“சிவரமணியின் கவிதைகள்”
சூரியகுமாரி பஞ்சநாதன் அவர்களின் சிவரமணி குறித்த கட்டுரை 1994 இல் பெண்கள் ஆய்வு நிறுவனத்தினரால் வெளியிடப்படட “நிவேதினி” சஞ்சிகையில் வெளியானது.நன்றி noolaham.net
சமகாலத்து ஈழத்து இலக்கியப் பரப்பில் முற்போக்கு சிந்தனையை அடித்தளமாக வைத்துத் தம்மை இனங்காட்டிய இளம் பெண் கவிஞர்களுள் தனித்து முத்திரை குத்துமளவிற்குத் தன்னை வித்தியாசமாகவும் தனித்துவத்துடனும் வெளிப் படுத்திய சிவரமணி தற்கொலை செய்ததன் மூலம் தனது ஒரு சில கவிதை ஆக்கங்களை மட்டுமே எமக்கு எச்சமாக விட்டுச் சென்றுள்ளார் .தனித்துவமிக்க அவருடைய 22 கவிதைகள் அடங்கிய கவிதைத் தொகுப்பானது “சிவரமணி கவிதைகள்” என்ற தலைப்புடன் பெண்கள் ஆய்வு வட்டத்தினால் அண்மையில் வெளியிடப்பட்டது.மேற்படி நூலில் சித்திரலேகா மெளனகுரு அவர்களின் “சிவரமணியின் வாழ்வும் கவிதையும் ஒரு அறிமுகம்” என்ற குறிப் பேட்டின் மூலம் சிவரமணியின் வாழ்க்கை நோக்கினையயும் இவருடைய கவிதை ஆளுமையையும் அறியக்கூடியதாகவுள்ளது.
சிவரமணி ஏன் தற்கொலை புரிந்தார்? அச்சம்பவத்தின் மூலம் அவர் சமூகத்திற்கு எதனை உணர்த்த விழைந்தார்? என்பன போன்ற வினாக்களுக்கு எம்மால் இன்றும் தெட்டத் தெளிவான ஒரு முடிவுக்கு வரமுடியாமலே உள்ளது. சிவரமணியுடன் ஒன்றாகக் கல்வி கற்ற போது அவருடைய வித்தியாசமான தன்மைகள் பல சந்தர்ப்பங்களில் என்னை வெகுவாக ஈர்த்திருந்தன. ஒரு சிலரிடையே நட்பினைக் கொண்டிருந்த சிவரமணி, யதார்த்த சமூகத்தின் முரண்பாடுகள், சமூக வரையறைகள், பெண்கள் அடக்குமுறை, மூன்றாம் உலக நாடுகளின் பொதுவான பிரச்சினையாகிய வறுமை, அதிலும் பெண் சமூகம் மட்டுமே எதிர்கொண்ட இரட்டைச் சுமை பற்றி எல்லாம் அதீத ஈடுபாட்டுடன் அவற்றினைக்களையும் விதத்தில் நண்பர்களுடன் மட்டும் நின்றுவிடாது சுயாதீனமாக இயங்கும் பல பெண்கள் அமைப்புக்களுடனும் சேர்ந்து நடைமுறைக்கு ஏற்ப செயற்படவும் தொடங்கினார்.பெண்விடுதலை பற்றித் தீவிரமாகத் சிந்தித்த சிவரமணி அதனோடு மட்டும் நின்றுவிடாது ஒட்டு மொத்தமான சமூக விடுதலை பற்றியும், ஆரோக்கியமாகச் சிந்தித்து அதற்கான வழிவகைகளையும் தீர்க்கமாக முன்வைத்தார்.
1985 ஆம் ஆண்டு தொடக்கம் அவரால் எழுதப்பட்ட கவிதைகளை நோக்கும் போது அவருடைய உண்மையான மனஉணர்வுகளையும் அரசியல், சமூக, பொருளாதாரம் பற்றிய அவரது கருத்து ஆழ்ந்த நோக்கும் புலனாகின்றமையை நாம் அவதானிக்கலாம்.
