்ந்தவர் நாட்டுக்கு திரும்பும் வாய்ப்பு இருக்கும். புகலிடத்தில் அது கேள்விக்கு உள்ளாகும். புகலிடத்தில் இருப்பவர் ஒடுக்குதலுக்கு உள்ளாகி வடுக்களை சுமந்து இருக்க நேரிடும்.
இது குறித்து இலக்கியச்சந்திப்புகளின் ஆரம்ப காலங்களில் நிறையவே உரையாடல்கள் நிகழ்ந்திருக்கின்றன. இது குறித்துக் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டவர்களில் முக்கியமாக, மு. நித்தியானந்தன், ந. சுசீந்திரன், கலைச்செல்வன் ஆகியோரைக் குறிப்பிடலாம் என்று நினைக்கிறேன்.
நீங்கள் பாரிசுக்கு வந்து ஏறத்தாழ 40 வருடங்கள் ஆகின்றன என எண்ணுகின்றேன். உங்களுடைய காலத்தில் பாரிஸில் சிற்றிதழ்களின் வகிபாகம் எப்படியாக இருந்தது ?
அன்றைய காலத்தில் வெளிவந்த சஞ்சிகைகள் பற்றிப் பேசுவதென்றால், இன்றைய சூழலுடன் ஒப்பிடும்போது தொடர்பாடல்கள் அவ்வளவு இலகுவானதாக இருக்கவில்லை. தமிழில் வாசிப்பதற்கு ஏதாவது கிடைக்கிறது என்பது அரிதாக இருந்த ஒரு காலம். அப்போது வெளிவந்த சஞ்சிகைகள் என்று பார்த்தால் ஒரு பட்டியலைத் தர முடியும். முதலில் வெளிவந்தது ‘தமிழ்முரசு’ அதன் பின்னர் ‘எரிமலை’ என்று சொல்லலாம். ‘தமிழ்முரசு’ அரசியல் மற்றும் இலக்கிய ஆக்கங்களைக் கொண்டு வெளிவந்தது. எழுத்தாளர்கள், படைப்பாளிகளை ஆரம்பத்தில் புகலிடத்தில் இனம் காட்டிய ஒரு சிறு சஞ்சிகையாக ‘தமிழ்முரசு’ இருந்திருக்கிறது. ‘எரிமலை’ புலிகளின் அரசியல் பிரச்சார பத்திரிகையாக ஆரம்பித்து பின்னர் இலக்கிய ஆக்கங்களையும் உள்ளீர்த்துக் கொண்டது.
பிரான்சில் எப்படியும் இருபதுக்கும் மேற்பட்ட சிறு சஞ்சிகைகளும் பத்திரிகைகளும் வந்திருக்கின்றன. ஆரம்பத்தில் வந்த சிறு சஞ்சிகைகளில் ஒரு சில மட்டுமே தொடர்ந்தன. சில ஓரிரு இதழ்களுடன் நின்று போயின. ஒன்று நிற்க ஏதோ இன்னொன்று முளைத்துக் கொண்டிருந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேணும். இலங்கையின் கள நிலவரங்கள் குறித்த செய்திகள், அரசியல் பார்வைகள், அத்துடன் ஊரை நினைத்து ஏங்குகின்ற, இந்த வாழ்க்கை சூழலுடன் ஒட்ட முடியாமல் இருக்கின்ற அவலங்கள், கலாச்சார இடைவெளிகள், சமூக விழிப்புணர்வு குறித்த படைப்புகள் வெளிவந்திருக்கின்றன. சில மொழிபெயர்ப்புகள் சாத்தியப்பட்டிருக்கின்றன. இப்படிப் பொதுப்படையாக சொல்ல முடியும் என்று நினைக்கிறேன்.மொழிபெயர்ப்புகள் சாத்தியப்பட்டிருக்கின்றன.
குறிப்பாக எந்தவகையான மொழிபெயர்ப்புகளுக்கு முன்னுரிமை அப்பொழுது வழங்கப்பட்டது
‘முன்னுரிமை’ என்ற பதத்தை பாவிக்கலாமா என்று எனக்குத் தெரியவில்லை. கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், தத்துவ விசாரங்கள் என்று குறிப்பிடலாம். எரிமலை புலிகளின் அரசியல் பிரச்சார பத்திரிகையாக ஆரம்பித்து பின்னர் இலக்கிய ஆக்கங்களையும் உள்ளீர்த்துக் கொண்டது.
