கவிதாவின் கறுத்தப்பெண் ( நான் தவறுகள் செய்ய மறுக்கப்பட்டவள்) என்ற கவிதை நூல் அழியாச் சுவடுகளாகத் தேங்கியிருக்கும் பலவற்றை கவிதைகளாக்கியிருக்கிறார் அனேக கவிதைகளை தனக்கேயுரித்தான கவிதை மொழியில் வெளிப்படுத்தியிருக்கிறார் பெண் என்பவள் சமூகத்தால், தன்னைச் சூழ இருப்பவர்களால் எதிர்நோக்குகின்ற பல வகை இன்னல்களை “கறுத்தப்பெ ண் ” என்ற கவிதைத்தொகுப்பில் காணலாம். கவிதைகளனைத்துமே நேரடியாக அக்கணங்களுக்குள் நம்மை இழுத்துச் செல்பவையாக உள்ளன. ஒரு யுகத்தின் வலிமையான கவிதைச் செல்நெறியின் எஞ்சிய கருத்தாடலை, இத்தொகுப்பின் கவிதைகள் இன்னுமொரு பரிமாணத்தில் நிகழ்த்துகின்றன.
இப்போது தேடல்களும் கொஞ்சம் கேள்விகளும்
என் கனவுகளுக்கெல்லாம்
கதவடைப்புகள் நிகழும்
தருணங்களில்…
கவிதைகள் கதவுடைக்கின்றன
தன்னிலிருந்தும் தன்னைச் சுற்றியுள்ளவற்றிலிருந்தும் உணர்வின் அடியாழங்களுக்குள் நீந்தும் திடகாத்திரமான பயணத்தை கதவுகள் அடைத்து விடுகின்றன. என அழகாக வர்ணித்துள்ளார் அதே கவிதையில்
பதில்களை மட்டுமாய்
புத்திரப்படுத்திய
வாழ்க்கையில்
இப்போது தேடல்களும்
கொஞ்சம்
கேள்விகளும்;,
நிகழ்வுக்கும் அனுபவத்திற்கும் இடையில் அனுபவத்தை ஆர்ப்பாட்டமின்றி கேள்விகளை புனைகிறார்.
.
சொன்ன சொல் மாறாமல் என்ற கவிதையில்
உடலுக்குள் என்றனர்
மனசுக்குள் என்றனர்
நடத்தையும் செய்கையும் என்றனர்
இருவருக்கும் உள்ளதென்றனர்
மணவாழ்விற்கு முன்
காதல் தவிர்ப்பின் தொடக்கப்புள்ளி
எந்தப்பொட்டிலிருந்து
ஆரம்பிக்கிறது?
உறுப்புக்களை சார்ந்த
நிகழ்வானது எப்போது?
பெண்ணின் காதல் வெளிப்படையாக வெளிப்படுத்தலுக்குரியது என்பது ஏற்றுக் கொள்ளப்பட முடியாத ஒன்றாக ஆணைச்சார்ந்தே நிர்ணயிக்கப்படுகிறது. இதில் திருமணம் மூலம் கட்டமைக்கப்படும் உறவு இன்னும் கூடுதலான ஆதாரமாகவே கருதப்படுகிறது. இத் திருமண உறவே சில சமயங்களில் அவள் வாழ்வை ஆதாரமற்றதாக்குவதோடு அவளை வெற்று பிம்பமாக்கி வேடிக்கை பார்க்கும் சூழலும் நிலவுகிறது. .. சமூகத்தை இழிவுபடுத்துபவளென பல வேறு பெயர்களால் முத்திரை குத்தப்பட்டு விடுகிறாள்.
தயவு செய்து
காலாகாலமாய் கட்டிவரம்
கற்பு என்றால் என்ன
என்பதை
கறுத்த பெண் என்ற
என் முகவரிக்கு
வந்து சொல்லுங்கள்
கற்பு என்பது பெண்களுக்கு மட்டுமே உரித்தானது அதிகாரமிக்கவர்கள் காட்டும் வழியில் பெண் பயணிக்க வேண்டியவளாகிறாள்.
பூப்புனித நீராட்டுவிழா
குலாச்சார கனவிலிருந்து
வுpழிப்பு வரும் வரை
துளியும் சலனமில்லா
பெரிய முண்டங்களுக்காக
எங்கள் குழந்தைகளும்
ஆரிதாரத்தோடு தலைகுனிந்து
முகம்மூடக்
கற்றுக்கொள்கின்ற நாள்…
எமது சமூகத்தில் பல பரிமாணங்களுடன் புரையோடிப் போயிருக்கும் அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் இக் கவிதை பொருந்துகின்றது கவிதாவின் கவிதையின் உயிர்நாடி எளிமை. அழகாக எளிமையாகக் கூறுகிற அதே நேரம், சிந்திக்க வைக்கிற கவிதை மொழி கவிதாவினுடையதாக உள்ளது
இத் தொகுதி அது பேசும் பொருள், அதன் எளிமை என்பவற்றாலேயே முக்கியப்பட்டுப் போகிறது. கவிதையின் எண்ணிக்கையை விட அதன் கனம் தான் படைப்பாளியின் இருப்பைத் தக்க வைக்கிறதென்ற உண்மையையும் விளங்கச் செய்கிறது. யதார்த்தத்தை படிமத்தின் மூலம் எழுதுகிற மனத்தின் வெளிப்பாடாயும் தெரிகிறது.; சிறகுகளின் மீது நீளும் எல்லாக் கைகளுக்கெதிராகவும் ஆரம்பிக்கப் பட்ட பயணமாக் .. கறுத்தபெண் என்ற நான் தவறுகள் செய்ய மறுக்கப்பட்டவள்.. கவிதைத்தொகுப்பு பேசுகிறது.