“எனது ஊர்க் கோவில் திருவிழா நடந்தது” என்ற கவிதையில்,ராகம் இல்லாத
ராகம் இல்லாத
நாதஸ்வர ஒலமும்
அண்டம் அதிரும்
மேளத்துடனும்,
என்ற வரிகள் மூலம் காலங்காலமாக எமது பண்பாட்டில் மங்கலக் குறியீடாக வரும் நாதஸ்வர, மேள ஒலிகளை ஒலமாகவும் , அண்டம் அதிரும் ஓசையாகவும் , வெளிப்படுத்தியிருப்பதனைச் சற்று வித்தியாசமாக நாம் உணரக் கூடியதாயுள்ளது. கோவில்களில் வாசிக்கப்படும் நாதஸ்வரத்தை எவரும் தமது கவிதை ஆக்கங்களில் இவ்வாறு இழிவுபடுத்தியதாகத் தெரியவில்லை. எள்ளல் சுவையுடன் சமூகத்தின் அபத்த நிலையினை நேர்மையாகவும் துணிவுடனும் இங்கு சிவரமணி தமது கவிதையில் சித்திரிக்க முயல்வதினை நாம் அவதானிக்கலாம்.
எனது ஊர்க் கோவிலில்
எனது ஊர்க் கோவிலில்
திருவிழா நடந்தது.
வழக்கமான ஆண்டுகள் போன்று
கடுக்கன் போட்டு காதுகள் கிழிந்த
கச்சான் ஆச்சி
ஐஸ்பழக்காரன்
சரிகைச் சேலையைச்
சரிபார்க்கும் பெண்கள்
பேசிப்புறுபுறுக்கும்
கிழவர் கூட்டம்.
இத்தனைக்கும் நடுவே,
மக்கள் பார்வையில் நழுவிய
ஒரு சிறு கறுப்புக் கொடி
ஆனாலும் வழக்கம்போல் திருவிழா நடந்தது
மீண்டும் ஒரு நாள்
இரத்தத் துளிகள் மண்ணிலே
தெளிக்கப்படலாம்
மீண்டும் ஒருவன் வருவான்
இந்தக் கொடி கிழிந்திருக்கும்
இதற்குப் பதில்
இன்னுமோர் கறுப்புக்கொடி
ஏற்றி வைப்பான்
எனினும்
என் ஊர்க் கோவிலில்
வழக்கம் போல்
திருவிழா நடைபெறும்.
சமூகத்தின் யதார்த்த நிகழ்வுகளூடு அரசியல் இரண்டறக் கலந்துள்ள தன்மையினை மேற்படி கவிதையானது இனங்காட்ட முனைகிறது. கடுக்கன் போட்டுக் காதுகள் கிழிந்த கச்சான் ஆச்சியும், ஜஸ்பழக்காரனும் சரிகைச் சேலையைச்சரிபார்க்கும் இளம் பெண்களும், பேசிப்புறுபுறுக்கும் கிழவர் கூட்டமும் மிக இயல்பாக யதார்த்தத்தினின்றும் வேறுபடாது மிக அழகாகச் சித்திரிக்கப்பட்டுள்னர். இத்தகைய இயல்பான சம்பவங்களுடனே மக்கள் பார்வையில் நழுவிய ஒரு சிறு கறுப்புக் கொடி, மீண்டும் ஒரு நாள் இரத்தத் துளிகள் மண்ணிலே தெளிக்கப்படலாம், மீண்டும் ஒருவன் வருவான் இந்தக் கொடி கிழிந்திருக்கும். இதற்குப் பதில் இன்னுமோர் கறுப்புக் கொடி ஏற்றி வைப்பான் என்ற அடிகள், அரசியல் புரட்சி என்பன மக்கள் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்த ஒன்று என்பதனை சிவரமணி ஆணித்தரமாக எமக்குப் புரிய வைக்கிறார்.
கறுப்புக் கொடிக்கான காரணத்தைச் சமூகம் பெரிதுபடுத்தாது தன்பாட்டில் வழக்கம் போலவே இயங்குகின்றமையை சாதாரண குறியீடுகள் மூலம் புலப்படுத்திய சிவரமணி காலங்காலமாக ஒருவரேனும் விடாப்பிடியாகக் கறுப்புக் கொடியை ஏற்றிவைப்பதன் மூலம் இளம் சமுதாயத்தினரின் மூலம் சமூகத்தினின்றும் வேறுபட்ட அல்லது இளம் சமுதாயத்தினரின் எதிர்ப்புணர்வை ஏதோ ஒரு வகையில் புலப்படுத்த எத்தனிப்பதாகவே அமைகிறது.