எரிமலையின் இலக்கிய ஆக்கங்கள் அப்பொழுது எதைச் சொல்லி நின்றன ?
அநேகமாக பிரச்சார இலக்கியமாக இருந்ததென்று தான் சொல்ல முடியும்.
எக்ஸில் சிற்றிதழில் நீங்கள் இருந்த பொழுது உங்களுக்கு அதில் கிடைத்த அனுபவங்களைப் பற்றி பேசலாம் என எண்ணுகின்றேன்
ஒரு சிறு சஞ்சிகையில் செயற்படும்போது ஆரம்ப காலத்தில் அது மிகவும் ஒரு கடினமானதும் சவாலானதுமான விடயமாகத்தான் புகலிடத்தில் இருந்தது. அது ஓர் அர்ப்பணிப்பு என்றுதான் இன்று பார்க்கும்போது தெரிகிறது. ஏனென்றால் அதில் வெளிவரும் விடயங்கள், ஆக்கங்கள் வெகுஜன இதழ்களில் வெளியாவதற்கு கருத்தில் கொள்ளப்படாத விடயங்கள் என்பது முக்கியமாக இருந்தது என்று சொல்லலாம்.‘எக்ஸில்’ சஞ்சிகையைக் கொண்டு வந்தபோது, ஐரோப்பாவுக்கு வெளியிலும் இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் அதற்கான வாசிப்புத் தளத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணமும் இருந்தது. அதே சமயம் இலங்கையில் இருந்து கொண்டு தங்களது கருத்துக்களை வெளிப்படையாக சொல்ல முடியாமல் இருந்தவர்களுக்கும் ஒரு களமாகவும் இருக்க வேண்டும் என்றும் எண்ணி இருந்திருக்கிறோம்.
‘உயிர்நிழல்’ ஆரம்பித்த காலப்பகுதியில் நான் இருந்திருக்கிறேன். அப்பொழுது இது தொடர்பாக எனக்கு குழப்பமான செய்திகளே கிடைத்தது.உண்மையில் ‘எக்ஸில்’ சஞ்சிகையில் இருந்து ‘உயிர்நிழல்’ தோன்ற வேண்டிய சூழ்நிலைகள் தான் என்ன ?
‘உயிர்நிழல்’ ஆரம்பித்த காலப்பகுதி என்று சொல்வதை விடவும், ‘எக்ஸில்’ சஞ்சிகையின் ஒரு தொடர்ச்சியாக நாங்கள் ‘உயிர்நிழலை’ கொண்டு வந்திருந்தோம். அதே சமயத்தில் எக்ஸில் சஞ்சிகையும் வெளிவந்து கொண்டிருந்தது.ஒரு குழுவாக செயல்படும்போது பல்வேறு கருத்துள்ளவர்கள் தான் ஒன்றாக இருப்போம். சில விடயங்களில் கருத்துக்களை விவாதித்து ஒரு புள்ளிக்கு வந்து முடிவுகளை எடுக்கக்கூடியதாக இருக்கும். சில நேரங்களில் அப்படியான முடிவுகளை எட்ட முடியாது போகும் பொழுது இணைந்து செயற்படுவது என்பது சாத்தியமில்லாதது. இது வெறுமனே எக்ஸிலில் இருந்து உயிர்நிழல் தோன்றுவதற்கான பிரத்தியேக காரணி அல்ல. எந்த அமைப்பு, குழு இப்படி எதிலும் இந்த நிலைமை தோன்றி இருக்கிறது. இன்னும் தோன்றலாம். இது யதார்த்தம் என்றுதான் நான் நினைக்கிறேன்.
அப்படியானால் குழுமச் செயற்பாடு என்பது ஒருவர் செயற்படுத்த எண்ணும் செயற்பாடுக்கு இடையூறாக இருக்கின்றது என்று எடுத்துக் கொள்ளலாமா ?
எதையும் கறுப்பு-வெள்ளையாக பார்க்க வேண்டிய அவசியமில்லை. நான் சொல்வது எமது கடந்த கால அனுபவத்தில் எம்மால் குழு செயல்பாடுகளில் நாம் எதிர்பார்த்த அளவு அல்லது நமக்கு தேவைப்பட்ட அளவு ஆரோக்கியமாக இயங்க முடியாமல் போனது என்பதைத்தான். தனி நபர்களின் கூட்டு தானே குழு. அதனால் அது தனி நபர்களையும் பொறுத்து இருக்கிறது.