தீர்மானமாக, உண்மை விடுதலையினை மட்டுமே அவாவி நின்ற சிவரமணி
எங்களிற் சிலரது விடுதலை
மட்டும்
விலங்கோடு கூடிய
விடுதலை மட்டும்
வேண்டவே வேண்டாம்.
என்று கூறியதுடன் நின்று விடாது
விலங்குகளுக் கெல்லாம்
விலங்கொன்றைச் செய்த பின்
நாங்கள் பெறுவோம்
விடுதலை ஒன்றை
என்கிறார். இதன் மூலம் இவர் அரைகுறை விடுதலையின் தாக்கத்தை எமது சமூகத்தின் அனுபவ வாயிலாகப் பெற்றமையால் இனியும் எமது இளந் தலைமுறை ஏமாற்றமடையக்கூடாது என்ற மனப்பாங்குடன் இக்கவிதை உருக்கொண்டிருக்கலாம்.
“காதல்” உணர்வினை வெளிப்படுத்தும் கவிதையாக,
மஞ்சள் சந்தனத்தில்
மூழ்கி வரும் வானமகளின்
வண்ண நெற்றியிலே
ஆதவன் பொட்டு இடும்
அந்தி வேளைகளிலே
உன்னை நினைக்கிறேன்.
எனது இதய ரோஜாவின்
ஒவ்வொரு செவ்விதழும்
காதல் காணிக்கையால்
சமர்ப்பிக்கப்பட்ட பின்பு
எஞ்சியிருப்பது பூவைத்தாங்கிய
வெற்றுக் காம்புதான்.
என் இதயத்தில் நான்
தாங்கியுள்ள வெற்றுக் காம்பு
இன்னும் எறியப்படவில்லை
அன்பே
புது பிரசவத்துக்காய்
இங்கே காத்துள்ளது.
ஆனால்
அந்தப் பிரசவம்
அந்தக் காதல் மலர்
நானும் நீயும் காத்துள்ள
நாளைய உலகென்னும்
இளம் தேசத்தில்
நிச்சயம் மணம் வீசும்
என்ற கவிதை வரிகளில் கூட சிவரமணி “காதலை புதிய பிரசவத்தின் எதிர்கால நம்பிக்கைக்குரிய கருப்பொருளாகவே இனம்காண்கின்றமையை நாம் அவதானிக்கலாம். அதாவது புதிய பிரசவத்தின் எதிர்கால நம்பிக்கையில், காதலின் காத்திருப்பு சிவரமணியினால் தூய உருவினைப் பெறுகின்றமையையே நாம் காணக்கூடியதாக உள்ளது.
அடுத்து “வையகத்தை வெற்றி கொள்ள” என்ற தலைப்புடன் 1986இல் எழுதப்பட்ட கவிதையானது கடமை நம்பிக்கையினையும், வாழ்வு பற்றிய நம்பிக்கையினையும் சுட்டுவதாக அமைகிறது. மேலும் அக்கவிதையில் பெண்களின் அர்த்தமற்ற நேர இழப்புக்கள் சுட்டிக் காட்டப்படுவதுடன் புதிய வாழ்வு பற்றிய சிந்தனையை நோக்கிக் கவிதை நகர்வதனை நாம் அவதானிக்கலாம்.
என் இனிய தோழிகளே
இன்னுமா தலைவார
கண்ணாடி தேடுகிறீர்
சேலைகளைச் சரிப்படுத்தியே
வேளைகள் வீணாகின்றன.
ஆடையின் மடிப்புக்கள்
அழகாக இல்லை என்பதற்காகக்
கண்ணிர் விட்ட நாட்களை
மறப்போம்.
மண்ணால் கோலமிட்டு
அழித்தது போதும்
எங்கள் செந்நீரில் கோலமிட்டு
வாழ்க்கைக் கோலத்தை
மாற்றி வரைவோம்
சாரிகைச் சேலைக்கும்
கண்நிறைந்த காதலர்க்கும்
காத்திருந்த காலங்கள்
அந்த வெட்கம் கெட்ட
காலத்தின் சுவடுகளை
அழித்து விடுவோம்.
புதிய வாழ்வின்
சுதந்திர கீதத்தை
இசைத்துக் களிப்போம்
வாருங்கள் தோழியரே
என அறைகூவல் விடுக்கிறார், இன்றைய பெண்களிடம்.
1986 காலப்பகுதியில் எழுதப்பட்ட “முனைப்பு” என்ற கவிதை, நம்மைச் சூழ உள்ள சமூகத்தினதும் ஆணாதிக்க உணர்வுளுடனும் எமது பெண்கள் சிக்கித்தவிக்கும் அவலத்தை வெளிப்படுத்துவதாக அமைகிறது.
பேய்களால் சிதைக்கப்படும்
பிரேதத்தைப் போன்று
சிதைக்கப்பட்டேன்
ஆத்மாவின் உணர்ச்சிகள் எல்லாம்
இரத்தம் தீண்டிய கரங்களால்
அசுத்தப்படுத்தப்பட்டன.
என்னை
மேகத்திற்குள்ளும்
மண்ணிற்குள்ளும்
மறைக்க எண்ணிய வேளையில்
வெளிச்சம் போட்டுப் பார்த்த
அவர்களின்,
குரோதம் நிறைந்த பார்வையும்
வஞ்சகம் நிறைந்த சிரிப்பும்
என்னைச் சுட்டெரித்தன
எனது
ஆசைகள் இலட்சியங்கள்
சிதைக்கப்பட்டன
என் வேதனை கண்டு
ரசித்தனர் அவர்கள்
என்றைக்குமாய் என் தலை
குனிந்து போனதாய்க்
கனவு கண்டனர்
ஆனால்
நான் வாழ்ந்தேன்
வாழ்நாளெல்லாம் நானாக
இருள் நிறைந்த
பயங்கரங்களின் ஊடாக
நான் வாழ்ந்தேன்
இன்னும் வாழ்கிறேன்
ஒரு பெண்ணின் ஆத்மார்த்த உணர்வு சமூகத்தின் கயமைத்தனத்தால் தீண்டபப்டும் அவலத்தினை இக் கவிதையில் சிவரமணியினால் பயன்படுத்தப்பட்ட சொற் பிரேயாகங்கள் முடிந்தளவு எல்லைக்கோட்டில் நின்று அதன் அர்த்தத்தினைப் புலப்படுத்தியுள்ளமையை நாம் அவதானிக்கலாம். கொடூரமான உணர்வுகள் ஒரு மனித ஜீவியினை எவ்வெவ்வகையில் பாதித்தன அல்லது பாதிக்கும் என்பது பற்றி மிக அழகாகக் கூறப்பட்டுள்ளது. இக் கவிதையில் அவரால் பயன்படுத்தப்பட்ட ஒரு சொல்லினையேனும் நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக இன்னொன்றினை நாம் சேர்த்துப் பார்த்தால் அக்கவிதையின் நிறைவின்மையை நாம் கண்டு கொள்ளலாம். எனவே சிவரமணி நல்ல ஒரு கவிஞருக்குரிய சொல்லாக்கப் பண்பினையும் ஆளுமையையும் கொண்டிருந்தமை அக்கவிதையின் மூலம் நன்கு புலனாகிறது. தடித்த எழுத்துக்களிலுள்ள வரிகள் அவரின் கவித்துவத் திறனையே சுட்டி நிற்கின்றன.
அடுத்து 1985இல் சிவரமணியினால் எழுதப்பட்ட அன்றைய, இன்றைய முரண்பாடுகள் பற்றிய கவிதையை நோக்குமிடத்து அவர் அழகியலின் பால் மட்டும் தனித்து ஈர்க்கப்பட்ட கவிஞராக அல்லாது ஓராயிரம் சம்பவங்களால் வெறியூட்டப்பட்ட கவிஞராகவே தன்னை இனங்காட்டுகிறார்.