ஆனால் இன்று எதையும் கருப்பு வெள்ளையாக பார்க்கின்ற தன்மைதானே துருத்திக்கொண்டு நிற்கின்றது. குறிப்பாக, தமிழ் பொதுமனம் என்பதே ஜனநாயகப் பண்புகளை மறுதலிக்கும் விதமாகத்தானே கட்டமைக்கப்பட்டிருக்கிறது.நீங்கள் சொல்வது போன்று ஒரு நிலைமை இருக்கின்றது என்பது உண்மைதான். எதையும் விவாதங்களுக்கு உட்படுத்தி ஒன்றை ஏற்றுக் கொள்ளும் அல்லது மறுதலிக்கும் பண்பு இருக்க வேண்டும். எதையும் கேள்விக்கு உட்படுத்தாமல் அல்லது விளக்கங்கள் எதுவும் தரப்படாமல் நாங்கள் வளர்க்கப்படுவதும் அதற்கு ஒரு காரணமாகின்றது. உதாரணத்துக்கு, நாங்கள் எங்கள் பிள்ளைகளுக்கு எதைப் பற்றியும் விளக்கமாகக் கூறுவதில்லை. ஏன் ஒன்றைச் செய்ய வேண்டும் அல்லது செய்யக்கூடாது என்று சொல்லும் பொழுது, அது ஏன் என்று அவர்களுக்குச் சொல்வதில்லை. அவர்கள் எங்களிடம் அதற்கான காரணத்தைக் கேட்டால், அது அப்படித்தான் என்று சொல்லத்தான் கேட்டிருக்கிறோம் அல்லது பழகி இருக்கிறோம். நாங்களும் அப்படி வளர்க்கப்பட்டதும் இதற்குக் காரணமாக இருக்கலாம். அடுத்த தலைமுறைகள் இந்தத் தன்மையைக் கடந்து வருவதற்கான சாத்தியங்கள் இருக்கும் என்று நம்புவோம்.
உயிர் நிழல் எத்தனை பிரதிகள் வெளியாகியது பின்னர் ஏன் அதனைக் காண முடியவில்லை?
‘உயிர் நிழல்’ பல இதழ்கள் வெளிவந்த பின்னர்தான் நின்றது. சரியாகச் சொல்வதென்றால் 35 இதழ்கள் வெளிவந்திருக்கின்றன.
உங்கள் கணவராகிய கலைச்செல்வன் ‘பள்ளம்’ ஆசிரியர் பீடத்தில் இருந்திருக்கின்றார். ‘பள்ளம்’ சஞ்சிகை எந்த விதத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிம்மதியை குலைத்தது?
கலைச்செல்வன் என்னுடைய கணவர் அல்ல. முதலில் நண்பன். நாங்கள் சேர்ந்து வாழ்ந்ததினால் ‘இணை’ அல்லது ‘இணையர்’ என்று நீங்கள் புரிந்து கொள்ளலாம். கணவன்-மனைவி என்ற சொற்களின் தோற்றுவாயிலேயே எனக்குப் பிரச்சினை இருக்கிறது. கலைச்செல்வனும் ‘பள்ளம்’ சிறு சஞ்சிகையில் ஒரு ஆசிரியராக இருந்திருக்கிறார். ‘பள்ளம்’ புலிகளின் நிம்மதியை எப்படிக் குலைத்தது என்பதை அவர்கள்தான் முழுமையாகச் சொல்ல முடியும். இருந்தாலும் விடுதலைப் போராட்டம் என்பது தங்களுக்கு மட்டுமே உரித்தானது என்று புலிகள் தீவிரமாக நினைத்தார்கள். அதற்கான அவர்களின் ‘பிரத்தியேக’ அணுகுமுறைகள் ஒன்றும் புதிதல்ல. தாங்கள் எடுக்கின்ற முடிவுகள், நடவடிக்கைகள் எல்லாவற்றுக்கும் அனைவரும் பணிந்து போக வேண்டும் என்று நினைத்தார்கள். அதுவும் புலம்பெயர் சூழலில் இருந்து அவர்களின் செயற்பாடுகள், நடவடிக்கைகள் குறித்து விமர்சன பூர்வமாக வைக்கப்படுகின்ற கருத்துக்கள் மக்களிடம் போயச்; சேர்ந்து விடுமானால், இங்கிருந்து கிடைக்கும் நிதிக் கொள்வனவு தடைப்பட்டு விடக்கூடும் என்பதும் முக்கிய காரணம். உணர்ச்சிப் பிழம்பில் கோஷங்களை எழுப்பி அதன் மூலம் கூட்டத்தைக் கூட்டினார்கள். பலரை நிர்ப்பந்தித்தார்கள். தங்களைத் தவிர வேறு எந்த குழுவோ, அமைப்போ தமிழர் விடுதலை குறித்து பேசுவதை அவர்கள் விரும்பவில்லை. ‘விரும்பவில்லை’ என்று சொல்வதை விடவும் எதிர்ப்பைத் தங்களுக்கு தெரிந்த அராஜக மற்றும் வன்முறை வழிகளில் காட்டினார்கள்.