ஆதவனின்
ஒளி கண்டு மலரும்
ஆம்பலின் அழகு கண்டு
அதிலே
மொய்க்கும் வண்டின்
மோகநிலை கண்டு
கவிதை வரைவதற்கு
நான்
நீ நினைக்கும்
கவிஞன் அல்ல .
என்னை வெறிமுட்ட
இங்கு
ஓராயிரம் சம்பவங்கள்
அன்றைய பொழுதும்
இன்றைய பொழுதும்
ஒரே சூரியன்
ஒரே சந்திரன்-ஆனால்
அன்றோ ஒரு உறக்கம்
நிகழ்வுகள் புரியாத
நிம்மதிப் பெருமூச்சு-இன்றோ
உறக்கங்கள் தோல்வி கண்ட
விழிப்பின் பரிதவிப்பு
நானோ
இருபதாம் நூற்றாண்டின்
வசந்தத் தென்றல் அல்ல
அனேகமான கவிஞர் வசந்தத் தென்றல் பற்றியும் மலரிலே மொய்க்கும் வண்டின் மோக நிலையினையுமே கவிதைக்குப் பொருளாக்கி அதன் இரசனையில் தம்மை மூழ்கடிப்பர். ஆனால் சிவரமணி தத்துவ அறிஞரான “பிளேற்றோ” வின் கருத்தியலினால் ஈர்க்கப்பட்ட காரணமோ தெரியவில்லை, தான் இருபதாம் நூற்றாண்டின் வசந்தத் தென்றல் அல்ல என்பதையும் சாதாரண இயற்கை அழகில் ஈடுபட்டு எழுதும் கவிஞர்களின் ரகத்தைச் சேர்ந்தவள் அல்ல என்பதையும் மேற்குறித்த கவிதை மூலமாகவே பிரகடனம் செய்கிறார்.
இனி 1989களில் எழுதப்பட்ட சிவரமணியின் கவிதைகளை
நோக்குவோமேயானால் அவை சிவரமணியின் கவிதைகளின்
முதிர்ச்சி நிலையினை இனங்காட்டி நிற்பதுடன் வாழ்வு
பற்றிய நம்பிக்கைகள் துண்டுதுண்டாகச் சிதறப்பட்ட நிலையில்
வாழ்வு பற்றிய வெறுப்பு, ஆத்திரம், மனக் கசப்பு என்பவற்றுடன் மனிதாபிமான உணர்வினைக் காப்பாற்ற முடியாது பரிதவிக்கும் நிலையினையே தௌ;ளிதின் உணர்த்தி
நிற்கிறது.
மனிதாபிமான உணர்வு அரசியலுள் முரண்பட்டுப் போகின்ற செய்தியினை,
என்னிடம்
ஒரு துண்டுப் பிரசுரத்தைப் போல
நம்பிக்கையும் முடிவும் சொல்லத்தக்க
வார்த்தைகள் இல்லை
இந்தச் சமூகத்தின் தொப்புள் கொடிக்கு
துப்பாக்கி நீட்டப்படும் போது
ஒரு மெல்லிய பூ நுனியில்
உட்காரக் கூடிய
வண்ணத்துப் பூச்சியின் கனவு
எனக்கு சம்பந்தமற்ற
ஒரு சம்பவிப்பு மட்டுமே
நான் மனிதனாய் வாழும் முயற்சியில்
பூக்களை மரத்துடன் விட்டுவிட விரும்புகிறேன்
எனக்கு
பகலால் உருவமைக்கப்பட்ட அழகிய இரவு
கனவாயுள்ளது.
என்ற கவிதையில் “மனிதனாய் வாழும் முயற்சியில் பூக்களை மரத்துடனே விட்டுவிட விரும்பும் மனிதத்துவம் சிவரமணியின் ஆத்மார்த்த ஒசையாகவே எமக்குக் கேட்கிறது. மரங்களையும் பூக்களையும் மானிட நேயத்துடன் சேர்த்தே நேசித்த அவரது சுபாவம் தனிக்கற்பனையாக அல்லாது அவருடைய நடைமுறைவாழ்விலும் அவர் அதனைச் செயற்படுத்த முயன்றமை, அவருடன் பழகியோரால் மட்டுமே புரிந்து கொள்ளக் கூடிய ஒன்று.
யுத்தகால நெருக்குதலில் சிறுவரின் மனப்பாதிப்புகள் நடைமுறைச் சம்பவங்கள் அவர்கள் மாற்றப்படும் விதத்தினை யுத்தகால இரவொன்றின் நெருக்குதல் என்ற தலைப்பில் அவர் எழுதிய கவிதையில் அழகுறச் சித்திரிக்கப்பட்டுள்ளது.
பாதைகளின் குறுக்காய்
வீசப்படும் ஒவ்வொரு குருதி தோய்ந்த
முகமற்ற மனித உடலும்
உயிர் நிறைந்த
அவர்களின் சிரிப்பின் மீதாய்
உடைந்து விழும் மதிற்கவர்களும்
காரணமாய்
எங்களுடைய சிறுவர்கள்
சிறுவர்களல்லாது போயினர்
கேள்விகள் கேட்காதிருக்கவும்
கேட்ட கேள்விக்கு விடை இல்லாத போது
மௌனமாயிருக்கவும்
மந்தைகள் போல எல்லாவற்றையும்
பழகிக் கொண்டனர்.
தும்பியின் இறக்கைகளைப் பிய்த்து எறிவதும் தடியையும் பொல்லையும் துப்பாக்கியாக்கி எதிரியாய் நினைத்து நண்பனைக் கொல்வதும் எமது சிறுவரின் விளையாட்டானது யுத்தகால இரவுகளின் நெருக்குதலில் எங்கள் குழந்தைகள் ‘வளர்ந்தவர்’ ஆயினர்.
தற்போதைய அரசியல் நிலையினைக் கேள்வி கேட்கவோ அல்லது அதற்கான பதிலினைப் பெற முடியாத நிலையில் மந்தைகள் போன்றிருத்தல் என்ற செய்தியின் மூலம் எங்களுடைய சிறுவர்கள் சிறுவர்களல்லாது போனமைக்கான அடிப்படைக் காரணமாக
பாதைகளின் குறுக்காய்
வீசப்படும் ஒவ்வொரு குருதிதோய்ந்த
முகமற்ற மனித உடலும்
உயிர் நிறைந்த
அவர்களின் சிரிப்பின் மீதாய்
உடைந்து விழும் மதிற்கவர்களும்
சிறுவரினை “வளர்ந்தவர்கள்” ஆக்கியமைக்கான காரணமாகக் கூறப்படுகின்றது.
அனைத்திற்கும் மத்தியில் ‘அரசியல் சர்வாதிகாரம்”, இதனைத் தொடர்ந்து எதிர்காலம் பற்றிய கேள்வி ? இவை சிவரமணியைத் தூண்ட கவிதை இவ்வாறாக உருக்கொள்கிறது.
புத்திசாலித்தனமான
கடைசி மனிதனும்
இறந்து கொண்டிருக்கிறான்
கேள்வி கேட்பதற்கான
எல்லா வாசலும் அறையப்பட்டபின்னர்
இருட்டின் உறுதியாக்கலில்
உங்கள் குழந்தைகளைவிட்டுச் செல்லுங்கள்
அவர்களுக்குப் பின்னால் எதுவுமே இல்லை
சேலை கட்டிக் காப்பாற்றிய
சில நாகரிகங்களைத் தவிர.
சேலை பற்றிய செய்திகளை சிவரமணியின் கவிதைகளில் ஒரு குறியீடு போல் நாம் பரக்கக் காணக்கூடியதாயுள்ளது.
சரிகைச் சேலையைச் சரிபார்க்கும் பெண்கள்.
சரிகைச் சேலைக்கும்
கண்ணிறைந்த காதலர்க்கும்
காத்திருந்த காலங்கள்
அந்த வெட்கம் கெட்ட
காலத்தின் சுவடுகளை
அழித்துவிடுவோம்.
ஆடையின் மடிப்புக்கள்
அழகாக இல்லை என்பதற்காக
கண்ணிர் விட்ட நாட்களையும் மறப்போம்.
சேலை கட்டிக் காப்பாற்றிய
சில நாகரிகங்களைத் தவிர.