விடுதலைப்புலிகளால் கலைச்செல்வன் கடத்தப்படும் அளவுக்கு அவரது முக்கியத்துவம் எப்படியாக இருந்தது ?
கலைச்செல்வனை கடத்திக்கொண்டு சென்று தாக்கிய பின்னர் பத்து மணித்தியாலங்கள் கழித்து நெடுஞ்சாலை ஓரத்தில் கொண்டு வந்து தள்ளி விட்டுப் போனார்கள். அன்று கலைச்செல்வன் பிழைத்து வந்ததே பெரும் அதிசயம் என்றுதான் சொல்ல வேண்டும். அவர்களிடம் மண்டியிட மறுத்ததன் விளைவுதான் அது. ‘பள்ளம்’ சிறு சஞ்சிகையின் இரண்டு இதழ்கள் வெளிவந்திருந்த நிலையில் இது நடந்தது. இந்த சம்பவத்துடன்இ ‘பள்ளம்’ சஞ்சிகை நிறுத்தப்பட்டது. கலைச்செல்வன் தொடர்ந்த அரசியல் சமூகச் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்ததும்இ அவனிடம் இருந்த தனிமனித ஆளுமையும் அவர்களை அச்சுறுத்தி இருக்கலாம்.
பாரிஸில் சிற்றிதழ்களின் தோற்றுவாய்களுக்குரிய காரண காரியங்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்.?
1977ஆம், 1983ஆம் ஆண்டுகளில் இலங்கையில் ஏற்படுத்தப்பட்ட இனக் கலவர சூழலால் புகலிடத்தை நோக்கிய பெயர்வு மெதுமெதுவாக அதிகரித்துக் கொண்டு போனது என்று சொல்லலாம். பாரிஸ் என்று விசேடமாக குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ஐரோப்பாவில் என்று சொல்வது கூட பொருத்தமானதாக இருக்கும். பல்வேறு இயக்கங்களை நம்பிப் போய் அவற்றில் இருந்து வெளியேறியவர்களும், தங்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று உணர்ந்தவர்களும் பெருவாரியாக ஐரோப்பா முழுவதும் வந்து சேரத் தொடங்கியிருந்தார்கள். அதிகம் தமிழர்கள் வந்து சேர்ந்த இடங்களில் சிறுசஞ்சிகைகள் உருவாகின. இங்கு ஆரம்ப காலங்களில் இலங்கையில் இருந்து பத்திரிகைகளோ, சஞ்சிகைகளோ வரவில்லை. இன்றுபோல் தொழில்நுட்பம் ஒவ்வொருவரின் விரல் நுனியிலும் இல்லாதிருந்த ஒரு காலம். வீடுகளில் கூட தொலைபேசி இல்லாதிருந்த காலம். சில பேரிடம் தான் அந்த வசதியும் இருந்தது. உதாரணத்துக்கு, தமிழ்க் கடைகள் கூட அங்கொன்று இங்கொன்றாக இருந்த காலம். அங்கும் தமிழ்நாட்டில் இருந்து வருகின்ற சிற்றிதழ்களைத்தான் பார்க்க முடிந்திருந்தது. ஒரு புத்தகம் கிடைத்தால் கூட அதை பலரும் பகிர்ந்து படிக்கின்ற நிலைதான் அன்று இருந்தது. வேறு மொழிகளில் வாசிப்பதற்கான மொழியறிவும் போதுமானதாக இருக்கவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கிடைக்கின்ற தகவல்களை வைத்து, நாட்டின் அரசியல் நிலவரங்கள் பற்றி மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் அடிப்படையில் முதலில் சில சிறிய வெளியீடுகள் ஆரம்பிக்கப்பட்டன. ஆனால் யுத்தமும் நாட்டு அரசியல் சூழலும் மேலும் மேலும் சிக்கலுக்குள்ளாகிச் செல்லும் போது தங்கள் உணர்வுகளையும் மனக் கொந்தளிப்புகளையும் பலர் பலவாறு வெளிப்படுத்தினார்கள். கவிதைகளாகவும் சிறுகதைகளாகவும் கட்டுரைகளாகவும் அவை வளர அவற்றை நண்பர்கள், தோழர்கள் குழுவாக இணைந்து சஞ்சிகைகளை உருவாக்கத் தொடங்கினார்கள். இந்தத் தளம் தன்னைத்தானே விரிவாக்கிப் பல பத்திரிகைகள் சிறுசஞ்சிகைகள் என நாளடைவில் விரிவாகியாது.