என்பன போன்ற வரிகள் சிவரமணியினால் எடுத்தாளப்பட்டமைக்கான காரணத்தை நாம் விளங்கிக் கொள்ள வேண்டியது அவசியமாகும். “சேலை கட்டுதல்’ என்ற செய்தி சிவரமணியினால் பயன்படுத்தப்பட்ட இடங்கள் யாவுமே வீண் நேர இழப்பினையும் முந்தானை விலகாத எமது கட்டுப்பெட்டித்தனமான கலாச்சாரத்தின் பால் ஏற்பட்ட வெறுப்பினையுமே தரவாகக் கொண்டு கவிதையை வடிவமைத்துள்ளமையை நாம் காணலாம். எனவே சேலை கலாசாரம் தனிய பெண்களின் குறியீடாய் மட்டுமல்லாது வழிவழிவந்த மரபுப்பேணலின்மொத்த வடிவாகவும் அடக்க ஒடுக்கத்தினைக் குறிக்கும் உடைமையாகவும் இதுவரை காலமும் அல்லது இனியும் கூட அது கருதப்படும் நிலையினை எள்ளி நகையாடியே இவ்வரிகள் அவரால் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனவும் நாம் ஊகிக்க
இடமுண்டு.
சகஜமான எமது வாழ்வில் எதிரெதிரான நியாயப் படுத்தல்களால் உண்மை பொய்மைகளையும் கண்டுபிடிக்க முடியாது நாம் சிக்கித்தவிக்கும் சந்தர்ப்பங்களை நிதர்சன மாக நாம் பல தடவை எதிர் கொண்டதுண்டு. அந்த நிலை சிவரமணியையும் மிக ஆழமாகக் பாதித்தனால் அவருக்கே உரிய பாணியில் கவிதையானது அரசியலும் நடைமுறையும் சார்ந்த வாழ்வின் தாக்கத்தினூடு வெளிப்படுகின்றது.
மாலை நேரங்களில்
எல்லாச் சுமைகளும் அதிகரித்துப் போய்விடும்.
எனக்கு உண்மைகள் தெரியவில்லை
பொய்களைக் கண்டுபிடிப்பதும்
இந்த இருட்டில் இலகுவானகாரியமில்லை
மொத்தத்தில்
எல்லோரும் அவசரமாயுள்ளனர்
என்னிடம்
ஞாபகங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன.
இரவு எனக்கு முக்கியமானது
நேற்றுப் போல்
மீண்டும் ஒரு நண்பன் தொலைந்து
போகக்கூடிய
இந்த இருட்டு
எனக்கு மிகவும் பெறுமதியானது.
இரவு நேர அரசியல் அராஜகத்திலிருந்து விடுபடமுடியாத தவிப்பும் வெறுப்பும் கடைசி வரிகளில் வெளிப்படுவதை நாம் சற்று நோக்கலாம்.
“எனது பரம்பரையும் நானும்” என்ற கவிதையிலும் கூட வெறுப்பினதும் விரக்தியினதும் உச்சநிலையினை அவர் எட்டிவிட்டதனையே நாம் காணக்கூடியதாயுள்ளது.
எல்லாவற்றையும் தேடிக் கொண்டிருக்கும்
இந்த இருட்டில்
எதுவுமே இல்லை என்பது நிச்சயமாகின்றது
நான்
எனது நம்பிக்கைகளுடன்
தோற்றுக் கொண்டிருக்கிறேன்.
இக்கவிதை வரிகள் அவரின் தற்கொலை முயற்சிக்குத் துண்டு கோலாக அமைகின்றமையாலேயே நாம் நோக்கக்கூடியதாயுள்ளது.
“அவமானப்படுத்தப்பட்டவள்” என்ற 1990 இல் எழுதப்பட்ட கவிதையில் புதிய உவமைகளை எடுத்தாண்டு தனது இருத்தலின் உறுதியை நிர்ணயம் செய்கிறார் சிவரமணி.