பாரிஸில் பெண்களுக்கு என்று சஞ்சிகைள் தோன்றியிருந்தனவா? ஆம் என்றால் அவைகளின் செயற்பாடுகள் எந்த விதத்தில் பெண்களைக் கூர்மைப்படுத்தின ?
“பெண்களுக்கு என்று சஞ்சிகைகள்” என்று சொல்வதை விடவும், பெண்கள் குறித்த விடயங்கள், பெண்களிடம் விழிப்புணர்வை அதிகரிக்கக் கூடிய விடயங்கள் மற்றும் இலக்கிய ஆக்கங்கள் இவைகளை கொண்டு ‘கண்’ சிறு சஞ்சிகை ‘இலங்கை மகளிர் சங்கம்’ என்ற அமைப்பினால் வெளியிடப்பட்டது. நானும் அதில் பங்களித்திருக்கிறேன். 1986ஆம் ஆண்டில் வெளிவர தொடங்கி கிட்டத்தட்ட 4 வருஷம் 13 இதழ்கள் வெளிவந்திருக்கின்றன என்று நினைக்கிறேன். பெண்களைக் கூர்மைப்படுத்தினவா என்றால், பெண்கள் எதிர்கொள்கின்ற சவால்கள், பிரச்சினைகளை ஏனையவர்களிடமும் கொண்டு சேர்ப்பது என்றுதான் செயற்பட்டு இருக்கிறோம் என்று சொல்லலாம். அது ஒரு சிறு ஆரம்ப முயற்சி. அத்துடன் மாதமொருமுறை கூடிப் பேசுவோம். இன்றைக்குப் பார்க்கும்போது, பெண்களின் விடயங்கள் என்று ஆண்கள் எதை இன்றும் கருதுகிறார்கள் என்றொரு உரையாடலைத் தொடங்கினால் என்ன என்று எனக்கு தோன்றுகிறது. பெண்களின் விடயங்கள் என்று ஆண்கள் எதை இன்றும் கருதுகிறார்கள் என்றொரு உரையாடலைத் தொடங்கினால் என்ன என்று தோன்றுகிறது.
ஓ…! ஆரம்பிக்கலாமே…! இன்றுங்கூடப் பால் சமத்துவம், பழமைவாதக் கொள்கைகள் என்று தாயகத்திலும் சரி புலம்பெயர் தேசத்திலும் சரி பெண்கள் முற்றுமுழுதாக வெளியேறவில்லை என்றுதான் நான் எண்ணுகின்றேன்.
பெண்கள் எவ்வாறான சமூக கட்டமைப்புக்குள் வளர்க்கப்பட்டு உருவாக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற சமூகவியல் காரணத்தை முதலில் நீங்கள் கவனத்தில் எடுக்க வேண்டும். நீங்கள் குறிப்பிடும் விடயங்களில் இருந்து பெண்கள் வெளியேற முடியாமைக்கு பெண்கள் மட்டும் காரணமல்ல. அவர்கள் எப்படி உருவாக்கப்பட்டார்கள், இன்னும் எப்படி உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளாமல், பெண்கள் மீது பாரத்தைப் போட்டுத் தப்பித்துவிட முடியாது. பெண்கள் அப்படி இருப்பதற்கு ஆண் மைய அதிகாரமும் சட்டதிட்டங்களும் அரணமைத்து நிற்கின்றன. அவற்றை உடைத்து பெண்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது இன்னும் தீவிரமாக வேண்டும் என்றுதான் நான் நினைக்கிறேன்.
தென்கிழக்காசிய நாடுகளை சேர்ந்தவர்கள் தாய்வழிச் சமூகத்தில் இருந்து வந்தவர்கள். அப்படியிருக்க, “ஆண்கள் ஆண்மைய சிந்தனை உள்ளவர்கள்” என்று எதன் அடிப்படையில் சொல்கின்றீர்கள்?
நீங்கள் ‘தாய்வழி சமூகம்’ என்று எதை சொல்கிறீர்கள்? குடும்ப அமைப்பை உருவாக்கும் திருமணம் என்ற உறவு, ஆண் அதிகாரத்தை மையமாகக் கொண்ட ஒரு கட்டமைப்புத்தான். உதாரணத்துக்கு, ஒரு பெண் – ஆண் உடல்ரீதியான உறவில் இருந்து பெறப்படுகின்ற ஒரு குழந்தையின் பெயர், அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும், அந்தக் குழந்தையின் பெயருடன் தந்தையின் பெயர் தான் பிணைந்திருக்கும். குழந்தையை பெற்றுக் கொடுத்த பெண் அதன் பின்னர் அந்த வெளியில் இருந்து காணாமல் போகிறாள். இதை தாய்வழி சமூக முறை என்று கொண்டாட முடியுமா?ஆண்கள் மட்டும் ஆண் மைய அதிகார சிந்தனை கொண்டவர்கள் அல்ல. பெண்களும் அந்த அதிகார மையத்தினால் ஊட்டப்படுகின்ற சிந்தனைகளை கேள்விக்குட்படுத்தாது ஏற்றுக்கொள்வதற்குப் பழக்கப்பட்டு வளர்கிறார்கள் அல்லது வளர்க்கப்படுகிறார்கள். உலகம் எங்கிலும் என்னதான் பெண்கள் எத்தனையோ உரிமைகளுக்காகப் போராடி பெற்றிருந்தாலும் எத்தனையோ நாடுகளில் சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தாலும் கூட, பெண் இரண்டாம் பட்சமாக நடத்தப்படுகிறாள் என்பதற்கு எத்தனையோ விடயங்களை குறிப்பிட முடியும்.
நீங்கள் முதல் எனக்கு அளித்த பதில் ஒன்றில், “கணவன்-மனைவி என்கின்ற சொற்களின் தோற்றுவாயிலேயே எனக்கு பிரச்சினை இருக்கிறது.” என்று சொல்கின்றிர்கள் அது எந்தவிதத்தில் பிரச்சனையாக இருக்கிறது ?
ஒரு சமூகம் பண்பாடாக இருக்கிறது என்பதில் மொழி ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை மறுதலிக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. இந்த அடிப்படையில் பார்க்கும்போது, கணவன் – மனைவி எந்த அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கிறது என்று தேடினால், கணவன் : கண் +அவன். அதாவது திருமண பந்தத்திற்குள் இணைகின்ற பொழுதில் ஒரு ஆண் என்பவன், ஒருவரின் ‘கண்’ என்ற உறுப்புக்கு இருக்கின்ற முக்கியத்துவத்தை அவன் பெறுகிறான் என்ற அர்த்தம் பொதிந்துள்ளது. அந்தப் பெண்ணுக்கு அவன் கண் ஆகிறான். அதாவது அவனுக்கூடாக எதையும் பார்த்தல். இனி, மனைவி = மனை+ வி, என்று பார்த்தால், அவள் மனைக்கு (வீட்டுக்கு) உரியவள், மனையுடன் பிணைக்கப்பட்டு இருப்பவள் என்று அர்த்தம் பொதிகிறது. திருமண பந்தத்தில் இணைபவர்கள் சமமான ஓர் உறவில் இல்லாது, இந்த சொற்பதங்கள் அதற்கான வரையறைகளையும் வெளிகளையும் காவிச் சுமந்து கொண்டிருக்கின்றன. இந்த அடிப்படையில் பார்க்கும்போது, எனக்கு இந்த சொற்களைப் பாவிப்பதில் உடன்பாடில்லை. சொற்களுக்குப் பின்னால் இருக்கின்ற நுண்ணரசியலைக் கூர்ந்து கவனிப்பது முக்கியம் என்று நான் கருதுகிறேன். இது வெறுமனே நான் கண்டுபிடித்து சொல்லும் விஷயம் என்று நினைக்கவில்லை. பெண் ஒடுக்குமுறைக்குட்பட்ட சமுதாயத்தை கேள்விக்கு உட்படுத்துபவர்கள் இவ்வாறான விடயங்களில் ஏற்கனவே கவனம் செலுத்தி வந்திருக்கிறார்கள்.