உங்களுடைய வரையறைகளின்
சாளரத்துக்குப் பின்னால்
நீங்கள் என்னைத்தள்ள முடியாது
நிரந்தரமாக்கப்பட்ட சகதிக்குள் கிடந்து
வெளியே எடுத்துவரப்பட்ட
ஒரு சிறிய கல்லைப் போன்று
நான்
என்னைக் கண்டெடுத்துள்ளேன்
ஒரு குட்டி நட்சத்திரம் போன்று
எனது இருத்தல்
உறுதி பெற்றது
தூக்கியெறியப்பட முடியாத கேள்வியாய்
நான்
பிரசன்னமாயுள்ளேன்
யாழ் பல்கலைக்கழக சிற்றுண்டிச் சாலையில் எழுதப்பட்ட இன்னுமொரு கவிதை நடைமுறை உலக யதார்த்தத்தை உணர்ந்து கொண்ட அல்லது தெளிந்து கொண்ட பாதிப்பில் வடிவம் பெறுகிறது.
தனித்து
பிரயாணிகள் அற்று மறக்கப்பட்ட
எந்த விசேஷமுமற்ற
ஏராளமான காயங்களுக்கிடையில்
மகிழ்ச்சியாயிருக்க விரும்பும்
பொழுதுகள்
பேசுவதற்கு சொற்களற்று
நாங்கள் எழுந்தோம்
உலகை மாற்ற அல்ல
மீண்டுமொரு இரவு நோக்கி
என்ற இந்த இறுதி வரிகள் ஏமாற்றத்தினால் விரக்தியின் விளிம்பினையே தொட்டுவிடுகிறார் சிவரமணி
இறுதியாக, சிவரமணி தனது கைப்படவே எழுதிய வரிகள்,
எவ்விதப் பதட்டமுமின்றி
சிந்தித்து
நிதானமாக எடுத்த முடிவு இது
எனினும்
எனக்கு இன்னும் வாழ்க்கை
அற்புதமாகவே உள்ளது
எரியும் நெருப்பும்-காற்றில்
இந்த முடிவுக்காக
என்னை மன்னித்து விடுங்கள்
இறுதி வரை வாழ்வை அற்புதமான ஒன்றாகவே உணர்ந்த சிவரமணி தன்னைச்சுற்றியுள்ள சிறுமனிதரின் குரூரம் நிறைந்த செயற்பாட்டின் பாதிப்பினால் முரண்பாடுகளின் மத்தியில் வாழமுடியாத ஒரு நிலை ஏற்பட்டதனாலேயே தற்கொலை முடிவினை எடுத்திருக்க வேண்டும்.
உலகக் கவிஞர்களின் வாழ்க்கை நோக்கு, முரண்பாடுகள் அதன் பயனாகத் தற்கொலை செய்து கொண்டவர்களின் வரிசையை நோக்கும் போது, காதல் தோல்வியினால் தற்கொலை செய்து தமது உலக இருப்பினை அழித்துக் கொண்ட ரஷ்யக் கவிஞர் மாயாகோவ்ஸ்கி, மலையாளக் கவிஞர் சங்கம்புழை என்போரின் கவித்துவ ஆளுமையும், அமெரிக்காவைக் சேர்ந்த சிறந்த பெண் கவிஞரான சில்வியா பிளாத்தினுடைய தற்கொலையும் அதன் வழியே இலங்கையில் அதிலும் குறிப்பாக ஈழத்து இளம் பெண்கவிஞரான சிவரமணியின் தற்கொலையும் ஏதோ ஒரு வகையில் சமூகத்தினின்றும் தம்மை மீட்டுக் கொள்ள எத்தனித்த ஒரு முயற்சியாகவே எம்முன் காட்சியளிக்கிறது.
முடிவாக சிவரமணி என்கிற பெண் கவிஞர் தான் சார்ந்த சமூகத்திற்குக் கூறவிழைந்த செய்தியாக,
“சமூக முரண்பாடுகளின்றும்
எம்மை நாம் காத்துக் கொள்வோம்”
(அதிலும் குறிப்பாகப் பெண்கள்)
என்பதே அவரது கவிதைகளில் அடிநாதமாக ஒலிப்பதை நாம் காணலாம்
தனது சிந்தனைக்கும் நடைமுறை வாழ்க்கைக்கும் இடையில் முரண்பாடு ஏற்படுவதனைத் தவிர்க்குமுகமாகவே சிவரமணி தற்கொலை முயற்சியில் இறங்கினார் என்பதே இறுதியும் உறுதியமான முடிவு என நாம் கொள்ளலாம்.
ஊடறுவில் சிவரமணி பற்றி…