புலம்பெயர் தேசத்தில் பெண்களுக்காக ஓர் அமைப்பை என்ன காரணத்துக்காக சட்டரீதியாகப் பதிவு செய்ய முடியாமல் இருக்கிறது ?
அப்படி பதிவு செய்ய முடியாது என்று நான் நினைக்கவில்லை. இதில் ஏதாவது தடங்கல்கள் இருப்பதாகவும் எனக்குத் தெரியவில்லை. ஆனால் இங்கு பெண்கள் அமைப்புகள் செயல்படுகின்றன அல்லவா!.
பெண் விடுதலை என்பதே இன்று பாலியல் சார்ந்து தானே பொதுவெளியில் முன்னெடுக்கப்படுகின்றது? அதற்குமப்பால் ஏன் பெண்ணியவாதிகளால் குரல் கொடுக்க முடியாமலே இருக்கிறது?
உங்களின் முதலாவது கேள்வியை எடுத்துக் கொள்வோம். பொதுவெளி என்று நீங்கள் குறிப்பிடுவது முகநூல் என்று விளங்கிக் கொள்கிறேன். பாலியல் சார்ந்து எனும் போது, ஒரு பெண்ணைப் பொதுவெளியில் அவருடைய நடத்தை ‘தமிழ் கலாசாரம்’ என்பதற்குள் அடங்காததாக இருக்கின்றது என்று கூறி வசைபாடுதலை குறிப்பிடுகிறீர்கள். இதற்குள் ‘பெண் விடுதலை’ குறுக்கப்பட்டு பார்க்கப்படுகின்ற நிலைமை இருக்கிறதென்று உங்கள் கேள்வி மூலம் புரிகிறேன்.ஒரு பெண்ணோ ஆணோ மற்றவருடைய அடிப்படை உரிமைகளை மதித்து ஓர் உறவைப் பேணுதல் என்பதுதான் நிச்சயம் தேவையானது. அதை விடுத்து ஒருவர் மீது இன்னொருவர் தம் அதிகாரத்தை பிரயோகிப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. பெண்கள் சுதந்திரமாக ஒரு விஷயத்தைச் செய்வதற்கு முன் வருகின்ற பொழுது அது எந்த வகையில் சமூகத்தால் எதிர்கொள்ளப்படுகின்றது என்பது முக்கியம். சமூகத்தில் இருந்து வருகின்ற எதிர்ப்பு என்பது எடுத்துக் கொள்ளப்பட்ட விஷயம் சம்பந்தமாக இருக்கிறதா அல்லது ‘பெண்’ என்பதால் இருக்கிறதா என்பதை முதலில் கண்டு கொள்ள வேண்டும். ‘பெண்’ என்பதற்காக அந்த விஷயம் எதிர்க்கப்படுகிறது என்றால், பெண்கள் எழுச்சி கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. இதில் நான் சமூகம் என்று ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், அது வெறுமனே ஆண்கள் மட்டும் அல்ல. ஆண் மைய அதிகாரக் கருத்தியலை உள்வாங்கி வளர்ந்த, வளர்க்கப்பட்ட பெண்களும்தான். ஓர் அடிமை என்பவர், தான் அடிமை என்று உணரும் போது மட்டுமே அதில் இருந்து வெளியே வர முடியும்.
இனி உங்கள் இரண்டாவது கேள்வியை எடுத்தால், அதற்கும் அப்பால் ஏன் பெண்ணியவாதிகள் குரல் கொடுக்கவில்லை. ஏற்கனவே எத்தனையோ பெண்நிலை சிந்தனையாளர்கள் நிறைய விடயங்களை பேசி இருக்கிறார்கள். முகநூலில் பரபரப்பை ஏற்படுத்துகின்ற பதிவுகளை மட்டும் வைத்துக் கொண்டு ஒரு சில முடிவுகளை எடுக்கும் நிலைக்கு நாங்கள் வருகிறோம் என்பது உண்மையில் மனம் கொள்ளத்தக்க விடயமாக இல்லை என்பதை மட்டும் சொல்கிறேன். சமூக, இலக்கியச் செயற்பாடுகள் மறைந்து கொண்டு போய் முகநூல் செயற்பாடுகள் மேலோங்கி இருக்கிறது. தேடிப் பொறுக்குவதும் அவ்வளவு சுலபமாக இல்லை.
திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்த பொழுது எந்தவகையான சவால்களைச் சந்தித்தீர்கள் ?
பிரதீபன் திரைப்பட உருவாக்க முயற்சிகளில் இருக்கும் போது அதைச் சாத்தியப்படுத்துவதற்காக நான், பிரதீபன் ரவீந்திரன் மற்றும் எனது மகன் கபிலன் சிவரட்ணம் இணைந்து இந்த முயற்சியில் இறங்கினோம். நாம் தயாரிப்பது வணிக நோக்கத்தின் அடிப்படையில் அல்ல. இந்தப் படைப்புகள் கலை வெளிப்பாட்டை அதிகம் முதன்மைப்படுத்துவதால், வணிகரீதியில் இயங்கும் திரைப்படச் சூழலில் கடினமான பயணமாகவே இருக்கும். குறிப்பாக நிதி சார்ந்த சவால்களைத்தான் எதிர்நோக்குகிறோம்.
இவ்வளவு அனுபவத்திரட்சியை உடைய உங்களுக்கு இப்போதுள்ள எழுத்துகள் இலக்கிய முன்னெடுப்புகள் என்ன மாதிரியான அனுபவத்தைக் கொடுக்கின்றன?
ஒரு வாசகியாக அவ்வப்போது ஈழத்துச் சூழல் சார்ந்த நல்ல படைப்புகளை வாசிக்க கிடைப்பதில் மகிழ்ச்சியே. ஆனாலும் பல, படைப்புகள் என்ற பெயரில் தமிழ்நாட்டு புத்தக சந்தைக்காக வெறுமனே ஆன்மா இல்லாது உருவாக்கப்படுகின்றனவா என்ற அபிப்பிராயம் என்னிடம் சில காலமாக இருந்து வருகிறது. சந்தைக்காக படைக்கும் கலாச்சாரம் ஈழத்துச் சூழலில் முன்னர் எப்போதும் இருந்ததாக நான் நினைக்கவில்லை. இது மிகவும் வருந்தத்தக்க விடயமாகத்தான் தனிப்பட்ட விதத்தில் எனக்கிருக்கிறது.
—————————————————————
லக்ஷ்மி பற்றிய சிறு குறிப்பு :
90 களின் காலத்தில் பாரிஸ் இலக்கியப் பரப்பில் லக்ஷ்மியை கடந்து யாரும் வரலாற்றை எழுத துணிந்து விட முடியாது. மறைந்த தோழர் கலைச் செல்வனின் இணையாகிய இவர், எக்ஸில் மற்றும் உயிர்நிழல் ஆசிரியர் பீடங்களில் இருந்து தனது இலக்கிய செயற்பாட்டினால் புலம்பெயர் இலக்கியத்தின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவராகின்றார். பின்நவீனத்துவம், தலித்தியம், பெண்ணியம், எதிர்ப்பிலக்கியம் ஆகியவை குறித்து எக்ஸில் உயிர் நிழல் ஆகிய இரு சஞ்சிகைகைகளாலும் அதிகம் கதைத்தவர் என்ற முக்கியத்துவத்தைப் பாரிஸ் எழுத்துப் பரப்பில் லக்ஷ்மி பெறுகிறார். அண்மையில் இவருடன் கடந்தகால, சமகால எழுத்துப் போக்குகள் மற்றும் இலக்கியச் சங்கதிகளை இருவரும் மனந்திறந்து பேசிக்கொண்டோம்.